Stories of Your Life and Others by Ted Chiang
நவரசங்களில் அற்புத-ரசத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு; அழகியலில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலுமே. 'தனது பிரபஞ்சத்தின் சுபாவத்தையே உற்று நோக்கி வியப்பவன் சம்சாரத்தின் அற்ப சுக துக்கங்களில் எப்படி உழல முடியும்?' என்று முறையிடுகிறது ஒரு புராதனத் தாந்திரீக நூல். நவீன யுகத்தில், பிரபஞ்ச இரகசியங்களையும், மானுட சுபாவத்தின் வினோதங்களையும் நொடிதோறும் அவிழ்த்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது அறிவியல் /விஞ்ஞானம்; ஆனால் தகவல்களின் வெள்ளத்தில் நீந்திச்செல்லும் நமக்கு ஒரு நொடி நிதானமாக நின்று அந்த வெள்ளத்தின் விசையை வியக்கக் கூட முடிவதில்லை. ஊடகங்கள் உருவாக்கும் சம்சாரத்தின் மாயையை ஊடுறுவி அறிவியலை நேராகக் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கடினமாகிக்கொண்டே இருக்கின்றன.
அறிவியல், தொன்மங்களைவிட வினோதமாக மாறிய பொழுது உதயமானது அறிவியல்-புனைகதை என்னும் இலக்கியவகை. கூடவே அறிவியல் சமய நம்பிக்கைகளின் போதாமைகளையும் நிரப்ப நேரிட்டது மேற்கில் துவங்கிய சரித்திரம். ஆனால் அடிப்படைவாதங்கள் தலைதூக்கிய நமது புது நூற்றாண்டில், வணிக விஞ்ஞானத்தின் போதாமைகளையும் சுமந்து நிற்கும் அறிவியல், புனைகதைகளில்கூட தனது அற்புதத்தை இழந்து நிற்பது நிதரிசனம்.
அறிவியலைத் தொழிற்நுட்பத்தின் கைம்பெண்ணாகவும், மனிதனின் ஆதிக்க இச்சைக்குக் கருவியாகவும் காணும் பிறழ்வுக் கோணம் (dystopian perspective) எச்.ஜி.வெல்ஸின் அறிவியல் புதினங்களில் துவங்கி இன்றைய யூகப் புனைவுகள் (speculative fiction) அநேகத்திலும் நாம் பரிச்சயப்பட்டதுதான். குறிப்பாக உலகப்போர்கள் இரண்டிலும் ஐன்ஸ்டீன், ஓப்பன்ஹைமர் போன்ற விஞ்ஞானிகளின் உன்னதமான கோட்பாடுகள் கூட வினாச சக்திகளாக விஞ்ஞானத்தால் மொழிபெயர்க்கப்பட்டதுமே அறிவியலின் பிறழ்வுக் கோணம் புனைகதைகளின் அத்தியாவசிய அடிநாதமாக மாறிவிட்டது. மனிதனின் அடிப்படை ஆதிக்க விழைவில் முழு நம்பிக்கை வைப்பதல்லாமல் அதீதமான மனித-மையப் பார்வையுமே அவனது அறிவியல் விழைவின் எல்லைகளைப் புனைந்து குறுக்கி விட்டனவோ என்ற ஐயமும் உண்டு.
இந்நிலையில் அறிவியல், சமயம், சமூகம் ஆகிய மூன்றையும் தத்துவ விவாத்தில் கோர்த்து யூகப் புனைவிற்கு புத்துயிர் தந்திருக்கும் ஆக்கங்களாக டெட் சியாங்கின் படைப்புகளைப் படிக்கக் கிடைத்தது. ஐஸாக் அஸிமோவ், ஆர்தர் க்ளார்க் போன்றவர்களின் வரிசையில் அறிவியலுக்கு அற்புத ரசத்தை மீட்டுத்தந்த தன்மை இவர் படைப்புகளுக்குண்டு.
