வாசிப்பின் துவக்கம். கற்பனையில் உழல, பகல் கனவில் திளைக்க வாசித்துத் தள்ளினேன். வாசிப்பது கற்பனையில் திளைக்க மட்டுமல்ல, அதை கருவியாகக் கொண்டு இந்த வாழ்வையும் அறிய வேண்டும் எனும் பிரக்ஞையை தனது ‘சுய தரிசனம்’ சிறுகதை வழியே ஜெயகாந்தன் எனக்குள் உருவாக்கினார். இந்த போதத்துடன் நான் வாசித்த முதல் கதை. ஜெயமோகனின் ‘விரித்த கரங்களில்’. அடுத்த கதை அதே ஆசிரியரின் ‘விஷ்ணுபுரம்’. மூன்றாவது கதை, பி.கே.பாலக்ருஷ்ணன் மலையாளத்தில் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பிட்ட மகாபாரதக் கதை. கர்ணனின் கதை.
--- 
மகாபாரதம் மானுடத்தின் காவியம். தோன்றிய நாள் முதல் இன்று ஜெயமோகன் வரை மீண்டும் மீண்டும் அது மறுஉருவாக்கம் செய்யப்படுவதன் காரணம், மகாபாரதம் அன்றும், இன்றும், இனியும் விகசிக்கப்போகும் மனிதனின் அனைத்து மனோ தத்துவங்களையும், உன்னதங்களையும் பரிசீலிக்கிறது என்பதே. குல,குடும்ப, தனிமனித அறங்களை, எக்காலகட்டமாகிலும் அக்காலகட்டத்து வாழ்வை உரைகல்லாகக் கொண்டு எழும் பேரறம் ஒன்றை நோக்கிய காலாதீதத் தேடல் அதில் உறைகிறது என்பதே.
என்வரையில் மகாபாரத பாத்திரங்கள் வழியே உருவாகி வரும் கதையை இப்படி வகுத்துக்கொள்வேன்: அது ‘நிலை பெயர்தல்களின்’ கதை.
நவீன இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு வழியே தமிழுக்கு கிடைத்த மகாபாரதப் புனைவுகளில், முதன்மையானவை மூன்று. மொத்த மகாபாரத நிகழ்வுகளையும், சம்பவங்களையும், கட்டவிழ்த்து அவற்றை யதார்த்த தளத்தில் நிகழ்த்திப் பார்த்தது பைரப்பாவின் ‘பர்வா’.உதாரணமாக நெருப்பில் உதித்தவள் என்றே சமூக மனதில் படிமமாக உறைந்துபோன திரௌபதி இதில் ‘வெக்கை’ தாளாமல் முந்தானையால் விசிறிக்கொள்ளும் கோலத்தில் காணக் கிடைக்கிறாள்.
அரிமாக்களை வெறும் கைகளால் அறைந்து கொல்லும் பீமன், சிருங்காரம் கொண்ட காதலனாக, துதிக்கை நுனியால் பூந்தளிர் பறிக்கும் யானை போல வருகிறான், வாசுதேவன் நாயரின் ‘இரண்டாம் இடம்’ நாவலில். முதன்மையான இவற்றுள், தலையாயது ‘இனி நான் உறங்கட்டும்’. நவீனத்துவம் முன்வைத்த, இருத்தல் துயர் கூடிய வாழ்க்கைப் பார்வையின், கலைச்சித்தரிப்பின் ஆகச் சிறந்த இலக்கியப் பங்களிப்பு இந்த நாவல். காரணம் பிறந்து,கிடந்து, மரிக்கும் எளிய மனிதர்களின் அற்ப வாழ்வை விடுத்து, தன்னறத்தால் எழுந்து, வகையறியா விதியுடன் சமர்புரிந்து,தவிர்க்கவே இயலாமல் சரியும், மானுடத்தின் மேலான ஆளுமைகளின் அவல வாழ்வை இந்நாவல்பரிசீலிக்கிறது என்பதே.
