சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)
தன்
கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன்
கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள்
வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி,
வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது.
வேலை
செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள்,
அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம்
பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு
திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது
வீட்டுக்கு வந்து விடுகிறான்.
அபார்ட்மெண்ட்டில்
மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல்
வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன்
வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு
திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை.
பணம்
கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள்
யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி
மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து
டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து
விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப்
போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின்
கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள்.