- வெ சுரேஷ் -
தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க ரசிகர்களின் ஆதரவு இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு என்றும் ஒரு அனுதாபமும் அன்பும் உண்டு என்றாலும், அவர்களின் மறுவாழ்வுக்கு அது ஒருபோதும் துணை நிற்கவில்லை.
நடிகர்களைவிட நடிகையர்களின் மேலான வெகு மக்கள் ஈடுபாடு இன்னும் சிக்கலானது. நடிகர்கள் மீதான வழிபாட்டு மனோபாவம் நடிகைகள் மீது கிடையாது. குஷ்புவுக்குக் கோவில் கட்டியது ஒரு விதிவிலக்கு. நடிகைகள் அவர்கள் அதிகம் ஏற்ற பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப காதலியாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும், சகோதரியாகவும் பார்க்கப்பட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஒப்புநோக்க நடிகைகள் விரைவில் மறந்து போகக் கூடியவர்களாகவே இருகிறார்கள். மேலும், நடிகர்களின் திரை வாழ்க்கையின் மீதும் அவர்களிடம் மக்கள் கொண்டிருந்த அபிமானத்தின் மீதும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கை செலுத்திய செல்வாக்கை விட, நடிகைகளின் திரை வாழ்க்கை மற்றும் அவர்களின் மீதான அபிமானத்தின் மீது செலுத்தியது மிக அதிகம்.
இந்தப் பொதுவிதிக்கு விலக்காக அமைந்த ஒரு நடிகையும் உண்டு. அவர்தான் சாவித்திரி. அன்பே உருவான சகோதரி, அமைதியே உருவான மனைவி, குறும்பும் குதூகலமும் இருந்தாலும், கண்ணியமே மேலோங்கி நிற்கும் காதலி, இவையே அவரின் திரை முகங்கள். ஒரு அச்சு அசலான தமிழ் குடும்ப விளக்கு என்றால் ஒரு காலத்தில் அது சாவித்திரிதான். ஆனால் தனிப்பட்ட வாழ்வில், அவர் ஒரு துடுக்கான ஆளுமையாகவும், சற்றே கர்வம் மிக்கவராகவுமாக இருந்தார் என்றும், திரையில் அவர் யாராக அதிகம் நடித்தாரோ, அப்படிப்பட்ட பெண்ணுக்கு இருக்கக்கூடாத பழக்கங்கள் அவருக்கு இருந்தன என்பதும் பின்னாளில் தெரியவந்தது. ஆனால் இந்த உண்மைகள் அவரின் மீதான மக்களின் அபிமானத்தை குறைத்ததா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. அதில் சாவித்திரி மறைந்த விதம் ஒரு பங்காற்றியிருக்கலாம்.
இதெல்லாம் நான் பின்னாளில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று படித்து அறிந்து கொண்டது. என் இள வயதில் சாவித்திரி என்றால், அது மலர்களைப் போல் உறங்கும் பாசமலர், வணங்காமுடியில் அசத்திய நாடோடிப் பெண், அதே படத்தில் அவர் ஏற்று நடித்த கண்ணியமான ராஜகுமாரி. மகாதேவியில் ராவணன் சிறையிலிருந்த சீதையைப்போல அழகும், துயரும், மாட்சிமையும் வெளிப்படுத்திய முகம் கொண்டவர். பார்த்தால் பசிதீரும் படத்தில் கைவிடப்பட்ட அபலை, நவராத்திரியில் ஒன்பது சிவாஜிகளையும் ஒற்றையாக சமாளித்தவர். ஆடாமல் ஆடும் நளினம் கைவரப்பெற்றவர்.
நான் 70களிலும் அதன் பிற்பகுதிகளிலும் திரை அரங்குகளில், மூன்றாவது நான்காவது சுற்றாகக் காட்டப்படும் சாவித்திரியின் பழைய படங்களில் அவரது பளபளக்கும் விழிகளையும் நொடிக்கு நூறு பாவம் காட்டும் முக வசீகரத்தையும் பார்த்து பிரமித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரைப் பற்றிய மோசமான வதந்திகளையும் கேளிவிப்பட்டுக் கொண்டிருந்தேன். 80-81 காலகட்டத்தில் அந்த அழகு முகம், நீரிழிவு நோயாலும், காலம் தந்த துயரமான படிப்பினைகளாலும், ஒடுங்கிச் சிறுத்து நைந்து போன புகைப்படங்களையும் கண்டு கொண்டிருந்தேன்.
