புகழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா.கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் ‘வேடந்தாங்கல்’குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்கமூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுபுலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா.கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை.
- பெருமாள் முருகன்.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் முயற்சியில் பதிக்கப்பட்ட ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ எனும் நூலைப் பற்றி இதை விட நெருக்கமான அறிமுகத்தை நான் எழுதிவிடமுடியாது (நூல் முன்னுரை இங்கே). சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய தாமரை பூத்த தடாகம் எனும் நூலில் மா.கிருஷ்ணன் எனும் கானுயிர் வல்லுநர் எனக்கு அறிமுகமனார். உண்மையில் தமிழில் சூழியல் குறித்த விழிப்புணர்வு மா.கிருஷ்ணனால் தொடங்கப்பட்டது எனப் பொருள் வரும்படியாக அந்த கட்டுரை இருந்தது.
சிறுவயதிலிருந்து பறவைகள் மற்றும் விலங்குகளோடு பரிச்சயம் இருந்தாலும் அவற்றை ஒரு அறிவாக நாம் கருதுவதில்லை. கோட்டான், கழுகுப் பார்வை, கிளி மூக்கு, மைனாவின் தொண்டை, மயில் கழுத்துப் பச்சை, காக்கா குரல் என தினப்படி நமது பேச்சில் பறவைகளின் குணங்களை எடுத்தாள்கிறோம். நம்மை அறியாமல் பல நேரங்களில் மனித குணத்தைப் பறவைகளுக்கு ஏற்றிப் பார்க்கிறோம். சேலம் ரயில் நிலையத்தில் ’மணிபர்சு, நகைகள் பத்திரம்; நம்மிடையே சில வல்லூறுகள் இருக்கலாம்’, என அறிவிப்புப் பலகையில் வல்லூரை ஏதோ திருடப் பிறந்த பறவை போல வரைந்திருப்பதை மா.கிருஷ்ணன் வருத்தத்தோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு சராசரி மனிதனாக நாம் இப்படிப்பட்ட விஷயங்களை தினமும் கடந்துசெல்கிறோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அறிவுலகில் புழங்கும் ஒருவருக்கு எப்படிப்பட்ட மனச்சித்திரத்தை இது அளிக்கிறது பாருங்கள்?
நாம் ஏன் பறவைகளைப் பற்றிப் படிக்க வேண்டும்? உருவங்கள், குணாதிசயங்கள், சாப்பாட்டுப் பழக்கம், புழங்கும் சூழல், தட்பவெட்ப நிலவரத்தில் அவற்றின் நடத்தை எனப் பல்வேறு தலைப்புகளில் பறவைகளை ஏன் பகுக்க வேண்டும்? சோதனைக் கூடத்தில் ரசாயன வகைகளை வரிசைப்படுத்துவது போல பறவை வகைகளை பிரித்துப் புரிந்துகொள்வது எதற்காக? துப்பாக்கி என்றொன்று இருந்தால் ஒரு கட்டத்தில் வெடித்துத்தான் ஆகவேண்டும் என்பது போல பறவைகளைப் பற்றிப் படிப்பது மனிதனின் தேவைக்காக மட்டுமே. குறைந்தபட்சம் நமது மருத்துவத்துறையில், உணவு ருசிக்காக பறவைகளை இனங்கான்பது அவசியமாகிறது.
பனங்காடை இறகுக்கு மருத்துவ குணம் உள்ளதை நமது முன்னோர்கள் அறிந்துவைத்திருந்தனர். நமது முன்னோர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு அறிதலும் அழிவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் செயல்பாடாக மட்டுமே இருந்திருக்கும். வலசைப் பறவையைக் கண்டு வானிலை மாற்றங்களை அறியவும், வனத்தில் பறவையின் குரல் கேட்டு வெளி மனிதர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவும், பறவைகள் கூட்டமாய் கூடியுள்ள இடத்தில் செழுமை நிறைந்திருக்கும் என நம்பிக்கையும் பண்டைய மனிதனுக்கு அவசியமாக இருந்திருக்கும். தனது இருப்பு மிருகங்களையும் பறவைகளையும் சார்ந்த ஒன்றுதான் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்க முடியாது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் பறவைகளைப் பற்றிய தொகுப்பு ஒரு அறிவுத்தேடல் என்பதைத் தவிர பெரிய அர்த்தம் பொதிந்ததாக இருக்க முடியாது என நினைத்திருந்தேன். பறவைகளின் வழக்கங்களைக் கொண்டு நம்முடைய வாழ்வு முறையை மாற்றிக்கொள்ளத் தேவையில்லாத்தால் அவை ஏதோ கடவுளாக அனுப்பிய வானத்தின் அலங்காரப் பொருள் மட்டுமே என நினைத்திருந்தேன். டேவிட் அட்டன்பர்ரோவின் காணொளி மற்றும் மா.கிருஷ்ணனின் கட்டுரைகளைப் படிக்கும் வரை.