முதல் பார்வையில் இந்த நாவல் கர்ணனின் கதை. முதல் தளத்தில் இந்த நாவல், பிறப்பு முதல் இறப்பு வரையிலான கர்ணனின் வாழ்வின் உச்ச தருணங்கள் சிலவற்றில் நிலைகொள்கிறது. அடுத்த தளத்தில் நாவல், கர்ணன் திரௌபதி மனதில் என்னவாக இருந்து என்னவாக மாறுகிறானோ அதில், அந்த ரசவாதமாற்றத்தில் கால்கொள்கிறது. மறுபார்வையில் இந்த நாவல் திரௌபதியின் கதையும் கூட.
இந்நாவலில் குந்தியின் மொழியாக சில வரிகள் வருகின்றன.’’மனிதர்களுக்கு துக்கத்தைப் படைத்த ஈசன், கருணை கொண்டு கண்ணீரையும் படைத்தான். கண்ணீர் துக்கத்தைக் கரைப்பதில்லை. மாறாக துக்கத்திலுள்ள அழுக்கை மட்டும் கரைக்கிறது’’. இதுதான் இந்த நாவலுக்குள் மறைபிரதியாக த்ரௌபதிக்குள் நிகழும் ரசவாதமாற்றம். துக்கத்தின் அழுக்கை கண்ணீரால் கரைத்து, துக்கம் மட்டுமேயான தூய துக்கத்துக்கு நகர்கிறாள் திரௌபதி.
நவீனத்துவத்துக்கே உரிய தனித்துவமான தருணம் ஒன்றினில் நாவல் துவங்குகிறது. இனி நான் உறங்குவேன் என தனக்குள் பேசியபடி கூந்தலை முடிகிறாள் திரௌபதி. அவள் உறங்கச் செல்லாமல் தடுக்கிறது, அவளது மைந்தர்கள் உயிருடன் எரியும் கூடாரத்தின் தழல் ஒளி. பாண்டவர் மரித்தனர் எனும் உவகையுடன் உயிர் துறக்கிறான் துரியோதனன். நீர்க்கடனின் போது, கர்ணன் தனது அண்ணன் என்பதை அறிகிறான் தர்மன். துக்கத்தால் நிலை குலைகிறான். இதுவரை பாண்டவர்களை இயக்கிய ‘தனது துக்கம்’ எனும் மையத்தை திரௌபதி இழக்கிறாள். தனது அத்தனை துவேசத்துக்கும் ஒரே மையமான கர்ணன் மீது, அவன் இழப்புக்காக தர்மன் இத்தனை துயரம் கொள்வது திரௌபதியை துணுக்குறச் செய்கிறது. இத்தனைக்கும் கர்ணனின் மரணம் வேண்டி இரவெல்லாம் துயில் தொலைத்தவன் தர்மன். தர்மனின் மனத் துயர்களை நாரதரும், திரௌபதியின் மன சஞ்சலங்களை கிருஷ்ணரும் நீக்குகிறார்கள். குரோதத்தின் வேர் அறுபட்ட திரௌபதி அன்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான கனவு காண்கிறாள், அந்தக் கனவின் வழியே அவளது அத்தனை ஏன்களுக்கும், அவளது துரியம், ஆழ்மனம் பதிலலிருக்கிறது. திரௌபதி தனக்குள் சொல்லிக்கொள்ளும் சொல்லுடன் நாவல் நிறைகிறது ‘இனி நான் உறங்குவேன்’.
-------------
இப் புனைவில் வரும் உரையாடல்கள், துன்பியல் நாடகம் ஒன்றினில் நிகழ்த்தப்பெறும் நாடகீயத் தன்னுரை போல, மனதை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. சிறந்த உதாரணம் படுகளத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பும் இடம்.