1981ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அவர் மறைந்த செய்தி வந்தது. ஏறத்தாழ 9 மாதங்கள் கோமாவிலேயே இருந்து மீளாமல் மறைந்தார். தெரிந்த பெண்மணிகள் எல்லாம், ஐயோ பாவம், இப்படி ஒரு முடிவு வந்திருக்கனுமா, எல்லாம் அந்த ஜெமினியால் வந்த வினை, அவனை நம்பிக் கெட்டாள், என்று புலம்பித் தீர்த்தனர். யாருமே சாவித்திரி வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட தீய பழக்கங்களுடன் கூடிய வாழ்வினைப் பழிக்கவில்லை. அவரை மறந்திருந்தவர்கள் கூட இப்போது அவரை நினைத்து உருகினார்கள். அன்று எனக்குத் தெரியவந்தது, சாவித்திரியின் தனிப்பட்ட கெட்ட பழக்கங்களோ அவர் வாழ்ந்த விதமோ ஒருபோதும் அவருக்கு இருந்த அந்த குடும்ப விளக்கு என்ற பிம்பத்தை உடைக்கவேயில்லை என்பது.
உண்மையில் சாவித்திரி யார்? எப்படிப்பட்டவர்? அசாத்திய திறமை படைத்த நடிகை என்பது எல்லோரும் அறிந்தது. தமிழக வழக்கப்படி, நடிகர் திலகத்துக்கு ஈடான நடிகையர் திலகம் அவர். ஆனால் திரைக்குப் பின்னால் அவர் யார் என்பது குறித்து உதிரி உதிரியாக அன்றி ஏதும் படிக்கக் கிடைத்ததில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2015ல் வெளியாகியுள்ள நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதியுள்ள " சாவித்திரி கலைகளில் ஓவியம் " என்ற புத்தகம் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
சாவித்திரியின் வாழ்வை ஆதியோடு அந்தம் விவரிக்கும் இந்த நூல், தமிழ் சினிமாவுக்கே உரிய மிகை உணர்ச்சி நடையில் அமைந்திருந்தாலும், அவரது வாழ்க்கை குறித்த பல கேள்விகளுக்கு விடையளிப்பதாகவும், அந்தக் கால தமிழ் சினிமா, மற்றும் தமிழக அரசியல் சமூக நிலை குறித்தும் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இன்னொரு சிறப்பம்சமாக சாவித்திரி பிறந்ததிலிருந்து துவங்கி ஒரு நேர்க்கோட்டில் செல்லாமல் திரைப்படங்களுக்கே உரிய வகையில் சென்னையின் லேடி வெலிங்டன் மருத்துவமனைக் காட்சியில் துவங்கி கடைசியில் அங்கேயே வந்து முடிகிறது. இடையிலும், முன் பின் என்று சாவித்திரி வாழ்க்கைப் பாதையைக் காண்பித்தாலும், குழப்பம் இல்லாமல் தெளிவாகவே சொல்லப்பட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
சாவித்திரி போன்ற ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று நூலில் மக்கள் எதிர்பார்க்கும் அநேகமாக எல்லா தகவல்களையும் தொகுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பல இடங்கள் இப்படியும் நடக்குமா என்று வியக்க வைக்கின்றன. அவற்றில் முதன்மையாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆன ஜெமினி கணேசனை சாவித்திரி கண்மூடித்தனமாகக் காதலித்தது. பின் ஒரு நாள் கொட்டும் மழையில், நள்ளிரவில் தன வீட்டிலிருந்து வெளியேறி, தன்னந்தனியாக ஜெமினியின் வீட்டுக்குச் செல்லும் அவரை, ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி திறந்த மனதோடு வரவேற்று அடைக்கலம் தருவது.
சாவித்திரி குறித்த அதிகம் தெரியாத தெரிந்திருந்தாலும் மறந்து போன பல விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவருவதும் இதன் சிறப்பு. சாவித்திரி சென்னையில் அபிபுல்லா சாலையில் வசித்து வந்தார். அருகே இருந்த காமராஜரின் மீது அளப்பரிய மரியாதையும் அபிமானமும் கொண்டிருந்த அவர் ஜெமினியுடன் சேர்ந்து காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பது எனக்கு புதிய செய்தியாக இருந்தது.
