ஆம்னிபஸ் தளம் 365 நாட்களில் 365 பதிவுகள் இடுவதான முதன்மை நோக்கத்துடன் துவக்கப்பட்ட புத்தக தளம். இங்கு இணைந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் வாரம் ஒருநாள் அவரவருக்கான தினத்தில் பதிவிடுகிறோம். தங்கள் நூல் மதிப்பீடுகளை இங்கு இணைத்துக் கொண்ட வேறு சில நண்பர்களின் பதிவுகள் சிறப்புப் பதிவுகளாக இடுகையிடப்படுகின்றன. நேற்றோடு எங்கள் நோக்கத்தில் பாதியளவை நிறைவேற்றி விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம்.
முதலில் முன்னூறு சொற்களில் சிறு அறிமுகம் தந்தால் போதும் என்பது நோக்கமாக இருந்தது. சில வாரங்களிலேயே உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மிகச் சிறு அறிமுகங்களாக, அதிலும் குறிப்பாக, கதைச் சுருக்கமாக, இந்தப் பதிவுகள் இருப்பதாக விமரிசனங்கள் எழுந்தன. எனவே, கதைச் சுருக்கத்தையும் தாண்டி, புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். சமீப காலமாக, வெறும் புகழ்ச்சியாக இருக்கிறது என்ற விமரிசனத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளோம். வாசகர் தளம் எனபதால் விமரிசனம் செய்யும் தகுதியும் திறனும் மிகக் குறைவு, இருப்பினும் அந்த திசையிலும் சிலர் செல்லத் துவங்கியுள்ளனர்.
திரும்பிப் பார்க்கும்போது எத்தனை துறைகள், எத்தனை எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறோம் என்பது வியப்பாக இருக்கிறது. விமரிசனத் துறையில் புகுவதைவிட, இந்த திசையில் முனைப்பு காட்டுவது தமிழ் வாசகர்களின் ஒரு முக்கியமான தேவையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகளின் இடத்தை உலக இலக்கியத்தைக் கணக்கில் கொண்டுதான் நிறுவ வேண்டும் என்ற கருத்தை ஜெயமோகன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் நவீன உலக இலக்கியத்தின் தாக்கத்தில் எழுதுகின்றனர், அது குறித்த புரிதல் சில விமரிசகர்களுக்கு இருக்கலாம். ஆனால், நம்மைப் போன்ற வாசகர்கள் எத்தனை பேருக்கு உண்டு?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக Words Beyond Borders என்ற வலைத்தளத்தில் நண்பர் அஜய் நவீன உலக இலக்கியம் குறித்து தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார். ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நவீன உலக இலக்கியத்தில் ஒரு அறிமுகத்தை அளிக்கும் நோக்கத்தில் அவரது பதிவுகள் இங்கு தமிழில் திருத்தி எழுதப்பட்ட வடிவில் அளிக்கப்படுகின்றன.
அஜய் அளிக்கும் அறிமுகங்கள் இனி ஒவ்வொரு ஞாயிறும் காலை ஒன்பது மணிக்கு உங்கள் அபிமான ஆம்னிபஸ் புத்தக தளத்தில் இடுகையிடப்படும். புதிய திசையில் ஆம்னிபஸ் பயணிக்கவிருக்கிறது, நண்பர்களின் நல்லாதரவைக் கோருகிறோம்.
௦௦௦௦
(1958ஆம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஸான்டர்ஸ் ஒரு அமெரிக்கர். ஜியோபிசிகல் என்ஜினியர். பள்ளிப் படிப்பை முடித்த ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் படைப்பிலக்கியப் பணியில் முதுநிலைப் பட்டக்கல்வியை சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி பயின்றார். இருந்தாலும் அவர், "நான் புரிந்து கொள்ளக்கூடிய அளவு பின்புல அறிவு எனக்கு இல்லாத ஒரு துறையில் குறைகருவிகளுடன் இயங்குகிறேன். வெல்டிங் செய்பவனை ஆடைகளை வடிவமைக்கச் சொன்ன மாதிரி" என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தற்போது அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸான்டர்ஸ், நான்குமுறை புனைவிலக்கியத்துக்கான நேஷனல் மாகசைன் விருது பெற்றிருக்கிறார், ஒரு முறை ஓ ஹென்றி விருதுக்கான இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவரது படைப்புகள் வேறு பல அமைப்புகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளன.
