பதிவர் - சிவா கிருஷ்ணமூர்த்தி
ஒரு பின்மாலைப் பொழுதில் நண்பர்களுடன் உலக விவகாரங்களை, இலக்கிய வம்புகளை, இலக்கியவாதிகளின் சின்னத்தனங்களை ஆவேசமாக தர்க்கித்துவிட்டு உலகில் உள்ள அனைத்தையும் சற்றே விலகி நின்று நிதானமாகவும் தெளிவாகவும் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்புகிறீர்கள். யாருமற்ற இருண்ட தெரு முனையில் தெரு நாயின் கிர்ர் என்ற எச்சரிக்கை ஒலி தெளிவாக கேட்கிறது. என்ன செய்வீர்கள்? எல்லா அறச்சீற்றங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் நுழைய தயங்குவீர்கள்தானே? இதை என்னவென்று எடுத்துக் கொள்ளலாம்? தைரியமின்மையா விவேகமா?
போர் முனையில் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் அல்லது தலையைத் தூக்கினாலே எதிரியின் தோட்டா துளைக்கும் சாத்தியம் ஏராளம் என்று உறுதியாகத் தெரிந்தும் கூட்டம் கூட்டமாக முன்னேறிச் செல்லும் நபர்களை என்னவென்று வகைப்படுத்துவீர்கள்? வீரர்கள்? முட்டாள்கள்? தனக்கு சாவும் மெடலும் மட்டுமே நிச்சயம் என்று தெரிந்தும் முன்னேறுவது என்ன மாதிரியான அசட்டுத்தனம்?
உங்களைக் கவர்ந்த அல்லது பாதித்த மனிதர்கள், உங்கள் மனமெனும் மேடையில் நாற்காலி போட்டு அமர்த்தியிருக்கும் ஹீரோக்கள், யார் யார் என்று கேட்டால் உங்களால் ஒரு பட்டியல் தயார் செய்ய முடியுமா?
பிரிட்டிஷ்காரர், ரனால்ஃப் பியான்ஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்திற்கு போவதிற்கு முன்னால் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் நிச்சயம் தேவை - நீங்கள் பிரிட்டிஷாராக இல்லாத பட்சத்தில் இவரைப்பற்றி தெரிவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு சிறப்புப் படையில் பணிபுரிந்தவர் (SAS). வட மற்றும் தென் துருவங்கள் - இரண்டையும் தரை வழியே அடைந்த முதல் மனிதர். அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களை கடந்த முதல் மனிதர் (கூட சார்லஸ் பர்டன் என்று துணையுடன்).
எவரெஸ்ட்டை அடைந்த பிரிட்டிஷார்களில் வயதானவர் (சீனியர் சிட்டிசனுக்கான பஸ் பாஸ்ஸுடன்! 65 வயது!). அதுவும் ஒரு தடவையில்லை. திபெத் வழி, நேபாளம் வழி என்று மூன்று முறை ஏறியிருக்கிறார், சாரிட்டிக்காக. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
எனது அருமை கேப்டன் ஸ்காட் (Great Scott!) பற்றி இவர் எழுதிய புத்தகத்தின் மூலம்தான் என் கண்ணில் பட்டார்.
இந்த My Heroes புத்தகத்தில் இவர் ஹீரோவாக கருதுபவர்களைப் பற்றி பதினோரு அத்தியாயங்களில் விவரிக்கிறார். ஒரு பிரிட்டிஷ் பார்வையிலிருந்து சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு விதமான துடுக்கு நடையுடன், சற்று உணர்ச்சிபூர்வமாக, பிரிட்டிஷ் சினிக்குடன் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களை கவனப்படுத்துகிறார்.
இவரின் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை இரு வகைகளாக பகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
முதல் வகையில் இயற்கை அல்லது மனிதர்களால் தம் மீது திணிக்கப்பட்ட சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டு போராடிய நாயகர்கள்.
