மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான சக்திகள், நவநவமான உணர்ச்சிகள் வினாடிக்கு வினாடி மூளுகின்றன - மூண்டு மூண்டுபோராடுகின்றன.
இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு வினாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த வினாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு அவன்மீது ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. இந்தச் சக்தியினுடைய ஆதிக்கம் நீடிப்பதும் ஒரே வினாடிதான்.
இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியாக இருக்கும் மனிதன் தன் உள்ளத்திலே ஒரு லக்ஷ்யத்தை, ஒரு தெய்வத்தை கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்துவிட்டானானால் அவனை பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். (பக்.256)
இங்கே
எல்லாமே தெய்வங்கள். ஆசைகள், லக்ஷ்யங்கள், சிந்தனைகள் எல்லாமே தெய்வங்கள்.
இந்த நொடியில் எதற்காக ஆசைப்படுகிறோமோ, அது தெய்வம்; எது சிந்தையில்
இருக்கிறதோ, அது தெய்வம்; எதில் நம்பிக்கை வைக்கிறோமோ, அது தெய்வம். மற்றவை
எல்லாம் அந்த நொடியில் அசுர கணங்கள், தீய சக்திகள். எல்லா
தெய்வங்களையும்விட பணம்தான் சக்தி மிகுந்த தெய்வம்.
சோமுவுக்கு
பணம் ஒரு தெய்வம் என்று ஆரம்பகாலத்திலேயே தெரிந்துவிட்டது. எவ்வளவு
பணத்தைக் கொண்டு என்னென்ன வாங்கலாம் என்று தவறாகக் கணக்குப் போட்டாலும்,
அவனுக்கு இதையெல்லாம் வாங்க பணம் வேண்டும் என்பது புரிந்துவிட்டது.
பின்னர், பணம் எனும் தெய்வத்தை பட்டாணிக்கடலை எனும் தெய்வம்
சாப்பிட்டுவிடுகிறது. நொடிக்கொரு தெய்வம் இருந்தாலும், காலப்போக்கில்
சில்லறை தெய்வங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு சோமு பற்றிக் கொண்டது
பணத்தெய்வத்தைதான். அத்தெய்வம், சோமுப் பயலை, மளிகை மெர்ச்செண்டாக உயர்த்தி
வைக்கிறது.
1946ல்
எழுதப்பட்ட இந்த இலக்கியத்திற்கும் இன்றைக்கு எழுதப்படும்
இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைக்கு க.நா.சு கையாண்டிருக்கும்
மொழியை இன்றைக்கு இலக்கியங்களில் மட்டுமல்ல, அதற்கு வெளியிலேயும் காண
முடியாது. தெய்வத்தையும் கடவுளையுமே ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒருவேளை
இன்றைக்கு தெய்வம் மறந்துபோய் கடவுள் வந்துவிட்டதால், தெய்வம் என்ற
வார்த்தை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துகிறதோ என்னவோ. ‘தோன்றிற்று’ என்ற
வார்த்தையை இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை. "அதைபோல இன்னும் இரண்டு
மடங்காவது செலவு செய்து சோபாக்கள் முதலிய நாகரிக அலங்காரங்கள் செய்தால்தான்
அந்தமாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டார் ரங்காசாரியார்,” (பக்.243) என்று ஒரு
வாக்கியம். இங்கே அந்தம் என்பது பூரணம், முழுமையைக் குறிக்கிறது - முடிவை
அல்ல. இதுபோல குறைந்தபட்சம் நூறு வார்த்தைகளாவது இந்நாவலிலிருந்து
எடுத்துப் போடலாம். அப்புறம் இன்னொரு வாக்கியம் இப்படி போகிறது,
“சோமுவினுடைய பதினொராவது வயதிலிருந்து நாற்பத்தோராவது வயது வரையில் ஒரு
முப்பது வருஷங்கள் கழிந்தன.” (பக்.149) இன்றைக்கு இப்படி எழுதினால், கணக்குகூடத்
தெரியவில்லை இவருக்கு என்று விமர்சனம் செய்வார்கள். ”ஹாஸ்யம் புரியவில்லை
என்றால்கூடப் பரவாயில்லை, அதை உண்மையென்று நம்பிவிட்டால் ஆபத்து” என்பது
மாதிரி கல்கி ஏதோ சொல்லியிருக்கிறார்.
'நாவல்
என்பது வெறும் கதை மட்டுமல்ல’ என்று நம்புகிறோம். கதையைவிட அதில் தகவல்கள்
நிறைய இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது; அது
சமூகத்தைப் பேசவேண்டும் என்றும் சமகால வரலாறு நாவல் மூலம் பதிவு செய்யப்பட
வேண்டும் என்பது மாதிரியான கருத்துகள் இன்றைக்கு இலக்கியத்தை
தீர்மானிக்கிறது. க.நா.சு கதையைச் சொல்லியிருக்கிறார். கதையின் ஊடாக
எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவான விஷயங்கள் சொல்லியிருக்கிறார்.
