சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்
”உங்கள் வீட்டில் உணவு வீணாகிவிட்டதா? 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை ?குழந்தைகள் ஹெல்ப்லைன்”காரர்கள் பெற்றுச் செல்வார்கள்” என்றது ஒரு ட்விட்டர் செய்தி.
”மெண்டோஸ்” என்னும் மிட்டாயை குழந்தைகளுக்குத் தராதீர். கேன்ஸர் வருதாம் - என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது.
முதற்செய்தி போகிற போக்கில் அடித்துவிடப்படும் செய்தி என்றால் இரண்டாவது செய்தி வியாபார எதிரிகளால் பரப்பப்படும் வகையறா.
இதற்கு அடுத்த கட்டம் ஒன்று உள்ளது:
சமீபத்தில் முகநூலில் ஒரு செய்தியை எப்படியெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்கள் திரித்துக் கூறலாம் என்று ஒரு துணுக்கு உலா வந்து கொண்டிருந்தது.
வரலாற்றையும் திரித்து எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்தால் அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது என எந்தவொரு சந்தேகமும் இன்றி வலுவாக ஆணித்தரமாக சொல்லலாம் போல.
தமிழர் என்ற பழங்கால சமுதாய சமூகத்தின் கோட்பாடுகள், வாழும்
நெறிகள் இன்னவைதான் என தெள்ளத் தெளிவாக சொல்லும் இலக்கியங்கள் இங்கே எந்த அளவிற்கு நம்பத்தகுந்தவை என்றொரு கேள்வி எழுவது சிந்தனை கொண்ட தர்க்க புத்தி உள்ளோர்க்கு இயல்புதான்.
அறிவதற்கும் கற்பதற்கும் பொதுவெளியில் பரப்பப்பட்டுள்ள இந்த
இலக்கியங்கள் தவிர்த்து, "சிறு இலக்கியங்கள்", பொது இலக்கியங்கள் அல்லது பொதுவான நூல்கள் என எவையும் இல்லையா அல்லது உண்மையிலேயே அப்படி இருந்தவை, இருப்பவை எல்லாமே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.
கோவில் - நிலம் - சாதி என்ற இந்த நூலில், ஒரு பயத்துடனே நாம் எப்போதும் அணுகும் இடமான இந்தக் கோயில், சாதி என்றொரு கட்டமைப்போடு சேர்ந்து கொண்டு எவ்வாறு மக்களின் வாழ்வியலை தீர்மானித்தது என ரவுண்டு கட்டி பின்னி பெடலெடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியரான பொ.வேல்சாமி.
சமண பௌத்த சமயங்களில் தொடங்கி யாருமற்ற வீணர் காலம் என தமிழ்ச் சமூகத்தின் பொற்காலமாம் "களப்பிரார்" காலம் தொட்டு சைவ வைணவ ஆக்கிரமிப்புகளையும், வேள்விகளுக்கும் சமய சடங்குகளுக்கும் பயந்து தமிழர்களை பலவாறாக துன்புறுத்திய தமிழ் மன்னர்களைத் தொடர்ந்தும், நேற்று சுஜாதா தவறாக எழுதிப் புனைந்த "புறநானூறு" வரை இலக்கியத் துணுக்குகளுடன் ஆய்வுக் கோர்வையையும் நூலில் காணலாம்.
ஒரு சாராரே தங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொண்ட விந்தையை
"குடவோலை" முறை எனக் குறிப்பிட்டு, தமிழன் அந்தக்காலத்திலேயே ஜனநாயக முறையை கடைபிடித்திருக்கிறான் என்ற தவறான வரலாறையும் குறிப்பிட்ட சமூகத்தினர் நம்மிடையே பரப்பியுள்ளதையும், "உத்திரமேரூர் கல்வெட்டு" கொண்டு அது திருவுளசீட்டுதான் என நிருபித்திருக்கிறார் ஆசிரியர்.
விளை நிலங்களை பாத்தியத்திற்கு மட்டும் உபயோகித்த தொல்தமிழ்
குடிகள் அதை உடைமையாக பாவிக்கவில்லை.
பிற்பாடு வந்த சமய சார்புடைய கோட்பாடுகள் "நிலவுடைமை" என்பதை கோயில்களுக்கு மட்டும் என வரையறுத்தி தமிழ் மன்னர்களை
வேள்விகளாலும், சமய நம்பிக்கைகளாலும் பயமுறுத்திய ஒரு சமூகத்தை "கோவில்-நிலம்-சாதி" தொடர் முழுதும் சாடியுள்ளார் ஆசிரியர்.
மதமும், சமயமும் கோவிலும் அவை சார்ந்த பார்ப்பன சூத்திர
கூட்டமைப்புகளும், இவர்களுக்கு பயந்தொடுங்கிய தமிழ் மன்னர்களும்
எவ்வாறெல்லாம் தமிழக வரலாற்றை சிதறடித்துள்ளனர் என நாம் படித்த வரலாறு சொல்லாத விடயங்களை அந்த வரலாற்றின் மூலமாகவே
தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆங்காங்கே துணுக்குகள் போல ஆதாரங்களை வீசியபடி சென்றிருக்கிறார் ஆசிரியர். அவர் குறிப்பிட்டுள்ள குறிப்புகள் பலவும் வரலாற்று பாடமாக அமைந்தால் தெளிவான ஒரு வரலாறு கிடைக்கும். இங்கே எல்லாமுமே அரசியல் மயமாகிவிட்ட சூழலில் அதன் சாத்தியக்கூறு ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
கோவில்-நிலம்-சாதி | பொ.வேல்சாமி | வரலாறு |
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: சென்னை ஷாப்பிங் | நூலுலகம்
No comments:
Post a Comment