A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

29 Jan 2013

ஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்

சிறப்பு  பதிவர் : அஜய்


முதலில் கொஞ்சம் சுயபுராணம். அமெரிக்காவைப் பற்றி ஓரு சிறுவனாக எனக்கிருந்த மனச்சித்திரம் நான் கண்ட திரைப்படங்களையும் வாசித்த புத்தகங்களையும் கொண்டு உருவான ஒன்று (குழந்தைகள்/ பதின்ம வயதினருக்கான கதைகள், pulp fiction). அதில் ஓரு ஒற்றைத்தன்மை இருந்தது. என் மனதில் இருந்த அமெரிக்கா செழிப்பான ஓரு மாபெரும் நிலப்பரப்பு, அதன் நகரங்களில் உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் திரண்டிருந்தன, அங்கிருந்த மக்கள் பெரும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் பால்விழைவு கட்டுப்பாடற்றிருந்தது. பெரும் பணம், பொருள் ஈட்ட வேண்டும் என்பது போன்ற தீவிரமான குறிக்கோள்களுடன் வாழ்ந்த அவர்கள் பிரம்மாண்டமான நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்தனர். நிறுவனங்களாக அல்லது மாஃபியா கும்பல்களாக மோதிக் கொண்டனர் (corporate/mafia wars). இவர்களைத் தவிர இன்னொரு கூட்டமும் இருந்தது. ரஷ்யாவைச் சேர்ந்த கெட்டவர்களிடமிருந்து உலகைக் காப்பாற்ற முயற்சிக்கும் கூட்டம் இது. 

இந்த அமெரிக்கா வெள்ளையர் கருப்பர் என்று இரண்டு குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது. நிலத்தின் பூர்வகுடிகளும் சிவப்பிந்தியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் கொடுமையானவர்களாக இருந்தனர், அல்லது வெள்ளையர்களின் உதவியாளர்களாக. அவர்களுடைய தனித்தன்மை என்று எதுவும் இல்லை, stereotyping தான் எங்கும். நம் தமிழ் நாட்டு 'ராணி காமிக்ஸ்' காட்டிய செவ்விந்தியர்களும் இப்படிதான் இருந்தார்கள்.  அங்கு குடியேறியிருந்த ஹிஸ்பானிக்குகளும் ஏனைய வேற்று இனத்தவர்களும் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. (உதாரணமாக 'காட்பாதர்' (mario puzo) நாவலின் முக்கிய பாத்திரம் இத்தாலிய குடியேறி என்றாலும், கதையின் களன் வேறொன்றாக இருப்பதால் அதிலும் இது பேசப்படவில்லை) நான் வாசித்த புத்தகங்களின் கதைமாந்தர் எதிர்கொண்ட பிரச்சினைகள் என் வாழ்க்கை பிரச்சினைகளிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. என் மனதில் இருந்த சித்திரம் யதார்த்தத்தைவிட்டு வெகுவாக விலகிய ஓரு திரிக்கப்பட்ட பிம்பம். இதெல்லாம் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்த நாட்களில் இப்படியெல்லாம் இருக்கும் என்ற எண்ணமே எனக்கு இருக்கவில்லை. இன்றும் கணிசமான பேர் அமெரிக்காவை ஒரு சொர்க்க பூமியாகத்தான் பார்க்கிறார்கள், 2005இல் காட்ரினா (katrina) புயலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டபோது அங்குள்ள சீர்கேடுகள், ஊழல்கள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் அரசு நிர்வாக செயலின்மை வெளிச்சத்துக்கு வந்தபோது அதை நம்ப முடியாமல் தவித்தவர்களை நான் அறிவேன்.