மூளையில் துருபிடித்த ஆணிகளை செருகியதுபோல என்று சு.ரா. எழுதுவார். இப் புனைவு நவீனத்துவத்தின் கூர்மை கொண்ட வர்ணனைகளால் நாவல் நெடுகிலும் விரிந்து பரவி, வாசக மனதை சஞ்சலம் கொள்ள வைக்கிறது. குருஷேத்ரம், எங்கும் பிணக்குவியல், கூகைகள் ஓலம், சூரியன் அடங்கி ஒளி அடங்காத அந்தி, நூறு நூறு கரும் சர்ப்பங்களும், பொன்சர்ப்பங்களும் கூடி இழைந்து முயங்குவது போன்று தோன்றும் நீர்ப் பரப்பு, மேலே வானில் சிதை மேட்டில், ஒளிர்ந்து கனலும் எலும்புத்துண்டு போல நிலா எனும் சித்திரத்தை உதாரணம் சொல்லலாம்.
குந்தியின் நினைவில் கர்ணனின் பிறப்பு, தர்மனின் நினைவில் ஆயுத வித்யா அரங்கில் கர்ணனின் வருகை, திரௌபதி நினைவில் கர்ணனின் சுயம்வர நுழைவு, கிருஷ்ணனின் நினைவில் கர்ணனின் மேன்மை, சஞ்சயன் நினைவில் போர்க்களத்தில் கர்ணனின் சரிவு என கர்ணனின் மொத்த வாழ்வும், வெவ்வேறு பாத்திரங்களின் நினைவுகளால் பகுக்கப்பட்டு, மடித்து செறிவூட்டப்பட்ட காலத்தினூடாக முன்வைக்கப்படுகிறது.
தர்மனின் சஞ்சலங்களைக் கண்டு புன்னகையுடன் நாரதர் சொல்கிறார் ‘’தர்மா நாம் ஏற்றும் அகல் நமது கட்டுப்பாட்டில் உண்டு. அதன் ஒளியில் துலங்கும் விஷயங்கள் குறித்து பேச இயலும். ஆனால் ஊழித்தீயின் நியதிகளை யார் அறிவார்?’’
சூரியனுக்கு பிறந்தவனுக்கும், நெருப்பில் ஜனித்தவளுக்கும் இடையே என்னதான் துவேஷம்? அந்த ஊழித்தீயின் முதல்கனல் எங்கு விழுந்தது? சுயம்வரத்தில் திரௌபதி கர்ணனை நாவால் சுட்டாளே அப்போதா? ஆயுத வித்யா மண்டபத்தில், காண்டீபத்தை நேர்கொள்ள, அனைத்து தகுதிகளோடும், வீரத்தோடும், தன்மானம் சுண்ட அர்ஜுனன் முன்பு கர்ணன் தலைகுனிந்து நின்றானே அப்போதா? இந்நாவலின் தலையாய பகுதி என, கிருஷ்ணனின் சொற்கள் வழியே, திரௌபதி மனதில் கர்ணன் மீதான துவேஷம் ரசவாத மாற்றம் பெறும் ஓட்டத்தை குறிப்பிடலாம்.
நாவலுக்குள் பீஷ்மர் முதல், அஸ்வத்தாமா வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போரை நிறுத்திவிட விரும்புகின்றனர். கிருஷ்ணரோ போர் துவங்காமலே போக என்ன உண்டோ, அத்தனையும் முயன்று பார்க்கிறார். அதன் ஒரு பகுதியாக கர்ணனை சந்தித்து அவனது பிறவி ரகசியத்தை சொல்லி கர்ணனை பாண்டவர்களுடன் இணைந்துவிடக் கோருகிறார். அந்த உரையாடலின் வழியே, கர்ணன் மீதான முதல் மன மாறுதலை அடைகிறாள் திரௌபதி.
