ஆம்னிபஸ் தளம் 365 நாட்களில் 365 பதிவுகள் இடுவதான முதன்மை நோக்கத்துடன் துவக்கப்பட்ட புத்தக தளம். இங்கு இணைந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் வாரம் ஒருநாள் அவரவருக்கான தினத்தில் பதிவிடுகிறோம். தங்கள் நூல் மதிப்பீடுகளை இங்கு இணைத்துக் கொண்ட வேறு சில நண்பர்களின் பதிவுகள் சிறப்புப் பதிவுகளாக இடுகையிடப்படுகின்றன. நேற்றோடு எங்கள் நோக்கத்தில் பாதியளவை நிறைவேற்றி விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம்.
முதலில் முன்னூறு சொற்களில் சிறு அறிமுகம் தந்தால் போதும் என்பது நோக்கமாக இருந்தது. சில வாரங்களிலேயே உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மிகச் சிறு அறிமுகங்களாக, அதிலும் குறிப்பாக, கதைச் சுருக்கமாக, இந்தப் பதிவுகள் இருப்பதாக விமரிசனங்கள் எழுந்தன. எனவே, கதைச் சுருக்கத்தையும் தாண்டி, புத்தகத்தைப் பற்றி இன்னும் விரிவாகப் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். சமீப காலமாக, வெறும் புகழ்ச்சியாக இருக்கிறது என்ற விமரிசனத்தை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளோம். வாசகர் தளம் எனபதால் விமரிசனம் செய்யும் தகுதியும் திறனும் மிகக் குறைவு, இருப்பினும் அந்த திசையிலும் சிலர் செல்லத் துவங்கியுள்ளனர்.
திரும்பிப் பார்க்கும்போது எத்தனை துறைகள், எத்தனை எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறோம் என்பது வியப்பாக இருக்கிறது. விமரிசனத் துறையில் புகுவதைவிட, இந்த திசையில் முனைப்பு காட்டுவது தமிழ் வாசகர்களின் ஒரு முக்கியமான தேவையை நிறைவேற்றுவதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் மற்றும் படைப்புகளின் இடத்தை உலக இலக்கியத்தைக் கணக்கில் கொண்டுதான் நிறுவ வேண்டும் என்ற கருத்தை ஜெயமோகன் வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் நவீன உலக இலக்கியத்தின் தாக்கத்தில் எழுதுகின்றனர், அது குறித்த புரிதல் சில விமரிசகர்களுக்கு இருக்கலாம். ஆனால், நம்மைப் போன்ற வாசகர்கள் எத்தனை பேருக்கு உண்டு?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக Words Beyond Borders என்ற வலைத்தளத்தில் நண்பர் அஜய் நவீன உலக இலக்கியம் குறித்து தொடர்ந்து பதிவுகள் செய்து வருகிறார். ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நவீன உலக இலக்கியத்தில் ஒரு அறிமுகத்தை அளிக்கும் நோக்கத்தில் அவரது பதிவுகள் இங்கு தமிழில் திருத்தி எழுதப்பட்ட வடிவில் அளிக்கப்படுகின்றன.
அஜய் அளிக்கும் அறிமுகங்கள் இனி ஒவ்வொரு ஞாயிறும் காலை ஒன்பது மணிக்கு உங்கள் அபிமான ஆம்னிபஸ் புத்தக தளத்தில் இடுகையிடப்படும். புதிய திசையில் ஆம்னிபஸ் பயணிக்கவிருக்கிறது, நண்பர்களின் நல்லாதரவைக் கோருகிறோம்.
௦௦௦௦
(1958ஆம் ஆண்டு பிறந்த ஜார்ஜ் ஸான்டர்ஸ் ஒரு அமெரிக்கர். ஜியோபிசிகல் என்ஜினியர். பள்ளிப் படிப்பை முடித்த ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் படைப்பிலக்கியப் பணியில் முதுநிலைப் பட்டக்கல்வியை சைராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி பயின்றார். இருந்தாலும் அவர், "நான் புரிந்து கொள்ளக்கூடிய அளவு பின்புல அறிவு எனக்கு இல்லாத ஒரு துறையில் குறைகருவிகளுடன் இயங்குகிறேன். வெல்டிங் செய்பவனை ஆடைகளை வடிவமைக்கச் சொன்ன மாதிரி" என்றுதான் சொல்லிக் கொள்கிறார். தற்போது அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸான்டர்ஸ், நான்குமுறை புனைவிலக்கியத்துக்கான நேஷனல் மாகசைன் விருது பெற்றிருக்கிறார், ஒரு முறை ஓ ஹென்றி விருதுக்கான இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். அவரது படைப்புகள் வேறு பல அமைப்புகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளன.
