- வெ சுரேஷ் -
கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?
பதில்- சாதியும் நானும் தொகுப்பு பற்றி எழுதியபோதே அந்த நூல் பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை ஒரு முரண் என்று குறிப்பிட்டிருந்தேன். அநேகமாக அந்த நூலில் இருந்த கட்டுரைகள் எல்லாமே கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்கச் சாதிகளால் பாதிப்புக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எழுதியது. பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தாம் கருதிய பிராமணரல்லாத சாதியினரின் ஆதிக்கத்தை வேண்டியே இயக்கம் நடத்தினர். அவ்வப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக வாய் வார்த்தைகள் சொன்னதோடு சரி, செயல்பாட்டு அளவில் வேகம் இல்லை. இதை கோவை அய்யாமுத்துவின் சுயசரிதையில் காணலாம். மேலும், அரசியல் சட்டத்தில், அம்பேத்கர் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை பெரியார், அவர் தன் மக்களுக்கு வசதி செய்து கொண்டுவிட்டார், என்றே விமர்சிக்கிறார். பெரியாரின் other என்பதில்தான் தலித் மக்களும் இருந்தனர். அவர் வேண்டியதெல்லாம், இடையில் ஒரு 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக, இன்றுள்ள OBC பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்களிடம் இழந்திருந்த முற்றாதிக்கத்தை மீட்பது குறித்துத்தான். பெரியாரும் திராவிட இயக்கத்தவரும் ஊட்டி வளர்த்த இந்தச் சாதி வெறிதான் இன்று பெருமாள் முருகனையும் தாக்கியிருக்கிறது. இந்தக் கோணத்திலிருந்து, இந்தப் புரிதல் அவர் தொகுத்த சாதியும் நானும் நூலில் உள்ள அவரது முன்னுரையில் இல்லை என்பதையே நான் மீண்டும் குறிப்பிடுவேன்.
ஒரு வகையில் இது இப்படித்தான் நடக்கும் என்பதற்கு சாதியும் நானும் நூலிலும் அவரது பிற படைப்புகளிலும் குறிப்புகள் உண்டு. அதிலும் சரி, பெருமாள் முருகனின் பிற படைப்புகளிலும் சரி, அநேகமாக பிராமணர்களே இல்லாத கொங்கு கிராமங்களே களமாகின்றன. அங்கு மிகுந்த வீரியத்தோடு சாதிவெறி செயல்படுவதை அவர் காட்சிப்படுத்துகிறார். ஆனால், அது சாதி என்பது திராவிட மக்கள் மீது பார்ப்பனர்கள் சுமத்தியது என்ற திராவிட இயக்க வாய்ப்பாட்டினைத் தாண்டி அவரைச் சிந்திக்கச் செய்திருக்க வேண்டும். அது நிகழவில்லை. அவர் அந்த வாய்ப்பாட்டினை நம்பியவராகவே இருந்தார். பார்ப்பனச் சதி என்ற கோணத்தை தாண்டி சாதிகளை அவர் பார்க்கவில்லை. மேலும் சாதியையே அடிப்படையாகக் கொண்ட இன்றைய இட ஒதுக்கீட்டு முறையே சாதியை அழிய விடாமலும், மேலும் வீரியம் கொள்ள வைப்பதாகவும் இருக்கிறது என்ற கோணத்தில் அவர் சிந்திக்கவில்லை என்பதும் தெரிகிறது.
ஆனால், கொள்கை மயக்கங்களால் பாதிக்கப்படாத நேர்மையை அவரது புனைவுகளில் பார்க்க முடிகிறது. கொங்கு மண்டல கிராம வாழ்வின் சமூகச் சூழலை சாய்வுகள் ஏதுமின்றி, நேர்மையாகப் பதிவு செய்தவர் பெருமாள் முருகன். அவருக்கு இப்போது நேர்ந்துள்ள அச்சுறுத்தல் வருந்தத்தக்கது.
கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?
பதில்- இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும்போது நேற்றைய ஹிந்து நாளிதழில் தேவதத் பட்நாயக் எழுதியுள்ள கட்டுரை நினைவுக்கு வருகிறது. எழுத முடிந்தவர்கள் உள்ளத்தைக் காயப்படுத்துவார்கள் என்றால், எழுத்தைக் கொண்டு பேசத் தெரியாதவர்கள் உடலைக் காயப்படுத்துகிறார்கள் என்கிறார். கற்றவர்கள் ஏற்படுத்தும் காயத்தைக் கண்டிக்காமல், கல்லாதவர்கள் ஏற்படுத்தும் காயத்தை மட்டும் கண்டிப்பதை நவ பார்ப்பனீயம் என்றே அவர் அழைக்கிறார். ஒரு சுவாரசியமான கோணம்.
