சிறப்புப் பதிவர்: பாஸ்கர் லக்ஷ்மன்.
என் எந்த ஒரு பழக்கத்திற்கும், நல்லதோ இல்லை கெட்டதோ, அதற்கான விதை இடப்பட்டது என் கல்லூரி நாட்களில்தான். என் தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஜானகிராமனின் நாவல்கள் தன்னுள் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தியதில்லை. ஆனால் அவருடைய சிறுகதைகள் பலதும் இலக்கியத் தரமானவை என்றார். அன்றுதான் முதல் முறையாக தி.ஜா என்ற எழுத்தாளரின் பெயர் பரிச்சயமானது. பிறகு நூலகத்தில் மோகமுள் பார்த்ததும், அதை எடுத்துப் படித்தேன். மோகம் முப்பது நாட்கள். மோகமுள்ளின் மீதுள்ள மோகம் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் தீர்ந்த பாடில்லை.
மோகமுள்ளில் பாபு, யமுனா, ராஜம், பாபுவின் தந்தை, ரங்கண்ணா, சாம்பன் என பலர் வலம் வந்தாலும் ரங்கண்ணா பாத்திரப் படைப்புதான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. மோகமுள்ளை Cantor கணத்தைப் (set) போல் மூன்றாகப் பிரித்தால் மத்திய பகுதியில் தோன்றி மறைவதுதான் ரங்கண்ணா பாத்திரம்.
மோகமுள்ளில் ரங்கண்ணாவின் அறிமுகமே சிறப்பான குறியீட்டுத் தன்மை கொண்டது. கர்நாடக இசையின் ஞானப் பிழம்பான ஆளுமையாக. நாம் அவரை முதன்முறையாக அறிகிறோம், அப்போது அவரின் பின்னிருந்து பாபு அவரைப் பார்க்கிறான். ரங்கண்ணாவின் சங்கீத ஞானத்தை எதிர் காலத்தில் அவன் தன் தோளில் தாங்கிச் செல்ல ஏற்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது - நம் பார்வையில் ரங்கண்ணாவை அடுத்திருப்பவனாக பாபு புலப்படுகிறான்.
ராஜத்தின் தந்தை தியாக ராமன் பாபுவை ரங்கண்ணாவிடம் அறிமுகப்படுத்தும்போது நடைபெறும் உரையாடல்கள் ரங்கண்ணாவின் குணாதிசயங்களைத் தெளிவாக்குகின்றன. பாபுவிடம் ரங்கண்ணா சங்கீதம் குறித்து கேள்விகள் கேட்கும்போது அவருடைய மேதைமை வெளிப்படுகிறது. தியாக ராமனின் துறை சார்ந்த திறமையை பாராட்டும் சமயம், தான் என்னதான் சங்கீதத்தில் உச்ச ஞானத்தைப் பெற்றிருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் தன்மை அவருக்குள்ளது என்பதை நாம் அறிய வருகிறோம். எல்லாம் தெரியும் என்ற தோரணையில் எல்லா விஷயங்களிலும் தீர்மானமான முன்முடிவுகள் இல்லாதவராக, அவற்றில் தன் சிந்தையை செலுத்துபவராக இல்லாமல் சங்கீத சாம்ராஜ்யத்தை மட்டுமே தன் வாழ்வின் எல்லையாகக் கொள்கிறார் ரங்கண்ணா.
