நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென்னி குக் அணை கட்ட தொடங்குவதற்கு முன்னாலிருந்து, நாடெங்கும் சுயராஜ்ய அலை எழுந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அறைகூவி, சுயராஜ்யம் பெற்று, எம்ஜியார், சிவாஜி, ரஜினி என்பது வரையிலான கால வரையறையில், தென் மாவட்டத்தில் போனூர் என்னும் சிறு கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் களமாக கொண்ட புதினம். கிருஷ்ணப்ப ஆசாரி என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாரி வழி வந்த குடும்பத்தின் கதை.
சாமான்யர்களின் வரலாறு என்ற புள்ளியிலிருந்து இந்த நாவலை அணுகத் தொடங்கலாம். சாமானியன் என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அரசியல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பினும் நாவலின் இலக்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. படிக்கையில் திடீரென “இந்தச் சீட்டை எடு” என்று வாசகனைச் சீண்டும் அரசியல் இந்த நாவலில் இல்லை. இருப்பதெல்லாம் தினப்படி நிகழ்வுகள், வருடாந்திர திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பல்வேறு கதைமாந்தரின் ஆயுட்கால தினப்படி பரிவர்த்தனைகள், இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்தம் கனவுகள், ஆசைகள், தவறுகள், முடிவுகள், வலிகள்.
நாவலின் பலம் அதன் புறவய சித்தரிப்பு. மூன்று வெவ்வேறு காலகட்டங்கள், ஆசிரியரின் அற்புதமான விவரிப்பின் வழி காட்சியாக புலனாகின்றன.
காலையில் எழுவது தொடங்கி, ஆற்றுக்குச் செல்லுதல், மந்தைக்குச் செல்லுதல், பல் விளக்குதல், குளியல், காலை உணவு, பட்டறை வேலை, வேலை சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், இளைப்பாறல், மதிய உணவு, மாலைப் பொழுது, டீக்கடைப் பேச்சு, இரவு உணவு, சினிமா, கறி எடுத்தல், நட்பு உரையாடல், நகைக் கடை விவகாரங்கள் என தினப்படி காரியங்களின் விவரிப்பு. இவை வட்டம் ஒன்று. திருமணம் தொடங்கி பிள்ளைப்பேறு, பள்ளிக்கூடம், பெண் சடங்கு ஆகுதல், திருமணம், ஆண் பிள்ளைகளுக்கு பட்டறை வேலைப் பயிற்சி, புதிய பட்டறை அமைத்தல், தொழில் கருதி ஊர் மாறிச் செல்லுதல், திருவிழா, மூப்பு, மரணம் இவை அனைத்திற்குமான சடங்குகளின் விரிவான விவரணை – இது வட்டம் இரண்டு – இவ்விரண்டு வட்டங்களில் ஏதோ ஒரு புள்ளியில்தான் இப்புதினத்தின் எந்த ஒரு பக்கமும் நின்றுக் கொண்டிருக்கிறது. கதைமாந்தரின் வாழ்வின் அட்டவணையைச் சொல்லியபடி செல்கிறது இந்தப் புதினம்.
தினப்படி வாழ்வில் ஒரு சடவு வரும் பொழுது கெஞ்சியோ, சண்டை போட்டோ, விலகியோ, வேறோர் துணைக் கொண்டோ அச்சடவை நீக்கப் பெரும்பாடு படும் சாமான்யர்களின் கதை. உழைப்பு, உழைப்பு என்று வேறு எதுவும் அறியாத கதை மாந்தரின் கனவுகள் மிகவும் எளியன. அந்த எளிய கனவுகள் நிறைவேறாது போய்விடுமோ என்று தவிதாயப்படுகிறார்கள் – இந்தத் தவிதாயம் என்ற சொல்லை எத்தனை முறை இந்நாவலில் படித்தேன் என நினைவில்லை. தனி மனிதனின் குரலாக இல்லாமல் ஒட்டுமொத்த ஆசாரி சமூகத்தின் வலி மிகுந்த பயணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்ந்த கைவேலைக்காரர்களாக இருந்தும், நாளொரு மேனி பொன்னையும் வெள்ளியையும் கொண்டு உறவாடினாலும், ஆசாரி சமூகத்தினரின் சமூக அந்தஸ்திலோ, பொருளாதார நிலையிலோ பெரியதொரு மாற்றம் நிகழவில்லை. தொழில் வழி ஜமீன் மற்றும் மணியக்காரர்களிடம் இருந்த அதிகாரம் நகைக் கடை செட்டிமாருக்கும் கணக்குப் பிள்ளைக்கும் கை மாறி இருக்கிறது. ஒவ்வொரு பாகத்தின் துவக்கத்தில் வரும் வசனக் கவிதைகள் அருமை – இறைஞ்சும் தன்மை உடையதாய் அச்சமூகத்தின் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன.
