சிறப்புப் பதிவர்: ஷாந்தி
நானாக புத்தகங்களை தேர்ந்தெடுக்காத ஆரம்ப காலங்களில் எனக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் பெஸ்ட் செல்லர்ஸ் எனப்படும் "விற்று தீரும்" புத்தகங்கள்தான்.
புதினங்கள், கற்பனை, மாயக்கதைகள், தன்முனைப்பு, சுயசரிதை என எல்லா பிரிவிலும் பெஸ்ட் ஸெல்லர் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. ஓரளவு வாசிப்பு மற்றும் இணையத்தில் புத்தக அறிமுகங்கள், குறை/ நிறை விமர்சனங்கள் படித்து புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்த பிறகுதான் சிறந்த புத்தகங்களுக்கும் சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களுக்கும் உள்ள வேறுபாடு புரிந்தது.
அமிஷ் த்ரிபாதி எழுதிய "Immortals of Meluha" படிக்க எடுத்தபோது பெஸ்ட் செல்லர் அடைமொழியைத் தாண்டி Shiva trilogy என்ற குறிப்பே படிக்கத் தூண்டியது. புராண- இதிகாச கதைகள் அதிகம் தெரியாததால் இப்படியாவது தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வமே காரணம். ஆனாலும் கதைக்களம் புரியாமல் போகுமோ என்ற பயமும் இருக்கவே செய்தது.
கி.மு 1900ல் நடந்ததாக வரும் இந்த கதையில் சிவா (சிவன்) ஒரு பழங்குடி இனத்தலைவர். தினம்தினம் அருகாமை பழங்குடி இனத்தின் தாக்குதல்களை முறியடித்து கைலாச மலையில் வாழ்கிறார். இந்த போராட்டத்தை வெறுக்கும் நிலையில் அங்கு வரும் நந்தி அமைதியும் செழிப்பும் உள்ள தன் நாடான மெலூகாவிற்கு அழைத்ததும் தன் மக்களின் நலனை எண்ணி தன் மக்களோடு மெலூகா செல்கிறார். அங்கு அவர்களுக்கு தரப்படும் சோமபானம் என்னும் ஆயுளை நீட்டிக்கும் மருந்தால் சிவன் கழுத்து நீலநிறமாய் மாறுகிறது. மெலூகாவின் புராண கதைப்படி வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவருக்கு சோமபானம் அருந்தியதும் கழுத்து நீலமாய் மாறும் என்றும் அவர் மெலூகாவை காக்கவந்த கடவுள் எனவும் குறிப்பு இருப்பதால் சிவன் அவர்களால் நீலகண்டனாய், கடவுளாய் பார்க்கப்படுகிறார்.
சூர்யவம்சிகளான மெலூகா மக்கள் சந்திரவம்சிகளை வெல்ல சிவனின் உதவி கோருகின்றனர். சந்திரவம்சியினர்கள் நாகர்கள் துணையுடன் மெலூகாவை அழிக்கும் அபாயம் உள்ளதாய் சூர்யவம்சிகள் நம்புகிறார்கள். சிவன் மெலூகாவின் அரசரான தட்சனின் மகளான சதியை காதலித்து தடைகளை தாண்டி திருமணம் செய்து கொள்கிறார். சூர்யவம்சிகளுக்காக போரிட்டு சந்திரவம்சிகளை போரில் வெல்கிறார். இறுதியில் தான் பங்குபெற்ற போரின் நியாயம் குறித்தும் நன்மை-தீமை குறித்த தன் கண்ணோட்டம் குறித்தும் ஐயமுற்று பின் தெளிவுறுகிறார்.
ஒரு சாதாரண மனிதன் கடவுள் தன்மை அடைந்து வெற்றி பெறுவதாய் நகரும் கதை, விறுவிறுப்பாக உள்ளது. ஆசிரியர் கதை நடக்கும் காலமாய் 1900 கி.மு வை குறிப்பிடுகிறார். வரலாற்று சான்றுகள், புராண மேற்கோள்களின்றி கதைமாந்தர்கள். களம் மட்டுமே புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு கதை நவீனநடையில் அதிவேகமாய் நகர்கிறது. தர்க்கங்களைப் பற்றி கிட்டத்தட்ட எந்த கவலையுமே இல்லாமல் நகரும் கதை அடுத்தடுத்த பக்கங்களின் விறுவிறுப்பினாலயே தடையின்றி முன்செல்கிறது.