சஞ்சயன் மொழிகளில், கர்ணனுக்கு அர்ஜுனனைத்தவிர ஏனைய நால்வரைக் கொல்லும் வாய்ப்பு கிடைத்தும், கர்ணன் குந்திக்கு அளித்த வாக்கின் படி அவர்களைக் கொல்லாமல் விடுகிறான். தனது சுமங்கலித் தன்மை கர்ணன் அவளுக்கு இட்ட தானம் என்பதை அறிவதன் வழியே திரௌபதி மேலும் மாறுகிறாள்.
அனைத்துக்கும் மேலாக கர்ணனை வாழ்நாளெல்லாம் எந்த சொல்லால் அர்ஜுனன் புழுவாக துடிக்க வைத்தானோ, அந்த சொல் அளிக்கும் ரௌத்ரத்தை திரௌபதி நேரடியாக அவதானிக்கும் கணம் ஒன்று அவளுக்கு வாய்க்கிறது.
கர்ணனால் தோற்கடிக்கப்பட்டு உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்டு, பாசறைக்குள் வந்து முடங்கிக் கிடக்கும் நால்வரையும் காண அர்ஜுனன் வருகிறான். அர்ஜுனன் கர்ணனை கொன்ற சேதியுடன் வருகிறான் என தர்மன் மகிழ்ந்து ஆவலுடன் வினவுகிறான். இன்னும் அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படாததை அறிந்த தர்மன் கோபத்துடன் ‘’இன்னும் உன்னால் கர்ணனைக் கொல்ல இயலவில்லையா? காண்டீபத்தை தூர எறிந்துவிட்டு, குதிரைச் சவுக்கை ஏந்திக்கொள்’’ என்கிறான். அர்ஜுனன் நிலைகுலைந்து ரௌத்ரத்துடன், உடைவாளை உருவியபடி தருமனைக் கொல்லப்பாய்வதை திரௌபதி பார்க்கிறாள். ஒரே ஒரு முறை, ஒரே ஒரு சொல் அதுவே அர்ஜுனனை இப்படி நிலைகுலையச் செய்யும் என்றால், கர்ணன வாழ்நாள் எல்லாம் சுமந்த இழிவின் வலி, கர்ணனை எந்த எல்லைக்குதான் நகர்த்தாது? எதன்பொருட்டும் சக மனிதனை கீழ்மை செய்யும் உரிமை எவனுக்கும் இல்லை என்ற மேலான மானுட தார்மீகத்தின் பக்கமல்லவா கர்ணன் நிற்கிறான். இந்த மௌன இடைவெளி வழிதான் திரௌபதியின் மனமாற்றம் முன்னகர்கிறது.
மனித அகத்தின் சிக்கல்களை உடைத்துத் திறக்கும் விதம், மனித மன நிலைகளை அறிந்து அவற்றை கையாள்வதன் வழியே நேர்நிலை விளைவுகளை உருவாக்குவது என கர்ணனின் பாத்திர உருவாக்கத்தில் தனது சாதனை ஒன்றினை நிறுவி இருக்கிறார் பாலக்ருஷ்ணன். போரைத் துவங்க மட்டுமே முடியும் பின் அதன் திசை வழிகளை, மனிதர்களை பாவைகளாகக்கொண்டு லீலை நிகழ்த்தும் விதி மட்டுமே அறியும். இதன் விசித்திர நிலைகளை கிருஷ்ணன் கையாளும் விதம் இந்த நாவலின் வாசிப்பு சுவாரசியம் கூடும் கணங்களில் ஒன்று.
