கதை கேட்பது, படிப்பது ஒரு ஆசுவாசமான சுகம். கதை கேட்கும்போதும் படிக்கும்போதும் விரியும் கற்பனை, ஆர்வம், கவனம் மற்ற விசயங்களில் எத்தனை முயன்றாலும் வருவதில்லை. சிறுவயதில் அம்புலிமாமா, கோகுலம் என படிக்கும் புத்தகம் முழுக்க கதைகள் இருந்தாலும் தொடர் கதைகளும், படக்கதைகளும் முதலில் படித்துவிட்டு மற்ற கதைகளைப் படிப்பேன். சுவாரஸ்ய திருப்பங்களோடு "தொடரும்" என முடியும் கதைகள் தொடர அடுத்த இதழுக்காக காத்திருப்பதும், அடுத்த இதழ் வந்ததும் உடனே படித்துவிட்டு மறுபடி காத்திருப்பதுமே வழக்கமாய் இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இதழிலிருந்தும் தொடர்கதை, படக்கதை, கைவினைப்பொருள் குறிப்பு என ஆளுக்கு ஒன்றாய் பிரித்து, கத்தரித்து, தொகுத்து, சேமித்து வைத்தது உண்டு. அத்தகைய தொகுப்புகளை மொத்தமாய் படிக்க அத்தனை ஆனந்தமாய் இருக்கும். விடுகதைகள், பழமொழிகள், புதிர்கள் என புத்தக கண்காட்சிகளில் ஏதேனும் புத்தகம் ஒன்றை வாங்கும் வழக்கமும் இருந்தது.
கதை கேட்டு, கதை படித்து, பின் அதையெல்லாம் மறந்து பாடத்திட்டதில் கதைகதையாய் எழுதி முடித்து பெற்றோர் பதவி வரும்வரை கதை சொல்லும் அவசியம் இருக்கவில்லை. பின் மகனுக்கு உணவு ஊட்ட கதை அவசியமானபின் கிட்டத்தட்ட மூன்று வேளை மூன்று கதைகள் சொல்லவேண்டி வந்தது. அதுவும் சுவாரஸ்யமான கதைகள் மட்டுமே சொல்ல வேண்டும் எனப் பல நிபந்தனைகள்.
பாட்டி - வடை, முயல் - ஆமை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன். நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என அனைத்தும் உதவின. தெரிந்த கதைதானே என சொல்ல ஆரம்பித்து இடையில் சந்தேகத்துடன் சொந்தமாய் சிரமப்பட்டு சொல்லி முடித்த அனுபவங்களுக்கு பின் கூகிள் உதவியுடனும் யூட்யூப் உதவியுடனும் கதைகள் பார்த்து, படித்து சேகரிக்கத் தொடங்கினேன். தற்போது விரல் நுனியில் வீடியோக்கள் வர ஆரம்பித்ததும் மிகவும் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் கதைகளின் புத்தகங்களையே அதிகம் புத்தகக் கடைகளிலிருந்தோ, நூலகத்திலிருந்தோ படிக்கத் தருகிறேன்.
மிகவும் சிறுவயதில், முயல் - ஆமை ஒட்டப்பந்தய கதையும், நரியும் கொக்கும் விருந்துக்கு அழைக்கும் கதையும் மகனுக்கு மிகப் பிடிக்கும். ஆமை கதையில் ஆமை மெல்ல எல்லைக் கோட்டை தொட்டு வெற்றி பெறும் பகுதி வரும்போது ஒவ்வொரு முறையும் குதூகலிப்பான். அதேபோல் கொக்கிற்கு நரி, அகலப் பாத்திரத்தில் சூப் தரும்போது கொக்கிற்காக மிகவும் வருந்துவான். பின் பீர்பால், தெனாலிராமன் சாதுர்ய கதைகள் மிகப் பிடிக்கும். சில கதைகளில் வரும் பிரதான கதாபாத்திரங்களைவிட அந்த மிருகத்தின் நண்பர்களை எல்லாம் மிக பிடித்துப்போய் தனிக் கிளைக்கதைகள் எல்லாம் உருவாக்கி ரசிப்பதுண்டு. ஹாஸ்யக் கதைகளில் நகைச்சுவை பகுதி வரும்போது ஒவ்வொரு முறையும் சிரிப்பு வராவிட்டாலும் மெனக்கெட்டாவது நன்றாய் சிரித்து முடிப்பான்.
அக்பர் பீர்பால் கதைகளில் ஒருமுறை பீர்பால் தாமதமாய் வரும்போது அக்பர் காரணம் கேட்க, குழந்தையை சமாதானப்படுத்தியதால் பீர்பால் தான் வரத் தாமதமானதாய் சொல்வார். அக்பர் அதை நம்பாமல் குழந்தையை சமாளிப்பது எளிது என்று சொல்ல, பீர்பால் தன் குழந்தையை அழைத்து வருவார். குழந்தை பானை வேண்டுமென கேட்கும், உடனே தருவார்கள் பின் திரும்ப அழுது யானை வேண்டுமென கேட்கும் அக்பரும் யானையை அழைத்துவர உத்தரவிடுவார். சற்று நேரம் கழித்து குழந்தை திரும்ப அழுது யானையைப் பானைக்குள் போட வேண்டுமென கேட்கும்போது அக்பர் உணர்ந்து குழந்தைகளை சமாளிப்பது சிரமம் என ஒப்புக்கொள்வார். பானைக்குள் யானையைப் போடச் சொல்லும் இடம் கதையில் வரும்போது அத்தனை சிரிப்பு வரும் மகனுக்கு. நான், "நீயும் சமயங்களில் அதுபோலதான் சில விசயங்கள் கேட்கிறாய்," என்றால் இன்னும் பலமாக சிரிப்பான்.
