நடிகர் சிவகுமாரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். குறிப்பாக அவரது சினிமா வாழ்க்கையின் நாற்பதாண்டு கால நெடிய வரலாறு. யாரும் சொல்லாத அற்புத கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் என்றோ புதிதாக ஏதோ சொல்லுகிறார் என்றோ சொல்ல மாட்டேன். மிகவும் எளிமையாகத் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடி மிக யதார்த்தமாக அவர் எழுதி இருப்பதுதன் இந்தப் புத்தகம் நம் மனதை எளிதாகக் கவர்ந்து விடுவதன் காரணம். சத்தியசோதனையை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்திலும் அதன் பிரதிபலிப்பை உணர்வார்கள் என்று நான் சொன்னாலும் அது மிகையில்லை.
சம காலத்திய மனிதர்களை ஒரு கலைஞனாக பாராட்டுகின்ற மனப்பாங்கு, தனக்கு நல்லது செய்தவர்களிடம் இருக்கின்ற நன்றி கடன், தமிழ் மீது கொண்டுள்ள அளவில்லாத பற்று, தொழில் மீது பக்தி,தனக்கு தீங்கு நினைத்தவர்களின் முகத்திரை கிழிக்கிறேன் பேர்வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் அவர்களிடமும் கற்ற விசயங்களை மட்டும் நினைவு கூர்ந்து சொல்லும் சபை நாகரிகம், அவர்கள் பெயர்களையும் நாசூக்காகத் தவிர்த்த கண்ணியம் என சிவகுமாரின் மேலான குணங்களைப் புத்தகம் நெடுகிலும் நாம் காணலாம்.
நடிகர். சிவாஜி கணேசன் மீது தீராத ப்ரியமும் மதிப்பும் கொண்டவர் சிவகுமார். சிவாஜியே ஒருமுறை "சிவா !உன்னை யாராலும் வெறுக்க முடியாதுடா” என்று மனம் நெகிழ்ந்து புகழப்பட்டவர் அல்லவா இவர். எவ்வளவுவிஷயங்கள் தெரிந்தாலும் அதை தன்னடக்கத்தோடு சொல்கிற போதுதான் அது மனதைத் தொடுகிறது. சிவகுமாருக்குள் ஒளிந்திருக்கும் ஓவியர் புத்தகம் முழுக்க காட்சி தருகின்றார். அத்தனை ஓவியங்களும் ஆழ்ந்து ரசிக்கத்தக்கவை.
தொழில்முறைப் போட்டி இருந்தும் சக நடிகர்களிடம் பொறாமையின்றி அனைவருடனும் இணக்கமாக இருப்பது எந்தக் காலகட்டத்திலும் சாதாரண விஷயம் அல்ல. அந்த விஷயத்திலும் சிறந்தவராக விளங்கியவர் சிவகுமார்.
புகழ் என்ற ஒற்றை விஷயத்தைச் சுற்றித்தான் இங்கே நம்மில் பலர் உழல்கிறோம். அந்தப் “புகழ்” என்ற மாயை பற்றி சிவகுமார் வைக்கின்ற விமர்சனம் / பார்வை அவரை யதார்த்தத்தை உணர்ந்த உயர்ந்த மனிதன் என்றே எண்ண வைக்கிறது. தன் சாதனைகளை சாதரணமாகவும் தவறுகளை சிரம் தாழ்த்தி உள்ளார்ந்த வருத்ததோடும் ஒப்புவிக்கின்ற குணத்திற்கு நிச்சயம் வைக்கலாம் ஒரு வணக்கம்.
ஒரு நடிகனின் வாழ்க்கைக் குறிப்பாக மட்டும் முடிந்து விடாமல் ஒரு நாற்பதாண்டு காலத்தின் தமிழ் சினிமா உலகத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது புத்தகம். சினிமா என்ற தொழில் அன்றைய காலகட்டத்தில் எப்படி இருந்தது, நடிக நடிகையர் எப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டு இருந்தனர், அந்த காலம் எப்படிப்பட்ட மனிதர்களையும் தொழிலை நேசிக்கின்ற பல மாமேதைகளையும் உள்ளடக்கிய பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை சுருக்கென்று சொல்லியிருக்கிறார் சிவகுமார். சினிமா உலகில் எதிர்வரும் சந்ததியினர் நிச்சயம் அறிந்து உணர வேண்டிய தகவல்கள் அவை.
புத்தகத்தைப் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தாலும், முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
புத்தகத்தைப் பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தாலும், முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது"
உண்மைதானே? சந்தர்ப்பமே கிடைக்காமல் தவறு செய்யாமல் இருப்பவனை விட பல சந்தர்ப்பங்கள் வலிய வளையவரும் சூழலில் மனஉறுதி இழக்காமல் இருப்பது வீரம் என்று படித்திருக்கிறேன்.
நிச்சயம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டி இவருடைய வாழ்க்கை.
