பதிவர்: பாலாஜி |
Source: io9.com |
தமிழில் குழந்தைகளுக்கான மாய மந்திர கதைகள் நிறைய உள்ளன. இவை இன்றும்கூட முக்கால்வாசி சமயங்களில் வெறும் நீதி போதனை கதைகளாகவும், மகிழ்ச்சிகரமான முடிவை நோக்கியே செல்லும் கதைகளாகவும் இருக்கின்றன என்பதுதான் வருத்தமான விஷயம்.
நெய்ல் கைமான் குழந்தைகளுக்காக எழுதிய "The Graveyard Book" இந்த வகை புத்தகங்களில் இருந்து பெரிதும் மாறுபட்டு உள்ளது. அது நெகிழ்ச்சியான முடிவை நோக்கி இழுத்துச் சென்றாலும், மிகையான கற்பனை உலகு ஒன்றை நமக்குக் காட்டினாலும், வாசகரை அதில் ஊன்றி படிக்க வைப்பதில் வெற்றி பெறுகிறது.
குழந்தைகளுக்கான கைமானின் இன்னொரு புத்தகம் Neverwhere. பிபிசி தொலைகாட்சியில் நெடுந்தொடராக வந்த இதை பின்னர் நாவலாக எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரியவர்களுக்கான ஒரு இருண்ட- மிகைகற்பனைக் கதை என்று சொல்லலாம். இப்படி தமிழில் தம் கட்டிச் சொல்லும்போது, மிரட்டல் இலக்கிய வகைமையைச் சேர்ந்த புத்தம் புதிய செவ்வியல் நாவல் மாதிரி இருக்கிறது, ஆனால் அப்படியெல்லாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆங்கிலத்தில், "Dark Fantasy" நாவல் என்று சொன்னால், கொடு புத்தகத்தை என்று கேட்பீர்கள். இதைப் படிக்கும்போதோ, படித்து முடிக்கும்பொழுதோ இப்படி எல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த நாவல் மிகவும் ரசிக்கலாம்.
ரிச்சர்ட் மேஹ்யு தனது வருங்கால மனைவியுடன் இரவு உணவுக்குச் செல்லும்போது, ஒரு பெண்ணை காப்பாற்ற நேரிடுகிறது. ஆனால் அவனது அதிர்ஷ்டம், அந்தப் பெண்ணை காப்பாற்றியதும் காதலி அவனைவிட்டு பிரிகிறாள். ரிச்சர்ட் காப்பாற்றிய பெண்ணின் பெயர் டோர் (door).
பொதுவாக மிகுகற்பனை (fantasy) நாவல்களில் சொல்லப்படும் இடங்கள் நாம் பார்த்திராத இடங்களாக இருக்கும். இந்த நாவலில் லண்டனின் மண்ணுக்கடியில் உள்ள ரயில் நிலையங்கள், கழிவு நீர் அகற்றிச் செல்லும் குழாய்கள் கதை நிகழும் மையங்களாக இயங்குகின்றன. இந்த பாதாள உலகில் சில மாயமிகு கற்பனைக் கதாபத்திரங்களை படைத்து, அவர்கள் உலகில் ஒரு சாதாரண மனிதன் செய்யும் சாகசத்தை விவரிக்கும் கதை இந்த நாவல்.
டோர் பாதாள உலகைச் சேர்ந்தவள். அவளைக் கொலை செய்ய Vandemaar மற்றும் Croup முயற்சி செய்யும்பொழுது அவள் பாதாள உலகிலிருந்து தப்பித்து மேல் உலகுக்கு வருகிறாள். அங்குதான் ரிச்சர்ட் அவளை காப்பாற்றுகிறான்.
ரிச்சர்டின் உதவியால் அவள் மீண்டும் பாதாள உலகம் செல்கிறாள். பாதாள உலகப் பெண்ணைச் சந்திப்பதால் ரிச்சர்ட் மேல் தளத்தில் உள்ள நிகழ் உலகில் இருந்தாலும், அவன் யார் கண்ணுக்கும் புலப்படாமல் போகிறான். அவனும் பாதாள உலக மனிதனாக மாறுகிறான். இதனால் அவன் இரு வேறு உலகங்களில் இரு வேறு மனநிலைகளை அனுபவிக்கிறான்.