விவரிப்புகளில் கதையின் காலத்திற்கு ஏற்ற தொன்மை இல்லாதது பெரும் ஏமாற்றம். அந்த காலகட்டத்தைப் பற்றிய அறிமுகம் உள்ளபோதும் விவரணைகள் கற்பனையில் குறுக்கிடுகின்றன. உதாரணத்திற்கு parking lot, stretcher, terrorist attacks போன்ற ஆங்கில வார்த்தைகள். எளிய நடை என்று வகைப்படுத்த முடியாத சாதாரண நடை, சமயங்களில் ஒத்துப்போகாமல் வியப்பளிக்கிறது. கடவுளாய் கொண்டாடப்படும் சிவன் சரளமாக வசைச் சொற்களை உபயோகிக்கிறார். ராமராஜ்ம் நடக்கும் மெலூகாவின் தன்னிறைவான நேர்த்தியான கட்டிட அமைப்புகள் விவரணையில் attached bathroom, three storeyed building, covered underground drains, platform, போன்ற வார்த்தைகள் இன்றைய நவீன நகரங்களையே கற்பனை செய்ய வைக்கின்றன. பிரகஸ்பதியை scientist என கூறுவதால் மந்திரமலையில் சோமபானம் தயாரிப்பது மருந்தக தொழிற்சாலை உணர்வை தருகிறது.
கதையிலேயே ப்ரகஸ்பதி சிவனிடம் வசை சொற்கள் கூறுவது நல்ல நடத்தை(manners) அல்ல என்றும் சிறு குணக்குறையாய் தெரியும் என்றும் கூறுவதாய் வருகிறது, சிவன் அதற்கு அது தன் மனநிலையை உரைத்து வெளிப்படையாய் கூறும் தைரியத்தை காட்டுகிறது என பதிலளிக்கிறார். ஆனாலும் நீலகண்டன் என்றும் மஹாதேவ் என்றும் கடவுளாய் பார்க்கப்படும் சிவன் கூறும் damn, dammit, shit போன்ற வார்த்தைகளை அதுவும் அடிக்கடி கூறுவதாய் படிக்கையில் ஒவ்வவில்லை. தர்க்க மீறல்கள் படைப்பிற்குள்ளேயே பேசப்படுவதால் சரியாகிவிடுமா என்ன? அதே போல wow, what a woman, let's dance, did I impress her? போன்ற சிவன் தனக்குள் பேசிக்கொள்ளும் வரிகளும் கதைக்கு ஏனோ ஒட்டவில்லை.
கதையின் தொடக்கத்தில் கழுத்து நீலநிறமான தருணம் முதல் ஒட்டுமொத்தமாய் அனைவரும் சிவனை மெலூகாவை காக்க வந்த நீலகண்டனாய் ஒப்புக்கொள்வது, அவர் தனக்கு உண்மையாகவே சக்தி உள்ளதா என யோசிக்கும்போதும் கடவுள்! கடவுள்! என்று விடாமல் தொழுவது, சிவன் செய்து முடிக்கும் காரியங்கள் யாவும் மக்கள் அவரை நீலகண்டனாய் நம்புவதாலேயே நடப்பதுபோல் கதை செல்கிறது. இந்த சூழ்நிலை வரும் கதையின் பெரும்பகுதி நேரம் "இனிமே எல்லாம் அப்படித்தான்" திரைப்பட வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. அனைவரும் கடவுள் என ஒப்புக் கொள்வதாலேயே சுலபமாக மெலூகாவின் விகர்மா என்னும் மூடநம்பிக்கையை சட்டம் நிறைவேற்றி நீக்கிவிட்டு சதியை மணக்கிறார். இறுதியில் சிவன் போரில் சண்டையிட்டு சந்திரவம்சிகளை வெல்லும்போதும் கதாநாயகனாக தெரிகிறாரன்றி கடவுளாய் அல்ல. அதற்குப் பிறகும் நிம்மதி கொள்ளாமல் தான் சண்டையிட்டது தீமையுடன்தானா என சஞ்சலமடைந்து ராமஜென்ம பூமியான அயோத்தியில் கண்ணோட்டமே நன்மை-தீமை நிர்ணயம் செய்கிறது என தெளிவுறுவதாக முடிகிறது. மிக நேர்த்தியான ராஜ்யத்தை உருவாக்கி வளர்த்த ராமரை போற்றும் கோஷமான "ஜெய் ஸ்ரீ ராம்" என்பதில் தொடங்கி "ஹர் ஹர் மஹாதேவ்" - ஒவ்வொருவரும் கடவுளே என நிறைவுறுகிறது.
நல்ல விறுவிறுப்பான கதை மற்றும் கதைக்களம்- சுவாரஸ்யமாய், நேர்த்தியாய் சொல்லப்பட்டிருந்தால் சிறப்பான புத்தகமாய் இருந்திருக்கும்.நேரம் அதிகமாய் தேவைப்படாத Page turner வகை புத்தகமென்பதால் மட்டுமே பெஸ்ட் செல்லர் அடைமொழியை கண்டு கொள்ளாமல் அடுத்த இரண்டு பாகங்களையும் படிக்க நினைத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment