நண்பர் ஒருவர், விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள, "மொட்டு விரியும் நேரம்", என்ற புத்தகத்தை, "இது ரொம்ப நல்ல மொழிபெயர்ப்பு" என்ற பரிந்துரையோடு கொடுத்தார். கன்னட மொழியில் பி. லங்கேஷ் எழுதிய "நீலு காவ்ய" மூன்று தொகுப்புகளாக வந்திருக்கின்றன. இவற்றில் சில தேர்ந்தெடுத்த கவிதைகளை கா. நல்லதம்பி மொழிபெயர்த்து பதிப்பித்திருக்கிறார்கள். குறுகிய வடிவம் கொண்ட இந்தக் கவிதைகள், நல்லதம்பியின் அழகிய கருப்பு வெள்ளை புகைப்படங்களின் பின்னணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பதிப்பாளர் தி. தி. நடராசனின் பதிப்புரையும் புத்தகத்தை அலங்கரிக்கிறது ("ஆங்கிலத்திலிருந்து மூன்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். மூன்று நூல்களில் இரண்டு நூலுக்குத் தமிழ்நாட்டரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது").
புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பர் கன்னடம் அறிந்தவர். இந்நூலில் உள்ள கவிதைகள் மிகச்சிறந்த வகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனபதைத் தாண்டி அவர் அளித்த ஒரே கூடுதல் தகவல், "கன்னடத்தில் மிகவும் கடினமான மொழியில் எழுதியிருப்பார் லங்கேஷ். ஆனால், நல்லதம்பி மிக எளிய மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார்," என்பதுதான். இதைச் செய்யலாமா என்பது முதல் கேள்வி- "தமிழிலேயே எழுதின மாதிரி இருக்கணும் ஸார்," (அதிலும் சிலர், "பேச்சுத் தமிழிலேயே இருக்கணும் ஸார்" என்று ஆக்ஸிமோரான்கள் கேட்பார்கள்)- இது மொழிபெயர்ப்புகள் குறித்து ஏறத்தாழ எல்லாரும் சொல்லும் விஷயம் என்றாலும், மூல மொழியின் கோட்டித்தனங்களை இழப்பின்றி தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சொல்வதிலும் சில நியாயங்கள் உண்டு. அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் கடந்து சென்றாலும்கூட, கடுமையான மொழியை வாசிப்பதில் நமக்குக் கிடைக்கும் சில வாசிப்பு இன்பங்கள், எளிய மொழியில் சாத்தியமில்லை என்பதைப் பதிவு செய்தாக வேண்டும். கவிதைகள் பொருள் மட்டும் தாங்கி வருவதில்லை, குரலையும் கொண்டு வருகின்றன, இல்லையா?
உதாரணத்துக்கு, இதில் உள்ள ஒரு கவிதை,
வால்மீகியின் காவியத்தைக்
கட்டுரையாகப் படிப்பது
வியாபாரி கணக்குப் புத்தகத்தில்
கவிதை படிப்பது போல
என்று இருக்கிறது. இந்தக் கவிதை இன்னும் கொஞ்சம் புதிரான மொழியில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கவித்துவத்தின் மிக முக்கிய நவீன கூறுகள் புதிர்த்தன்மையும் நகைமுரணும் என்று சொல்லலாம். "இது எப்படி கவிதையாகிறது?" என்ற புதிரைத் தவிர இதிலுள்ள பெரும்பாலான கவிதைகளில் மர்மம் என்று எதுவும் இல்லை. ஆனால், பல கவிதைகளும் நகைமுரண் தன்மை கொண்டவையாக உள்ளன, ஏன், அவற்றுள் பெரும்பான்மை கவிதைகளில் நகைமுரண் மட்டுமே உள்ளன என்றுகூடச் சொல்லலாம். அத்தகைய கவிதைகளில் மிகச் சிறந்த ஒன்று இது-
பெண் வயதுக்கு வந்தவுடன்
ஆணுக்குக் கொடுக்கும் சுங்கம்
நீ எனக்கு வேண்டாம் என்று
நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நடை.