இந்த வகையில்
* 1985ல் வடக்கு லண்டனில் நடந்த கலவரத்தில் துணைப்படைகளின்றி, ரவுடி மற்றும் போதைக் கும்பல்களிடம் மாட்டிக்கொண்டாலும் துணிச்சலாக போராடி உயிரிழந்த கான்ஸ்டபிள் டிக் கூம்ஸ் (பின் அவர் உடலை எண்ணியதில் 42 கத்திக்குத்துகள்). ஒரே இரவில் 250 போலிசார் காயமடைந்தனர் என்றால், அதுவும் லண்டன் போன்ற உலக மாநகரத்தில் என்றால், கலவரத் தீவிரத்தின் அளவை ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்).
* நம்மில் பலருக்கு தெரிந்த, ருவாண்டா இனப்படுகொலைகளின் போது கிட்டத்தட்ட இரு மாதங்களுக்கு மேல் 1300 உயிர்களைத் தன் ஓட்டலில் வைத்து காப்பாற்றிய ருவாண்டா ஓட்டல் மேனேஜர் பால்.
* 1944ல் ஹிட்லரை குண்டு வைத்து கொன்று அதன் மூலம் இரண்டாம் உலகப்போரை, அதில் ஏராள உயிர்கள் கொல்லப்படாமல் நிறுத்த முயற்சித்ததில் தோற்றுப் போய் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட Claus von Stauffenberg என்ற ஜெர்மானிய ராணுவ அதிகாரி.
* கம்போடிய ஹிட்லர் அல்லது கம்போடிய ஸ்டாலின், போல் பாட்டின் பெரும் படுகொலைகளின்போது தங்களது உயிராபத்தையும் தாண்டி குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் உதவிய நூற்றுக்கணக்கானவர்கள்.
* Black Death எனப்படும் கருப்புச்சாவுகள் 1347ல் ஆசியாவில் ஆரம்பித்து மத்திய ஐரோப்பாவை அடைந்து பின் 1348ல் இங்கிலாந்தில் கால் பதித்த சமயம். மக்கள் கொத்துகொத்தாக ஒருவகை ப்ளேக்கிற்கு உயிரிழந்து கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் டெர்பிஷயரைச் சேர்ந்த இயாம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே தம் கிராமத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என்று தடைவிதித்துக் கொண்டார்கள் (நோய் மேலும் பரவுவதை தடுப்பதற்காக). லண்டன் கலகலத்துப் போயிருந்தது. பதினான்கு மாதங்களுக்குப்பின் ப்ளேக் மறைந்தபோது வெகுசில கிராமவாசிகளே எஞ்சியிருந்தனர். இவ்வளவு நடந்தும் ப்ளேக்கிற்கு அஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறாமல் சுயகட்டுபாட்டுடன் இருந்த அந்த கிராமவாசிகளும் இவரின் நாயகர்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.
இன்னொரு வகை நாயகர்கள் தம் சுய ஆர்வத்தில், அபாயகரமான சூழ்நிலை என்று தெரிந்தே தம்மை ஆபத்துக்கு உட்படுத்திக் கொண்டவர்கள்
* Eiger என்ற ஆல்ப்ஸ் மலையை வடக்கு முகமாக ஏறி அடையும் முயற்சியில் இறந்த முந்தைய மற்றும் தற்போதைய நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏராளமான சிறந்த மலையேற்ற வீரர்கள் (Fiennes ஏறியிருக்கிறார்!)