'உன் வாழ்க்கையின் கதைகள் மற்றும் பிற' என்ற தொகுப்பு இவருக்கு அறிவியல் புனைகதையின் உலகில் பல விருதுகளையும் பெரும் புகழையும் பெற்றுத் தந்தாலும் உலகப் பொது இலக்கிய வட்டங்களில் மிகவும் சிறுபான்மையினராலேயே இவர் அறியப்பட்டுக் கொண்டாடவும் படுகிறார். இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் ஓரிரு வருட இடைவெளியில் எழுதப்பட்டவை: அடர்த்தியாகவும், அதிசிக்கனமாகவும். வேறு சிலர் புதினமாக விரித்தெழுதுமளவு உழைப்பும் இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் உண்டு.
சியாங் மொழியைக் கையாளும் விதத்தில் ஒரு மரியாதையான நேர்த்தி இருக்கிறது. பேசுபொருளையும் கதைவடிவத்தையும் இணைக்கும் மென்பொருளாக அவர் மொழியைக் கையாளும் அதே நேரம், மொழியையே பேசுபொருளாகவும் பல கதைகளில் சுட்டுகிறார். மொழி அவர் கதைகளில் வாய்ப்பாடாக, மென்பொருளாக, மந்திரமாக, யந்திரமாக, உயிரின் சூக்கும ஊக்கியாக தரிசனம் தருகிறது.
இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையான 'உன் வாழ்க்கையின் கதை'யின் (Story of your Life) மையத்திலும் மொழியே இருக்கிறது. பூமியில் அறிவிப்பின்றி வருகை தந்த வேற்று கிரக வாசிகளின் மொழியைப் புரிந்து கொள்ள ஒரு மொழியிலாளர் நியமிக்கப் படுகிறார். அரபிச் சித்திர எழுத்துக்கள் போல இருக்கும் அவர்களது மொழியைப் புரிந்து கொள்ளுந்தோறும் அம்மொழியின் காலத்திணைகளின் வரிசை முறைமை (அல்லது வரிசையற்ற சமச்சீர்), அம்மொழியியலாளர் காலத்தை அனுபவிக்கும் முறைமையையே மாற்றிக் கட்டமைக்கும் விதமாகக் கதை விரிகிறது. கடந்த காலமும் எதிர்காலமும் இணையாக நினைவில் தோன்றும் ஒரு பரிமாணத்தில் சுயத் தேர்விற்கு என்ன இடம்? என்ற கேள்வியை முன்வைக்கிறது கதை.
இணையாக ஒரு நிஜ உலகத் துணுக்கு நினைவில் வருகிறது. பிரஹா எனப்படும் அமேசானியப் பழங்குடிகளின் மொழியில் காலத்திணைகளே கிடையாது; அதன் தாக்கம் அவர்களது இயல்பான பொதுவுடைமைப் பண்பிலிருந்து அவர்களது முழு வாழ்க்கை நோக்கையே விளக்குவதாக இருக்கிறது. இறந்தகாலமும் வருங்காலமும் அவர்களது பார்வையில் முக்கியமே இல்லை, அதைச் சுட்ட அவர்களுக்கு மொழியின் அவசியமும் இல்லை; விளைவாக அவர்கள் அனேகமாக யூகங்களைத் தவிர்க்கின்றனர். கண்ணால் காண்பதும், தன்னால் செய்வதுமே முக்கியம்.
"புரிந்துகொள்" (Understand) என்னும் கதையிலும் சுய தேர்வும் மீமொழியும் கருவாக வருகின்றன. இரு மனிதர்களுக்கு அதிபுத்திசாலித்தனம் வாய்க்கிறது; சாதாரணர்களின் அற்ப விழைவுகளிலிருந்து மேலே தூக்கி வீசப்படுகின்றனர். ஆனால் இருவரின் தேடலும் இரு வேறு திசைகளில் கிளைப்பதால் மோதலுக்கான சூழல் உருவாகிறது. ஒருவன் அழகியலின் உச்சங்களைத் தேடி மாபெரும் உயரங்களை நோக்கிப் பறக்கிறான்; மற்றொருவன் மானுட நலனுக்காக சுய உச்சங்களை நிராகரிக்கிறான். இறுதியில் யார் வெல்வார்? எவரது விழைவிற்கு பிரபஞ்சம் அனுமதி தரும்? பதில் ஒரு கடவுச்சொல்லில் பொதிந்திருக்கிறது.
