பதிவர்: தமிழ் திரு (@krpthiru)
வண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம்
ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும்
பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை.
அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம்
சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை
நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு
பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட
முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம்
கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால்
ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும்
விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா
என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார்
வண்ணநிலவன்.
கடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ்
குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல்,
அவரின் மனைவி மரியம்மை, மூத்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள்
பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு
முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும்
வாத்தியாருக்கும் "மனைவியின் நண்பர்" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு
ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது.
ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை
செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த
இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து
நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம்
கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார்
வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல்
மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை
அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை
என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில்
அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான
உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை
அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது
இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி
நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது
எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே
இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது
இன்னொரு சரி.
பிலோமி, இந்த நாவலின் கதாநாயகி எனலாம். இவள் சாமிதாசை
காதலிக்கிறாள். அவனோடு உடலுறவு கொள்ளும் அளவுக்கு அவன் மீது நம்பிக்கை
கொள்கிறாள். ஆனால் அவன் மீது கோபம் கொண்டு வெறுத்து ஒதுக்க வேண்டிய
சூழ்நிலையில் அவள் அன்பை பிரதானமாக கொண்டு அவள் எடுக்கும் முடிவு, அவனோடு
அவள் பேசும் வார்த்தைகள் இந்த நாவலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது.
அதன்பின் நாம் பிலோமியை காதலிக்க ஆரம்பித்து விடுகிறோம். அவள் சுக துக்கம்
என அனைத்திலும் அவளோடு பங்கெடுக்க ஆரம்பிக்கிறோம். இத்தனைக்கும் அந்த
உணர்வுகளை நம்முள் கடத்த ஆசிரியர் கவித்துவம் என்ற பெயரில் எதையும் பக்கம்
பக்கமாக எழுதி குவிக்கவில்லை. இதனால் நாவலில் தொய்வு என்பதே இல்லை. இன்னும்
சொல்லப் போனால் நாவலை இடையில் நிறுத்திவிட்டு செல்லவே மனம் வருவதில்லை.
ஆனால் சில உன்னதமான தருணங்களில் அது ஏற்படுத்திய தாக்கத்தில் அப்படியே
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உறைந்து கிடக்கிறோம். பிலோமி சாமிதாஸ்,
ரஞ்சி, வாத்தியார் போன்றோரோடு பேசும் கணங்கள் ஒவ்வொன்றும் அப்படிப்பட்டவை.
சில தருணங்கள் அடடா இந்த தருணத்தை கடந்து கொண்டிருக்கிறோமே என்று வருந்த
வைக்கின்றன.
நாவலில் சில இடத்தில் ஆண்கள் "பறச்சிக்கு பொறந்தவனா இருந்தா ... "
என்று பெண்களின் பெருமை பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் "பறச்சி அழுதா கடலே
வத்திப் போய்டும்" என்கிறார்கள். இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில்
மட்டுமில்லை. எல்லா சமூகத்திலும் பெண்களின் நிலை என்பது இதுபோன்ற
முரண்களால் கட்டமைக்கப் பட்டதுதான். எழுபதுகளில் எழுதிய நாவல் இது. இப்போது
பெண்களின் நிலை ஓரளவு மாறி இருக்கலாம். ஆனால் முழு சுகந்திரம் என்பது
எளிதில் சாத்தியப்பட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். காரணம் நம் தமிழ்
சமூகத்தின் கட்டமைப்புகள் அப்படி. பல முரண்களால் ஆனது.
இந்த ஊர் மக்கள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஏசுவுக்கு நிகராக
கடலையும் கடவுளாகவே பார்க்கிறார்கள். கடல் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும்,
பயத்தையும் ஒருங்கே தருகிறது. சேரிக்குள் எந்த தவறு செய்தாலும் கடலுக்கு
வந்துவிட்டால் சுத்தமானவனாக இருக்க வேண்டும் என்று கொள்கை
வைத்திருக்கிறார்கள். அப்படி மீறும்போது குற்றஉணர்வு கொள்கிறார்கள். இயற்கை
கடவுளாகும் வழி இதுதான். இது பிரச்சனை இல்லை. மகிழ்ச்சியின் உச்சத்திலோ
சோகத்தின் உச்சத்திலோ மூட நம்பிக்கைகளின் கதவுகளை திறந்து விடும் போதுதான்
மனதை பார்த்து அறிவு பல்லிளிக்க ஆரம்பிக்கிறது.
நான் நாவல்கள் அவ்வளவாக படிப்பதில்லை. அதற்கான பொறுமை
இருப்பதில்லை. சிறுகதைகளே என் உலகம். அப்படி வண்ணநிலவனின் சிறுகதைகள்
படித்து அவர் எழுத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தேடிப்படித்த நாவல்தான் இது.
சில சிறந்த நாவல்களாக எழுத்தாளர்கள் முன்மொழிந்ததை படித்திருக்கிறேன்.
ஆனால் நான் இதுவரை படித்த நாவல்களிலேயே மிகச்சிறந்த நாவல் இதுதான்.
சம்ப்ரதாயமாக கட்டுரை எழுதிவிட்டோமே என்பதற்காக சொல்லவில்லை. உண்மையில்
சொல்கிறேன். உண்மையை வேறு எப்படி சொல்வது. நீங்கள் படிக்கும்போது நிச்சயம்
உணர்வீர்கள். பிலோமி உங்களையும் ஆக்கிரமித்து கொள்வாள். நான் இனி எத்தனையோ
நாவல்கள் படிக்கலாம். ஆனால் நிச்சயம் என்னால் பிலோமியை மறக்க முடியாது.
காரணம் அப்பேற்பட்ட அன்பின் பேரழகி பிலோமி.
கடல்புரத்தில் | வண்ணநிலவன் | கிழக்கு | 128 பக்கங்கள் | விலை ரூ. 110 | இணையத்தில் வாங்க
நமது ஆழ்மனதைத் தொடும் ஓர் அற்புதமான நாவல். உங்கள் விமர்சனமும் அது போலவே...!
ReplyDelete