ஆளண்டா பட்சி நாவல் குறித்து மதிப்பீடு எழுதிய அஜய் அளிக்கும் பதில்கள்-
கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?
பதில்- மன்னிக்க வேண்டும், அந்த நாவல் பற்றி எழுதியதை இப்போது மீண்டும் பேச விரும்பவில்லை, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதே இரக்கமற்ற செயலாகத் தெரிகிறது. தற்போது பெருமாள் முருகனுக்குத் தேவை, சுதந்திரமாய் இருப்பதற்கான வெளி. இனியும் நாம் பெருமாள் முருகன் என்ற தனியொரு எழுத்தாளரின் பிரச்சினையாக இதை அணுகிக் கொண்டிருக்கக் கூடாது, மனித உரிமைகள்/ கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகக் கருதியே வினையாற்ற வேண்டும்.
கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?
பதில்- பெருமாள் முருகனின் படைப்பை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், சாதீய சக்திகளால் விநியோகிக்கப்படும் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து உங்கள் முடிவுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். முழுதும் படித்து, அவதூறாக நீங்கள் கருதும் பகுதிகள் எப்படிப்பட்ட சூழலில் இடம் பெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, அதன் பின்னர் தங்கள் எதிர்ப்பு நியாயமானதுதானா என்று அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அப்படி ஏதேனும் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினால், நாவலில் ஏற்றுக் கொள்ள முடியாத பகுதிகளை மறுத்து கட்டுரைகளும்/ புத்தகங்களும் எழுதலாம், அறிவுத் தளத்திலேயே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
எந்த ஒரு படைப்பும் விமரிசிக்கப்படலாம், ஆனால் ஒரு படைப்பாளியைப் பேச விடாமல் ஒடுக்குவதோ, தான் பிறந்த ஊரை விட்டே வெளியேறும் அளவுக்கு ஒருவர் மீது அழுத்தம் கொடுப்பதோ, அறிவார்ந்த செயலல்ல- அது அப்பட்டமான மனித உரிமை மீறலுமாகும். முடித்தால் அவரது பிற படைப்புகளை வாசித்துப் பாருங்கள். குறைந்த பட்சம், புனைவிலும்/அபுனைவிலும் அவர் சாதித்திருப்பது என்ன என்றாவது அறிந்து, அதன்பின் உங்கள் கருத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர் தான் பிறந்த மண்ணையும் அதன் மக்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரியும், உங்கள் நேசத்துக்கு உரியவர் அவர், நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பவர்.
கேள்வி- பெருமாள் முருகனிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன, அவருக்கு நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்ன?
பதில் - அவரிடம் நான் சொல்ல விரும்புவது இதுதான்-
"பேஸ்புக் பதிவில் நீங்கள் கூறியுள்ளதைப் படித்தது மிகவும் வருத்தமளித்தாலும், நீங்கள் எடுத்துள்ள முடிவு குறித்த உங்கள் மனநிலை மாறும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பேன்.
"நான் உங்கள் புதிய நாவல்களை வாசிப்பேன், ஒரு எதிர்ப்பாக மட்டுமல்ல (விரும்பத்தகாத இந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்காவிட்டாலும் அவற்றை வாசித்திருப்பேன்), பொன்னாவுக்கும் காளிக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள, ஒரு வாசகனாக நான் உண்மையாகவே ஆவலோடிருக்கிறேன். மாதொரு பாகன் வாசித்த நாளிலிருந்தே என் மனதில் இந்தக் கேள்வி நிழலாடிக் கொண்டு இருந்திருக்கிறது. அவர்கள் வாழ்வு குறித்த அக்கறை எனக்கு மட்டுமல்ல, நாவலை வாசித்த அனைவருக்கும் இருந்திருக்கும். யாரையும் அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் உங்களுக்கு இல்லை என்பதையும், எதிரெதிர் திசைகளில் இழுத்துச் செல்லக்கூடிய இக்கட்டில் சிக்கிக் கொண்ட ஒரு தம்பதியரை பரிவோடு சித்தரிப்பதும், அந்த இக்கட்டுக்கு இட்டுச் சென்ற அந்நாளைய சமூக விழுமியங்கள் பற்றிச் சொல்வதுமே உங்கள் நோக்கமாக இருந்திருக்கிறது என்பதும் வாசகனுக்குப் புரியும்.
