- ந.ரா.சேதுராமன் (@chandsethu)
அமரர் தி.ஜானகிராமனின் "சிலிர்ப்பு" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து "அம்மா வந்தாள்" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.
அப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம். இங்கு "ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்" என்று திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத்தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.
உறவு, பாலியல் கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும், ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை!
அதே கும்பகோணமா, அதே உறவுகள் சார்ந்த கதையா என்றால், ஆம். ஒரு எழுத்தாளன் தன் எண்ணங்களை மாத்திரம் பதிவு செய்து போவது கிடையாது. அந்த காலம், அதன் வாழ்க்கை முறையும் சேர்த்துதான் அவனது படைப்புகளில் பிரதிபலிக்கும். ஆனால் அந்த குறிப்புகள் அளவை மீறும்பொழுது கதை மற்றும் களம் கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த பலருக்கும் கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானுடத்தின் களம் புதியதாகவும் வியப்பாகவும் இருக்கும். ஏன் நளபாகத்தில்கூட திஜா ஓரினசேர்க்கையை தொட்டுச் சென்றிருப்பார்.
அம்பாள் (தேவி) உபாசகன், பரிசாரகன் (சமயல்காரன்) என்று பன்முகம் கொண்டவனுக்கு "காமேச்வரன்" என்று பெயர் சூட்டி அசத்தியிருப்பார் திஜா. எப்படித்தான் அந்த பெயரைப் பிடித்தாரோ எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்கு வேஷ்டி சட்டை, குளிக்காமல் விபூதி பூசுபவனில்லை இந்த "காமேச்வரன்." திஜா மிகவும் அனுபவித்த கதாபாத்திரம் என்றே காமேச்வரனை பார்க்கிறேன். அவன் வேலை பார்க்கும் யாத்ரா ஸ்பெஷலாகட்டும், பிற்பாடு வந்து வேலை செய்யும் ரங்கமணியின் வீடாகட்டும் மிகவும் ரசனையோடு அவனின் கதாபாத்திரத்தை நகர்த்தியிருப்பார். அவனே நகர்த்திக்கொண்டு போயிருப்பான்! அவனை இரண்டு விஷயங்கள் சூழ்ந்திருப்பதாகவே தி.ஜா அமைத்திருப்பார். ஒன்று அம்பாள்/ அவனின் குரு வத்ஸன், மற்றொன்று தான் ஒரு சமையல்காரன் என்ற எண்ணம்.
ஒரு நாள் காலை காவிரியில் குளித்து நீர் எடுத்து வரும்போது யதார்த்தமாக பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் காண்ட்ராக்டருடன் நடக்கும் பேச்சு அவனுள் எப்பொழுதுமே விழிப்பாக இருக்கும் சமையல்காரனை முன்னிறுத்தும். ஒண்ணேகாலணாவில் குழந்தைகளுக்கு என்ன சாப்பாடு போட்டுவிட முடியும் என்று அவன் நெஞ்சம் பதைபதைக்கும். அவனே அதற்கான வேலைகளிலும் மூழ்குவான்.
ரங்கமணி வாக்கப்பட்டு வந்த இடத்தில் சில தலைமுறைகளாக வம்சம் இல்லை. சுவீகாரம்தான். அவளுடைய தத்துப் பிள்ளைக்கும் இதே கதிதான். ஆனால் அவனுடைய மனைவிக்கு குழந்தை பாக்கியம் உள்ளது . காமேச்வரனால் தன் வம்சம் விருத்தியடையும் என்ற எண்ணம் வேரூன்ற அவனை தன் இல்லத்திற்கு மகனாக (சமையல்காரன் போர்வையில்) அழைத்து செல்கிறாள். இவன் தன் வீட்டில் தங்கினால்தான் வம்சம் விருத்தியடையும் என்ற ரங்கமணியின் நம்பிக்கையை ஒரு சின்ன முடிச்சை அவிழ்ப்பது போல போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுவார் திஜா. தன் மருமகள் பங்கஜத்திற்கும் காமேச்வரனிற்கும் போதுமான சந்தர்ப்பங்களை வழிவகுத்து தருகிறாள். ஆனால் இது அனைத்துமே நமது நெஞ்சை நெருடா வண்ணம் இருக்கும் திஜாவின் எழுத்து.