'எழுபத்தி இரண்டு அக்ஷரங்கள்' (Seventy-two Letters) என்ற கதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் விக்டோரிய இங்கிலாந்தில் நடக்கிறது. இந்திய தந்திர சாத்திரத்தைப் போலவே யூதக் கப்பாலாவிலும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சுட்டுபெயரைத் தாண்டிய இரகசியப் பெயர் ஒன்று உண்டு; அதுவே அந்த வஸ்துவின் நிஜப் பெயர், இறைபெயர். அதைத் தெரிந்து கொண்டால் அந்த வஸ்துவை முழுவதாகக் கட்டுபடுத்திவிடலாம், இறைவனைப் போலவே அதன் எஜமானாகிவிடலாம். எல்லா மாந்திரீகங்களின் கனவும் இதுதான். ஆனால் இதை விஞ்ஞானமாக அணுகினால்? இதன் மூலம் இயந்திரங்களை மட்டுமல்லாமல் மனித இனத்தையே உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் உண்மையானால்? நிராகரிப்பட்ட அறிவியல்-சமயச் சிந்தனைகளை நிஜமாக ஊகித்து விரித்தெடுக்கப் பட்ட இக்கதை அறிவியலும் ஆன்மீகமும் உரசும் புள்ளிகளை உற்று நோக்குகிறது.
'பாபிலோனிய கோபுரம்' (Tower of Babylon) என்ற கதையும் அதே போல கட்டமைக்கப்பட்டது. இறைவன் யாஹ்வேயின் படைப்பு மர்மங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் பாபிலோனிய மக்கள் சுவர்க்கத்தின் கூரை வரை உயர்ந்த கோபுரத்தைப் பல நூற்றாண்டு கால உழைப்பையும் கட்டுமானத் திறத்தையும் செலவிட்டு எழுப்புகின்றனர். இந்தப் பெருமுனைப்பையொட்டி ஒரு மாற்று சமூகமே உருவாகிறது: கோபுரவாழ் மக்களின் மாற்றுப் பொருளாதாரம், வாழ்க்கைமுறை உட்பட. உலகத்தைக் கணிதக் கோவையாகக் கச்சிதமாக அணுகிய மாபெரும் ஸ்தாபகர்களான பாபிலோனிய மற்றும் எகிப்திய ஆசாரிகளின் இறைதரிசனமாக இக்கதை விரிகிறது.
கணிதத்தின் அழகியலை நேரடியாக மையப்படுத்தும் ஒரு கதை 'பூஜ்யத்தால் வகுத்தல்' (Division by Zero). நிஜமும் தோற்றமும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்று மனிதன் தன் இந்திரியங்களால் கணிக்க முடியாத நிலையில், தூய கணிதம் மட்டுமே நமக்கு அப்பாற்பட்ட சில பொருண்மைகளின் குறியீடாக இருக்கிறது. அதே சமயம் கணிதக் கணக்குகளின் பலத்தில்தான் நமது அன்றாட வாழ்வின் திடத்தன்மையும் நமக்குப் பாடமாகிறது. ஆனால் நாம் நம்பிப் பின்பற்றும் ஒரு ஆதாரமான விஷயம் முற்றிலுமே பொய் என்று அறிய வந்தால் என்ன செய்வோம்? ஒரு வேதாந்தி வேதாந்தமுமே பொய் என்று அறிய நேரும் கணம் எப்படி இருக்கும்? எது எஞ்சும்? ஒரு கணித மேதை எண்களின் ஆதாரமே பொய் என்று அறியும் போது நிகழும் குலைவின் அலைகளாக அமைக்கப் பட்டது கதை.