* ஆப்கானிஸ்தானிற்குள் தலிபான் ஆதிக்க இடங்களுக்கு ஊடுறுவ முயன்று மடிந்த அமெரிக்க கமாண்டோக்கள்
* சர். டக்ளஸ் மாசன்: 1912- நார்வேயர் அமுன்சென் அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள புவியின் தென் முனையை அடைந்ததின் மூலம் வரலாற்றில் இடம் பிடித்து பிரிட்டிஷ்காரர்களின் இதயங்களை உடைத்த வருடம். இந்த வருடத்தில் சர் டக்ளஸ் மாசன் இரு ஆராய்ச்சியாளர்களுடன் அண்டார்ட்டிகாவின் நீண்ட கடற்கரையை அளவிடவும் வெவ்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் செய்த மூன்று மாத பயணம் படு ஆபத்தில் முடிந்தது. சக ஆராய்ச்சியாளர்களை அண்டார்ட்டிகா விழுங்கி விட்டது. மாசன் மட்டும் தனியே அந்த பனிக்கண்டத்தில் உயிர் பிழைத்து (உணவு கையிருப்பு கரைந்து கூட்டிச்சென்ற நாய்களின் ஈரல்களை உண்ண வேண்டிய நிலை), கடைசி ஒரு மாதத்தில் உடல்நிலை மிக மோசமாகி, கீழ் முகாமிற்கு ஊர்ந்து வந்து சேர்ந்தால் - நாகரிக கண்டங்களுக்குக் கூட்டிச் செல்ல வேண்டிய மீட்புக்கப்பல் இரு நாட்களுக்கு முன்னர்தான் திரும்பி விட்டிருந்தது. வேறென்ன, அடுத்த வேனிர்காலம் வரை, ஒரு வருடம் அண்டார்ட்டிக்காவின் கீழ் முகாமிலேயே காத்திருந்தார்.
-என்று பட்டியல் நீளுகிறது.
முன்னரே குறிப்பிட்டது போல பிரிட்டிஷ் பார்வையிலிருந்து மட்டுமே இதிலுள்ள பலரும் குறிப்பிடத்தக்கவர்கள் (ஜிம்பாப்வேயில் முகாபேயின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய பல தகவல்களை வெளியுலகத்திற்கு சொன்ன பிரிட்டிஷ்காரர் பீட்டர் கார்ட்வின்).
அனேகமாக இந்த புத்தத்தில் சொல்லியிருக்கப்படும் நாயகர்களைப் பற்றி அல்லது சம்பவங்களைப் பற்றி இணையத்தில் சற்று மெனக்கெட்டால் முழு விவரங்களும் கிடைத்துவிடும். எனினும் இவற்றைப் பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு சிறந்த அறிமுகமாக இருக்கும்.
இந்த தைரியம், துணிச்சல் அல்லது வீரம் பற்றி என்னுடைய எண்ணங்கள் சென்றுகொண்டிருந்தபோது பிரிட்டனில் சமீபத்திய பரபரப்பு சம்பவமும் மனதில் குறுக்கிட்டது.
போன மே மாத இறுதியில் ஒரு மதிய பொழுது. வொல்லிச், தென் கிழக்கு லண்டன்.
பரபரப்பான சாலையில் திடீரென ஒரு கார் படுவேகமாக வந்து, நடைபாதையில் போய்க் கொண்டிருந்த ஒரு நபரின் மேல் மோதி, அதன்பின் கொஞ்சம் தள்ளி இருந்த விளக்குக் கம்பத்தில் முட்டி நின்றது. அதிலிருந்து இரு திடகாத்திரமான கறுப்பு இளைஞர்கள் இறங்கி கீழே விழுந்து கிடந்த நபரை நெருங்கினார்கள். விழுந்து கிடந்தவர் 25 வயதான பிரிட்டிஷ் ராணுவ வீரர் லீ ரிக்பி (Lee Rigby).
இரு கருப்பு இளைஞர்களும் கைகளில் இருந்த கசாப்பு கத்திகளால் லீயின் கழுத்தை அறுத்தார்கள். பின் லீயின் உடலை தரதரவென இழுத்து நடு சாலையில் போட்டார்கள். ஆம், பட்டப்பகலில், பரபரப்பான ஒரு லண்டன் தெருவில் இத்தனையும் நடந்தது. சுற்றி இருந்தவர்களுக்கு நடந்தது என்ன என்று உறைக்க நிமிடங்களானது. உறைத்தவர்கள் தள்ளி நின்று கொண்டு மொபைல் காமிராக்களால் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுக்கத் தொடங்கினார்கள்.