அம்மா வந்தாள் இந்து- அப்பு போல நெருக்கத்தை எதிர்பார்த்தோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இங்கு நாம் வளர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை திஜா உணர்த்துகிறார். இவ்வளவு ஆபத்தான பாதையில் தன் சக்தியை மட்டுமே நம்பி பயணிக்கும் காமேச்வரன், ஊர்ப்பேச்சில் அடிபடும்போது நிராயுதபாணியாக நிற்கிறான். பங்கஜத்திற்கு வரக்கூடிய அவப்பெயர் அவனைச் சுடுகிறது. அனைத்து உயிர்களும் லலிதையாக, தேவியின் சொரூபமாக உணரும் காமேச்வரன் தன்னைத்தானே பங்கஜமாக உணர்ந்துகொள்ளும் பொழுதுதான் அவள் ஆளாகப்போகும் பழி உறைக்கிறது. அவனை சில முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. அதில் விளையும் நம்பிக்கை, ஏமாற்றம், கீழ்மை, வேதனை, மனக்கலக்கம் என்று காமேச்வரன் எதிர்கொள்ளும் தீவிரமான உணர்ச்சிகளை இயல்பான மொழியில் திஜா விவரித்திருப்பது சிறப்பு.
பக்தி என்பது தனி நபர் சார்ந்த நம்பிக்கை, அனுபவம். அதைக் கொண்டு ஒருவர் தன் பரிபூர்ணத்துவத்தை அடைய முயலும்போது அது வேறொருவருக்கு எந்த விதத்தில் நன்மை அளிக்கும் என்பது விவரிக்க முடியாத குழப்பம். அதே நிலைக்கு காமேச்வரனும் தள்ளப்படுகிறான். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் ஒரு சேர அவனைப் படுத்தியெடுக்கின்றன. தெளிவு அவனுக்கு குரு ரூபத்தில் கிடைக்கிறது.
இருப்பதைக் கொண்டு தனி மனிதனாக வாழ்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்திலிருக்கும் காமேச்வரனுக்கும், அதைப் போல எண்ணம் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை புரிவைக்கிறது கதையின் முடிவில் வரும் ஒரு கடிதம்.. இவ்வளவுதான் வாழ்க்கை என்பது உண்மையென்றால் உலகத்தில் உள்ள மற்ற வஸ்துக்கள், சுகங்கள் யாருக்காக படைக்கப்பட்டுள்ளன என்ற வினா காமேச்வரனோடு நம் மனதையும் ஆட்கொள்கிறது.
காமத்தைப் புலனனுபவம், சமூக ஒழுக்க நியதிகள் என்ற குறுகிய எல்லைகளிலிருந்து நீதியுணர்வோடு கூடிய ஆன்மிக அனுபவமாக உன்னதப்படுத்தும் முயற்சிகள் என்று தி.ஜா. வின் எழுத்தைப் பார்க்கலாம். காமேச்வரன் என்ற சக்தி உபாசகன் பாத்திரத்தைக் கொண்டு இதை இந்த நாவலில் இன்னும் சற்றே நேரடியாகச் சாதித்திருக்கிறார் தி.ஜா. அவரது சிறந்த படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும்கூட நளபாகம் நிச்சயம் சாதாரண நாவலல்ல.
நளபாகம், தி. ஜானகிராமன்,
விலை. ரூ.135
இணையத்தில் வாங்க - பனுவல், உடுமலை
புகைப்பட உதவி - பனுவல்
நளபாகம், தி. ஜானகிராமன்,
விலை. ரூ.135
இணையத்தில் வாங்க - பனுவல், உடுமலை
புகைப்பட உதவி - பனுவல்
No comments:
Post a Comment