ஆனால் பொதுவாகச் சொன்னால்,
"கனவுகள் இல்லாமல்
என்னைப் பார்ப்பவர்களுக்கு
என் கன்னக் குழியின்
அழகு தெரியாது"
என்ற கவிதையைப் போன்ற சிலவற்றைப் பொருத்தவரை, இன்னும் கொஞ்சம் புதிர்த்தன்மையை விட்டு வைத்திருக்கலாம் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், இதையோ,
"தென்னிந்தியாவில் அதிகம்
திருடர்களையும்
பொய்யர்களையும்
பார்த்தவன் திருப்பதி
வேங்கடாசலபதி"
என்பதையோ மோசமான கவிதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், "இது எப்படி கவிதையாகிறது?"என்ற கேள்வியை இந்நூலில் உள்ள பல கவிதைகளும் கேட்க வைக்கின்றன.
ஆனால் கவிதைகள் இப்படி இருப்பதைத் தப்பு என்றும் சொல்ல முடியாது. தமிழ்க் கவிதைகளில் மொழி அழகு மிக முக்கியமான அம்சமாக இருந்து வந்திருக்கிறது. ஓசை நயத்தை இழந்தபோதும், படிமம், உவமை போன்ற விஷயங்களைப் பேசுவது, உடைத்தும் பிய்த்தும் கடித்துக் குதறியும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய புதிர்த்தன்மை கொண்டிருப்பது போன்றவை நவீன தமிழ்க் கவிதையின் முக்கிய இலக்கணங்களாக இருக்கின்றன. எப்படி பார்த்தாலும், மொழியாளுமையைக் கவிஞன் வெளிப்படுத்தியாக வேண்டியிருக்கிறது. அந்த விஷயத்தில் ஒரு பேதைமை இருப்பது போல் தோன்றிவிட்டால் கவிஞனைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இந்நூலில் உள்ள சில கவிதைகள் அப்படியும் நினைக்க வைக்கின்றன.
தொடாதே என்று கோபித்துக் கொண்டவள்
அவன் தொடாமல் போனதற்கு
முந்தா நாள் இறந்து போனாள்
என்ற கவிதை,
மல்லிகைக் கூடை
சுமந்த சிறு பெண்
வழியெல்லாம்
மணம் சிந்தினாள்
என்ற கவிதை போன்றவற்றுக்கு வாரமலர்த்தன்மை இருப்பதைச் சொல்ல வேண்டும்.
அதே போல்,
பழத்தை
வெட்டி உண்ணும்போது
ஒரு விதையை
விதைக்க மறவாதே
என்ற கவிதை,
சூதாட்டத்தில் மனிதன்
விதியோடு
கை குலுக்குவான்
என்ற கவிதை போன்றவற்றுக்கு நாட்காட்டிகளின் பொன்மொழிக்குரிய சாயல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இவை தவிர, பல கவிதைகள் பரத்தையர்களைப் புரிந்துணர்வுடன் பாடுகின்றன- ஒழுக்கம் குறித்து கவலைப்படும் சமூகத்தில் மட்டுமே கூடா ஒழுக்கம் பாவித்தல் பல இன்னல்களைத் தருவிக்கும்; சந்தை விழுமியங்கள் நாளுக்கு நாள் வலுவூன்றுவதைப் பார்க்கும்போது இத்தகைய உணர்வுகள் மிகைத்தன்மை மட்டுமல்ல, ஆசாரத்துக்குரிய பழம்பூச்சும் கொள்கின்றன.
பொதுவாக, கிலாசிக்ஸ் என்று பாராட்டப்படும் ஹைக்கூக்கள் போல் இயற்கை நயம் பாராட்டும் கவிதைகள் மிகக் குறைவே. ஆனால்,
மொட்டு விரிவதைப் பார்க்கப்
பிடிவாதம் பிடித்து- தூக்கம்
மெல்லத் தழுவி- எழுந்த பொழுது
பூ மலர்ந்து, இதழ்கள்
வாடத் தொடங்கியிருந்தன
என்ற கவிதையின் அபார அழகு, மற்ற எவற்றைக் காட்டிலும் இயற்கையை பேசவே நவீன தமிழ்க் குறுங்கவிதைகள் உகந்தவை என்று நினைக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு மதிப்பு கூட்டும் கவிதைகள் பலவும் இப்படிப்பட்டவையே.
மொட்டு விரியும் சத்தம், பி. லங்கேஷ்,
தமிழாக்கம், கா. நல்லதம்பி,
விழிகள் பதிப்பகம், சென்னை 41
94442 65152, 94442 44017
விலை ரூ. 165
புகைப்பட உதவி - மொட்டு விரியும் சத்தம், கன்னட கவிதைகள் சில- சும்மா

No comments:
Post a Comment