நுகர்வுச் சமூகம், பெருநிறுவன கலாசாரம் மற்றும் பெருவாரி மக்களுக்கான ஊடகங்களின் அபத்தங்களை கேலி செய்வதாக இவரது எழுத்து உள்ளது. ஏளனம் என்ற அளவில் மட்டும் அடங்கிவிடாத இவரது படைப்புகள் அறம் குறித்த கேள்விகளையும் எழுப்புகின்றன. "நம் பற்றாக்குறை வளங்களுக்கும் நம்மிடம் உலகம் கோருவதற்கும் உள்ள இடைவெளியே வாழ்க்கையிலும் என் கதைகளிலும் நாடகீயத் தருணங்களை உருவாக்குகின்றன," என்று சொல்லும் ஸான்டர்ஸ், "நம் வாழ்க்கையின் அடிநாதமாய் ஒலிக்கின்ற கிறுக்குத்தனத்தை முழுமையாய் சுட்ட முடியாத இயலாமையே என் எழுத்தின் கிறுக்குக் குரல்களாகவும் ஒலிக்கின்றன" என்கிறார். "உண்மையையும் மானுட சுதந்திரத்தையும் மதிக்கும் இடத்தில் எப்போதும் நல்ல கதைகள் வந்து கொண்டிருக்கும். அதற்கு அப்பால் கவலைப்பட எதுவுமில்லை," என்ற அளவில் மட்டுமே இவரது அரசியல் இருக்கிறது).
ஸான்டர்ஸின் In Persuasion Nation என்ற சிறுகதை தொகுப்புக்கு அஜய் எழுதிய மதிப்பீடு இனி:
இது வற்புறுத்தல்களின் யுகம். எல்லா காலகட்டங்களிலும் எல்லாரும் ஒருவரையொருவர் இதையும் அதையும் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். ஆனால் இன்று வற்புறுத்தப்படுவதின் உச்சகட்ட காலத்தில் நாம் இருக்கிறோம். அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் சில பத்தாண்டுகளாக பெரிய அளவில் நம் வாழ்வை ஊடுருவி விட்டன. இன்று நாம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கைபேசியை வாங்கினால், அது நமக்கு உபயோகமா என்று மட்டும் பார்க்கிறோமா அல்லது பலரும் அதை உபயோகிப்பதால், அந்த வகை கைபேசி இல்லாதவன் மனிதனே இல்லை என்று உருவாக்கப்படும் ஒரு வித மாயையினால் அதை வாங்குகிறோமா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரை சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நம்மில் பலர் அந்த மக்களை பற்றி, வாழ்க்கை முறை பற்றி அறிந்தவர்களா, அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களா?> முன்பு, நம்முடைய அனுபவம், தேவை சார்ந்து நமக்கு ஒரு அபிப்பிராயம் அல்லது தெரிவு இருக்கும். பின்புதான் மற்றவர்களுடன் நமக்கு ஏற்படும் உரையாடல்கள், ஊடகங்களின் செய்திகள், நாம் படிப்பது இவற்றுடன் அவற்றைப் பொருத்தி பார்த்து நம் தெரிவை மாற்றிக் கொள்வோம் அல்லது நமது நிலையில் உறுதியாக இருப்போம். ஆனால் இன்று ஊடகங்களில் வரும் செய்திகள்/ பெருநிறுவனங்கள் தரும் விளம்பரங்கள்தான் நம்முடைய கருத்துக்களை, நமக்கான தெரிவுகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. தகவல்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது போய், யாராலோ, எதற்காகவோ முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளே நமக்கு தகவல்களாகக் கிடைக்கின்றன.