இரு இளைஞர்களும் தப்பி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக, புகைப்படங்களுக்கும் எங்கிருந்தோ வந்து சேர்ந்த ITV சேனல் காமிராவிற்கும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்க யாருக்கும் திராணியில்லாத கணம் அது.
அந்த நேரம், ஒரு வெள்ளைப் பெண்மணி இயல்பாக லீயின் உடல் அருகே சென்று நாடியை பரிசோதிக்கப் போனார். உடலைத் தொடாதே என்று கொலைகாரன் அருகில் வந்தான். அப்போதுதான் அவனது கைகளைப் பார்க்கிறார் அந்த 48 வயதான பெண், இங்கிரிட் (Ingrit). சிகப்பில் தோய்ந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் கரங்களும், அவை பிடித்திருந்த கத்திகளும். இங்கிரிட் பதறாமல் கொலைகாரர்களிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.
ஆச்சரியமாக அவர்கள் இவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த படுகொலைக்கான முட்டாள்தனமான காரணத்தைக் கேட்டுக்கொண்டே ("அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டிஷாரால் இஸ்லாமிய நாடுகளில் பெண்களும் குழந்தைகளும் சாகிறார்கள். எனவே லண்டனில் போர் நடத்த வந்திருக்கிறோம்"), காவல்துறையினரின் சைரன் ஒலியை எதிர்பார்த்திருந்தார்.
ஐந்தாறு நிமிடங்கள்தான் ஆனது, காவலர்கள் வரவும் இரு இளைஞர்களையும் காலில் சுட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லவும்.
அந்த சில நிமிடங்களில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அதே கசாப்பு கத்திகளைக் கொண்டு இங்கிரிட்டை ஒரு விசிறு விசிறியிருக்கலாம். கையில் இருந்த துப்பாக்கியைக் கொண்டு பாயிண்ட் ப்ளாங் ரேஞ்சில் இங்கிரிட்டை முடித்திருக்கலாம்.
இங்கிரிட் அவர்களை பொறுமையாகக் கையாண்டார். அவர்களின் தர்க்கமே இல்லாத பதில்களை மறுதலிக்காமல் அச்சமின்றி அமைதியாகக் கேட்டவாறே ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.
பின்னர் பேட்டி கொடுத்த இங்கிரிட், தான் ஒன்றும் செயற்கரிய செயலை செய்துவிட்டதாகக் கருதவில்லை என்றார். அந்த நிமிடங்களில் தனது எண்ணங்கள் அவர்கள் லீயின் உடலை மேலும் சின்னாபின்னமாக்காமல் பார்த்துகொள்ள வேண்டும் என்பதே என்றார். மேலும் அந்த நேரத்தில் இன்னொரு ராணுவ வீரரோ காவலரோ சாலையைக் கடந்தால் நிலைமை ஆபத்தாக போய்விடக் கூடிய நிலைமையையும் தான் கவனத்தில் கொண்டதாகச் சொன்னார்.
இங்கிரிட்டை மீடியாக்கள் வொல்லிச்சின் தேவதை என்று வர்ணிக்கின்றன.
இங்கிரிட் போல தின வாழ்க்கை தரும் எதிர்பாராத சூழ்நிலையை துணிச்சலாக எதிர்கொள்பவர்களை என்னுடைய "ஹீரோக்கள்" பட்டியலில் நிச்சயம் முன்வைப்பேன்.
My Heroes - Extraordinary Courage, Exceptional People
Ranulph Fiennes,
Hodder and Stoughton, 2011
நல்ல அறிமுகம். இதேபோல இந்தியாவில் ஜாதி, மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகளின்போது தம் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களைக் காப்பாற்றியவர்களைப் பற்றியும் யாராவது புத்தகம் எழுதலாம்.
ReplyDeleteஆம், இதெல்லாம் செய்ய வேண்டிய விஷயங்கள்.
Deleteதங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள்.
ஆம், சமீபத்திய உத்தர்காண்ட் வெள்ளத்தில் கூட எத்தனை ஹீரோக்கள்...
Deleteநன்றி நட்பாஸ், சரவணன்