அந்த சிறு வயதில் கிடைத்திருந்த புத்தகங்களைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும்போது கிராமங்களைப் பற்றிய விவரணைகளோ கிராமங்களில் வாழ்ந்தவர்கள் பற்றிய பதிவுகளோ, அவர்களும் சமகாலத்தில்தான் வாழ்கின்றனர் என்ற உணர்வோ அவற்றில் வெளிப்பட்டிருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அமெரிக்காவில் நகரங்கள் மட்டும்தான் இருந்தன என்பதுபோல் ஓரு உணர்வு, கிராமங்கள் என்ன, சிற்றூர்களும்கூட தொடப்படவில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பம் வரையில் (pre-liberalization era) சிறுவர்களாக இருந்தவர்களுக்கு அமெரிக்கா பற்றிய ஒரு பொது எண்ணம் இப்படிதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்போதும் கிராமங்களைப் பேசும் நாவல்கள் எழுதப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், எனக்கு அவை எதுவும் தெரிய வரவில்லை. பின்னர்  இன்னும் பல எழுத்தாளர்களை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் மெல்ல மெல்ல வேறொரு சித்திரம் உருவானது.

உதாரணத்துக்கு ரேமண்ட் கார்வார் அமெரிக்காவின் மத்திய மற்றும் தாழ்நிலை நடுத்தர வர்க்கத்தினரின் நகர, சிறு நகர வாழ்க்கையைப் பற்றிய ஓரு புரிதலைக் கொடுத்தார். அப்டைக், புறநகர் மற்றும் சிற்றூர்களில் வாழ்ந்த அமெரிக்கர்களின் இல்லற உறவைப் பற்றிய ஓரு புரிதலைத் தந்தார். அமெரிக்க பூர்வ குடிகளை பற்றி, அவர்கள் வாழ்கை முறை, தொன்மங்கள் பற்றி   N. Scott Momaday, Sherman Alexie போன்ற பலர் எழுதுகிறார்கள். ஹிஸ்பானியர்களின் குடியேற்ற வாழ்கை பற்றி (hispanic immigrant experience), ஜூனோ டியாஸ் (Junot Diaz) எழுதுகிறார். இவற்றைப் போன்ற படைப்புக்கள்தான் அமெரிக்காவின் பன்முகத்தன்மையை காட்டுகின்றன.

அந்த வகையில் ஆனி ப்ரூவின் எழுத்தில்தான் கிராமப்புற அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.  அதன் ராஞ்ச்கள், அவற்றை நிர்வாகிக்கும் கவ்பாய்கள், அதன் பாலைவனங்கள், பிரெய்ரிகளை நாம் அவரது நாவல்களில்தான் அறிகிறோம். எனக்குக் கிடைத்த அவரது முதல் நாவலே வாசித்து முடித்ததும் என்னை அவரது எழுத்தை நேசிக்கும் வாசகனாக்கிக் கொண்டது.இப்படிச் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை - ஓரு வாசகனாக எனக்கும் இவருக்கும் ஏதோ ஓரு உறவு இருக்கிறது என்று நினைக்க வைக்கும் எழுத்தாளர் இவர். உனக்கு பல எழுத்தாளர்களைப் பிடித்திருக்கலாம், ஆனால் சிலரோடு மட்டுமே எனக்கான எழுத்தாளர் என்று தனிப்பட்ட வகையில் உறவு கொண்டாடிக் கொள்ள முடியும். எனக்கு அலைஸ் மன்ரோவைப் பிடிக்கும், ஆனால் இது போன்ற ஓரு நெருக்கத்தை அவர் ஏற்படுத்தியதில்லை. பெட்ரோ யுவான் குதிரேவின் (Pedro Juan Gutierrez) இரண்டு படைப்புகளைதான் படித்திருக்கிறேன், ஆனால் அவர் எனக்காக மட்டுமே அவற்றை எழுதியிருக்கிறார் என்று நினைக்க வைக்கும் நெருக்கமான உறவை அவருடன் உணர முடிகிறது. ஓரு எழுத்தாளரின் நிறைகுறைகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை, வாசக இதயம் இப்படிதான் இயங்குகிறது, ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆனி ப்ரூவின் பாத்திரங்கள் நாம் வழக்கமாய் பார்க்கும் அடாவடியான, நினைத்ததை சாதிக்கும் அமெரிக்கர்கள் அல்ல. ஓரு மாதிரியான  மயக்க நிலையில் வாழ்பவர்கள், குறைகளே விதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், கையாலாதாகவர்கள். குரூரமாகச் சொல்வதென்றால், தோற்றவர்கள் (losers) என்ற ஒருவார்த்தை போதும். ஆனால் எப்படியோ மீண்டு எழுந்து மறுபடியும் வாழத் துவங்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் நெஞ்சுரம் எதுவும் இதற்கு காரணமில்லை, வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை. கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்ந்தாக வேண்டிய கதி.

