இந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்கள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.
இலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.
வாசிக்கும்போது பல விஷயங்கள் புதிய தகவல்களாக இருந்தன. உண்மையில், என்னையும் சேர்த்து - செண்பகராமன் என்ற சுதந்திர போராட்ட வீரரை அறிந்தவர்கள் என்று தமிழ்நாடு முழுவதுமாக கணக்கெடுத்தால்கூட மிகக் குறைந்த அளவிலேயே அவர்களது எண்ணிக்கை இருக்கும். அப்படி கணக்கெடுத்தாலும்கூட அதனால் பயனில்லை, அவரைப் பற்றிய பல தகவல்கள் அறியப்படாமல்தானே இருக்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும் என்பதால் செண்பக்கிற்கே வருகிறேன்.
அவரைப் பற்றிய தகவல்கள் புத்தகத்தில் படித்தபடி, நினைவில் நின்றவரை.
* செண்பக், இந்திய சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, அமெரிக்காவில் நிலவிய நீக்ரோக்கள் மீதான ஒடுக்குமுறை, தென் ஆப்பிரிக்காவில் கொடிகட்டிப் பறந்த கறுப்பின அடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராக போராடியவர்.
* இந்தியாவில் ஒரு பொடியனாக இருந்த காலகட்டத்தில் ஜெர்மனியரின் உதவியோடு கப்பல் மூலமாக பெர்லினுக்குச் சென்று அங்கிருந்து கொண்டு "இந்திய ஆதரவு தேசியக் கமிட்டி"- யை நிறுவினார். பல சொற்பொழிவுகள் மூலம் இந்தியாவின் நிலையை விளக்கினார்.
* ப்ரோ-இந்தியா என்ற அவரது பத்திரிக்கை பாரதத்தின் அடிமை நிலையை ஐரோப்பியர்களுக்கு விளக்க உதவியிருக்கிறது (Bro-இந்தியா என்று லேட்டஸ்ட்டாகப் படித்து புல்லரிக்கக் கூடாது, இது Pro-இந்தியா)
* ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம், கீழை நாட்டவர் சங்கம் - போன்ற முரட்டுத்தனமான வாலிபர் சங்கங்களை நிறுவி அதன் கிளைகளை பல நாடுகளில் தோற்றுவித்திருக்கிறார் செண்பக்.
* செண்பக் 12 மொழிகளில் சரளமாக பேசுவாராம். அதனால் எல்லா இடங்களிலும் அவருக்கு மரியாதை கிடைத்திருக்கிறது என்று எழுதுகிறார் நூலாசிரியர் (இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது செண்பக் இங்கிருந்திருக்கலாம்).
* மரியாதை என்றால் ராஜ மரியாதை. ஜெர்மனியின் கெய்சர் மன்னருடைய தோழர் நமது செண்பக். அவர் இல்லாத விருந்து நிகழ்ச்சியே கிடையாது என்றால் யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையை என்ஜாய் செய்து கொண்டே சுதந்திரப் போராட்டம் செய்திருக்கிறார் நம்ம ஆள்.
* ஜெர்மனி அரசு அவருக்கு வொன் என்ற பட்டத்தை அளித்திருக்கிறது.
* ஜெர்மனிவாழ் இந்தியரான லக்ஷ்மி பாயின் நட்பும் , இருவருக்குமிடையிலிருந்த சமமான அலைவரிசையும் கணவன் - மனைவி உறவாக மாறியது. ஆம், லக்ஷ்மி பாயை லவ் மேரேஜ் செய்துகொண்டார் செண்பக்.
* நேரு மாமா, போஸ், வல்லப பாய் போன்ற ஊரறிந்த பெரியவர்கள் ஜெர்மனிக்குச் சென்றால் செண்பக்கின் வீட்டில்தான் டேரா போடுவார்கள்.
* அமெரிக்க அதிபர் வில்சனை நேரில் சந்தித்த நமது செண்பக் நீக்ரோ பிரச்சினை குறித்து கவலை தெரிவிக்க - அவரோ நானும் இதைக் குறித்து கவலைப்படுகிறேன், மேலும் நான் ஏதாவது செய்ய முற்பட்டாலும் பயபுள்ளைக அதை எதிர்த்து நிற்கிறார்கள் என்று வேதனைப்பட்டிருக்கிறார். இந்த விஷயம் வெளியே தெரிந்தபின் நிறவெறியர்களின் எதிர்ப்புக்கு பயந்து செண்பக் கொஞ்ச காலம் மாறுவேடத்தில் அலைந்திருக்கிறார்.