"முடிவாக, இந்த ஒரு முறையேனும், உயிர்த்தெழுதல் நடக்குமென்றே நம்ப விரும்புகிறேன்."
ஆம்னிபஸ் குறிப்பு:
அடியாழத்தில் சுதந்திரமாகத் திரியும் மீன்களைப் போல, மேல்மட்ட கலங்கல்கள் பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு பெட்டகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நொடியில் அந்த நூல் அறுந்துவிடும் அபாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை என்பதினால் சந்தோஷமாகத் திரிகிறோம்.
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள், உயிருக்கும் உடைமைக்கும் பயப்படாமல் உண்மை என்று நம்புவதைப் பேச விரும்புபவர்களுக்கும், கதை பேச விரும்புபவர்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல். சுருக்கமாகச் சொன்னால், கருத்து பரிமாறிக் கொள்ளும் நீர் விளையாட்டுக்காரர்கள் நம் அனைவருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்.
மிகையான புகழ்ச்சியாகவோ காட்டமான விமரிசனமாகவோ அல்லாமல், ரசித்துப் படித்த, நாம் மதிக்கும் நூலை, அதன் நிறை குறைகளோடு நேர்மையான மதிப்பீட்டுக்கு உட்படுத்துவதே ஓர் எழுத்தாளனைக் கொண்டாடும் செயலாகும். இதை ஆம்னிபஸ் பதிவர்கள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். இதுவரை பெருமாள் முருகனின் வேப்பெண்ணைக் கலயம், சாதியும் நானும், மாதொரு பாகன், நீர் விளையாட்டு, ஆளண்டாப் பட்சி ஆகிய ஐந்து நூல்களைப் பற்றி ஆம்னிபஸ் பதிவர்கள் எழுதியுள்ளார்கள்.
புதுமைப்பித்தனும் தி. ஜானகிராமனும் இன்றும் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எழுத்தைப் பேசுகிறோமோ, அந்த எழுத்தாளன் நம்மோடிருப்பவன். கருத்துச் சுதந்திரத்தை நம்மளவில் காக்க, பெருமாள் முருகனின் எழுத்தைத் தொடர்ந்து பேசுவதே நாம் இனிச் செய்ய வேண்டுவது. அந்த வகையில், ஆம்னிபஸ் தளத்தில் பெருமாள் முருகன் நூல்கள் குறித்து பதிவிட்ட நண்பர்களில் அஜய்யிடம் மூன்று கேள்விகள் கேட்டோம்.
தொடர்புடைய பதிவு - நண்பர் வெ. சுரேஷ் பதில்கள்- பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2
பைராகி பதிவு - பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3
பெருமாள் முருகன் அருமையான கதை சொல்லி. சொல்லவருவதை சொல்லாமல் அழகாக முடிக்கும் திறம்பெற்ற அற்புத எழுத்தாளர். தமிழ் மணம் கமழ எழுதும் எழுத்து வித்தகர் அவர் எழுதுவதை நிறுத்துவது தமிழ் எழுத்துலகின் பேரிழப்பு. தமிழ் பேராசிரியர் ஆனால் அவரின் எழுத்து சாமானிய மக்களாலும் புரிந்து உள்வாங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு எளிமையான எழுத்து நடை. யார் வம்புதும்பிற்கும் செல்லாதவர். வழிகாட்டியாய் கொள்ளக்கூடிய எழுத்தாளர். அவர் இறுதியாக எழுதிய விடைபெறும் அழுத்தம் தரக்கூடியக்கட்டுரையை நானும் வாசித்தேன். வருத்தமாக உள்ளது. தொடரவேண்டும்..
ReplyDeleteபெருமாள் முருகனின் அறிக்கை வருத்தத்தையே கொடுக்கிறது. அவரின் எழுத்தை நான் வாசித்தது கிடையாது என்றாலும் ஒரு எழுத்தாளர் முடங்கிப் போவது ஜீரணிக்க முடியாத விஷயம்.
ReplyDeleteபெருமாள் முருகன் அருமையான கதை சொல்லி வருத்தமாக உள்ளது.
ReplyDelete