ப்ரூ எழுதி நான் வாசித்த முதல் நாவல், "ஷிப்பிங் ந்யூஸ்" (The Shipping News). இது க்வோய்ல் என்பவனைப் பற்றியது. உயரமான, கனத்த, வலுவான  சரீரம் கொண்ட க்வோய்ல் யாரிடமெல்லாம் பழகுகிறானோ அவர்கள் எல்லாரும் அவனை மோசம் செய்கிறார்கள். பொதுவாக இத்தகைய  உடலமைப்பு உள்ளவர்களை நாம் அதிகாரத்தில் இருப்பவர்களாகத்தானே பார்த்திருக்கிறோம், இதில் அதற்கு நேர்மாறாக அனைவராலும் ஆட்டி வைக்கப்படுபவன் அவன். அவனது மனைவி அவனது பெண்களை, குழந்தைகள் விஷயத்தில் வக்கிரபுத்தி கொண்ட ஒருவனுக்கு விற்றுவிட்டு கார் விபத்தில் செத்துப் போகிறாள். அவன் தன் மகள்களைக் காப்பாற்றி திரும்ப அழைத்துக்கொண்டு ந்யூஃபவுண்ட்லாண்ட்டில் புதிய வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிறான். இதுதான் நாவலின் துவக்கம். அவனது மீட்சிதான் கதையின் மையம். அவனது அத்தை அக்னிஸ் ஹம்ம் அவர்களுடன் வசிக்க வருகிறாள். அத்தை 'Warren' என்ற நாய் வளர்த்து அது இறந்து விடுகிறது. அப்போது அவளது கடந்த காலத்தைப் பற்றி க்வோய்ல்  கேட்கும் இடம், அதன் பின் வரும் பத்திகள், ஒன்றிரண்டு பக்கங்கள்  இன்றும்கூட தெளிவாக நினைவிருக்கிறது.

"I started the yacht upholstery, you see after my friend died. In 1979.  What these days they would call a 'significant other'. Warren. That's who I named the dog after. In the postal service. Warren was, not the dog." She laughed.

இதைப் படித்தவுடன் நமக்கு வாரன் அத்தையின் கணவர் என்று தோன்றலாம். தொடர்ந்து படியுங்கள்.

"Her face flashed elusive expressions. Didn't tell Quoyle that Warren had been Irene Warren. Dearest woman in the world. How could he understand that? He wouldn't"

இப்போது உங்கள் எண்ணத்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்குமல்லவா? இந்த பத்தியிலேயே, இத்தனை சொற் சிக்கனத்திலேயே அத்தையின் வாழ்கை நம் மனக்கண்ணில் ஓடியிருக்கும். தொடரும் ஓரிரு பக்கங்களில் தன வாழ்க்கையைப் பற்றி சில விபரங்களை அவர் தெரிவிக்கிறார்.  ஓர் இடத்தில் அத்தை சொல்கிறார், தான் ஒரு கற்றல் பயிற்சிக்கு சென்று வாரங்கள் கழித்து திரும்பும் போது -

"Some home I get, all excited, just pour this out fast as I could talk, Warren sitting there at the kitchen table nodding. I noticed the weight loss, looked sort of grey like how you get with a bad headache or when you're really sick. So I said 'Don't you feel good?' Warren, poor soul! All knotted up. Then just burst out with it.  'Cancer. All through me. Four to six months. Didn't want to worry you while you were taking your course.'"

க்வோய்ல் வாரன் பற்றி முழுதும் அறியாதவன், வாசகருக்கு அதை பற்றி தெரியும். எனவே அத்தை சொல்வதை க்வோய்ல் உள்வாங்குவதற்கும் நாம் உணர்வதற்கும் வித்தியாசம் இருப்பதை நாம் படிக்கும்போதே உணர்கிறோம். நாயிற்கு பெயர் வைத்ததை பற்றி அத்தை -

"Didn't explain the need to say part of Irene Warren's name fifty times a day, to invoke the happiness that had been"