* இங்கு ஒரு பக்கம் பிரிட்டிஷ் அரசு செண்பக்கை விளக்கெண்ணை விட்டு தேடிக்கொண்டிருக்கிறது, அவரைக் காட்டிக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பவுன் பரிசு என்று அரசு அறிவித்ததும் ஒரு பெண் உளவாளி அவரைச் சொக்குப்பொடி போட்டு மயக்கப் பார்த்திருக்கிறாள். ஆனால், செண்பக் மசியவில்லை.
* முதன் முதலாக ஜெய்ஹிந்த் என்ற கீதத்தை உச்சரித்தது செண்பக்தான். அதை தான் பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது மாணவரணியில் உச்சரித்திருக்கிறார். அதன்பிறகுதான் போஸ் அதைக் கவ்விக்கொண்டாராம்.
* தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போது காந்தி நைனாவை செண்பக் சந்தித்தது வரலாற்று நிகழ்ச்சி. செண்பக் நீக்ரோக்களுக்கு ஆதரவாக போராடுவதை அறிந்த நைனா மகிழ்ச்சி பொங்க செண்பக்கை அரவணைத்து தட்டிக் கொடுத்திருக்கிறார் (அப்போது நைனாவின் பற்கள் எல்லாம் பத்திரமாக இருந்ததால் வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கை வாய் சிரிப்பைப் பார்க்க செண்பக்கிற்குக் கொடுத்து வைக்கவில்லை).
* செண்பக்கின் சிறப்பே வீரம்தான். இந்தியாவுக்கு சுதந்திரம் பெறும் தகுதியில்லை என்று ஒரு விருந்தில் இருந்தபோது கொடுங்கோலன் ஹிட்லர் செண்பக்கை பார்த்து கோபமாக பல்லிளித்துவிட, செண்பக் கர்ஜனை செய்து மன்னிப்பு கேட்கும்படி கூறியிருக்கிறார். ஹிட்லர் வாய்வார்த்தையாக மன்னிப்பு கேட்டும், ஹிட்லரை எழுத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்ளச் செய்திருக்கிறார் செண்பக். இதைச் சொல்லி காலரைத் தூக்கிக் கொண்டு திரியக் கிளம்புவதற்குமுன், இதுவே அவர் உயிருக்கு ஆப்பாக இருந்தது என்ற துக்கச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
* செண்பக் நிறுவிய இந்திய தேசிய தொண்டர் படை ஜெர்மனிக்கு முதல் உலக மகா யுத்தத்தில் உதவியது. அதன் பிறகு போஸ் முன்னரே செண்பக்கிடம் பேசிவைத்தபடி அப்படைக்கு பொறுப்பேற்று இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். கெய்சர் ராசா இதன் காரணமாகவே செண்பக் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று பாராட்டியிருக்கிறார்.
* அந்த காலத்தில் ஹம்டன் என்று பெயரைச் சொன்னாலே பிரிட்டிஷ்காரர்களுக்கு டவுசர் அவுந்துவிடுமாம். அது ஒரு போர்க்கப்பல். செண்பக் அக்கப்பலின் கமாண்டராக செயல்பட்டு சென்னை ஜார்ஜ் கோட்டையை தகர்த்து விடுவதாக பிரிட்டிஷுக்கு அல்லு கிளர வைத்த கதை இன்றும் ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.
* நான்கு ஆண்டுகள் உக்கிரமாக நடந்த யுத்தம் முடிந்து ஜெர்மனிக்கும் பிரிட்டிஷுக்கும் ஏற்பட்ட வேர்ஷெயில்ஸ் ஒப்பந்தத்தில் செண்பக்கை ஜெர்மனி பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.
