பி ஏ கிருஷ்ணன் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "மேற்கத்திய ஓவியங்கள் - குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை" என்ற நூல், ஒரு பெரிய சாதனையை நிகழ்த்த முயற்சிக்கிறது. ஏறத்தாழ முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களில் துவங்கி, எகிப்திய ஓவியங்கள், கிரேக்க ஓவியங்கள், ரோமானிய ஓவியங்கள் என்று பண்டைக்கால ஓவியங்களைத் தொட்டு இத்தாலி, ஹாலந்து, வெனிஸ், இங்கிலாந்து, பிரான்சு என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் வரை உள்ளவற்றின் சிறப்பை முந்நூற்றுக்கும் குறைவான பக்கங்களில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பது ஒரு அசாத்திய லட்சியம். இவற்றோடு ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் வண்ணப்படங்களை அச்சிட்டு மிக உயர்ந்த தாளில் ஓரளவுக்கு பெரிய அளவு புத்தகமாக பதிப்பித்து விற்பனை செய்வது காலச்சுவடு பதிப்பகத்தாரின் அசாத்திய லட்சியம். இருவரின் துணிச்சலையும் பாராட்ட வேண்டும் என்றாலும் சிலபல வரைகள் எந்த அளவுக்கு தம் முயற்சியில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகின்றன.
இந்தச் சவாலைப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு. இந்நூலில் எகிப்திய ஓவியங்களைப் பற்றி பதினொரு பக்கங்களும், கிரேக்க ஓவியங்களைப் பற்றி ஐந்து பக்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன- இந்த பதினாறு பக்கங்களில் பதினொரு ஓவியங்கள் இருக்கின்றன, இவற்றில் இரு ஓவியங்கள் முழு பக்க அளவிலும், ஆறு ஓவியங்கள் அரை பக்க அளவிலும் இருக்கின்றன. அப்படியானால் எகிப்திய, கிரேக்க ஓவிய மரபுகளையும் இந்தப் பதினொரு ஓவியங்களையும் அறிமுகம் செய்ய எவ்வளவு இடம் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் (புத்தகத்தின் அளவு டெமி 1 X 8 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது - வீட்டிலுள்ள ஸ்கேல் வைத்து அளவெடுத்ததில் இது ஏறத்தாழ அரையடிக்கு அரையடி இருக்கிறது என்று சொல்லலாம் : நீளம் அரையடிக்கு ஐந்து செமீ குறைவு, உயரம் அரையடியைவிட மூன்றரை செமீ அதிகம்). மொத்தத்தில் 287 வழுவழுப்பான பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 288 வண்ணப்படங்கள் இருக்கின்றன. எப்படி பார்த்தாலும் இன்னும் எழுதியிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது- கண்ணைக் கவரும் புத்தகம் என்பதில் சந்தேகமில்லை. பி. ஏ. கிருஷ்ணன் போன்ற ஒரு எழுத்தாளரைக் குறித்து நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.
என்னை அண்மையில் திகைக்க வைத்த விஷயம் இது - ந்யூ யார்க் போஸ்ட் தளத்தில் வந்த குறிப்பு : உறைய வைக்கும் கடுங்குளிரில் The Goldfinch என்ற ஓவியத்தைக் காண ந்யூ யார்க் நகர மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர் என்ற செய்தி. "குளிர், பனி, மழை, எப்படி இருந்தாலும் வரிசையில் நிற்கிறார்கள். ஒவ்வொரு நாளும், நாள் முழுதும், என்ன ஆனாலும் இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்," என்று ஒரு செக்யூரிட்டி கூறியதாக அந்தக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இதுவரை பெரிய அளவில் புகழப்படாத ஓவியம் அது. Donna Tartt என்பவர் எழுதி அண்மையில் வெளிவந்த புத்தகத்தில் உள்ள பிரதான கதைக்கருவிகளில் ஒன்று இந்த ஓவியம் என்பதுதான் அதன் விசேஷம் (பி. ஏ. கிருஷ்ணனின் நூலில் உள்ள 'முத்துக் காதணி அணிந்த பெண்' (பக்கம் 221) என்ற ஓவியமும் அங்கு அப்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோதிலும் இதைப் பார்க்கவே வரிசை கட்டி நின்றிருக்கின்றனர்).