என்று நினைக்கிறார். அத்தையும் அவருடைய இணையும் ஒரே பால் என்பதால் மட்டுமே தங்களுடைய அன்பை, இருவரிடையும் இருந்திருக்கும் அன்னியோன்னியத்தை முழுதாக வெளி சொல்ல முடியாத நிலை (அதற்கு காரணமும் நம்மிடையே உள்ள சகிப்பின்மைதான்). அந்த நினைவுகளை தன் மனதிலேயே புதைத்து, வேறு மாதிரியாக வாழ வேண்டிய சூழல் என அனைத்தையும்   மேலே உள்ள பத்தியில் மீண்டும் மிக சிக்கனமாக, எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் ப்ரூ கூறி கடந்து சென்று விடுகிறார். நம்மால்தான் எளிதில் கடக்க முடிவதில்லை. அத்தையின் வாழ்க்கை எவ்வளவு கடினாமாக இருந்திருக்கும், அவரும் அவர் இணையும் சமூகத்தை எதிர்கொண்டு எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றெல்லாம் நமக்கு தோன்றுகிறது.  

இந்த இரண்டு மூன்று பக்கங்களே என்னை முழுமையாக வசீகரித்துவிட்டன. வெகு சில சிறு பத்திகளிலும் உரையாடல்களிலும் ஓரு தெளிவான சித்திரத்தை அளித்துவிட்டார் ப்ரூ. இவர் எழுதியது எதுவானாலும் அதை வாசித்தாக வேண்டும் என்று நான் அதிசயித்த கணம் அது. அதன்பின் அவரது இரு நாவல்களை வாசித்திருக்கிறேன், அவர் எழுதிய எதுவும் என்னை ஏமாற்றவில்லை.

இந்தக் கதையின் அத்தை  ஓரு முக்கியமான பாத்திரமாக இல்லாவிட்டாலும், நான் வாசித்தவற்றில் அவளே எனக்குப் பிடித்தவர்களில் ஒருவராக இருக்கிறார். வழக்கமான ப்ரூ பாத்திரங்களுக்கு மாறானவள் இவள். எவ்வளவு மோசமான நிலைமையிலும் எப்படியோ வாழ்க்கையைத் தொடர வழி கண்டுபிடிக்கிறாள், அவள் தனது கடந்த காலத்தின் வலிகளை  எப்போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. சிலருக்கு ப்ரூவின் எழுத்தில் இருக்கும் இருண்மையும் சோகமும் ஓரு விலகலைக் கொடுக்கலாம், ஆனால் அவர் படைப்புக்களில் கொஞ்சமேனும் இறுதியில் ஆசுவாசம் அளிக்கக்கூடியது இந்த நாவல். இந்த நாவலைக் கொண்டு தன் வழக்கமான கதை சொல்லலுக்கு மாறான ஒன்றை முயற்சித்திருப்பதாக ப்ரூ ஓரு நேர்முகத்தில் சொல்லவும் செய்திருக்கிறார். ப்ரூவை நம்பிக்கையில்லாதவராக பார்க்க முடியும், அல்லது அவர் யதார்த்தத்தை மறப்பதில்லை என்றும் சொல்ல முடியும்.இந்த அத்தை பாத்திரத்தின் நீட்சியாக, ப்ருவின் மிக புகழ் பெற்ற (திரைப்படமாக வந்ததால்) படைப்பு 'Brokeback Mountain' சிறுகதை/குறுநாவலை பார்க்கலாம். கௌபாய் என்றால், மிக அதிக ஆண்மை, துப்பாக்கி சுடுதல், சண்டை என்று இருப்பதை இந்த படைப்பின் மூலம் கலைத்துப் போட்டு விட்டார். இரு தற்பால் விழைவாளர்கள், சமூக கட்டுப்பாட்டால் ஒன்று சேர முடியாமல்,  அது அங்கீகரித்துள்ள இரு பால் மணம் புரிந்து, நல்ல கணவனாக, தந்தையாக இருந்து கொண்டே தங்கள் உறவையும் யாரும் அறியாமல் பல ஆண்டுகள் தொடர்கின்றனர். அந்த பிரிவின் அவஸ்தையை, அவர்கள் இருவரும் தம் உள்ளத்தை வெளிப்படுத்த இயலாமையை இந்த படைப்பு சொல்கிறது.

