"நாவலின் கதையைத் திரும்பச் சொல்வதுதான் இவரது விமரிசனமாக இருக்கிறது," என்பதுதான் புக் ரிவ்யூ செய்யும் ஒருவன் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான கண்டனமாக இருக்கிறது. ஆனால் அதுதான் நபநீதா தேவ் சென்னின், “ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக்” என்ற குறுநாவலைப் பற்றி எழுதுவதில் மிகவும் சந்தோஷமளிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. இதில் எந்தக் கதையும் சொல்லப்படுவதில்லை.
கதை சொல்வதற்கு பதிலாக, நபநீதா தேவ் சென், "அந்திக் காப்பக"த்தில் இருப்பவர்களின் பார்வையில் அவர்களைச் சுற்றி விரியும் பரவலான சமூகத்தைச் சித்திரிக்கிறார், முதுமை குறித்து சிந்திக்கவும் செய்கிறார். அந்திக் காப்பகம் பெண்களுக்கான முதியோர் இல்லம். இங்கு வாழும் வெவ்வேறு பெண்களைப் பற்றி பேசிச் செல்கிறது கதை.
முதுமை குறித்த நாவலாசிரியர் அபராஜிதாவின் எண்ணங்களில் கதை துவங்குகிறது - தன் சாயல் கொண்ட பாத்திரம் இது என்று நபநீதா தேவ் சென் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அபராஜிதா தானே விரும்பி இந்த முதியோர் இல்லத்துக்கு வரக் காரணமாக இருந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் முதியோர் இல்லத்துக்குச் செல்வதென்று முடிவெடுத்தது பற்றி அவளது சம்பந்தி (மருமகளின் தாய்) என்ன நினைக்கிறார் என்பதை அடுத்து தெரிந்து கொள்கிறோம். பின்னர் அங்கிருக்கும் பிற பெண்களின் குரல்கள் கேட்கின்றன, அவர்களின் உறவினர்கள் சிலர் குரல்கள் கேட்கின்றன. இதில் முக்கியமான விஷயம், இவை அனைத்தும் பெண்களின் குரல்கள் என்பதுதான்.
இந்த இல்லத்துக்கு வரும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது: சிலர் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இங்கு வருகின்றனர், சிலரை அவர்களது உறவினர்கள் இங்கு விட்டுச் செல்கின்றனர், சிலர் தங்கள் குழந்தைகளுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை. இவர்கள் எல்லாருமே ஆதரவற்றவர்களல்ல- இந்தக் கதையில் அபராஜிதா என்ற நாவலாசிரியர் இருக்கிறார், ஒரு பள்ளி ஆசிரியை இருக்கிறார், கடும் உழைப்பைக் கொண்டு கல்கத்தாவில் 13 வீடுகளுக்கு உரிமையாளராக இருக்கும் ஒரு பெண் இருக்கிறார். தனியாக வாழ்வதற்குத் தேவையான உறுதியும் தனித்துவம் கொண்ட ஆளுமையும் இந்தப் பெண்களுக்கு இருக்கின்றன.
இந்த நாவல் எந்த அளவுக்கு முதுமையைப் பற்றிய தியானமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பெண்களுக்கு தங்கள் சுதந்திரமும் தனித்தன்மையும் எவ்வளவு முக்கியமாக இருக்கின்றன என்பது பற்றிய தியானமாகவும் இருக்கிறது. அபராஜிதாவின் நோய் குணப்படுத்தக்கூடியதல்ல, எனவே அவர் தன் மகனுக்கு தான் ஒரு சுமையாக இருப்பதைத் தவிர்க்க விரும்புகிறார். அவர் எப்போதும் சுதந்திரமாக இருந்த பெண்மணி, இறுதிவரை அவ்வாறே வாழ விரும்புகிறார். இங்கு இருக்கும் இன்னொரு பெண்மணி தன் உறவுக்காரப் பெண்ணுடன் தில்லி செல்ல மறுத்துவிட்டு இங்கு வந்திருப்பவர் - அவருக்கு அந்தப் பெண்ணின் குழந்தைக்கு ஆயாவாக இருக்க விருப்பமில்லை. நிஸ்தாரிணி என்ற உறுதியான மனம் கொண்ட பெண்ணையும் இந்த நாவலில் சந்திக்கிறோம் - தன்னால் தன் மகனின் மணவாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்று அவர் இங்கு வருகிறார்.
