- சிறப்புப் பதிவர்: சிவா கிருஷ்ணமூர்த்தி
"துணை" என்ற திரு. தி.ஜானகிராமன் அவர்களின் சிறுகதை, 1950ல் மணிக்கொடி இதழில் வந்தது. ஐந்தினைப் பதிப்பகம் வெளியீட்டான தி.ஜானகிராமன் படைப்புகள் சிறுகதைகள் தொகுதி-1ல் உள்ளது. நுட்பமான நகைச்சுவைக்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தக் கதையை தைரியமாகச் சொல்லலாம்.
வீட்டிற்குள் வரும் கதைசொல்லி அப்பாவுடன் ஒரு தாத்தா ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.
தாத்தாவின் பெயர் சின்னக்குழந்தை, வயது எழுபத்தொன்பது.
அவரை மஸ்டர் டே என்ற வருடத்தில் ஒரு நாள் பென்ஷன் ஆபிஸில் முகத்தைக் காட்டுவதற்காக பத்திரமாய் அழைத்துச் செல்லும் வேலை கதைசொல்லிக்கு வருகிறது சின்னக்குழந்தையை மட்டுமல்ல அவரது தகப்பனார் லேடிகிழவரையும் (லேடி கிழவரின் வயது தொண்ணுற்று எட்டு!).
அப்பா நன்றாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு சின்னக்குழந்தை பதிலளிப்பதாகத் தொடங்கும் கதை, லேடி கிழவர் ஆஸ்துமாவினால் படும் சிரமத்தையும் (ஒரு ஐம்பது அல்லது அறுபது வயதுக்காரருக்கு பொருந்தும்) அதையொட்டிய 'அந்தக்கால` விவரணைகளையும் பேசி ஒரு மெல்லிய புன்னகையோடு விரிகிறது.
வழக்கமாய் சின்னக்குழந்தையின் மகன்தான் சின்னக்குழந்தையையும் அவரது தகப்பனாரான லேடிக்கிழவரையும் மஸ்டர் டேவிற்கு அழைத்துச் செல்வாராம்...இந்த தடவை அவர் இல்லை. அவர் மனைவியுடன் காசிக்குப் போயிருக்கிறாராம்...!
நீங்கள் காசிக்கு போகலையா என்று கேட்டால், "போதும், நாலு தடவை போய்விட்டு வந்துவிட்டேன்" என்று பதில் வருகிறது. தெம்பாய் இருக்கும்போதே போய்விட்டு வந்துவிட்டாராம்! அதுசரி!
காலை பத்தேகால் மணிக்கு வருவதாக உறுதிபடுத்திக்கொண்டு சின்னக் குழந்தை தாத்தா போனவுடன் கதைச் சொல்லியின் தகப்பனார் இவர்களைப் பற்றி மேலும் சில சுவாரசியத் தகவல்களைத் தருகிறார்.
கடந்த சில வருடங்களாகவே லேடிக்கிழவர் தன் வயதை தொண்ணூற்றெட்டில் நிறுத்தி வைத்திருக்கிறாராம் - உண்மையைச் சொன்னால் திருஷ்டி பட்டுவிடும். சின்னக்குழந்தையின் மகன் (காசிக்கிழம்) ரிடையர் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. கடந்த நான்கு வருடங்களாய் தாத்தா, அப்பா, மகன் என்று மூவரும் ஜோராய் பென்ஷன் ஆபிஸிற்கு மஸ்டர் டே அன்று போவது வழக்கமாகிவிட்டது.
மூவரும் காபி, டீ சமாச்சாரங்களை முகர்ந்து பார்த்ததுகூட கிடையாது. சின்னக்குழந்தையின் மகன் காசிக்கிழம் -இவர் ரிடையராகி நாலு வருஷமாகிறது - கூட ஆரோக்கியமாக இருக்கிறார். இவர்கள் வம்சத்தில் அஆரோக்கியமானவர் இன்னும் இருபது வருஷ தாசில்தார். சர்வீஸ் இருக்கும் இவரது பிள்ளைதான்.
பெரிய தாத்தா, லேடி கிழவர், வேலை பார்த்தது என்னவோ இருபத்தாறு வருடங்கள்தான், பென்ஷன் வாங்க ஆரம்பித்து ஐம்பத்தாறு வருடங்களுக்கு மேலாகிறது. அடுத்த தாத்தா, சின்னக்குழந்தை கடந்த இருபத்திரண்டு வருடங்களாக பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார். இவர்களை வைத்துக்கொண்டு அந்த காலத்தில் அல்லது அந்த கிராமத்தில் அனைவரும் ஆரோக்கியமானவர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். கூடத்தில் யார் இருப்பது என்பதுகூட கதைசொல்லியின் தாயாருக்குத் தெரியவில்லை - கண்ணில் சதை வளர்ந்திருக்கிறது.
கதை இப்போது காலை பத்தேகாலுக்கு, கிழவர்களின் வீட்டிற்கு நகர்கிறது. பெரிய தாத்தாவைப் பற்றிய வர்ணணைகள் - தலை முழுவதும் ஒரு அணு விடாமல் வழுக்கை பளபளத்துக் கொண்டிருக்கிறது. செஞ்சுரி அடித்துவிட்டாலும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, வழக்கமான கிழவர்களைப் போலத்தான் இருக்கிறார்!!
கதை சொல்பவர் லேடியிடம் நலம் விசாரிக்கும்போது கொஞ்சம் சத்தமாகப் பேசிவிட்டார் போல. "எனக்கு கண்தான் சரியாகத் தெரியாது. காது நன்றாக கேட்கும்" என்று பட்டென பதில் வருகிறது.