 'அக்கார்டியன் க்ரைம்ஸ்' (Accordion Crimes) என்றொரு நாவல். இதில் ஓரு அக்கார்டியன் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களிடம் கைமாறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி அமெரிக்காவெங்கும் நெடும்பயணம் செய்கிறது கதை. எல்லாரும் மிக அதிகமாக கஷ்டப்படுகிறார்கள், வாழ்க்கை அவர்களை மிதித்துக் தேய்க்கிறது, அத்தனை பாடுபட்டும் தூரத்து தொலைவில்கூட ஓரு வெளிச்சக்கீற்று என்று எதுவும் தெரிவதில்லை. முன்பு இருந்தது போலவே இப்போதும் அவர்களது வாழ்க்கை இருளில் முடிவடைகிறது. கிராமப்புற வாழ்க்கை பற்றிய ஓரு பார்வை இவரைப் படிக்கும்போது கிடைக்கிறது.

"த ஓல்ட் ஏஸ் இன் த ஹோல்" (The Old Ace in the Hole) என்ற கதையில் பாப் டொலர் டெக்ஸாஸ் பகுதிகளைச் சுற்றி வருகிறான். அவனது முதலாளி பன்றிப் பண்ணைத் தொழிற்சாலை துவக்குவதற்கான இடம் தேடி அவன் அலைகிறான். விவசாயிகளை வற்புறுத்தி அவர்களது நிலங்களை விற்பனைக்குக் கொண்டுவர வேண்டியதுதான் அவனது வேலை. அவன் ஊரெங்கும் சுற்றும்போது நமக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் தெரிய வருகின்றன, ராஞ்சுகளும் பண்ணைகளும் வைத்து நடத்துவதில் உள்ள சவால்கள் புரிகின்றன. எல்லாம் அதிர்ஷ்டம் இல்லாதவர்களின் கதைகள்தான்.

இவர் படைப்புக்களின் களம், நிகழ்வுகள் கனமாக இருந்தாலும், எழுத்து சுவாரசியம் வாய்ந்தது. இருண்மையான நகைச்சுவை உடையது, சிக்கனமானது. தகவல்கள் விரவி இருந்தாலும் நம்மை சலிப்புறச் செய்வதில்லை.

ப்ரூவால் நாவல்களையும் சிறுகதைகளையும் எந்த சிக்கலும்  இல்லாமல் கையாள முடிகிறது. அவரது சிறுகதை தொகுப்புகள் நாவல்களைப் போல் கனமானவை அல்ல என்ற ஒரு தோற்றம் கொடுக்க கூடியவை. ஓரு தொகுப்பில் பத்து சிறுகதைகள் இருக்கின்றன என்றால் அதில் சில கதைகள் லகுவாக இருந்தாலும்கூட படித்து முடித்ததும் மனதிற்கு திருப்தியாக, லேசாக  இருக்கிறது என்பது அதற்கு ஓரு காரணமாக இருக்கலாம்.  


அவரது சிறுகதைகளில் பெரிதும் பேசப்படுபவை வ்யோமிங்(Wyoming) கிராமப்புறங்களை விவரிக்கும் கதைகள்தான். வறண்ட, சோதனையான நிலப்பரப்பு. இறுக்கமான, வித்தியாசமான, பிடிவாதக்கார மனிதர்கள் இதில் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் இடத்தில் புதிதாக யாரையும் முழுதாக சேர்த்துக் கொள்வதில்லை, எதையும் மாற்றிக் கொள்வதில்லை. ஒருவர் பத்தாண்டுகள் அந்த கிராமத்தில் குடியிருந்தாலும் ஆவர் இவர்களுக்கு அன்னியர்தான், ஏனென்றால் இவர்கள் அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள், அது மட்டுமல்ல அவர்கள் பாட்டன் முப்பாட்டன்கூட அந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதுவே அவர்கள் ஒருவரை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான ஒரே விதி. அதே நேரத்தில் முதல் குடிமக்களுக்குள்ளேயும் பல பத்தாண்டுகள் கடந்தும், பகையை வளர்ப்பவர்களும் இவர்கள்தான்.