முதுமை எப்போதும் தன்னுடன் ஞானத்தைக் கொணருவதில்லை என்பதை உணர்த்துகிறார் நபநீதா. அப்ராஜிதா போன்றவர்களுக்கு மானுடம் குறித்த புதிய உணர்த்தல்களை அளித்து மனவிரிவு அளிக்கும் முதுமை வேறு சிலர் விஷயத்தில் அவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் முன்முடிவுகள் மேலும் கெட்டிக்கச் செய்கிறது. முதுமையின் காரணமாக ஒரு பெண் சித்த சுவாதீனமில்லாமல் நடந்து கொள்ளும்போது இல்லத்தில் இருக்கும் பிறர் அவளை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் - தங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமே அந்த இல்லம் என்று அவர்கள் நினைக்கின்றனர். இவர்களின் கதைகள் சமூகத்தின் பன்முக அமைப்பைச் சித்தரித்து, நம் வீட்டில் வயோதிகர்கள், அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள், எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை விவரிக்கின்றன - ஆனால் நபநீதா இதை முழுமையாகச் செய்திருக்கிறார் என்று சொல்ல முடியாது.
வெவ்வேறு பாத்திரங்களின் பார்வையில் கதை சொல்லப்படும்போது, அந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்குரல் இருந்தால் கதை தொய்வில்லாமல் சுவாரசியமாக இருக்கும். இங்குதான் நாம் மொழிபெயர்ப்புகளின் குறையை உணர்கிறோம் (மொழிபெயர்ப்பின் குறை என்று சொல்வதை மொழிபெயர்ப்பாளரின் குறை என்று பொருள் கொள்ளக்கூடாது). நபநீதா தேவ் சென்னும் சரி, இதன் மொழிபெயர்ப்பாளரும் சரி, இந்தக் கதையில் உள்ள ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு வகை வங்காள மொழி பேசியதாகச் சொல்கின்றனர் - இது அவர்களின் சமூகப் படிநிலையை வெளிக்காட்டுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக, இவற்றை மொழிபெயர்க்க முடியாது - ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது எல்லாரும் ஏறத்தாழ ஓரே மாதிரிதான் பேசுகின்றனர். இதனால் கதையின் இயல்பு கெடுவதில்லை என்பதும் உண்மையே. அப்ராஜிதாவின் பண்பட்ட தொனியும் நிஸ்தாரிணியின் கல்விப்பூச்சற்ற தொனியும் ஆங்கிலத்தில் வெளிப்படுகின்றன. பிற வழக்குகளிலுமாக வாசிக்கையில் வங்காளத்தில் இந்தக் கதை ஒரு சிறந்த அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக அபராஜிதா பேசும் பகுதிகள் கவித்துவ உணர்வு நிறைந்தவையாக இருக்கின்றன.
கம்ப்யூட்டர் காலத்துக்குத் தகுந்த புத்தகம் இது. மத்திம வயது பெண்கள் நிறைய பேர் இப்போது பணியில் இருக்கின்றனர். இவர்கள் சுதந்திரத்தை நேசிப்பவர்கள், முதுமையில் முடங்கியிருக்க விரும்ப மாட்டார்கள். அதே சமயம், பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்ப அமைப்பில் பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முதியவர்கள் மேலும் மேலும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சென்ற தலைமுறையில் தாத்தா பாட்டிகள் பேரக்குழந்தைகலைப் பார்த்துக் கொள்வது எனபது இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால் எதிர்காலம் இப்படி இருக்குமா? விடுதலை நாடும் இன்றைய பெண்கள் தங்கள் கூதிர்ப் பானாளை எதிர்த்து எவ்வாறு நிற்பார்கள்? நபநீதா தேவ் சென்னின் இந்தக் குறுநாவல் சில விடைகளைச் சுட்டுகிறது.
Sheet Sahasik Hemantolok
Defying Winter
Nabaneeta Dev Sen and Translated by Tutun Mukherjee
OUP India
176 pages
தமிழாக்கத்தில் உதவி - பீட்டர் பொங்கல்
Defying Winter
Nabaneeta Dev Sen and Translated by Tutun Mukherjee
OUP India
176 pages
தமிழாக்கத்தில் உதவி - பீட்டர் பொங்கல்
No comments:
Post a Comment