இரண்டு உலகப்போர்கள் நடந்தன என்று போகிற போக்கில் சொல்லிப் போகிறார்.
ஆனால், 1946ல் தீவிரமாக இருந்த சுதந்திரப் போராட்டத்தை க.நா.சு
பொருட்படுத்தவே இல்லை. சோமு முதலியின் கதைக்கு இதெல்லாம் தேவையாயில்லை.
சோமுவை
தன்னுடைய கதாபாத்திரமாக அவர் முன்னிறுத்தவில்லை, க.நா.சு.வின் கருத்துகளைப்
பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட நாயகன் இல்லை அவன். சோமு தனக்கு
சம்பந்தமில்லாத யாரோ ஒருவன் என்ற தோரணையில்தான் கதையைச் சொல்கிறார்.
அவனுடைய இயல்புகளை முழுமையாகச் சொன்னாலும் அதில் எந்தவிதத்திலும் சரி தவறு
என்ற தீர்மானம் சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார் - "ஸ்திரீ என்று
புடவை கட்டிக்கொண்டு எவள் எதிர்ப்பட்டாலும் அவளை நிர்வாணமாகக் கற்பனை
செய்து பார்க்கும் சக்தியை மனசிலே போற்றி வளர்த்துக்கொண்டிருந்தான் சோமு.” (பக்.159)
சோமு
முதலியின் குழந்தைகால நினைவுகளில் முதலில் இருப்பது சாத்தனூர் கோவில்
மணியோசை. அவர் கோவிலுக்குப் போகும் மனிதர் இல்லைதான். ஆனாலும் அந்த மணியோசை
சாத்தனூரோடு அவரைக் கட்டிப்போட்டிருந்தது. இப்படி இருக்க வேண்டும் என்று
அவரே தீர்மானித்துக் கொண்ட மாதிரி அவரது வாழ்வை அவர் கொண்டு சொல்லவில்லை.
யாராவது வந்து அவரை ஏதாவது செய்யும்படி உசுப்பி விட்டுப் போகிறார்கள்.
ரங்கராவ், சாம்பமூர்த்தி ராவ், கோவிந்தப் பிள்ளை, மாணிக்கஞ் செட்டியார்,
ரங்காச்சாரி, சாமா என்று ஒவ்வொருவரும் அவரை பாதிக்கிறார்கள். அவருடைய பாதை
ஒவ்வொருவரைச் சந்திக்கும்போதும் மாறுகிறது. அவர்கள் அவருக்கு வெவ்வேறு
தெய்வங்களைக் காட்டிக் கொடுக்கிறார்கள் (மனிதனால் போற்றிப் போற்றி
வளர்க்கப்படுவதால் காமம்கூட ஒரு தெய்வந்தான் போலும்).
விதியென்று
வைத்துக் கொண்டாலும் வேறு ஏதாவதென்று வைத்துக் கொண்டாலும், மேலே சொன்ன
ஒவ்வொருவரும் அவருக்கு ஒரு மணியோசைதான். மீண்டும் சிந்திக்கத் தொடங்கிய
பிறகு ஒருநாள் நள்ளிரவில், மணி ஒலிக்கச் சாத்தியமே இல்லாத நேரத்தில்,
சாத்தனூர் கோவில் மணி, எங்கோ கும்பகோணத்தில் இருக்கும் சோமு முதலிக்கு
கேட்கிறது. அந்த மணியோசை தன் உள்ளத்திலிருந்துதான் வருகிறது என்பதை அவர்
உணர்ந்து கொண்டுவிடுகிறார்.
சோமு என்ற திருவவதாரம் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு சோமுப் பண்டாரமாக ஒரு தெருவோரத்தில் வீடுபேற்றை அடைகிறது.
பொய்த் தேவு - க.நா.சுப்ரமணியம், காலச்சுவடு வெளியிடு, 295 பக்கங்கள், விலை ரூ. 150, இணையத்தில் வாங்க
மற்றவை:
சிறந்த தமிழ் நாவல் “பொய்த்தேவு” - பிரமிள்
ஒவ்வொரு பக்கத்தின் ரசித்தவைகளுக்கு நன்றி...
ReplyDeleteபாவண்ணனின் அணிந்துரையில் எழுதி இருப்பது போல , படகுச் சவாரியும், காவேரி ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லுதல்
ReplyDeleteசிறு சிறு வரிகளில் , வாசகரின் சிந்தனையை புரட்டி போடுகிறார் க ந சு இந்த படைப்பில்