சிறப்புப் பதிவர்: உமாக்ரிஷ்
புனைவு, கணினி, வரலாறு, மருத்துவம், அறிவியல், இலக்கியம் என்று சுஜாதா கால்தடம் பதிக்காத (கைத்தடம் என்றும் சொல்லலாம்) துறையே இல்லை எனலாம். பூக்குட்டி சிறுவர் இலக்கியத்தில் சேர்த்தி. குழந்தைகளுக்காக இங்கே நிறைய புத்தகங்கள் வருகின்றன. ஆனால் அவை நிஜத்தில் குழந்தைகளோடு குழந்தை மனதில் பேசுகிறதா என்பது பெரிய கேள்விதான்.
சுஜாதா ஒரு சிறுமியின் பார்வையில் எழுதியது இந்தப் பூக்குட்டி. இந்தப் புத்தகத்தைப் படிக்க ஒன்றா குழந்தை மனம் இருக்க வேண்டும் அல்லது குழந்தையின் மனதை வெகுவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். கதை படிக்கும் போதே ஒரு சின்னக் குறும்படம் பார்ப்பது போன்ற உணர்வு. குழந்தையின் குரல், அதன் கூடப் பேசும் பொம்மை, அந்தப் பூக்குட்டி என்று கதை என்னும் கேமெரா ஒவ்வொரு ஆங்கிளாகச் செல்கின்றது. புத்தகம் எடுத்ததும் முடிக்கும் வரை கீழே வைக்கவே இல்லை. இரண்டு சின்னஞ்சிறு சிறுமிகளுக்கிடையேயான பூச்சில்லாத இயல்பான நட்பு. அதைப் பெரியவர்கள் பார்க்கின்ற பார்வை, அந்தக் குழந்தைகளின் உலகம் என்று வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார் சுஜாதா. எவருக்கும் தெரியாத புரியாத இலக்கிய வார்த்தைகள் எல்லாம் இல்லாமல் எளிய தமிழில். அட்டைப்படம் வெகு பொருத்தம் கதைக்கு.
ஒரு பணக்காரக் குழந்தை, ஒரு சேரியில் வளரும் குழந்தை இருவருக்கும் அவரவர் நிலை, அந்தஸ்து பற்றிய கவலை எல்லாம் இல்லை. அவர்கள் நட்புக்குப் பாலமாய் ஒரு நாய்க்குட்டி. பணக்காரக் குழந்தையின் அம்மாவுக்கு ஏழைப் பாப்பாவோடு தன் பாப்பாவைப் பழக அனுமதிக்க விருப்பமில்லை. இருவரையும் சந்திக்க விடாமல் செய்கிறாள். தன் தோழியைப் பார்க்காத ஏக்கம் தாக்கி குழந்தை உடல் பாதிக்கிறது. மனநல மருத்துவர் அதன் ஏக்கத்தைத் தீர்த்தே ஆக வேண்டும் எனச் சொல்ல, ஏழைக் குழந்தை இருக்குமிடம் தேடியலைகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்தத் தேடும் பொறுப்பைக் குழந்தை தானே எடுத்துக் கொண்டு வழி தவறிவிடுகின்றது. எங்கே குழந்தைக்கு எதுவும் ஆகி விடுமோ என்ற பதட்டம் நமக்குள்ளும் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் இனிய முடிவுடன் கதை நிறைகிறது.
குழந்தைகள் நம்மைப் பொறுத்தவரை சின்னஞ்சிறியவர்கள், அவர்களுக்கு என்ன தெரியும் என்று அவர்கள் மீது நம் எண்ணங்களையே பெரும்பாலும் திணிக்கின்றோம். அவர்கள் உலகம் வேறானது. பணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை வெறும் காகிதம் தான். அதை வைத்தெல்லாம் முகத்தில் மகிழ்ச்சி வரவழைத்து விட முடியாது. ஒவ்வொரு பொம்மையும் குழந்தையின் உற்ற தோழன். தனக்குப் பிடித்த ஒன்றை இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கும் குழந்தைகள் எப்பொழுதும் உண்டு. (தப்பித் தவறி அவற்றை அப்புறப்படுத்திவிட்டால் அன்று உங்களுக்கு சிவராத்திரிதான்). அப்படி இக்கதை யில் வரும் விம்முவின் தோழன் ஜம்புவும் அதன் பேச்சுகளும் படு சுவராசியம் மாத்திரம் அல்ல, நமக்கும் அந்தப் பேச்சுகள் அங்கங்கே சேதி வைத்திருக்கின்றன.
நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் குழந்தைகள் மட்டும் தான்.அன்றைய பொழுதில் அந்த நேரத் தேவை மட்டுமே அவர்களுக்குப் பெரிது. சாமி நான் வேண்டிகிட்டது மட்டும் நடந்தா நான் உனக்கு நிறைய சாக்லேட்ஸ்லாம் தரேன் பொய் சொல்லாம இருக்கேன் என்று அந்தக் குழந்தை வேண்டிக் கொள்ளும்போது அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது.