ஒரு கலைக்களஞ்சியமாக எண்ணற்ற பறவைகளின் பெயர்களை இதில் தொகுத்துள்ளார். தவிட்டுப்புறா (little brown dove), தேன்சிட்டு, பனங்காடை (Roller), மாம்பழப்பட்சி, வாலாட்டிக் குருவி (Grey Wagtail), வானம்பாடி (Skylark) எனப் பல பறவைகளின் குணாதிசயங்களைப் பற்றிய சிறு குறிப்பை கொடுத்துள்ளார். புத்தகத்தில் பறவைகளின் ஓவியங்களை மா.கிருஷ்ணன் வரைந்துள்ளார். ஒரு Field guide போல நம்மால் இதைக் கொண்டு பறவைகளை இனங்கான முடியாது என்றாலும் குறிப்பிட்ட பறவைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு சீரிய அறிவுப் பெட்டகமாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. பறவைகளின் குணாதிசயங்களை விளக்க மற்ற பறவைகளைத் துணைக்கழைத்து சொல்லும் பாங்கு மிக அருமையாக அமைந்திருக்கிறது. இந்த பத்தியைப் பாருங்கள்:-
பட்டாணிக் குருவி
இது காக்கை வமிசத்திற்கு அடுத்ததாகவிருந்தும், பார்வைக்குக் கருந்தலையும் சாம்பல் முதுகும் வெள்ளை வயிறும் சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்ட ஒரு சிட்டுக்குருவி போலிருக்கும். அளவிலும் ஊர்க்குருவியின் அளவே. ஆனால் இதன் அலகு சிறியதாய் இருந்தும், ஊர்க்குருவியின் அலகு போலில்லாது காக்கையினது போலிருக்கும். இது மரங்களிலும் செடிகளிலும் சுறுசுறுப்புடன் ஏறியுமிறங்கியும் பூச்சி விளையாடும். சீட்டியடிக்கும் குரலில் ஒன்றையொன்று கூப்பிடும்.
பறவை வகைக்குள் எவ்வளவு தொடர்புகளை ஒரு பத்தியில் அடக்கிவிட்டார்! வேற்று மொழியைக் கற்கும்போது அதே மொழியிலேயே பாடம் சொல்லித்தருவர். ஒரே மொழியில் புழங்கும்போது பாதி நேரம் புரியாவிட்டாலும் சூட்சுமங்கள் மெல்லப் புரியத் தொடங்கிவிடும் என்பது பாலபாடம். அது போல பறவையியலை அதன் மொழியிலேயே படிப்பதென்பது சுவாரஸ்யமாகவும் அதே சமயம் ஒப்புமை நோக்கில் பறவைகளை இனங்கானவும் உபயோகமாக இருக்கும்.
பறவை உலகோடு உறவு கொள்ள நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். பறவைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் வாழும் உலகை இன்னும் அதிக நெருக்கமாகத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். உலகம் இளமையாக இருந்த காலத்திலிருந்து நம்முடன் வாழ்ந்து வரும் இவற்றோடு பாகம் பிரித்து வாழத் தலைப்படும் தலைமுறையாக இல்லாமல், சக உயிர் எனும் உரிமையோடு அவற்றை அணுக நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பறவைகளை துணைக்கழைத்து தங்கள் நிறை/குறைகளை முறையிடும் அதே வேளையில் அருகிவரும் பறவைக்கூட்டம் சொல்லும் ரகசியத்தையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.
‘கீசு கீச்சென்று எங்கும் ஆணைச்சாத்தன் கலந்து பேச்சின் பேச்சரவம் கேட்டிலையோ’ என விழிப்பதற்கு முன் நமது உணர்வுகளைத் தூண்டிவிடும் பறவை ஒலிகளை நாம் எங்கும் கேட்பதில்லை. விலங்குகளைப் பற்றி முற்றிலும் தவறானச் செய்திகளை ஆவணத்திலும் பதியச் செய்கிறோம். சக ஜீவர்களாக நம்முடன் வாழ்ந்த மிருகங்களும் பறவைகளும் ஏன் அரிதாகவே நமது அருகாமையை நாடுகின்றன எனும் கேள்வியை எதிர்கொள்ளவேண்டும். மா.கிருஷ்ணனின் கவலைகளை ஓரளவுக்கேனும் நாம் கைக்கொண்டு அவரது கருத்துகளைப் பரவச் செய்வது நமது நன்மைக்கே என பெருமாள் முருகன் கூறுவதை யாரும் மறுக்கமுடியாது.
தலைப்பு - பறவைகளும் வேடந்தாங்கலும்
தொகுப்பு ஆசிரியர் - மா.கிருஷ்ணன்
பதிப்பாசிரியர் - பெருமாள்முருகன்
உள்ளடக்கம் - கட்டுரைகள்
இணையத்தில் வாங்க: நூலகம்.காம்
எல்லாப்பறவைகளையும் பேர்டு என்று பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவைகளை அறிந்து கொள்ள உதவும் நல்ல புத்தகம். நானும் வாசித்திருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
ReplyDelete