ஜார்ஜ் ஸான்டர்ஸின் 'பெர்சுவேஷன் நேஷன்" (Persuasion nation) என்ற தொகுப்பில் ஒரு சீரழிந்த, ஒரு டிஸ்டோபியன் (dystopian) சமூகத்தை நாம் பார்க்கலாம். நுகர்வுக் கலாசாரத்தில் மக்கள் எவ்வாறெல்லாம் வற்புறுத்தப்படுகிறார்கள், சுய தேர்வோ, கருத்துக்களோ இல்லாதவர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பது இந்தத் தொகுப்பின் மையக் கருத்தாக இருக்கிறது. இதில் ஒரு அபத்தம் என்னவென்றால் கதைமாந்தர், தாங்கள் இருக்கும் சமூக அமைப்பை நேசிப்பவர்கள், தாங்கள் இன்னும் தங்கள் தெரிவுகளை எந்த குறுக்கீடோ, வற்புறுத்தலோ இல்லாமல் செய்து கொள்வதாக எண்ணுபவர்கள். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளின் களமாக அமெரிக்கா இருந்தாலும் எந்த ஒரு வளரும் அல்லது வளர்ந்த நாட்டுக்கும் இந்தக் கதைகளின் எல்லைகள் விரியக்கூடும்.
"எனக்கு பேச்சு வந்தாச்சு" (I can speak) என்பதுதான் தொகுப்பின் முதல் கதை. தன் நிறுவனம் தயாரித்த பொருளைத் திருப்பி அனுப்பிய வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனையாளர் கடிதம் எழுதுகிறார். அந்த நிறுவனம் தயாரித்த பொருள்தான் என்ன? பேச்சு வராத கைக்குழந்தைகளுக்கான முகமூடிகள். குழந்தைகள் சார்பில் இந்த முகமூடிகள் பெற்றோரின் பேச்சில் பங்கேற்கின்றன. இவை பேசும் விஷயங்கள் அவற்றை அணிந்திருக்கும் குழந்தைகளின் அறிவுக்கப்பாற்பட்டவை. இதற்கான அவசியம் என்ன? ஒரு குழந்தை தான் பேசும் பருவத்தை இயல்பாக அடைவதற்கு முன்னரே அது ஏன் தன் வயதுக்கு மீறிய விஷயங்களைப் பேசுவதாக ஏமாற்ற வேண்டும்? அதற்காக ஏன் அந்த மிகச் சிறு வயதில் முகமூடி அணிவிக்க வேண்டும்? பெற்றோர் தங்கள் குழந்தையின் முகத்தை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, அது தன் வயதுக்கு மீறிய அறிவுடன் இருக்கவேண்டும் என்று ஏன் எண்ண வேண்டும்? இதற்கான நியாயங்களைதான் விற்பனையாளர் தன் கடிதத்தில் எழுதி, முகமூடியை மீண்டும் முயற்சித்துப் பார்க்குமாறு வாடிக்கையாளரை வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெறுகிறாரா என்ன என்பதை ஸான்டர்ஸ் சொல்வதில்லை, கடிதம் நிறைவு பெறுவதோடு கதை முடிந்து விடுகிறது. ஆனால் நமக்குதான் சரியாக வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் எதையும் வாங்குவார்கள் என்பது தெரியுமே!
நுகர்வு கலாசாரத்தைப் பேசுகிறோம், தேவையில்லாததை எல்லாம் வாங்கிக் கொள்ளச் சொல்லி நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்று பேசுகிறோம். அத்தோடு பெருநிறுவனங்கள் தம் வாடிக்கையாளர்களுடன் எவ்வாறெல்லாம் தொடர்பு கொண்டு தம் பொருட்களை எப்படி விற்கின்றன என்பதையும் நாம் பேச வேண்டும். நுகர்வு சாதனங்களின் பெருக்கத்துடன் நம் தனி வாழ்வின் எல்லைகள் சுருங்குகின்றன. கடையிலும் வலைமனையிலும் நீங்கள் பூர்த்தி செய்துக் கொடுக்கும் படிவங்கள் எல்லாமே உங்கள் விருப்பு வெறுப்புகளை கணிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தங்கள் பொருட்களை உங்களுக்கு விற்கிறார்கள்.
