சிறப்பு பதிவர் : அஜய்
முதலில் கொஞ்சம் சுயபுராணம். அமெரிக்காவைப் பற்றி ஓரு சிறுவனாக எனக்கிருந்த மனச்சித்திரம் நான் கண்ட திரைப்படங்களையும் வாசித்த புத்தகங்களையும் கொண்டு உருவான ஒன்று (குழந்தைகள்/ பதின்ம வயதினருக்கான கதைகள், pulp fiction). அதில் ஓரு ஒற்றைத்தன்மை இருந்தது. என் மனதில் இருந்த அமெரிக்கா செழிப்பான ஓரு மாபெரும் நிலப்பரப்பு, அதன் நகரங்களில் உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் திரண்டிருந்தன, அங்கிருந்த மக்கள் பெரும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் பால்விழைவு கட்டுப்பாடற்றிருந்தது. பெரும் பணம், பொருள் ஈட்ட வேண்டும் என்பது போன்ற தீவிரமான குறிக்கோள்களுடன் வாழ்ந்த அவர்கள் பிரம்மாண்டமான நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்தனர். நிறுவனங்களாக அல்லது மாஃபியா கும்பல்களாக மோதிக் கொண்டனர் (corporate/mafia wars). இவர்களைத் தவிர இன்னொரு கூட்டமும் இருந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த கெட்டவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற முயற்சிக்கும் கூட்டம் இது.
இந்த அமெரிக்கா வெள்ளையர் கருப்பர் என்று இரண்டு குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது. நிலத்தின் பூர்வகுடிகளும் சிவப்பிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கொடுமையானவர்களாக இருந்தனர், அல்லது வெள்ளையர்களின் உதவியாளர்களாக. அவர்களுடைய தனித்தன்மை என்று எதுவும் இல்லை, stereotyping தான் எங்கும். நம் தமிழ் நாட்டு 'ராணி காமிக்ஸ்' காட்டிய செவ்விந்தியர்களும் இப்படிதான் இருந்தார்கள். அங்கு குடியேறியிருந்த ஹிஸ்பானிக்குகளும் ஏனைய வேற்று இனத்தவர்களும் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. (உதாரணமாக 'காட்பாதர்' (mario puzo) நாவலின் முக்கிய பாத்திரம் இத்தாலிய குடியேறி என்றாலும், கதையின் களன் வேறொன்றாக இருப்பதால் அதிலும் இது பேசப்படவில்லை) நான் வாசித்த புத்தகங்களின் கதைமாந்தர் எதிர்கொண்ட பிரச்சினைகள் என் வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. என் மனதில் இருந்த சித்திரம் யதார்த்தத்தைவிட்டு வெகுவாக விலகிய ஓரு திரிக்கப்பட்ட பிம்பம். இதெல்லாம் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்த நாட்களில் இப்படியெல்லாம் இருக்கும் என்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. இன்றும் கணிசமான பேர் அமெரிக்காவை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறார்கள், 2005இல் காட்ரினா (katrina) புயலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டபோது அங்குள்ள சீர்கேடுகள், ஊழல்கள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அரசு நிர்வாக செயலின்மை வெளிச்சத்துக்கு வந்தபோது அதை நம்ப முடியாமல் தவித்தவர்களை நான் அறிவேன்.
அந்த சிறு வயதில் கிடைத்திருந்த புத்தகங்களைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிராமங்களைப் பற்றிய விவரணைகளோ கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பற்றிய பதிவுகளோ, அவர்களும் சமகாலத்தில்தான் வாழ்கின்றனர் என்ற உணர்வோ அவற்றில் வெளிப்பட்டிருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்காவில் நகரங்கள் மட்டும்தான் இருந்தன என்பதுபோல் ஓரு உணர்வு, கிராமங்கள் என்ன, சிற்றூர்களும்கூட தொடப்படவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பம் வரையில் (pre-liberalization era) சிறுவர்களாக இருந்தவர்களுக்கு அமெரிக்கா பற்றிய ஒரு பொது எண்ணம் இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதும் கிராமங்களைப் பேசும் நாவல்கள் எழுதப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், எனக்கு அவை எதுவும் தெரிய வரவில்லை. பின்னர் இன்னும் பல எழுத்தாளர்களை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் மெல்ல மெல்ல வேறொரு சித்திரம் உருவானது.
உதாரணத்துக்கு ரேமண்ட் கார்வார் அமெரிக்காவின் மத்திய மற்றும் தாழ்நிலை நடுத்தர வர்க்கத்தினரின் நகர, சிறு நகர வாழ்க்கையைப் பற்றிய ஓரு புரிதலைக் கொடுத்தார். அப்டைக், புறநகர் மற்றும் சிற்றூர்களில் வாழ்ந்த அமெரிக்கர்களின் இல்லற உறவைப் பற்றிய ஓரு புரிதலைத் தந்தார். அமெரிக்க பூர்வ குடிகளை பற்றி, அவர்கள் வாழ்கை முறை, தொன்மங்கள் பற்றி N. Scott Momaday, Sherman Alexie போன்ற பலர் எழுதுகிறார்கள். ஹிஸ்பானியர்களின் குடியேற்ற வாழ்கை பற்றி (hispanic immigrant experience), ஜூனோ டியாஸ் (Junot Diaz) எழுதுகிறார். இவற்றைப் போன்ற படைப்புக்கள்தான் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.
அந்த வகையில் ஆனி ப்ரூவின் எழுத்தில்தான் கிராமப்புற அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அதன் ராஞ்ச்கள், அவற்றை நிர்வாகிக்கும் கவ்பாய்கள், அதன் பாலைவனங்கள், பிரெய்ரிகளை நாம் அவரது நாவல்களில்தான் அறிகிறோம். எனக்குக் கிடைத்த அவரது முதல் நாவலே வாசித்து முடித்ததும் என்னை அவரது எழுத்தை நேசிக்கும் வாசகனாக்கிக் கொண்டது.