ஊட்ட வேண்டிய உணவின் அளவிற்கு ஏற்ப கதையை நீட்டி முழக்கும் வசதியும் சொந்த கிளைக்கதைகள் சாத்தியமும் இதிகாசக் கதைகளைவிட எளிய கதைகளில் அதிகம். இதிகாசக் கதைகளைச் சொல்லும்போது கேட்கப்படும் சந்தேகங்களுக்கு நான் யோசித்து சந்தேகத்தில் சொல்லும் பதில்களும், "இருக்கலாம்"களும் என் மகனிடம் அவ்வளவு வரவேற்பைப் பெறுவதில்லை. வரிக்கு ஒரு வாய் என ஊட்டுவது, மென்று முழுங்கும் வரை காத்திருந்து கதையைத் தொடர்வது என பல தனித்திறன்கள் இதில் தேவைப்பட்டது. சில சமயங்களில் கதை முடியும் தருவாயில் இன்னும் சாதம் ஊட்ட வேண்டி இருப்பின் பந்தயத்தில் ஜெயித்த ஆமைக்கு மற்ற விலங்குகள் பரிசு கொடுத்து வெற்றிவிழா எடுக்க வைத்தெல்லாம்கூட உண்டு.
சாப்பிட நிறைய அடம் பிடிக்கும் மகனுக்கு கதைகள் சொல்லி, சுவாரஸ்யம் கூட்டி கண்கள் விரிய மறந்து போய் வாய் திறந்து உன்னும் சில வாய் சாதங்கள் மட்டுமே உணவாய் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் தூங்க வைக்கவோ இதற்கு நேர்மாறான அணுகுமுறை, தூங்க வைக்கும்போது உற்சாகக் கதைகள், சுவாரஸ்யம் வந்துவிட்டால் அவ்வளவுதான்; தூக்கமெல்லாம் போய் உற்சாகமாய் விளையாட ஆரம்பித்து விடுவான். தூங்கும் நேரத்தில் அறநெறி கதைகள், நீதிக்கதைகளே பெரும்பாலும் உதவும். சமயத்தில் அவன் செய்த ஏதாவது தவறை கதைமூலம் விளக்க ஆரம்பித்தால் "இந்த கதை என்னபத்திதான?" , "அந்தப் பையன் நான் தான?" என்று தடாலடி வாக்குமூலங்களும் நமக்கு பல்பும் கிடைக்கும்.
பாலர் பள்ளியிலிருந்து தொடக்கநிலை பள்ளி சென்றதும் கதைகளில் ஒன்று நிஜம் போல் நம்பகத்தன்மையோ, அல்லது முழுக்க முழுக்க தர்க்கமில்லா கற்பனை மாய உலகமோதான் வேண்டும் என்கிறான். இவை இரண்டிற்கும் இடையில் ஆடு பேசியது, ராமு பறந்தான் என்று கதை சொன்னால் "it doesn't make any sense" என்ற பதில் வருகிறது. இப்போதுதான் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறான். வாசிப்பு பழகப்பழக அதற்கேற்ற நல்ல நூல்களைத் தேட ஆரம்பித்துவிட்டேன். Geronimo Stilton, Arthur, Berenstain Bears என்று படத்தில் பார்க்கும் கதாபாத்திரங்கள் கொண்ட புத்தகமாய் இருந்தால் ஆர்வமாய் படிக்க துவங்குகிறான். புத்தகம் படிப்பதோடு தாள்களில் படங்கள் வரைந்து அதற்கு ஒரு வாக்கியம் எழுதி படக்கதையும் செய்கிறான். ஆசிரியர் சந்திப்பிற்கு சென்றபோது ஸ்பெல்லிங், கையெழுத்து என பயிற்சி செய்ய வேண்டிய விசயங்களை சொல்லிவிட்டு கட்டுரை வகை ப்ராஜெக்ட்களில் அவன் சொந்த ஐடியாவை உபயோகிக்கலாமா என்று கேட்பதாய் மகிழ்ச்சியாய் சொன்னார் அவன் ஆசிரியை; தன் சொந்த கருத்துகளை கதையாக எழுதுவதாகவும் சொன்னார், மிக மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.
ஷாந்தி அவர்களின் வலைதளம் | ட்விட்டர்
//இதிகாசக் கதைகளைவிட எளிய கதைகளில் அதிகம்.//
ReplyDeleteஉண்மை... நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...
மிக்க நன்றிங்க :)) @shanthhi
Delete