வரவு செலவுகளை கவனமாக பராமரிப்பதில் கலைஞர்களுக்கு உள்ள கவனமின்மை புரிந்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் சாவித்திரிக்கு தன் ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் வாங்கிக் குவித்த நகைகளின் எண்ணிக்கை சுத்தமாக எவ்வளவு என்றே தெரியாது என்பதும், அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்து அவர்கள் அள்ளி எடுத்துக் கொண்டு போன நகைகள் எதற்குமே அவருக்கு கணக்கு ஒப்பிக்கத் தெரியவில்லை என்பதும் திகைக்க வைக்கும் ஒன்று.
இந்த வருமான வரி சோதனை, 1965ல் திருவிளையாடல் படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற பின்னர் நடக்கிறது. அநேகமாக அந்த படத்தில் பங்கு கொண்ட அனைவரது வீட்டிலும் நடந்தது என்கிறார் நூலாசிரியர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்- இயக்குனர் ஏ.பி. நாக்ராஜனில் தொடங்கி, பங்கு கொண்ட நடிக நடிகையரில் அநேகமாக அனைவருமே காங்கிரஸ் மீது பற்றுள்ளவர்கள் என்பதையும், அந்த சமயத்தில் காங்கிரசே மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்தது என்பதையும் பார்க்கும்போது இதை என்ன சொல்வது? இந்த வருமான வரிச் சோதனைதான் சாவித்திரியின் வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனையாக அமைந்தது. அதில் ஏறபட்ட பணச்சுமையே அவரது மனமுறிவுக்குக் காரணமாக அமைந்தது என்கிறார் இன்பா.
சாவித்திரியின் வாழ்க்கையில் இரு பெரும் நிகழ்வுகள், ஜெமினியோடு அவர் கொண்ட உறவும் பிரிவும். ஜெமினியோடு இருந்த உறவு எப்போதுமே தென்றலும் புயலும் மாறி மாறி அடித்த ஒன்று. தென்றலை விட புயலடித்த நாட்களே அதிகம். அதற்கேற்றார் போலவோ என்னவோ, 1964ல் தனுஷ்கோடி அழிந்த பெரும் புயலில் இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டார்கள் என்பது எவ்வளவுப் பொருத்தம். அந்தப் புயல்கூட சாவித்திரி யின் வாழ்வில் அதற்குப் பின் அடிக்கப் போகும் பல புயல்களுக்கு ஒரு முன்னோடி போல அமைந்தது எனலாம்.
ஜெமினிக்கு எப்போதுமே சாவித்திரி பலரில் ஒருவர். ஆனால் சாவித்திர்க்கு ஜெமினி அப்படியில்லை. ஜெமினி அந்த நாட்களில் ராஜஸ்ரீ என்ற நடிகையுடன் நெருக்கமாக பழகத் தொடங்குகிறார் என்ற சேதியே அதனால்தான் அவர் ஜெமினியிடம் பிணக்கம் கொள்ள வைக்கிறது. இவர்களின் ஒன்றுபட்ட வாழ்வினை விரும்பாத சாவித்திர்யின் நெருங்கிய உறவினர்களால் இந்தச் சூழல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு, அந்தப் பிரிவை நிரந்தரமாக்கி, சாவித்திரியின் செல்வத்தை சூறையாட வைக்கிறது. ஜெமினியையும் உறவினர்களையும், நம்பிக் கெடுகிறார் சாவித்திரி. இந்தச் சூழ்நிலையில்தான், ஜெமினி விளையாட்டாக பழக்கிக் கொடுத்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். நீரிழிவு நோயும் தாக்குகிறது. மீள முடியாத இறங்கு முகத்தில் செல்கிறது அவர் வாழ்க்கைப் பயணம்.