கணிசமான அளவில் மக்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பது, அந்த ஆர்வத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியத்தை இது போல் வெறித்தனமாக தரிசிப்பது - இது என்ன மாதிரி பண்பாடு என்று நாம் புரிந்து கொள்வது கடினம். மேலும் வெர்மீரின் ஓவியம் போன்ற ஐகனிக் ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் அருங்காட்சியகங்கள்தான் கோல்ட்ஃபிஞ்ச் போன்ற பல்லாயிரக்கணக்கான ஓவியங்களையும் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். ஓவியங்கள் அழகுப் பொருட்கள், கலைப்படைப்புகள் என்பது மட்டுமல்ல, அவை மேலைப் பண்பாட்டின் பிரித்துப் பார்க்க முடியாமல் ஒருங்கிணைக்கப்பட்ட கூறுகளாகவும் இருக்கின்றன. இந்த நூலில் உள்ளது போல் ஒவ்வொரு ஓவியத்தையும் அதன் ஓவிய மரபோடு ஒட்டியும், பின் தனியாய் எடுத்து அதன் தனித்தன்மைகளை ரசிப்பதும் தேவையான அணுகல்தான். இதை இன்னும் விரிவாகச் செய்திருக்கலாம் என்பது ஒன்று, அதைவிட முக்கியமாக இதுபோன்ற ஒரு அறிமுக நூலில் இந்த ஓவியங்களின் பண்பாட்டு மதிப்பு என்ன என்பதைச் சொல்வது முக்கியம். ஏனெனில் இந்த ஓவியங்கள் பொம்மை பார்க்கும் விஷயங்களோ, மலைத்து நிற்கும் விஷயங்களோ அல்ல - இவை உணர்வாழமும் பொருட்செறிவும் கொண்டவை.
இதையெல்லாம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கக்கூடியவர் பி. ஏ. கிருஷ்ணன்.
oOo
இப்புத்தகத்தின் முன்னுரையில், "நான் ஓவியன் அல்ல. ஓவியத் திறனாய்வாளனும் அல்ல. ஓவியங்களைப் பார்த்து பிரமித்தவன். மனிதன் இத்தனை உச்சங்களை எட்ட முடியுமா என்று வியந்தவன். உச்சங்களை எட்டிய கலைஞர்களையும் அவர்கள் ஓவியங்களைப் பற்றியும் நான் ஓரளவு படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்," என்று எழுதுகிறார் கிருஷ்ணன்.
இதை யார் வேண்டுமானலும் செய்ய முடியும், இல்லையா?
ஆனால் சிறு வயதில் ஒரு புத்தகத்தில் பார்த்த ஓவியத்தை நாற்பது ஆண்டுகள் கழித்து நேரில் காணும்போது அடையாளம் கண்டு கொள்வது என்பது எல்லாருக்கும் சாத்தியம் அல்ல (காப்ளியின் ஓவியம்). "நான் மாட்ரிட் நகர் சென்றதும் டோலிடோ நகரத்துக்குச் செல்லத் துடித்தேன். க்ரேகோவின் "டோலிடோ நகரக் காட்சி" எனது பதின்பருவத்தில் பார்த்த ஓவியம். இன்று இந்த நகரம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசை," என்று எழுதுகிறார் கிருஷ்ணன் (பக்கம் 170). இத்தகைய பேரவா எல்லாருக்கும் சாத்தியமில்லை. ஆனால் இது முழுமையாக வெளிப்படாவண்ணம் உணர்வுகளின் இடத்தைத் தகவல்கள் கவர்ந்து கொண்டனவோ என்று சந்தேகமாக இருக்கிறது.
பி. ஏ. கிருஷ்ணன் இத்தனை ஓவியங்களையும் அறிந்து கொள்ளவும், நேரில் சென்று காணவும் உந்திய அந்த பிரமிப்பு, காகிதத்தில் கண்ட நிழலை நாற்பதாண்டுகள் கழித்து நிஜத்தில் அடையாளம் கண்டு கொள்ளச் செய்த 'பார்த்தே பேருவகை பெற்ற' திறம்- இதுதான் இந்த ஓவியங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இவற்றின் மரபோ காலமோ வேறு பல தனிச்சிறப்புகள் மட்டுமோ அல்ல. ந்யூ யார்க் நகரின் கடுங்குளிரில் வரிசையாக நிற்பவர்கள் காகிதத்தில் காணாத எந்த உயிர்ப்பை கான்வாசில் காண முடியும் என்று அங்கு நின்றார்கள்? அந்த உயிர்ப்பு கிருஷ்ணனிடம் இருக்கிறது, நம்மிடம் இல்லை. அதன் ஒரு பொறி இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்குப் புலப்பட்டால்தான் இதில் உள்ள ஒரேயொரு ஓவியத்துக்கும்கூட பொருளிருக்கும். அதைச் செய்யப் போதுமான இடம் இந்த நூலில் கிடைத்திருக்கிறதா என்பது கேள்வி.
ஆமெனில், "சாதாரண பார்வையாளர்களுக்குச் சொற்களால் விளக்க முடியாத அளவிற்கு பேருவகையைக் கொடுக்கும்" புத்தகமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், நூலின் நீள அகலம் குறித்து தயக்கங்கள் இருந்தாலும், இதன் அச்சும் வடிவமைப்பும் பழுது சொல்ல முடியாத வண்ணம் சிறப்பாக இருக்கின்றன.
மேற்கத்திய ஓவியங்கள், பி. ஏ. கிருஷ்ணன்,
காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ. 850
இணையத்தில் வாங்க - என்எச்எம் , டிஸ்கவரி புக் பேலஸ்
புகைப்பட உதவி - டிஸ்கவரி புக் பேலஸ்
No comments:
Post a Comment