இதன்பின் எப்படியோ டோர் உடன் மீண்டும் சந்தித்து அவளது பாதாள உலகுக்கே செல்கிறான். இதே சமயம் Vandemaar மற்றும் Croup டோர்ஐ தேடுகிறார்கள். டோர் தன் பெற்றோர்களை கொன்றவர்கள்தான் தன்னை கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்கிறாள். அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு பாதுகாவலரை தெரிவு செய்கிறாள். முதலில் ரிச்சர்ட் இன் உதவி கொண்டு Marquisஐ அழைத்து வரச் செய்கிறாள். இவர்கள் எப்படி டோர் இன் எதிரிகளை சமாளிக்கிறார்கள் என்பதே நாவலின் மீதி கதை.
இது சாதாரண நம் எதிர்பார்ப்பை தூண்டி நம்மை வேறு உலகுக்கு கொண்டு செல்லும் நாவலாக இருந்தாலும், ஒரு வித்தியாசமான கதைக்களத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த கதாபத்திரங்களுக்கு ஒரு சில முக்கியமான ஆற்றல்கள் இருக்கின்றன. அவர்கள் மனிதர்கள் மாதிரியே சிந்தித்து செயல்பட்டாலும், அவர்களுக்கு இருக்கும் சில சக்திகள் மனிதர்களிடம் இருந்து அவர்களை பெரிதும் வேறுபடுத்தி காட்டுகிறது. உடம்பில் எந்த காயம் பட்டாலும் சாகாத Vandemaar மற்றும் Croup, தனது உயிரை பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் Marquis, எல்லாவிதமான பூட்டுகள் -கதவுகளை திறக்கும் சக்தி கொண்ட டோர், எல்லா சக்திகளும் கொண்ட தேவதை Islington. டோர் இன் பாதுகாவலராக வரும் ஹன்டர் (Hunter), பாதாள உலக பெரும் மிருகங்களை வீழ்த்துவதை பெரிதும் விரும்புகிறாள்.
நட்பு, துரோகம், தனிமை என்று மனிதன் எதிர்கொள்ளும் அதே உணர்ச்சிகளை இந்த மாந்தர்களையும் எதிர்கொள்ள வைத்து மிகுமாய நிகழ்எதார்த்தவாத உலகை படைக்கிறார் காய்மான். இது போன்ற ஒரு மிகுமாய நிகழ்எதார்த்தவாத நாவல் தமிழ் இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. மிகுமாய நிகழ்எதார்த்தவாதம் வெற்றிகர சினிமா டெம்ப்ளேட்டாக இருந்தபோதும் இப்படிப்பட்ட நாவல்கள் பேர் சொல்லும் தரத்தில் தமிழில் இல்லாதது நம் எழுத்தாளர்களில் ஓரிருவர் நீங்கலாக அனைவரும் முரட்டு இலக்கியத் தீவிரவாதிகள் என்பதை உணர்த்துகிறது. இது தவிர, தமிழின் பெஸ்ட் செல்லர்ஸ் சென்னை புத்தகச் சந்தையில் பதினைந்து நாட்களில் ஐநூறு பிரதிகளும் மிச்ச முன்னூற்று ஐம்பது நாட்களில் தமிழகமெங்கும் ஆயிரம் பிரதிகளும் விற்றுச் சாதனை படைப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
நிறைய இடங்களில் இரத்தம் தெறிக்கும் சம்பவங்களும், திகிலடைய வைக்கும் சம்பவங்களுமாக இந்த நாவல் ஒரு இருண்ட பாதையில் நம்மை இழுத்து செல்கிறது. ரிச்சர்டின் கதாபாத்திரத்தை இந்த இருண்ட உலகுக்கு நம்மை அழைத்து செல்லும் கருவியாக படைத்து, ரிச்சர்ட் மூலம் அந்த உலகை விவரணை செய்கிறார் காய்மான். லண்டனின் பாதாள உலகை விவரிக்கும்போது நம்மை அந்த இடங்களில் மிக எளிதாக பயணிக்க வைக்கிறார்.
இந்த நாவலை முழுவதுமாக படித்து முடிக்க இரண்டு மூன்று நாட்கள் ஆயின. ஆனால், பொதுவாசகன் ஒருவன் மொத்தமாக ஒரு ஐந்து ஆறு மணி நேரங்களில் இந்த நாவலை வாசித்து முடித்து விடலாம். நாவலை விட்டு விட்டு வாசித்ததாலோ என்னவோ, இப்படி எல்லாம் நடக்குமா என்று மனம் கொஞ்சம் முரண் செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் நாவலின் மிக எளிமையான எழுத்து என்னை வசீகரித்து தொடர்ந்து வாசிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல.
Neverwhere - Neil Gaiman | Headline Review - Headline Book Publishing | 400 Pages | INR 399 | Buy Online
No comments:
Post a Comment