* தங்கள் தலைவரை மண்டியிட வைத்தார் என்ற கோபத்தில் நாஜித் தொண்டர்கள் கொடுத்த விஷம் கலக்கப்பட்ட உணவை உண்டு செண்பக் மாண்டுபோனார். செண்பக்கை ஹிட்லர் பழிவாங்கிவிட்டார். செண்பக் சாகுமுன், எனது அஸ்தியின் ஒரு பகுதியை கரமனை ஆற்றிலும், மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களிலும் தூவிவிடு என்று லக்ஷ்மி பாயிடம் கூறியிருக்கிறார். ஆனால், 1966ல் கரமனை ஆற்றில் அஸ்தி கரைத்தாலும், நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவப்பட்டதா என்ற தகவல் இந்த நூலின் ஆசிரியருக்கே தெரியவில்லை என்றும் அவர் லக்ஷ்மி பாய்க்கு இது குறித்து வரைந்த கடிதத்திற்கு பதில் எதுவும் வரவில்லை என்றும் எழுதியிருக்கிறார்.
* சுபாஷ் சந்திர போஸ்தான் ஜெய்ஹிந்த் என்று முதலில் முழங்கினார் என்று ஒரு கருத்தும், ஐ.என்.ஏ வை நிர்மாணித்தவர் போஸ் அவர்களே என்ற கருத்தும் தவறு - இரண்டுக்கும் முதல்வன் செண்பக்கே.
* சென்னை - செம்பரம்பாக்கத்தில் செண்பக்கின் சிலை ஒன்று இருக்கிறது.
செண்பக்கைப் பற்றி வேறு சில புத்தகங்களும் இருப்பதாக நினைக்கிறேன். செண்பக் போன்றவர்கள் - இந்தியாவின் சமூக - பொருளாதார சுதந்திரத்திற்கும் அதன் ஆய்வியலுக்கும் முற்பட்டவர்கள். அவர்களுடைய முதல் பிரச்சினையே அடிமைத் தளை விடுபட்டு, அடக்குமுறை ஒழியவேண்டும் என்பதே. செண்பக ராமன் என்ற ஆளுமையின் தாக்கம் அது விட்டுச் சென்ற இளைய தலைமுறை அதிகாரம் மூலம் நியாயம் பெறுதல் என்ற கருத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லல்தான். உலகம் முழுக்க சென்று வியாபித்த அவ்வாளுமை தனது தேசப்பற்றையும், இன்னும் உலகமெல்லாம் வேறேந்த இடங்களில் அடிமை நிலை நிலவுகிறதோ அங்கு தொடரும் எதிர்க்குரலையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது இன்றைய இந்தியாவின் நிலைக்கு செண்பக் இருந்திருந்தால் அவர் நம் நாட்டின் சர்வாதிகாரியாக மாறியிருந்தாலும் வியப்பில்லை என்று தோன்றுகிறது.
தோழர்களே, செண்பக் ஒரு தமிழன்தான். அவரைப் பற்றிய விவரம் அவ்வளவாக வரலாற்றிலும், பாட புத்தகங்களிலும் வெளிவரவில்லை. இரண்டு ஆண்டுகள் முன் கிடைத்த இந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு இப்போதுதான் எனக்கு வாய்த்திருக்கிறது. வாசித்தவுடன் செண்பகராமனை இன்னும் கொஞ்ச பேராவது தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கம் மட்டுமே இந்த புத்தகம் குறித்து என்னை எழுதச் செய்தது.
மேற்படி புத்தகத்தில் நடைவழி கொண்டாடும் அளவுக்கு ஒன்றுமே இல்லை. எழுத்து நடை ஏதோ மேடைப் பேச்சு தொனியில் இருக்கிறது. ஆனாலும், நூலில் இருக்கும் செண்பக்கைப் பொருத்தவரை அவருக்கு வரலாற்றில் ஒரு ஏக்கர் இடமாவது கொடுக்கப்பட வேண்டும். இதில் சந்தேகமில்லை.
இப்புத்தகத்தை இணையத்தில் வாசிக்கலாம் - நூலகம்
சுதந்திர போராட்ட வீரர் செண்பகராமன் பற்றிய மேலதிக தகவல்கள் இங்கே - Maddy's Ramblings - THOUGHTS,OPINIONS AND MUSINGS OF A RESTLESS NOMAD
மாவீரன் செண்பகராமனைப் போன்ற இன்றும் யார் யாரையெல்லாம் மறந்திருக்கின்றோமோ தெரியவில்லை,,
ReplyDelete