புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா.கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் ‘வேடந்தாங்கல்’குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்கமூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுபுலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை.
- பெருமாள் முருகன்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் முயற்சியில் பதிக்கப்பட்ட ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ எனும் நூலைப் பற்றி இதை விட நெருக்கமான அறிமுகத்தை நான் எழுதிவிடமுடியாது (நூல் முன்னுரை இங்கே). சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தாமரை பூத்த தடாகம் எனும் நூலில் மா.கிருஷ்ணன் எனும் கானுயிர் வல்லுநர் எனக்கு அறிமுகமனார். உண்மையில் தமிழில் சூழியல் குறித்த விழிப்புணர்வு மா.கிருஷ்ணனால் தொடங்கப்பட்டது எனப் பொருள் வரும்படியாக அந்த கட்டுரை இருந்தது.
சிறுவயதிலிருந்து பறவைகள் மற்றும் விலங்குகளோடு பரிச்சயம் இருந்தாலும் அவற்றை ஒரு அறிவாக நாம் கருதுவதில்லை. கோட்டான், கழுகுப் பார்வை, கிளி மூக்கு, மைனாவின் தொண்டை, மயில் கழுத்துப் பச்சை, காக்கா குரல் என தினப்படி நமது பேச்சில் பறவைகளின் குணங்களை எடுத்தாள்கிறோம். நம்மை அறியாமல் பல நேரங்களில் மனித குணத்தைப் பறவைகளுக்கு ஏற்றிப் பார்க்கிறோம். சேலம் ரயில் நிலையத்தில் ’மணிபர்சு, நகைகள் பத்திரம்; நம்மிடையே சில வல்லூறுகள் இருக்கலாம்’, என அறிவிப்புப் பலகையில் வல்லூரை ஏதோ திருடப் பிறந்த பறவை போல வரைந்திருப்பதை மா.கிருஷ்ணன் வருத்தத்தோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு சராசரி மனிதனாக நாம் இப்படிப்பட்ட விஷயங்களை தினமும் கடந்துசெல்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அறிவுலகில் புழங்கும் ஒருவருக்கு எப்படிப்பட்ட மனச்சித்திரத்தை இது அளிக்கிறது பாருங்கள்?