நோயால் பொலிவிழந்த முகமும் மருந்து மாத்திரைகளால்,பெருத்த உடலும் கொண்ட சாவித்திரிக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நேரத்தில் எல்லோரும் செய்யும் தவறை சாவித்திரியும் செய்தார். தானே படங்களை தயாரிக்கத் தொடங்கினார். எப்போதுமே படங்களை இயக்குவதற்கான திறமையைக் கொண்டவர் என்பதும், சில வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதும் வேறு விஷயங்கள். ஆனால் படத் தயாரிப்புக்கும், செலவுகளைக் கண்காணிப்பதற்கும் தேவையான சூட்சுமம் கைவரப் பெறாதவர் அவர் என்பது அவர் எளிமையாக ஏமாந்ததிலிருந்து அறியலாம்.
சாவித்திரியின் தயாரிப்பு- இயக்கம் என்றவுடனேயே மனதில் தோன்றும் படம் பிராப்தம். முக மனசுலு என்ற மிக வெற்றிகரமான தெலுங்குப்படம் பின் மிலன் என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்டு அங்கும் பெருவெற்றி பெற்றது. அதையே தமிழில் பிராப்தம் என்ற பெயரில் தயாரித்து, இயக்குகிறார் சாவித்திரி. முதலில் அதை இயக்குவதற்கு அவர் அழைப்பது வசனகர்த்தாவும் அவரது உண்மையான நலம்விரும்பிகளில் ஒருவருமான ஆரூர் தாசை. ஆனால் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கி தோல்வி கண்ட மோசமான அனுபவத்தால் அதை மறுத்து வசனம் மட்டும் எழுதுகிறார் தாஸ். ஜெமினி அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க மறுத்து விட்டதுடன், அந்தக் கதை தற்காலத்துக்கு ஏற்றதல்ல என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் விதி வலியது அல்லவா?
ஜெமினியின் பிரிவு நிரந்தரமானபின் அதை எடுத்தே தருவேன் என்று பிடிவாதத்துடன் எடுக்கிறார். தன் உண்மையான அன்னனனைப் போலவே பழகி வரும் சிவாஜியிடம் உதவி கேட்கிறார். பாசமலருக்குப் பின் சிவாஜியும் சாவித்திரியும் திருவிளையாடல் தவிர வேறு எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. அதை மக்கள் விரும்புவார்களா என்று தயங்குகிறார் சிவாஜி. சாவித்திரியின் வற்புறுத்தல் காரணமாகவும் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்துடனும் நடிக்க இசைகிறார். அந்தப் படத்தில் சிவாஜி சரியான ஒத்துழைப்புத் தரவில்லை, இழுத்தடித்தார், என்று சொல்லப்படுவதெல்லாம் வதந்திகளே என்று இந்த புத்தகம் தெளிவாக்குகிறது. மேலும், பரவலாக கருதப்படுவது போல அந்தப் படம் வணிகரீதியாக அவ்வளவு பெர்ய தோல்வியல்ல என்பதையும் காட்டுகிறது.சுமார் 6.5 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் 15 லட்சத்துக்கும் மேல் வசூலித்தது. குறைந்தபட்சம் மூன்று லட்சம் அதில் லாபமே வந்தது.
ஆனால் அப்போது சாவித்திரியைச் சுற்றியிருந்த அவரது நெருங்கிய உறவினர்கள் -அவர் அக்கா, அக்காவின் கணவர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் ஆகியோரின் சூழ்ச்சி காரணமாகவே இந்தப் பணம்கூட சாவித்திரிக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனுடன் சாவித்திரி தயாரித்து இயக்கிய விந்த சம்சாரம் எனும் தெலுங்கு மொழிப்படம், (வியட்நாம் வீடு படத்தின் தெலுங்கு பதிப்பு) , பிராப்தம் வந்த அதே நாளில் வெளிவந்தது. அந்தப் படத்தின் மோசமான தோல்வியே சாவித்திரியை முடக்கியது என்கிறார் இன்பா. ஆக சாவித்திரியின் இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் பிராப்தம் படமோ சிவாஜியோ காரணமில்லை என்று மிகத் தெளிவாக காட்டுகிறது இந்த நூல்.