"ஸ்டைலான என் பேரன்" (My flamboyant grandson) என்ற கதை இதன் வினோதங்களை விவரிக்கிறது. இந்தக் கதை விவரிக்கும் உலகத்தில் நுகர்வோர் அனைவருக்கும் ஒரு எலக்ட்ரானிக் ஷூ வழங்கப்பட்டிருக்கிறது. கடைகளில் இவர்கள் என்ன வாங்குகிறார்கள் எவ்வளவு என்பதை எல்லாம் இந்த காலணிகள் பதிவு செய்து வைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கடைக்குள் அவர்கள் நுழைந்ததும் தகவல்கள் கடைக்காரருக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்தது என்ன ஆகிறது தெரியுமா? வாடிக்கையாளர் என்ன வாங்கினார் ஏன் வாங்கினார் என்ற தகவல்களின் அடிப்படையில் அவர் கண்முன் வெவ்வேறு பொருட்களின் ஹோலோகிராம் உருவங்கள் விரிகின்றன. உங்கள் கண்முன் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக விளம்பரம் தோன்றுகிறது - நீ கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பர்கர் சாப்பிடாமல் இருந்திருக்கிறாய் என்றால் உன் முன் ஒரு பர்கர் விளம்பரம் தோன்றுகிறது, அதன் சுவையை நினைவூட்டி உன்னை பர்கர் வாங்கிச் சாப்பிடத் தூண்டுகிறது அது. கடைகளில் உன்னுடைய ஒவ்வொரு பரிவர்த்தனையையும் பதிவு செய்யும் காலணி மூலம் இது சாத்தியப்படுகிறது. அப்போது பசி இல்லாவிட்டாலும் பர்கர் சாப்பிட உனக்கு உந்துதல் ஏற்பட்டு அதை வாங்கி விடுவாய். இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. ஒருவர் ஷூவைக் கழட்டினால் அவருக்கு அபராதம் விதிக்கவும் இதையெல்லாம் ஆட்டிப் படைக்கும் யாரோ ஒருவர் இருக்கிறார்.
இதெல்லாம் எதிர்காலத்தில் சாத்தியம்தான். உண்மையில் இவர்களுக்கு நம் காலில் ஷூ மாட்ட வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை, ஆனால் ஒவ்வொருவரின் நுகர்வு பழக்கங்களையும் துல்லியமாக கணிக்க வேண்டும் என்பதால் ஷூ கட்டாயமாக ஆக்கப்படுகிறது. நாம் இணையத்தில் எத்தனை தடயங்களை விட்டுச் செல்கிறோம், அதுவேகூட நிறைய தகவல்களை இவர்களுக்குத் தருகின்றன. ஒரு முறை இணையத்தில் நமது டிஜிட்டல் கால்தடம் பதிந்து விட்டால் அதை எப்போதும் அழிக்க முடியாது. அடுத்த முறை இணையத்துக்கு நான் வரும்போது இந்தப் பதிவைப் படித்த பதிப்பகங்கள் எனக்கான புத்தகங்களைப் பரிந்துரைப்பதாக நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை எழுத்தாளர்களின் டிஜிட்டல் உருவங்களே நேரடியாக தங்கள் புத்தங்கள் வாங்க வற்புறுத்தச் செய்யலாம், அல்லது இரு உருவங்கள் ஒன்றை ஒன்று சாடிக் கொள்ளலாம். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.
நுகர்வுச் சூழலில் மட்டும்தானா இந்த வற்புறுத்தல் நடைபெறுகிறது? அரசியலில், சமூக தளத்தில் நம் ஆட்சியாளர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் எப்படி ஒரு பொது ஆபத்தை (fear pyschosis) உருவாக்கி மக்களின் மனதில் கருத்துக்களைக் கட்டமைக்கின்றனர் என்று நாம் பார்க்கிறோம். உண்மையில் வேறு காரணங்களினால் உண்டான பிரச்சினையை, நாம் X அவர்கள் என்று கட்டமைத்து, பயத்தை மக்கள் மனதில் விதைத்து, அதன் மூலம் தாங்கள் நினைத்ததை அறுவடை செய்து விடுகிறார்கள்.