பொதுவாக, கச்சேரிகளில் பாடகரின் ஸ்ருதிக்கு ஏற்றாற்போல் வயலின் மற்றும் மிருதங்கம் ஸ்ருதி சரி செய்து ஒன்றினைந்து ஸ்ருதி சுத்தமாக கச்சேரி துவங்கும்போது கிடைக்கும் சுகம் எப்படிப்பட்டது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆனால், முதல் நாள் பாபு பாட்டு கற்றுக்கொள்ள வரும்போது ரங்கண்ணா ஸ்ருதி சேர்ப்பதை விவரிப்பதின் மூலம் தி.ஜா அந்த அந்தரங்கமான இசை அனுபவத்தை சொற்களில் வெளிக் கொணருகிறார். இந்த இடத்தில் என் தந்தை பல முறை கூறிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
ஈரோட்டில் ஒரு சபாவில் M.S. சுப்புலட்சுமி அவர்களின் இசைக் கச்சேரியில் கலைஞர்கள் ஸ்ருதி சேர்ப்பதில் சிறிது கால தாமதம் ஆகியுள்ளது. அந்த சபாவின் காரியதரிசி, "ஏன் கச்சேரி நேரத்தில் தொடங்கவில்லை?" என்று விசாரித்திருக்கிறார். அதற்கு விஷயம் தெரிந்த நபர் ஒருவர், "ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்," என்று பதில் சொன்னதும் காரியதரசிக்கு கோபம் வந்துவிட்டது. "இரண்டு மாதம் முன்பே கச்சேரிக்கு அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. ஊரிலேயே ஸ்ருதி சேர்த்துக்கொண்டு வந்திருக்கக் கூடாதா?" என்று கூச்சலிட்டாராம் அவர்! அவருக்கு அவ்வளவுதான் அதன் முக்கியத்துவம்.
பாபு பாடும் சமயம் ஒவ்வொரு சங்கதியிலும் திருத்தம் செய்யும்போது அவனுக்கு தன் முந்தைய பாட்டு ஆசிரியருக்கும், ரங்கண்ணாவுக்கும் இருக்கும் வித்தியாசம் ஒரு மலைக்கும், மடுவுக்கும் இடையே இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு நாள் பாபு வகுப்பிற்கு வரவில்லை என்றால் "ஏன்டா ஜடாயு மாதிரி இங்கு ஒரு கிழம் காத்துக் கொண்டிருக்கிறது, வர மாட்டேன் என முதல் நாளே சொல்லக்கூடாதா?" என கடிந்து கொள்ளும்போது ரங்கண்ணாவின் கோபத்தை விட ஏக்கம் வெளிப்படுவதைக் காணலாம். ஸ்ருதி சேராதபோதும் சேர்ந்து விட்டது என சாம்பன் கூறுவதைக் கேட்டு அவனை ரங்கண்ணா திட்டும் இடத்தில் அவருக்கு சாம்பன் மீது இருக்கும் அதீத வாஞ்சை வெளிப்படுகிறது.
ரங்கண்ணா சொல்லிக் கொடுக்கும் பாடத்திற்கு பாபுவால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுதான் கொடுக்க முடியும் என தியாகராமன் கூறும்போது, அதை யார் கேட்டார்கள் என ரங்கன்னா பற்றற்று கூறும் இடம் பால் ஏற்டோஸ் (Paul Erdos), நோபல் (Nobel), க.நா.சு போன்ற ஆளுமைகளின் நினைவுதான் வருகிறது. ஆனால் ரங்கண்ணாவின் மனைவி பாபுவிடம் கறாராக பதினைந்து ருபாய் கொடுத்து விட வேண்டும் எனக் கூறுவதற்கான காரணத்தை சண்முகம் பாபுவிடம் சொல்கிறான் - ரங்கண்ணா இந்த வயதில் இப்படிக் கஷ்டப்படுகிறாரே என்ற ஆதங்கத்தில்தான் ரங்கண்ணாவின் மனைவி அவ்வளவு கறாராக இருக்கிறார் என்ற உண்மை வெளிப்படுகிறது, உண்மையில் அவரது மனைவியும் மிகவும் மென்மையான மனம் கொண்டவர் என்பது தெளிவாகிறது. ரங்கண்ணாவிற்கும் அவர் மனைவிக்கும் இடையே இருக்கும் பரிவும், பாசமும் வெளிப்படும் இடம் இது.