இதைவிட எல்லாம் அவரை பாதிப்புக்குள்ளாக்கியது, முன்னர் சொன்ன வருமான வரிச் சோதனை காரணமாக அவர் கட்ட வேண்டி வந்த வருமான வரிக்கு ஈடாக அவரது அபிபுல்லா சாலை வீடு ஏலத்தில் அவர் கையை விட்டுப் போன விஷயம். நிமிர முடியாத அடி அது. இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தை நினைவு கூர வேண்டியது அவசியம். அதற்கு சற்று முன்னர் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது சாவித்திரி, வீட்டில் இருந்த அத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டார். தன் மகள் விஜய சாமுண்டீஸ்வரிக்கும் தன்னிடம் இருந்த நகைகளை அணிவித்தார். அப்படி அணிந்து கொண்டு பிரதமர் சாஸ்திரியிடம் சென்று அத்தனை நகைகளையும் யுத்த நிதிக்காகக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தார். அதற்குப் பின்தான் வருமான வரிச் சோதனை. என்னவென்று சொல்ல!
மேலும், மனதில் பட்டதைப் பட்டென்று பேசும் சுபாவமும் முன் கோபமும் அவருக்கு உதவ முன்வருவதற்கு பிறரைத் தயங்க வைத்தன. அவரது வெளிப்படையாக பேசும் தன்மைக்கும் யார் குறித்தும் அச்சம் இல்லா போக்குக்கும் ஒரு உதாரணமாக, ஒரு முறை வேட்டைக்காரன் படத்துக்குப் பின் அவரை எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கும்போது, தனக்கு வெறும் அலங்கார பொம்மையாக வந்து போக விருப்பமில்லை, என்று சாவித்திரி வெளிப்படையாகச் சொல்லி விடுவதை சொல்லலாம்.
ஆனால் இத்தனைக்கும் பின்னும் சாவித்திரி ஓய்ந்திருக்கவில்லை. தன் நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று முன்கூட்டியே தெரிந்தே என்னமோ, பதினாறே வயதான தன் மகளுக்கு தன்னுடைய நெருங்கிய உறவினரின் மகனுக்குத் திருமணம் செய்வித்துவிடுகிறார். மருமகன் கோவிந்தராவ், அவரது மோசமான காலங்களில் அவருக்கு அமைந்த ஒரு நல்லூழ். பிறகு சொந்த வீட்டை இழந்த பின்னும் மனம் தளராமல், அண்ணா நகரில் ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடி போய் மீண்டும் பல படங்களில் நடிக்க தொடங்குகிறார். 1979ல் வந்த ஐ.வி. சசியின் அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் வரை அது தொடர்ந்தது. அந்தப் படத்தில் கமலுக்கு அம்மாவாக வரும் சாவித்திரி பழைய சாவித்திரிதான் என்று சத்தியம் செய்தால்தான் நம்ப வேண்டும்.
ஒரு கன்னடப் படத்தில் நடிப்பதற்காக, மகன் சதீஷுடன் மைசூரு சென்று திரும்பும் வழியில் பெங்களுரில் தங்கும் சாவித்திரி, விடுதி அறையில் இன்சுலின் போட்டுக் கொண்டபின் சாப்பிட மறந்த நிலையில், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால், மயக்கமடைந்து அப்படியே கோமா நிலைக்கு போய்விடுகிறார். பிறகு ஒரு 19 மாதங்கள் அந்த நிலையிலேயே இருந்து மறைகிறார். இடையிடையே, தன மகள் வயிற்றுப் பேரன் வரும்போது மட்டும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததைக் கண்டதாக லேடி விலிங்டன் மருத்துவமனையின் செவிலிகள் சொல்லியதாக எழுதுகிறார் இன்பா. எப்பேர்ப்பட்ட ஒரு நடிகைக்கு என்ன மாதிரியான முடிவு.
ஆனால் கடைசி காலத்தில் ஜெமினி அவரைக் கைவிடவில்லை. தன் வீட்டுக்குத்தான் அவரது உடலை எடுத்துச் சென்று அங்கிருந்தே அடக்கம் செய்ய வைக்கிறார். முதன்முதலில் தன்னந்தனியாக கொட்டும் மழையில் அந்த வீட்டுக்கு நள்ளிரவில் வந்து நின்றபோது அரவணைத்த அதே பாப்ஜி இப்போதும் சாவித்திரியின் இறுதி சடங்குகளில் உதவுகிறார்.