சிவப்பு வில் (The Red Bow) என்ற ஒரு கதை. இதில் கதைசொல்லியின் பெண்ணை வெறிநாய் ஒன்று கடித்து விடுகிறது. ராபிஸ் வந்து அந்தக் குழந்தை செத்துப் போய்விடுகிறது. கதைசொல்லியும் சில நண்பர்களுமாக அந்த நாயையும் அதன் தொடர்பால் நோய் தொற்று பெற்றிருக்கக்கூடிய இரண்டு மூன்று நாய்களையும் கொல்கிறார்கள். நல்லது. அடுத்ததாக, நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வேறு சில நாய்களைக் கொல்கிறார்கள். அது முடிந்ததும், எதிர்காலத்தில் இதற்கெல்லாம் நோய் வர வாய்ப்பிருக்கிறது என்று இன்னும் சில நாய்களைக் கொல்கிறார்கள். எந்த நாய்க்கும் வெறி பிடிக்கலாம் என்று ஊர்க்கூட்டம் போட்டு எல்லா நாய்களையும் கொலை செய்வதாக கடைசியில் தீர்மானம் நிறைவேற்றிவிடுகிறார்கள். அப்புறம் பார்த்தால் பறவைகள் மீன்கள் என்று ஊரில் இருக்கும் உயிர்கள் அத்தனையையும் கொல்லப் பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்கிறார்கள். எதிர்குரல்கள் அடக்கப்படுகின்றன.
இதில் முதலில் நடந்த சிறுமியின் துர்மரணத்தை ஸான்டர்ஸ் மலினப்படுத்தவோ, நியாயப்படுத்தவோ இல்லை. ஆனால் ஒரு கருத்தை உருவாக்குவதிலிருந்து வெறுப்பை வலியுறுத்தல் வெகு தொலைவில் இல்லை என்பதைச் சுட்டுகிறார். 'ஈராக் போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இருந்த சூழலின் எதிர்வினையாக, எல்லாரும் போர்குணம் பூண்டபோது எழுதப்பட்ட கதை இது' என்று ஸான்டர்ஸ் சொல்வதையும் இந்த கதையோடு பொருத்திப் பார்த்தால் நமக்குச் சில திறப்புகள் கிடைக்கும்.
"வற்புறுத்தல் தேசத்தில்" (In Persuasion Nation) என்ற கதை, மற்ற அனைத்து கதைகளையும்விட வினோதமானது. நம்மைச் சுற்றி அலுப்பு ஏற்படும் அளவுக்கு இரவும் பகலும் திரும்பத் திரும்ப விளம்பரங்கள். கதையின் ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் இருந்து சில காட்சிகள் வருகின்றன. ஒரு விளம்பரத்தில் தன் பாட்டி சாவதைப் பார்த்துக்கொண்டே பிட்ஸா சாப்பிடுகிறான் ஒருவன், அந்தளவுக்கு ருசியான பண்டம். இன்னொரு விளம்பரத்தில் ஒருவன் காருக்கு ஆசைப்பட்டு தன் நண்பனுக்கு துரோகம் செய்கிறான். இந்த வகையான விளம்பரங்கள் தினமும் பார்க்கப்படுகின்றன. பாட்டி தினம் தினம் இறக்கிறார், நண்பன் தினமும் ஏமாற்றப்படுகின்றான், இவை மிகவும் ரசிக்கவும் படுகின்றன. இந்த பாத்திரங்களுக்கு விளம்பரம் முடிந்தபிறகு என்னாகிறது? பாட்டிதான் தினமும் சாக வேண்டி உள்ளதை பற்றி என்ன நினைக்கிறார், ஏமாற்றப்படும் நண்பன் பழிவாங்கத் துடிப்பானா என்று நாம் யோசிப்பதில்லை. ஸான்டர்ஸ் யோசித்திருக்கிறார்.
இந்தக் கதையில் வஞ்சகர்களும் வஞ்சிக்கப்படுபவர்களும் எதிரெதிர் குழுக்களாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதாவது, பிட்ஸா தின்னும் பேரனும் காரைத் திருடிய நண்பனும் ஒரு அணியில், கைவிடப்பட்ட பாட்டியும் காரை இழந்த நண்பனும் எதிர் அணியில். இதில் இரு பாத்திரங்கள் தங்கள் விளம்பரங்கள் அலுத்துப் போய் அவற்றைவிட்டு வெளியேறவும் செய்கின்றன. கதாபாத்திரங்கள் தமக்கென உயிர் பெறும் கதைகள் போல இது தோன்றினாலும், இது விளம்பரங்களின் உலகத்தில், வேறொரு கோணத்தில் நடப்பதுதான் புதிய விஷயம்.
