சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்.
என் எந்த ஒரு பழக்கத்திற்கும், நல்லதோ இல்லை கெட்டதோ, அதற்கான விதை இடப்பட்டது என் கல்லூரி நாட்களில்தான். என் தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஜானகிராமனின் நாவல்கள் தன்னுள் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. ஆனால் அவருடைய சிறுகதைகள் பலதும் இலக்கியத் தரமானவை என்றார். அன்றுதான் முதல் முறையாக தி.ஜா என்ற எழுத்தாளரின் பெயர் பரிச்சயமானது. பிறகு நூலகத்தில் மோகமுள் பார்த்ததும், அதை எடுத்துப் படித்தேன். மோகம் முப்பது நாட்கள். மோகமுள்ளின் மீதுள்ள மோகம் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ந்த பாடில்லை.
மோகமுள்ளில் பாபு, யமுனா, ராஜம், பாபுவின் தந்தை, ரங்கண்ணா, சாம்பன் என பலர் வலம் வந்தாலும் ரங்கண்ணா பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மோகமுள்ளை Cantor கணத்தைப் (set) போல் மூன்றாகப் பிரித்தால் மத்திய பகுதியில் தோன்றி மறைவதுதான் ரங்கண்ணா பாத்திரம்.
மோகமுள்ளில் ரங்கண்ணாவின் அறிமுகமே சிறப்பான குறியீட்டுத் தன்மை கொண்டது. கர்நாடக இசையின் ஞானப் பிழம்பான ஆளுமையாக. நாம் அவரை முதன்முறையாக அறிகிறோம், அப்போது அவரின் பின்னிருந்து பாபு அவரைப் பார்க்கிறான். ரங்கண்ணாவின் சங்கீத ஞானத்தை எதிர் காலத்தில் அவன் தன் தோளில் தாங்கிச் செல்ல ஏற்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது - நம் பார்வையில் ரங்கண்ணாவை அடுத்திருப்பவனாக பாபு புலப்படுகிறான்.