ப்ரூ கிராமங்களை ரோமான்டிசைஸ் செய்வதில்லை. அவரது கிராம மக்கள் பிடிவாதக்காரர்கள், திமிரானவர்கள். அவர்களது சுபாவம் துன்பத்துக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறது. ஓரு கதையில், வயதான ஒருவர் தனியாக பயணம் புறப்படுகிறார். திருமணத்துக்குச் செல்லும் அவர் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தன் பயணத்தையும் ரத்து செய்வதில்லை. சாதாரணமாக துவங்கும் கதை, எதிர்பாராத, பயங்கர முடிவுக்குச் செல்கிறது.

ப்ரூ இருவிதமாகவும் எழுதுகிறார் - சாதாரண வாழ்க்கையில் மிகவும் இருண்மையான நிகழ்வுகளைச் சேர்க்கிறார், அல்லது கனமான சூழலை சோக நகைச்சுவையைக் கொண்டு தளர்த்துகிறார். வ்யோமிங்கை எவ்வளவு துல்லியமாக ப்ரூ விவரித்திருக்கிறார் என்று தெரியவில்லை,- ஆனால் அங்கிருப்பவர்கள் இவர் மிகவும் மிகைப்படுத்தி எழுதுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இவரது எழுத்தில் வ்யோமிங்கைக் கதைக்களமாகக் கொள்ளாத கதைகளும் உண்டு. இவற்றையும் ப்ரூ மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். "ஸ்வாம்ப் மிஸ்ஃசீப்" (Swamp mischief) என்ற கதையில் சாத்தானும் அவன் நரகத்தை ஆட்சி செய்யும் விதமும் மிகவும் நகைச்சுவையாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் வெஸ்ட் என்று சொன்னாலே நமக்கு செவ்விந்தியர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள், அங்கு வாழப் போய் அவர்களின் வாழ்நிலங்களை அபகரித்த வெள்ளையின மக்களும் நினைவுக்கு வரவேண்டும். இவரது கதைகள் இதை எல்லாமும் தொடுகின்றன. துவங்கின காரியத்தைக் கைவிட மறுக்கும் பிடிவாதக்காரர்கள் எதிர்கொண்ட துன்பங்கள், அங்கு வாழ வழி கண்டவர்களின் அதிர்ஷ்டம் என்று செல்கின்றன இந்தக் கதைகள். முதலில் வாழத் துவங்கிய காலத்தில் துவங்கி ராஞ்சுகள் அமைக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தை விவரிக்கும் கதைகள். நாளுக்கு நாள் இன்னும் சிரமமானதாக மாறிவரும் ராஞ்சு மற்றும் நவீன விவசாயச் சூழல், செவ்விந்தியர்களுடன் வெள்ளையருக்கு இருக்கும் உறவு இவைகளை இந்த கதைகள் பேசுகின்றன.

நீங்கள் ப்ரூவின் எழுத்தை வாசிப்பதானால் எங்கு வேண்டுமானலும் துவக்கலாம், ஆனால் நாவலானால், "த ஷிப்பிங் ந்யூஸ்" தான் நீங்கள் வாசிக்க வேண்டிய முதல் நாவல் என்பதாக என் பரிந்துரை இருக்கும். உங்களுக்கு சிறுகதைகளில் நாட்டமிருந்தால் அவரது தொகுப்புகளில் எதையும் நம்பிப் படிக்கலாம். ('Close Range:Wyoming Stories', 'Bad Dirt: Wyoming stories 2', 'Fine the way it is: Wyoming stories' ஆகியவை வ்யோமிங்கை களமாக கொண்ட அவருடைய சிறுகதை தொகுப்புகள்.)பத்தாண்டுகளுக்கு முன்போல அவர் ஓரு வலைதளம் வைத்திருந்தார், அதில் அவரது கட்டுரைகளில் சில, நேர்முகங்கள் சில என்று ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இந்த தளம் முடக்கப்பட்டிருக்கிறது. ப்ரூ தனிமையை விரும்புபவர் என்று வாசித்திருக்கிறேன், இணைய பிரபலமாக இருப்பதை அவர் ஓரு தொல்லையாக உணர்ந்திருக்கக் கூடும்.

image credit : Amazon, Amazon and Better World Books

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...