அதே மனித நம்பிக்கைகளை உண்மையாகப் புனைந்து பார்த்தால்? அதாவது இறைவன், சுவர்க்கம், நரகம் என்ற நம்பிக்கைகளைக் கண்ணால் காணக் கிடைக்கும் நிஜங்களாக பாவித்து உருவாகிய கதை 'நரகம் என்பது இறைவன் இன்மை' (Hell is the Absence of God). இதில் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை, இறைவனின் அருகாமையைத் தவிர. ஆனால் இறைவனின் அருகாமை மனிதருள் ஏன் சொல்லவொண்ணா பேரின்பத்தைத் தருகிறது? இறைவன் மேல் வைக்கும் அன்பு ஏன் சில மனிதர்களை சொல்லவொண்ணா துன்பங்களைப் புன்னகையோடு சுமக்க வைக்கிறது? அழியா உடல் இரண்டு உலகங்களிலுமே அளிக்கப்படும் பட்சத்தில் சுவர்க்கத்தை ஏன் எவரும் தேர்ந்தெடுப்பர்? விவிலியத்தின் ஜாப் இறைவனால் எந்தக் காரணமும் இன்றி தண்டிக்கப் படுகிறான். ஆனால் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் அந்தக் குரூரமான இறைவனை நேசிக்கிறான், இறுதியில் இறைவன் அவனுக்கு இரங்குகிறார். ஆனால் எம்மாத்திரத்திலும் இரங்காத ஒரு அமானுட இறைவனை நேசிப்பதன் மர்மத்தை இக்கதையில் ஆராய்கிறார் சியாங். தேவதைகள் இயற்கைக் கோள்களின் உருவத்தில் தோன்றி அழிவின் மூலம் சுவர்க்கத்தின் வாயிலைத் திறந்து காட்டுகின்றன.
'பார்ப்பதை விரும்புதல்: ஓர் ஆவணம்' (Liking What You See: A Documentary) எனும் கதை மனிதரின் உடல் அழகைப் பரிசோதனைக்கு உள்ளாக்குகிறது. " அழகு சந்தோஷத்தின் வாக்குறுதி" என்ற ஸ்டெண்டாலின் வாசகத்தோடு துவங்குகிறது கதை. நாம் நம்மையறியாமல் அழகானவர்களுக்கு எப்பொழுதும் அதிக சலுகை தருகிறோம். அழகு நிச்சயமாக ஒரு மனிதரின் லௌகீக வெற்றிக்கு மிகவும் உதவுகிறது. ஒருவரது வெளித் தோற்றத்தின்பால் நமது மனம் செலுத்தும் அனிச்சையான எதிர்வினையை உயிரியல் சாதனத்தால் செயற்கையாக செயலிழக்கச் செய்து விட்டால், நாம் எம்மாதிரி மனிதர்களை அதிகம் விரும்புவோம்? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?
இறுதியாக, "மானுட அறிவியலின் பரிணாமம்" (The Evolution of Human Science) என்ற சியாங்கின் முதன் முதலில் அச்சேறிய கதை, மீண்டும் மொழியை மானுட அறிவுப் பரிணாமத்தின் சுட்டியாகக் கையாள்கிறது. அதிபுத்திசாலித்தனம் பெற்ற மீமனிதர்களின் அறிவியல் கோட்பாடுகள் சாமானிய மக்களின் புரிதல் எல்லையைத் தாண்டிவிட்ட நிலையில் அறிவியல் பத்திரிகைகள் மீமனிதர்களால் ஆராய்ந்து குவிக்கப்பட்ட கோட்பாடுகளை சாமனியர்களுக்கு மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. அதன் விளைவாக அறிவியல் பத்திரிகை ஒன்றிற்கெழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் கதை.
அன்றாட வாழ்வின் தனிமனித உளவியல் சித்திரங்களைக் காண விழைபவர்களுக்கு இவரது இலக்கியம் ஏமாற்றத்தை அளிக்கக் கூடும். இக்கதைகள் அனைத்துமே அன்றாடத்துக்கு ஒரு படி மேலிருந்து மானுடத்தை ஒட்டுமொத்தமாக கவனிக்கும் முயற்சிகள். திரைப்பட மொழியில் எதையும் மிக அருகாமையில் உற்று நோக்கும்போது சோக நாடகமாகிறது, தூர நின்று படம்பிடிக்கையில் அதுவே நகைச்சுவையாகிறது. அதையே தொலைநோக்கியில் பார்த்தால்? மின்னி மறையும் சில ஜாலங்கள் தென்பட்டு அற்புதமே எஞ்சுகிறது.
Stories of Your Life and Others by Ted Chiang, 2002,
Originally published by Tor Books
இணையத்தில் வாங்க- Amazon
ஒளிப்பட உதவி - விக்கிப்பீடியா
படிக்க வேண்டிய புத்தகம்
ReplyDelete