சாவித்திரிக்கு பெரும் புகழ் வாங்கிக்கொடுத்த படம் பாசமலர், அதுவே அவரை தமிழ் நெஞ்சங்களில் ஒரு அன்புத் தங்கையாக நிலை நிறுத்தியது. சாவித்திரியின் தனிப்பட்ட வாழ்க்கை அந்தப் படத்தில் வரும் தங்கை பாத்திரம் போல இல்லை. கையிலிருந்ததை எல்லாம் தங்கைக்காக இழந்து துன்பபப்பட்ட அந்த அண்ணன் பாத்திரம் போல அமைந்தது. ஆனாலும் இன்றும் சாவித்திரி எனும் பெயர் மரியாதையுடன் கூடிய கனிவுடனேயே நினைக்கப்படுகிறது.
ஆந்திரத்திலிருந்த வந்த இரண்டாவது பானுமதி என்றே சாவித்திரியை சொல்ல வேண்டும். பானுமதியிடமிருந்த அத்தனைத் திறமைகளும் சாவித்திரியிடமும் இருந்தன. சாவித்திரியும் சில படங்களில் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். பிராப்தம் படம் ஒன்றுதான் அவர் இயக்கிய படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 6 படங்களை இயக்கியிருக்கிறார். பானுமதிக்கும் கிடைக்காத ஒரு பெருமை சாவித்திரிக்கு அமைந்தது. அவரது சொந்த ஊரில் அவரது நினைவில் அவரது உருவச் சிலை ஒன்றை பொதுமக்கள் அமைத்துள்ளார்கள் என்பதே அது. மேலும் ஆந்திரப்பாடப் புத்தகங்களில் நடிப்பு எனும் கலையின் விளக்கம் என்பது சாவித்திரியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது எனபதையும் தெரிவிக்கிறது இன்பாவின் இந்த நூல்.
இதில் இடம்பெற்றுள்ள முன்னட்டையில் உள்ளது உட்பட அரிதான, அற்புதமான புகைப்படங்கள் இந்த நூலுக்குத் தனி அழகை தருவதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஆனால், சில பிழைகளும் உள்ளன. சாவித்திரி 19 மாதங்கள் கோமாவில் இருந்ததாக சொல்கிறார் இன்பா. அதே சமயம், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு 1981ஆம் ஆண்டு மே தினப் பரிசுகளை வழங்கிவிட்டு படப்பிடிப்புக்கு மைசூரு சென்று வரும் வழியில், பெங்களூருவில் கோமாவில் விழுகிறார் என்று வருகிறது. சாவித்திரி இறந்தது டிசம்பர் 26 1981 என்று இருப்பதால் அநேகமாக கோமாவில் விழுந்தது மே 1980 ஆக இருக்க வேண்டும். அதே போல சாவித்திரி நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவரது முழுப்பெயர் (சாவித்திரி கணேஷ் என்று ஆவதற்கு முன்) சாவித்திரி கொம்மா ரெட்டி என்றே குறிப்பிடபடுகிறது. இன்னொரு விஷயம். சாவித்திரிக்கு கார்கள் மீது ஆர்வம் உண்டென்றும் அவர் சில பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றவர் என்று படித்திருக்கிறேன். ஆனால் அது பற்றி இதில் ஏதும் இல்லை.
28 வருடங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று 248 படங்களில் நடித்து (90 தமிழ்ப படங்கள்), இன்றும் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் தென்னகத்தில் சிறந்த நடிகையென்றால் முதலில் வரும் சாவித்திரி இறக்கும்போது அவருக்கு 47 வயதுதான் ஆகியிருந்தது என்பதைப் படிக்கும்போது, மனம் கனத்துப் போய்விடுகிறது. கூடவே இதைப் படித்து முடித்ததும் பிறருக்கு பாடமாக அமைந்த சாவித்திரியின் வாழ்க்கைக்குப் பின்னரும் படிப்பினைகள் ஏதும் கற்றுக் கொள்ளாமல் அவர் வழியிலே சென்று மறைந்த இன்னும் சில நடிகைகள் என்னும் அந்த பரிதாபத்துக்குரிய பெண்களின் முகங்கள் நினைவில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
சாவித்திரி- கலைகளில் ஓவியம், நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா
தோழமை வெளியீடு, பக்.270, விலை ரூ 250
தோழமை வெளியீடு, பக்.270, விலை ரூ 250
No comments:
Post a Comment