சிறப்புப் பதிவர்: உமாக்ரிஷ்
புனைவு, கணினி, வரலாறு, மருத்துவம், அறிவியல், இலக்கியம் என்று சுஜாதா கால்தடம் பதிக்காத (கைத்தடம் என்றும் சொல்லலாம்) துறையே இல்லை எனலாம். பூக்குட்டி சிறுவர் இலக்கியத்தில் சேர்த்தி. குழந்தைகளுக்காக இங்கே நிறைய புத்தகங்கள் வருகின்றன. ஆனால் அவை நிஜத்தில் குழந்தைகளோடு குழந்தை மனதில் பேசுகிறதா என்பது பெரிய கேள்விதான்.
சுஜாதா ஒரு சிறுமியின் பார்வையில் எழுதியது இந்தப் பூக்குட்டி. இந்தப் புத்தகத்தைப் படிக்க ஒன்றா குழந்தை மனம் இருக்க வேண்டும் அல்லது குழந்தையின் மனதை வெகுவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். கதை படிக்கும் போதே ஒரு சின்னக் குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வு. குழந்தையின் குரல், அதன் கூடப் பேசும் பொம்மை, அந்தப் பூக்குட்டி என்று கதை என்னும் கேமெரா ஒவ்வொரு ஆங்கிளாகச் செல்கின்றது. புத்தகம் எடுத்ததும் முடிக்கும் வரை கீழே வைக்கவே இல்லை. இரண்டு சின்னஞ்சிறு சிறுமிகளுக்கிடையேயான பூச்சில்லாத இயல்பான நட்பு. அதைப் பெரியவர்கள் பார்க்கின்ற பார்வை, அந்தக் குழந்தைகளின் உலகம் என்று வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. எவருக்கும் தெரியாத புரியாத இலக்கிய வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் எளிய தமிழில். அட்டைப்படம் வெகு பொருத்தம் கதைக்கு.