பாபு எதற்காக சங்கீதம் கற்றுக் கொள்கிறான் என ரங்கண்ணா கேட்டவுடன் பாபுவிற்கு ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறார் என்ற குழப்பம். ஆனால் பாபு, "ஞானம்" பெறத்தான் எனக் கூறியவுடன் ரங்கண்ணா பெருமகிழ்ச்சி அடைகிறார். அறைகுறையாக கற்றுக் கொண்ட தன் சிஷ்யன் "பாலு" இன்று பெரிய பாடகர் என சொல்லிக் கொண்டு அலைவதை கிண்டல் செய்கிறார் ரங்கண்ணா.
சஞ்சய் சுப்ரமணியன் சென்ற ஆண்டு ஜெயா தொலைகாட்சி மார்கழி மகோற்சவத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் "கச்சேரி செய்வது ஒரு வித்தைதான். மேடைக்கு வந்து பாடினால் அது வித்தை காட்டுவது போல்தான்," என பொருள்படக் கூறினார். (அவர் சொன்ன சரியான வார்த்தைகள் என் நினைவிலில்லை.) ஆனால் வித்தை காட்ட மிக நல்ல ஞானம் வேண்டும். அதுதான் ரங்கண்ணாவின் கருத்தாகவும் இருக்கிறது. ஏனோதானோ என கற்றுக் கொண்டு மேடை ஏறி ஏதோ முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பாடுவதை ரங்கண்ணா விரும்புவதில்லை. எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து நல்ல திறமையுடனும், ஞானத்துடனும் பாடுவதைக் கேட்க விரும்பும் ரசிகனுக்காகவே பாட வேண்டும் என்கிறார் ரங்கண்ணா. இந்தக் கருத்து இசைக்கு மட்டுமில்லாமல் எந்தத் துறைக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது. தன தலையில் தானே அட்சதைப் போட்டுக் கொள்வதில் என்ன பயன்?
வடக்கிலிருந்து வரும் பாடகர்களின் கந்தர்வ குரலில், அவர்களுடைய அசுர சாதகத்தில், ரங்கண்ணா மகிழ்ந்து அவர்களைப் பாராட்டும்போது, பாபுவுக்கு இசை குறித்த தன் எண்ணத்தைத் தெளிவாக்குகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் பாலு வடக்கத்தியர்களின் குரு ஒன்றும் பெரிய பெயர் பெற்றவரில்லை எனக் கூறும் போதும், அது முக்கியமில்லை என மறுதலிக்கிறார் ரங்கண்ணா. அந்த இடத்தில் அருமையான தரமான மற்றும் சுமாரான சங்கீதத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அழகாக ஒப்பிட்டுக் காட்டுகிறார் தி.ஜா.
ஸ்லோகங்களை சொல்லும் வழக்கத்திற்கு பதிலாக, எல்லோரும் பாடுகிறார்கள். சாவேரி பாடும்போது சாந்தமாக ரங்கண்ணாவின் உயிர் பிரிகிறது. அதை வாசிக்கும் சமயம் திருவிளையாடல் சினிமாவில் "நான் அசைந்தால் அசையும்" பாடலில் வருவது போன்று இந்த உலக இயக்கமே ஒரு நொடி நிற்கும் உணர்வைத் தந்தது.
மோகமுள் நாவல் முழுதும் கர்நாடக இசை பின்னணியில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதில் ரங்கண்ணா பாத்திரம் மூலமாக தி. ஜா. நல்ல சங்கீதத்தின் கூறுகளை அமர்க்களமாக எழுதிச் செல்கிறார்.கர்நாடக சங்கீதம் உள்ளவரை ரங்கண்ணா பாத்திரம் மூலம் தி.ஜா. வாழ்ந்துக் கொண்டிருப்பார். அதில் சந்தேகமில்லை.
மோகமுள் - தி.ஜானகிராமன்
புதினம், ஐந்திணைப் பதிப்பகம்
பக்கங்கள்: 686. விலை.ரூ.300/-
No comments:
Post a Comment