நுகர்வுச் சமூகம், பெருநிறுவன கலாசாரம் மற்றும் பெருவாரி மக்களுக்கான ஊடகங்களின் அபத்தங்களை கேலி செய்வதாக இவரது எழுத்து உள்ளது. ஏளனம் என்ற அளவில் மட்டும் அடங்கிவிடாத இவரது படைப்புகள் அறம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன. "நம் பற்றாக்குறை வளங்களுக்கும் நம்மிடம் உலகம் கோருவதற்கும் உள்ள இடைவெளியே வாழ்க்கையிலும் என் கதைகளிலும் நாடகீயத் தருணங்களை உருவாக்குகின்றன," என்று சொல்லும் ஸான்டர்ஸ், "நம் வாழ்க்கையின் அடிநாதமாய் ஒலிக்கின்ற கிறுக்குத்தனத்தை முழுமையாய் சுட்ட முடியாத இயலாமையே என் எழுத்தின் கிறுக்குக் குரல்களாகவும் ஒலிக்கின்றன" என்கிறார். "உண்மையையும் மானுட சுதந்திரத்தையும் மதிக்கும் இடத்தில் எப்போதும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு அப்பால் கவலைப்பட எதுவுமில்லை," என்ற அளவில் மட்டுமே இவரது அரசியல் இருக்கிறது).
ஸான்டர்ஸின் In Persuasion Nation என்ற சிறுகதை தொகுப்புக்கு அஜய் எழுதிய மதிப்பீடு இனி:
இது வற்புறுத்தல்களின் யுகம். எல்லா காலகட்டங்களிலும் எல்லாரும் ஒருவரையொருவர் இதையும் அதையும் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். ஆனால் இன்று வற்புறுத்தப்படுவதின் உச்சகட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சில பத்தாண்டுகளாக பெரிய அளவில் நம் வாழ்வை ஊடுருவி விட்டன. இன்று நாம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கைபேசியை வாங்கினால், அது நமக்கு உபயோகமா என்று மட்டும் பார்க்கிறோமா அல்லது பலரும் அதை உபயோகிப்பதால், அந்த வகை கைபேசி இல்லாதவன் மனிதனே இல்லை என்று உருவாக்கப்படும் ஒரு வித மாயையினால் அதை வாங்குகிறோமா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நம்மில் பலர் அந்த மக்களை பற்றி, வாழ்க்கை முறை பற்றி அறிந்தவர்களா, அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களா?> முன்பு, நம்முடைய அனுபவம், தேவை சார்ந்து நமக்கு ஒரு அபிப்பிராயம் அல்லது தெரிவு இருக்கும். பின்புதான் மற்றவர்களுடன் நமக்கு ஏற்படும் உரையாடல்கள், ஊடகங்களின் செய்திகள், நாம் படிப்பது இவற்றுடன் அவற்றைப் பொருத்தி பார்த்து நம் தெரிவை மாற்றிக் கொள்வோம் அல்லது நமது நிலையில் உறுதியாக இருப்போம். ஆனால் இன்று ஊடகங்களில் வரும் செய்திகள்/ பெருநிறுவனங்கள் தரும் விளம்பரங்கள்தான் நம்முடைய கருத்துக்களை, நமக்கான தெரிவுகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது போய், யாராலோ, எதற்காகவோ முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளே நமக்கு தகவல்களாகக் கிடைக்கின்றன.
ஜார்ஜ் ஸான்டர்ஸின் 'பெர்சுவேஷன் நேஷன்" (Persuasion nation) என்ற தொகுப்பில் ஒரு சீரழிந்த, ஒரு டிஸ்டோபியன் (dystopian) சமூகத்தை நாம் பார்க்கலாம். நுகர்வுக் கலாசாரத்தில் மக்கள் எவ்வாறெல்லாம் வற்புறுத்தப்படுகிறார்கள், சுய தேர்வோ, கருத்துக்களோ இல்லாதவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பது இந்தத் தொகுப்பின் மையக் கருத்தாக இருக்கிறது. இதில் ஒரு அபத்தம் என்னவென்றால் கதைமாந்தர், தாங்கள் இருக்கும் சமூக அமைப்பை நேசிப்பவர்கள், தாங்கள் இன்னும் தங்கள் தெரிவுகளை எந்த குறுக்கீடோ, வற்புறுத்தலோ இல்லாமல் செய்து கொள்வதாக எண்ணுபவர்கள். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளின் களமாக அமெரிக்கா இருந்தாலும் எந்த ஒரு வளரும் அல்லது வளர்ந்த நாட்டுக்கும் இந்தக் கதைகளின் எல்லைகள் விரியக்கூடும்.