ஒரு சில மணித்துளிகள் குழந்தைகளின் உலகத்தில் உட்புகுந்து வேடிக்கை பார்க்கின்ற உணர்வு கதை படிக்கின்ற போது. குழந்தையின் பார்வையில் குழந்தையாகவே சொன்னதில் விம்முவின் தவிப்பு சரியாக வேண்டுமே என்ற தவிப்பு படிப்பவருக்கும் நிச்சயம் வந்துவிடும். ஒரு சின்ன கதை எளிய சேதி போற போக்கில் அழகாகச் செதுக்கியிருக்கிறார் சுஜாதா
அவரை வாத்தியார் என்று அழைப்பதிலும் நிச்சயம் அர்த்தம் இருக்கின்றது.
பூக்குட்டி - சுஜாதா
சிறுவர் இலக்கியம்
விலை ரூ.40/-
ஆன்லைனில் வாங்க: உடுமலை
சிறப்பான புத்தகம்...
ReplyDeleteநன்றி...
நண்பர் ஹரன் பிரசன்னா பூக்குட்டிக்குக் கொடுக்கும் அறிமுகம்:
ReplyDelete“குழந்தைகளுக்காகத் தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்கிற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.
சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராகச் சொல்லும் கதை.
வடிவமைப்பின் நேர்த்தியும் வழுவழுப்பான பக்கங்களும் அவற்றில் நிறைந்திருக்கும் வண்ணங்களும் குழந்தைகளின் மனதை வசீகரிக்க வல்லவை. பூக்குட்டி ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது ஓவியர் மணியம் செல்வன் வரைந்த ஓவியங்கள் புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன. கதையை வாசிக்கும் குழந்தைகள் அவ்வோவியங்களை உள்வாங்கிக் கதையோடு ஒன்றிப்போவார்கள் என்பது நிச்சயம்.
கதையின் முடிவில் படித்தவர்கள் மனதில் நிழலாடும் விம்முவும் வேலாயியும் பூக்குட்டியும், இக்கதை குழந்தைகளுக்கானது என்பதை மீறிய அனுபவத்தை உருவாக்கிவிடுகின்றனர்.
பூக்குட்டி பதிப்பகத்தின் முதல் பதிப்பாக வந்திருக்கும் இப்புத்தகம் குழந்தைகளின் புதிய உலகை மிகுந்த நம்பிக்கையோடு திறந்து வைக்கிறது."
அக்டோபர் மாதம் கற்றதும் பெற்றதுமில் சுஜாதா எழுதியது. …
‘தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை’ என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன்.
சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே… அப்போது ‘பூக்குட்டி’ என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல!
தற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், ‘லேடி பேர்ட்’ புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு, ‘பூக்குட்டி’யைச் சற்று சுருக்கி, எளிமைப்படுத்தி வெளியிடத் தீர்மானித்தேன். மணியம் செல்வனைக் கேட்டதில், நல்லவேளை… அவர் தன் பழைய சித்திரங்களைப் பத்திரமாக வைத்திருந்தார்.
விம்மு, வேலாயி, நாய்க்குட்டி, பூக்குட்டி மூவரும் மறுபடி பளிச்சென்று இம்மாதம் வெளிவருகிறார்கள். இதற்காக என் கைக்காசை செலவழிப்பதில் எனக்குத் தயக்கமே இல்லை… சந்தோஷம்தான்!
‘பூக்குட்டி பதிப்பக’த்தில் மேலும் சில புத்தகங்கள்… பறவைகள், மிருகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், குட்டிக் கதைகள், பக்கத்துக்குப் பக்கம் சித்திரம், பெரிய எழுத்து, எளிய நடையில் கொண்டு வர ஆசை.
பின்னட்டையில்…
குழந்தைகளுக்காக தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்ற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.
சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராக சொல்லும் கதை.
சுஜாதா குழந்தைகளுக்காக அதிகம் எழுதியதில்லை.'அன்று உன் அருகில்' என்ற நாவல் சிறுவர்கள் பற்றிய பெரியவர்கள் கதை.பூக்குட்டி ஒன்றுதான் சற்று முனைப்புடன் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அதிகம் விலகாமல் எழுதப்பட்ட கதை இது.சிறுமியரிடையே நட்புக்கு ஏழை,பணக்கார சாதி வித்தியாசங்கள் கிடையாது எனபதை உணர்த்தும் சிறப்பான கதை.
ReplyDeleteஅருமையான படைப்பு. ஒரு குழந்தையின் உள்ளத்தினுள் புகுந்து வெளிவந்த உணர்வு இருக்கும். ஆனால் இவ்வளவு இறுக்கமான ஒரு படைப்பை ஒரு குழந்தையால் அனுபவித்து படிக்க இயலாது என்பது என் எண்ணம்.
ReplyDelete