பதிவர்: பூ. கொ. சரவணன்
நவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.
ஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.
காஷ்மீர் என்பதை மத ரீதியான ஒரே மக்களாக பார்க்க முடியாது என்பதை அங்கே இருக்கும் சூபி இஸ்லாமியத்தை பின்பற்றுவதையும், பாகிஸ்தானில் சுன்னி முஸ்லீம்கள் ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்ப்பதை பதிவு செய்கிற ஆசிரியர் அதே சமயம் இந்தியாவிலும் லடாக் பகுதி மக்கள் தனி யூனியன் பிரேதசம் ஆக விரும்புவதையும் கோடிட்டு காட்டுகிறார்.
இந்தியாவும் சரி,பாகிஸ்தானும் சரி பெரும்பாலும் தேர்தல்களை நேர்மையாக நடத்தியதே இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தேர்தல்களை நேர்மையாக நடத்திக்கொண்டு இருந்தாலும் அதற்கு முன் ஒரே ஒரு முறை தேசாய் காலத்தில் மட்டுமே அப்படி ஒரு சூழல் இருந்துள்ளது. எண்பத்தி ஏழில் நடந்த தேர்தலின் பொழுது நடந்த முறைகேடுகள் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி என்று போட்டியிட்ட மக்களை ஆயுதம் எந்த வைத்திருக்கிறது.பாகிஸ்தானில் இன்னமும் நிலைமை மோசம். எழுபத்தி நான்கில் ஆசாத் காஷ்மீரில் முதல் தேர்தல் நடந்திருக்கிறது, இருபது வருடங்கள் கழித்து தான் வடக்கு பகுதிகளில் தேர்தல் நடந்துள்ளது. அடிப்படை உரிமைகள் கூட வெகுகாலம் வடக்கு பகுதிகளுக்கு இல்லையென்றே மறுத்திருக்கிறார்கள். அரசுகளை சும்மா சாவகாசமாக தூக்கி எறிவதும் நடந்திருக்கிறது. ஷேக்கை இந்தியா கைது செய்தது போலவே அங்கேயும் ஒன்பதே ஆண்டுகளில் மூன்று ஆட்சி மாற்றங்களை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கிறது.
பலூசிஸ்தான், சிந்து ஆகிய பகுதிகளை சுரண்டி பஞ்சாப் பகுதி பாகிஸ்தானில் கொழித்துக்கொண்டு இருக்கிறது. அங்கே எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பொருளாதாரம், மொழி சார், இனம் சார் சிறுபான்மையினரின் குரல்கள் கேட்கப்படுவதே இல்லை. அதிகமான ராணுவ வீரர்கள் பஞ்சாபில் இருந்து வருவதால் காஷ்மீர் சிக்கலை உயிர்ப்போடு வைத்திருப்பது பாகிஸ்தான் பஞ்சாபிகளுக்கு அவசியமாக இருக்கிறது.
இந்தியாவின் ஆயிரம் கிழிசல்களில் குருதி ஓட வைக்க வேண்டும் என்று ஊக்குவித்த தீவிரவாத இயக்கங்கள் எப்படி பாகிஸ்தான் மீதே பாய்ந்தன; ஆப்கான் போர் முடிவு எப்படி காஷ்மீரை நோக்கி ஜிஹாதிகளை செலுத்தியது என்பதையும் நூல் விவரிக்கிறது. சிந்து நதி உடன்படிக்கை, வாஜிரிஸ்தானில் நடக்கும் போராட்டங்கள், கார்கில் போர் சமயம் நடந்த போன் கால் பதிவு எப்படி பாகிஸ்தானை காட்டிக்கொடுத்தது, காஷ்மீர் சிக்கலில் எப்படி சுதந்திர காஷ்மீர் பேசுகிறவர்களை பாகிஸ்தான் காலி செய்து பாகிஸ்தான் உடன் சேர விரும்பும் குழுக்களுக்கு மட்டும் ஆதரவளிக்கிறது என்று நூல் சுவையாக
சொல்கிறது.
காஷ்மீர் சிக்கலை இரு மத சித்தாந்தங்களின் அடிப்படையிலான போராகவோ, அல்லது இரு நாடுகளின் சிக்கலாகவோ அணுகுவது தவறு என்றும் எல்லா பகுதி மக்களையும் இணைத்து பேசி இருக்கிற நிலையிலேயே வளர்ச்சி மற்றும் கூடுதல் உரிமைகள், சட்டத்தின் எல்லைகளுக்குள் சுயாட்சி சார்ந்து அம்மக்களை செலுத்துதல் பற்றி ஆசிரியர் தரும் தீர்வுகளும் யோசிக்க வேண்டியவை. கருப்பு வெள்ளை என்று அணுகாமல் யதார்த்தத்தின் கரம் பிடித்து நடக்க சொல்லும் இந்நூல் அளவில் சிறியது என்பது கூடுதல் போனஸ்.
Demystifying Kashmir | Navnita Chadha Behera | Pearson Education | 359 Pages | Rs. 425 | Infibeam.com
No comments:
Post a Comment