என் வரையில் ஒரு புனைவினால் உள்ளபடியே உண்மையாக புண்பட்டிருந்தால் அதை எதிர்ப்பதற்கு உரிய வழி அதைக் கண்டித்து ஒரு புத்தகம் எழுதலாம். பிரச்சாரம் மேற்கொள்ளலாம். இவர்கள் எதிர்க்கும் புத்தகம் வாங்குவோரிடம் தங்கள் வெளியீட்டையும் இலவசமாகக் கொடுக்கலாம். மேலும், இத்தகைய போராட்டங்களே இவர்கள் எதிர்க்கும் புத்தகத்தை மேலும் பரவலாக்கும் என்பதையும் உணர வேண்டும். எது எப்படியானாலும், ஒரு படைப்பாளியை அச்சுறுத்துவது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
கேள்வி- பெருமாள் முருகனிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன, அவருக்கு நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?
பதில் - அவர் நிச்சயம் இப்படி பின்வாங்கியிருக்கக் கூடாது என்றுதான் சொல்வேன். அவருக்கான ஆதரவு பல்வேறு தரப்பிலிருந்தும் பெருகியபடியேதான் வந்தது. தி.மு.க., அ .தி.மு.க., தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே அவருக்கு ஆதரவாகவே குரல் எழுப்பியிருந்தன. நேற்று கோவையில் பெரியார் திராவிடக் கழகத்தினர் ஒரு ஆர்ப்பாட்டம்கூட நடத்தினார்கள். இந்த நிலையில் அவரது செயல் பெரும் வியப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அரசு ஊழியர்களாகிய (நல்ல ஊதியம் பெறக் கூடிய) அவரும் அவர் மனைவியும் வேறு ஒரு பகுதிக்கு மாற்றல் வாங்கிப் போயிருக்கலாம். உலகமெங்கும் exiled writers இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில், ஏன் இனி எழுதப் போவதே இல்லை, என்ற முடிவெடுத்தார் என்பதையே நான் கேட்க விரும்புவேன்.
மாதொரு பாகன் பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் இப்படிச் சொல்வேன். அதில் கதை நடைபெறும் காலம் மிகத் துல்லியமாகக் காட்டப்படவில்லை. சில இடங்களில் கதை சமகாலத்தில் நடப்பது போலவும் உள்ளது. இது உணர்வுகள் புண்பட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்தக் குறை அவரது இன்னொரு முக்கியமான ஆக்கமான ஆளண்டாப் பட்சியிலும் உண்டு. மேலும் மாதொரு பாகன் நாவலுக்கு அடிப்படையான அந்த வழக்கத்தைக் குறித்த அவரது கள ஆய்வு விபரங்களை ஏன் அவர் முன்வைத்து வாதாடவில்லை என்பதையும் கேட்க விரும்புவேன்.
இது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான் என்று நினைக்க விரும்புகிறேன்; அவர் இந்த அனுபவத்தையும் உள்வாங்கிக் கொண்டு மீண்டும் எழுத்துலகிற்கு வரவேண்டும் என்பதே நான் அவருக்கு வைக்கும் வேண்டுகோளாக இருக்கும்.
௦௦௦
ஆம்னிபஸ் குறிப்பு -
ஆம்னிபஸ் குறிப்பு -
அடியாழத்தில் சுதந்திரமாகத் திரியும் மீன்களைப் போல, மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால் சந்தோஷமாகத் திரிகிறோம்.
என்று எழுதினார் பானபத்திர பைராகி- நீர் விளையாட்டு, பெருமாள் முருகன்
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உயிருக்கும் உடைமைக்கும் பயப்படாமல் உண்மை என்று நம்புவதைப் பேச விரும்புபவர்களுக்கும், கதை பேச விரும்புபவர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். சுருக்கமாகச் சொன்னால், கருத்து பரிமாறிக் கொள்ளும் நீர் விளையாட்டுக்காரர்கள் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்.
மிகையான புகழ்ச்சியாகவோ காட்டமான விமரிசனமாகவோ அல்லாமல், ரசித்துப் படித்த, மதிக்கும் நூலை அதன் நிறை குறைகளோடு நேர்மையான மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதே ஒரு எழுத்தாளனைக் கொண்டாடும் செயலாகும். இதை ஆம்னிபஸ் பதிவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இதுவரை பெருமாள் முருகனின் வேப்பெண்ணைக் கலயம், சாதியும் நானும், மாதொரு பாகன், நீர் விளையாட்டு, ஆளண்டாப் பட்சி ஆகிய ஐந்து நூல்களைப் பற்றி ஆம்னிபஸ் பதிவர்கள் எழுதியுள்ளார்கள்.
புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும் இன்றும் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எழுத்தைப் பேசுகிறோமோ, அந்த எழுத்தாளன் நம்மோடிருப்பவன். கருத்துச் சுதந்திரத்தை நம்மளவில் காக்க, பெருமாள் முருகனின் எழுத்தைத் தொடர்ந்து பேசுவதே இன்று நாம் செய்ய வேண்டுவது. அந்த வகையில் ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் நூல்கள் குறித்து பதிவிட்ட நண்பர்களிடம் மூன்று கேள்விகள் கேட்டோம்.
நண்பர் அஜய் அளித்த பதில்கள் இங்கே - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1
பைராகி பதிவு- பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3

No comments:
Post a Comment