சின்னக்குழந்தையை தகப்பனார் லேடிக்கிழவர் "இன்னுமா சட்டை போட்டுக்கொண்டு தயாராகவில்லை" என கடிந்துகொள்கிறார் - "என்னைக்குத்தான் இந்த சோம்பலை விடப்போகிறாயோ!"
இவர்கள் இருவருடைய மனைவிகளும் ஆரோக்கியத்தில் அதிக வித்தியாசம் இல்லாமல் ஒன்று போலவே இருக்கிறார்கள்.
லேடி கிழவரே தாத்தா. அவர் மகன் தாத்தாவிடம் காலைத் தூக்கி வாங்க, நிலை குனிந்து வாங்க, திண்ணையை பிடிச்சுக்குங்க என்று பார்த்துப் பார்த்து அழைத்து வருகிறார். ஒவ்வொன்றிற்கும் பெரிய தாத்தாவின் பதில் இருக்கிறதே, அடேயப்பா!
உதாரணத்திற்கு
"காலைத் தூக்கி வச்சு வாங்கோப்பா"
"தூக்கித்தாண்டா வக்யறேன். தெரியலியா?"
"திண்ணையைப் புடுச்சிண்டுக்குங்கோ"
"ஏன் இல்லாட்டா விழுந்துடுவேனோ? ஏண்டாப்பா!"
"இல்லே, சொன்னேன்"
"என்னத்தைச் சொன்னே?"
கதை இப்போது கஜானாவில். மர நிழல்தோறும் ஏகப்பட்ட கிழங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், படுத்திருக்கிறார்கள்...போன வருடம் ரிட்டையர் ஆனதிலிருந்து சின்ன குழந்தை வயது வரை 'பணி மூப்பு அடைந்தவர்கள்"
லேடிக்கிழவர் அங்கே வருடாவருடம் தான் சந்திக்கிற நண்பர்களுடன் அளாளாவுகிறார். பேத்தி பிரசவங்கள், பேரன் மெடிக்கல் விடுமுறைகள் பற்றிய விசாரிப்புகள் - மறக்காமல் சரியாய் கேட்கிறார். திருஷ்டி பட்டுவிடாமல் இருக்க திரும்பத் திரும்ப சலித்துக் கொள்ளவும் மறப்பதில்லை - அவருடைய உயிர் இதோ அதோவென இழுத்துக்கொண்டிருக்கிறதாம். இதற்கெல்லாம் அசருமா நண்பர் கிழம்? " யாரு நீயா? நூத்திருபத்திஞ்சு என்று சொல்லிட்டு காந்தி போய்ட்டார், நீ இருந்து தான் காட்டப்போற!" என்று கண் வைக்கிறது அது.
மூன்று மணிக்கு வந்த வேலை முடிந்து வீடு திரும்புகிறார்கள்.
லேடிக்கிழவர், நான் மட்டும் வேலையில் இருந்தால் அத்தனை பேருக்கும் ஒரு மணி நேரத்தில் ஆகவேண்டியதை செய்துமுடித்து வீட்டிற்கு அனுப்பியிருப்பேன், அரசாங்கம் ஐம்பத்தைந்து வயதில் வீட்டிற்கு அனுப்புவது மடமை என்று சொல்லி வருகையில்....
வண்டி பின்பக்கமாய் குடை சாய்ந்துவிடுகிறது. கதைசொல்லியைத்தவிர மற்ற அனைவருக்கும் ஒரு காயமில்லை. கதைசொல்லியின் வலது கை முறிந்துவிடுகிறது. இரு கிழவர்களும் வண்டியை சரி செய்து, பையனை மருத்துவரிடம் அழைத்துச் சென்று கட்டு போட்டு பத்திரமாய் அவரது வீட்டிற்கு கொண்டு விடுகிறார்கள். பையன் - கதைசொல்லி - கதையின் துவக்கத்தில் கிழவர்களுக்குத் துணையாய் போகிறான், ஆனால் கடைசியில் கிழவர்கள்தான் அவனை பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து விடுகிறார்கள் லேடித்தாத்தா கதைசொல்லியிடம் "ஒரு மூணு மாதம் மெடிக்கல் லீவு போட்டுவிடப்பா" என்று அறிவுரைக்கிறார்.
கதை முழுவதும் தூக்கலான காமெடிப்பூச்சு, ஹஹா இல்லை; ஹட்ச் விளம்பர நாய்க்குட்டி போல மெல்லிய புன்னகை, ஆச்சரியங்கள்தான் நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன... பேச்சு, பேச்சு, என்னாப் பேச்சு இந்த தாத்தாக்களுக்கு! செல்லமாய் வாயிலேயே போடவேண்டும் போலிருக்கிறது!
எனக்கு இப்போது அடுத்த மஸ்டர் டேயின்போது இந்த கிழங்களைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது - அவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள.
ஆனால் அவர்களிடம் நம்மை அழைத்துச் செல்ல ஒரு தி.ஜானகிராமன்தான் இல்லை.
சிறுகதையை இணையத்தில் வாசிக்க : archive.org
தி ஜானகிராமன் படைப்புகள் பகுதி 1
சிறுகதைத் தொகுப்பு
1006 பக்கங்கள் விலை ரூ.300
இணையத்தில் வாங்க : கிழக்கு
--
இந்தப் பகிர்வில் சின்னகுழந்தையின் மகன் லேடிக்கிழவர் என்று குறிப்பிடப்பட்டிருந்த பிழை படிவிட்டபின் திருத்தப்பட்டது. மேற்கண்ட பிழையை உடனடியாகச் சுட்டிக் காட்டிய திரு.ஸ்ரீதர் நாராயணன் அவர்களுக்கு நன்றிகள்.
ReplyDelete