கோபம், ரௌத்ரம் என எந்த உணர்வு நிலை எனினும் அதன் உச்சகணத்தில் மனிதனால் நீண்ட நேரம் நிலைக்க இயலாது. உணர்வுகள் வடிந்தே தீரும். இந்த மனோ தத்துவத்தை நன்கு அறிந்தவன் கிருஷ்ணன். நால்வரையும் புறமுதுகிட்டு ஓடவிட்டு ரௌத்ரமூர்த்தியாக அர்ஜுனனைத் தேடுகிறான் கர்ணன். அவனுடன் சமர் புரிய விரும்பும் அர்ஜுனனை கிருஷ்ணன் தடுத்து, பாசறைக்குத் திருப்புகிறார். அர்ஜுனனை தேடி கர்ணன் சலிக்கிறான். பாசறையில் தர்மன் அர்ஜுனனை குதிரைச் சவுக்கை எடுத்துக்கொள்ளச் சொல்லி இகழ, இப்போது அர்ஜுனன் தனது சினத்தின் சிகரத்தில் ஏறுகிறான். இந்த அர்ஜுனனைத்தான் கிருஷ்ணர் கர்ணனுக்கு எதிராக நேர் நிறுத்துகிறார். இவை நாவலுக்குள் நேரடியாக சொல்லப்படாமல் நுண்ணிய வாசகனுக்கான களமாக விரிவது இப் புனைவின் சிறப்புகளில் ஒன்று. போர்க்களத்தில் நேர்கொண்டு நிற்கும் அர்ஜுனன் மற்றும் கர்ணன் குறித்து சஞ்சயன் சொல்கிறான் ‘’இது விதி, முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று, அன்றைய வித்யா அரங்கின் தீர்ப்பு நாள் இன்று’’.
---
இந்த நாவலில் பாதாதிகேசம் வர்ணிக்கப்படுபவர்கள் இருவர் மட்டுமே. ஒருவன் கர்ணன். மற்றவர் அம்புப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மர். இரவு ஒன்றினில், படைக்கு தலைமை ஏற்குமுன், கர்ணன் பீஷ்மரைக் கண்டு ஆசி பெறச் செல்கிறான். கர்ணனை வாழ்நாள் எல்லாம் இகழ்ந்த பீஷ்மர் அவனை ‘’மகனே’’ என்று வரவேற்கிறார். ஒருவருக்கொருவர் அடி மனதில் என்னவாக இருக்கிறார்களோ, அதை இருவருமே கண்டுகொள்ளும் தருணம். இந்த இடம் விதை எனில், இதன் விருட்சத்தை ஜெயமோகனின் ‘வடக்குமுகம்’ நாவலில் காணலாம். மொத்த பாரத மாந்தர்களின் கதையில் கர்ணனும், பீஷ்மரும் தனித்துவமானவர்கள். ஆம் இந்த இருவரது கதையும் ‘’நிலை பெயராமைகளின்’’ கதை.
இந்த நாவலின் வழியே திரண்டுவரும் வாழ்வின் சாரம், பி.கே.பாலக்ருஷ்ணன் முன்வைக்கும் வாழ்க்கை தரிசனம், இதை இந்த நாவலுக்குள் உருவாகி வரும் சித்திரம் ஒன்றின் வர்ணனை கொண்டே துலங்கிக் கொள்ளலாம்.
பீஷ்மரிடமிருந்து கர்ணன் விடைபெறுகிறான். அது இப்படி சொல்லப் படுகிறது ‘’மரண தேவியின் இதயத்துடிப்பு போன்ற காலடி ஓசையுடன், அகல் ஒளி வெளிச்சம் எல்லைகட்டிய அக்களத்தை விட்டு, பிரபஞ்ச இருளுக்குள் சென்று மறைந்தான் கர்ணன்.
[இனி நான் உறங்கட்டும் $ மலையாள மூலம்- பி.கே.பாலக்ருஷ்ணன். $ தமிழில்- ஆ.மாதவன். $ வெளியீடு- சாகித்ய அகாடமி]
-கடலூர் சீனு
ஒரு ட்வுட்டு, இனி ஞான் உறங்கட்டே, என்பதுதானே ஒரிஜினல் தலைப்பு. உறங்கட்டே என்றால் உறங்கலாமா என்றுதானே பொருள், எங்கிருந்து உறங்கட்டும் வந்தது. மலையாளிகள் பேசுவது போல் தலைப்பிலும் ஒருமை வந்துவிட்டதோ?
ReplyDelete