நாட்டு நடப்புக்கு பெருநிறுவனங்களை மட்டும் குற்றம் சொல்வது சுலபம். ஆனால் நுகர்வோர்களாக நாமும் இந்த நிலைமைக்கு ஒரு காரணம்தான். அவர்கள் ஆசை காட்டினாலும் மோசம் போவது நாமாக விருப்பப்பட்டுதானே? ஜான் (Jon) இப்படியொரு கதை. இதன் நாயகன் ஏதோ ஒரு பிளாஸ்டிக், ஆன்டிசெப்டிக் சூழலில் இருக்கிறான். இங்கே எல்லாமே கட்டுக்குள் இருக்கின்றன. அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை, இதில் சுய விருப்பம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உதாரணத்துக்கு, ஆதலினால் கலவி செய்வீர் என்ற ஆணையைக்கூட குறிப்பிட்ட நேரத்தில் கலவி செய்வதான பாவனையால்தான் நிறைவேற்றியாக வேண்டும். எந்த இருவருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களும் சட்டப்படி ஊடறுக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு பொன்னுலகம் என்று நம்பும்படி இந்த உலக மக்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்படுகிறார்கள். ஜானுக்கு இந்த உலகம் பிடித்திருக்கிறது, ஆனால் அதே சமயம் தன் விருப்பப்படி வாழக்கூடிய, வசதி குறைந்த வெளியுலகம் ஒன்றும் வசீகரமாக இருக்கிறது. இது ஒருவகையில் நமக்குத் தேவையானதை வாங்க வேண்டுமா அல்லது இதை வாங்குவது நல்லது என்று திரும்ப திரும்ப சொல்லப்படுவதை வாங்குவதா என்ற நுகர்வோர்களான நம் சங்கடத்தையும் பிரதிபலிக்கிறது.
"சட்டத்திருத்தம்" (The Amendment) என்ற கதை மாற்று பால்விழைவையும் அவர்களுக்கு வலியுறுத்தப்படும் பார்வையையும் பேசுகிறது. சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள மாற்று பால்விழைவினர் காலம் காலமாக அவர்களது விருப்பம் ஒரு நோய் என்று வற்புறுத்தப்பட்டுள்ளனர். அதை குணப்படுத்த முடியும், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்து அவர்களிடம் வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கதையின் நாயகன் எழுதும் கடிதத்தின் விஷயம் இதுதான். மாற்று பால் விழைவை மட்டுமின்றி கணவன் மனைவி என்று இருபால் உறவில் இருப்பவர்களும்கூட அடிமனதில் சுயபால் விழைவு கொண்டவர்கள் என்றும் அவர்கள் குணப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும் அபத்தமாக நிறுவ முயல்கிறான். உதாரணமாக சராசரி குரல் கொண்ட ஒரு ஆண் கனத்த சாரீரம் கொண்ட ஒரு பெண்ணோடு வாழ்கிறான். அந்த ஆண் இன்னொரு ஆணுடன் வாழும் ஆசையையும், இந்தப் பெண் தன்னைவிட பெண்மை கூடிய 'சராசரி' பெண்ணுடன் வாழும் ஆசையையும் இந்த உறவில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்று எழுதுகிறான் இவன். இது போன்ற பிழை மணங்கள் நடைபெறுவது தடை செய்யப்பட வேண்டும், எனவே மேலும் சில விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாக கடிதம் விரிகிறது. பால்விழைவில் எது இயல்பு, எது நார்மல், எது வக்கிரம் என்ற பார்வை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் நாம் நம்மைப் போலில்லாதவர்களிடம் எவ்வளவு அபத்தமாக வெறுக்கிறோம், அது எந்த அளவிற்கு போகக்கூடும் என்பதைச் சுட்டும் கதை இது.
இவை அதீதமான கதைகள் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம், ஆனால் இவை அனைத்தும் நடக்கக்கூடிவை என்பது மட்டுமல்லாமல், இந்த கதைகளில் உள்ளது போன்ற ஒரு நுகர்வு/ அரசியல்/ சமூக நரகத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதும் நடக்கலாம். அதனால்தான் இந்தத் தொகுப்பையும் இந்த எழுத்தாளரின் பிற படைப்புகளையும் வாசித்துப் பாருங்கள் என்று நானும் உங்களை வற்புறுத்துகிறேன்.
எல்லாம் உங்கள் நன்மைக்காகதான்.
In Persuasion Nation,
George Saunders
Short story collection
Riverhead Books
Website : inpersuationnation.com
மொழிபெயர்ப்பில் உதவி - நட்பாஸ்.
No comments:
Post a Comment