“உமியோட்டில் உருகி கண் விடும் பத்தரைமாத்துப் பொன்னென
பெயருக்கு உண்டானது உருகியோடும் இவ்வாழ்வு
கம்மாளனுக்கு எப் பிறவியிலும் காலகண்டம் கேளாய் காலகண்டம் கேளாய்”
“சூரியன் மறைகிறது தினமும் அழகாய்
சூரியன் மறைமுகமாய் சொல்கிறது
வாழ்வில் எதுவுமில்லாததை”
“உங்களுக்காக எங்களை வாழச் செய்த குற்றத்திற்காக
கடவுளுக்கு கண்மலர் சாத்திக் குருடாக்குகிறோம்
“கண்மலர் கொண்டு பார்வை தந்தவனே
திரையிட்டு எட்டு திசையையும் மறைக்கிறான்”
சுயராஜ்ய போராட்டம், பணக் கஷ்டம், உறவு விரிசல்கள், திடீர் மரணம் என பல உணர்ச்சிகரமான தருணங்கள் அமையப்பெற்றிருந்தும் நாவலின் தொனி எதையும் மிகைப்படுத்தாது அடுத்தது, அடுத்தது என்று காலப் பிரவாகம் அடித்துச் செல்ல அடுத்த நிகழ்வுகளுக்கு நாவல் விரைகிறது. அதே நேரத்தில் கிருஷ்ணப்ப ஆசாரி (பென்னி குக் காலம்), வெள்ளையப்பன் (காந்தி, தியாகராஜ பாகவதர் காலம்) மற்றும் நம்பி (எம்ஜிஆர் ,சிவாஜி காலம்) இம்மூவர்தம் பாத்திர அமைப்புடன் வாசகன் ஒன்றிவிட முடிகிறது இந்த மூன்று கதை நாயகர்களில் கிருஷ்ணப்ப ஆசாரி தன்னளவில் சுதந்திரம் அதிகம் கொண்டவராக தெரிகிறார். வெள்ளையப்பன் சமூகம் கிழித்தக் கோட்டைத் தாண்ட முயன்று தோற்றவர் . நம்பி சமூகத்தின் கோடுகளைத் தாண்ட எந்த நாளும் முயலாதவர்.
பெரிய வீட்டின் பொன்னுருக்கு விழா முதல் பத்த வைப்பு திருகாணி வேலைகள் வரை பட்டறை வேலைகளின் நுண் விவரிப்பு நாவலின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. “பச்சை மண்ணை கொண்டா பங்காரு வேல செய்து காட்றேன்” – பூர்வீகமாய் ஆந்திராவிலிருந்து தென் மாவட்டங்களுக்கு குடிப் பெயர்ந்த மக்களின் கதை – நாவலின் நெடுகே சுந்தரத் தெலுங்கின் ரீங்காரம். வீருசின்ன அம்மனின் கதை, குந்தியின் கண்ணீர், கௌரவர்களின் தங்கைகள் கதைகள் புதுமையாக இருந்தன.
“Boyhood” திரைப்படம் நீங்கள் கண்டிருக்கக்கூடும். ஒரு சிறுவனின் பதின் பருவம் வரையிலான வாழ்க்கையை உன்னதமாக படமாக்கி இருப்பார்கள். பன்னிரண்டு வருட கூட்டு முயற்சி. ஒரு குடும்பத்தின் நூற்றைம்பது கால வரலாற்றை, தனி ஒருவர், நாவல் வடிவில் எழுதுவது லேசான விஷயம் இல்லை. செந்தில் குமார் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி. நாவலில் சில இடங்களில் ஏற்படும் தொய்விற்கும் சலிப்பிற்கும் காலசக்கரத்தின் வட்டப் பாதையை நாம் கை காட்டலாம்.
“தரையிறங்கிய பறவைகள்
தெற்குத் திசையின் மாயத்தை அறியவில்லை
தெற்குத் திசை தங்கள் கனவுகளையும் சந்தோசங்களையும்
பொய்க்கச் செய்து விட்டதென
பெரும் பாறையின் மேலேறிக் கூவிச் சொல்லியது
மூத்த பறவை ஒன்று.
அதன் குரலே பின்காலத்தில்
வனமெங்கும் பூத்தன பூக்களாக. “
இப்புதினத்தை எந்த ஒரு உழைக்கும் சமூகத்தின் பயணத்திற்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்த நாவல் குறிப்பிட்ட சம்பவங்களின் கோர்வையான தொகுப்பாக அமையாது தினப்படி வாழ்வை அணு அணுவாய் தொகுத்து கதை மாந்தரையும் போனூரையும் வாசகனுக்கு மிக அருகில் கொண்டு செல்வதில் வெற்றிக் கண்டிருக்கிறது.
காலகண்டம்
எஸ் செந்தில்குமார்
உயிர்மை பதிப்பகம், 2013
விலை ரூ.400
எஸ் செந்தில்குமார்
உயிர்மை பதிப்பகம், 2013
விலை ரூ.400
ஒளிப்பட உதவி- காளீஸ்வரன் கருப்புசாமி
Another restriction associated to new on line casino bonuses in 2022 is eligibility requirements. Players should ensure to deposit the required minimums. However, essentially the most crucial step is to finish the registration process and open the brand new} on line casino accounts. Every bonus obtained or free spin used 코인카지노 is topic to wagering requirements.
ReplyDelete