- வெ சுரேஷ் -
ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முதல் வகை சர்ச்சை, விருது வாங்கும் எழுத்தாளர் தேர்வை எதிர்மறையாக விமரிசிப்பதாக இருக்கும். தகுதியானவர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒருவருக்கு மிகச்சில சமயங்களே இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறை, வணிக இதழ்களில் அதிகம் எழுதியவரும் தமிழக அரசின் உயர் பதவி ஒன்றில் இருந்தவருமான ஒருவர் விருது பெற்றபோது, நல்ல வேளை, இந்த முறை துணி வியாபாரிக்கும் துணைவேந்தருக்கும் தராமல் ஒரு எழுத்தாளருக்கு விருதுத் தந்தார்களே என்று சுஜாதா விளையாட்டாக எழுதி சொல்லடிபட்டார்.
இரண்டாம் வகை சர்ச்சை, தகுதியான எழுத்தாளருக்கு விருது கொடுக்கப்பட்டாலும், அதை அவரது சிறந்த ஆக்கத்துக்குத் தராமல், சுமாரான அல்லது அவர் எதில் சிறந்து விளங்கினாரோ அந்த வகைமைக்கு மாறான வேறொன்றுக்குக் கொடுக்கப்படுவது குறித்து எழுவது. கவிதைகளுக்காக அல்லாமல் ஒரு தொடர்கதைக்கு கண்ணதாசன் விருது பெற்றதை நினைவு கூரலாம். அது போலவே தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் முதலானவர்களுக்கும் இவ்விருது அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படவில்லை என்ற குறை உண்டு.
இந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.
இவை ஒருபுறமிருக்க மாதவன் அவர்களக்கு விருது பெற்றுத் தந்த 'இலக்கிய சுவடுகள்', என்ற புத்தகம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று படித்தேன் (வழக்கம் போல எங்கள் தியாகு புத்தக நிலையத்தில்தான்). இதற்கு முன் ஆ. மாதவன் எழுதிய எந்த ஒரு கட்டுரையையும் நான் படித்ததில்லை. ஏன், சொல்லப்போனால் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பதே எனக்குத் தெரியாது. அதனால், வழக்கம் போல சாகித்திய அகாடமி இம்முறையும் தவறு செய்து விட்டது என்றே நம்பியிருந்தேன். அந்த அவநம்பிக்கையுடன், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன் என்று சொல்ல வேண்டும்.
ஆனால் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அந்த எண்ணம் மாறியிருந்தது. நெல்லை சு. முத்து அவர்களின் நல்ல ஒரு முன்னுரையுடனும் மாதவன் அவர்களே எழுதியுள்ள விரிவான முகவுரையுடனும் துவங்கும் இந்தப் புத்தகம், மாதவன் அவர்களின் சில நல்ல நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ அவரது 60 ஆண்டு கால எழுத்துப் பணியையும் தமிழ், மலையாள, ஆங்கில இலக்கியங்கள் குறித்த அவரது தனிப்பட்ட பார்வையையும் கொண்ட பல நல்ல கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பாகவே இந்த நூல் விளங்குகிறது. ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஒரு இலக்கிய செயல்பாட்டாளராகவும், அவர் இருந்திருப்பதைக் காட்டுகிறது.
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மூலமாகவும், அது நடத்தி வந்த கேரளத் தமிழ் மூலமாகவும் இலக்கியத்துக்கு அவர் செய்த சேவைகள் குறித்த விரிவான பதிவுகள் இதில் காணக் கிடைக்கின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் அவரது கட்டுரைகளை பொதுவாக, படைப்புகள் குறித்து பேசுபவை, பத்திரிக்கைகள் குறித்து பேசுபவை, இலக்கிய ஆசிரியர்கள் குறித்து பேசுபவை, நேர்காணல்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம்.
படைப்புகள் குறித்து பேசுபவை என்று பார்த்தோமானால் முதலில், 'எனது நாவலின் களங்கள்' என்ற தலைப்பில் அவரது நாவல்களைப் பற்றி கூறுகிறார். பிறகு எண்பதுகளில் 4 நாவல்கள் என்று 'ஜே.ஜே. சில குறிப்புகள்', 'அவன் ஆனது', 'வெக்கை', மற்றும் நாஞ்சில் நாடனின் 'மாமிசப் படப்பு' ஆகியவற்றைப் குறித்து தெளிவான, கச்சிதமான பார்வையை முன்வைக்கிறார். அடுத்து காசியபனின் மிகவும் சிலாகிக்கப்பட்ட நாவலான 'அசடு' என்ற நாவலைப் பற்றி ஒரு விரிவான பதிவு உண்டு. இவை போக, அயல் மொழி இலக்கியத்தில் Vicente Blasco Ibáñezன் 'ஏழைகள்' என்ற படைப்பை விரிவாக அறிமுகம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தையும் மலையாள இலக்கியத்தையும் பேசும், 'மேலோட்டமான குறிப்புகள்' என்ற ஒரு கட்டுரையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
படைப்புகள் குறித்துச் சொல்லும்போது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருடன் இவரும் நடுவராக இருந்து சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை மிக அழகாக விவரிக்கிறார். போட்டிக்கு வந்த ஏராளமான கதைகளில் பெரும்பான்மையானவை சராசரிக்கும் கீழே என்பதை அவர் சொல்லும்போது மிகவும் வியப்பு ஏற்படுகிறது. அவற்றின் பலவீனங்களை எல்லாம் மீறிய பதினைந்து கதைகளை, பரவாயில்லை என்று வரிசையிட்டு மீண்டும் அலசி ஊன்றி கவனித்தவற்றில் தெளிந்து வந்தவற்றையே பரிசு பெற்றதாக அறிவித்திருக்கிறோம் என்கிறார். அப்படிப்பட்ட சோதனைகள் அனைத்தையும் கடந்து முதல் பரிசான ஆயிரம் ரூபாயை வென்ற கதை, ஜெயமோகனின் 'பல்லக்கு'. இரண்டாம் இடம், பாவண்ணனின், 'வழி'. மூன்றாம் பரிசு, நிஜந்தனின் 'பிம்பங்கள்'. ஆறுதல் பரிசு, எஸ். சங்கரநாரயணனின், 'பூனை' என்ற படைப்புக்கு. இதில் ஒரு ஆச்சரியம், இந்த வரிசையில் 3 பேர் தொலைபேசி துறை ஊழியர்கள். இன்னோர் பெரிய ஆச்சரியம், இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜெயமோகன் தான் நிறுவிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதலாமாண்டு விருதினை ஆ. மாதவனுக்கு 2010 டிசம்பரில் வழங்கினார் என்பது.
இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய பகுதியில் பாரதி, பாரதிதாசன், நகுலன், ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., தி. ஜானகிராமன் போன்ற தமிழ் படைப்பாளிகளையும், கேசவதேவ், பஷீர், சிவராம காரந்த் ஆகிய இந்தியா பிற இந்திய மொழி எழுத்தாளர்களையும் இப்சன், தாமஸ் மான், சொமர்செட் மாம், அப்டன் சிங்க்ளேர் போன்ற மேலை நாட்டு எழுத்தாளர்களையும் பற்றி ஆ. மாதவன் எழுதும்போது அவரது பரந்த வாசிப்பின் வீச்சை உணர முடிகிறது.
இரண்டு தமிழ் பத்திரிக்கைகள் பற்றித்தான் இதில் விரிவாக எழுதியுள்ளார். அவை 'சுபமங்களா'வும், 'தீபம்' பத்திரிக்கையும். இதில் 'தீபம்' குறித்தும் நா. பா. குறித்தும் எழுதியிருப்பது, இந்தப்புத்தகத்தின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.
இன்னொரு மிகச் சிறந்த கட்டுரை, 'ஸ்ரீ நாராயணகுருவும் தமிழும்', என்ற தலைப்பில் உள்ளது. இதை ஸ்ரீ நாராயண குருவைப் பற்றி தமிழில் வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று எனத் தாராளமாகக் கூறலாம். நாராயணகுருவின் தமிழறிவையும் தேவாரம் போன்றவற்றில் அவருக்கிருந்த விரிவான அறிமுகத்தையும் விரித்துச் சொல்கிறது இது, அதற்கும் மேலாக, பாரதி, நாராயண குருவைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை கணிசமாக எடுத்தாளுகிறார் மாதவன். பாரதியின் இந்த நாராயண குருவைப் பற்றிய கட்டுரை இன்று, தமிழ் பிரக்ஞையிலிருந்து அநேகமாக முற்றிலும் மறைந்தே விட்டது என்று தோன்றுகிறது. மிக மிக முக்கியமான கட்டுரை என்று இதைச் சொல்ல வேண்டும்.
இதில் இடம்பெற்றுள்ள மாதவனின் நேர்காணல்கள் அனைத்துமே, மிகத் தெளிவாக அவரது இலக்கிய கொள்கைகைகளை முன்வைப்பவை. அவர் திராவிட இயக்கத்தின் பத்திரிக்கைகளில் எழுதி வந்தது முதல் க.நா.சு., தி.ஜா., சு.ரா., போன்றோரின் அறிமுகத்தினாலும் உந்துதலினாலும் தமிழின் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமாகி அதில் இணைந்து கொண்டதை அவை எடுத்துரைக்கின்றன. தவிர, நெல்சன் மண்டேலா குறித்த ஒரு நல்ல கட்டுரையும் உண்டு. துவக்கத்தில் திராவிட இயக்கத்தினரின் இதழ்களில் அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன் போன்றோருக்கு இணையாக எழுதியிருந்தாலும் திராவிட இயக்கத்தின் அரசியல் குறித்த ஒரு கட்டுரையும் இதில் இல்லை என்பது வியப்புக்குறிய ஒன்று. அரு. ராமநாதனின் 'காதல்' பத்திரிக்கையில் அவரது கதைகள் வெளிவந்ததையும் வெகு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் ஆ. மாதவன்.
மற்ற விருதுகளைக் காட்டிலும் சாகித்திய அகாடமி விருதுகள் மிகவும் சர்ச்சைக்குள்ளாவதன் ஒரு காரணம், விருது பெறும் நூல்கள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் சாத்தியங்கள் உண்டு என்பதுதான். அப்படி மொழிபெயர்க்கப்படும் நூல்களைக் கொண்டு பிற மொழியினர் தமிழ்ப் படைப்புலகம் குறித்து கீழானதொரு எண்ணத்தைக் கொள்ளாமலிருக்க வேண்டும் என்பதே தீவிர தமிழ் இலக்கிய வாசகர்ளது கவலை. அந்தக் கோணத்தில் பார்த்தோமானால் ஆ. மாதவன் அவர்களின் பல கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்டிருக்கும் இந்த நூல் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது நிச்சயமாக அது தமிழுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையே உருவாக்கும் என்று தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில் சாகித்திய அகாடமியின் தேர்வுக்கு, முக்கியமாக அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் திரு, நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, நம் நன்றிகள் உரித்தாகின்றன.
இலக்கியச் சுவடுகள் -ஆ.மாதவன்
300ரூ (376 பக்கங்கள்)
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
இணையத்தில் வாங்க - டிஸ்கவரி புக் பாலஸ்
அருமை
ReplyDeleteWishes to Mr.madhavan..
ReplyDeleteWishes to Mr.madhavan..
ReplyDelete