சாத்தனூருக்குச்
சரித்திரப் பிரசித்தம் கிடையாது. பூகோளப் பிரசித்தம் கிடையாது.
சாத்தனூரில், அதுவும்
சர்வமானிய அக்ரஹாரத்தில், அடால்ஃப் ஹிட்லரையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும்
போன்ற பெரிய மனிதர்கள் கிடையாது.
சரித்தரத்தில்
பொன்னெழுத்துக்களாலும் கரிக்கோடுகளாலும் வரைய வேண்டிய சம்பவங்கள் கிடையாது.
இந்தத் தலைமுறையின்
ஞாபகத்திலே சாத்தனூரிலே ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியாகப் பொதுக்காரியங்கள் எதுவும்
கிடையாது.
ஆனால், மனிதர்கள்
தனித்தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
தங்களுக்குத் தாங்களே
தவிர, வேறு எவ்விதத்திலும் அடிமைப்படாமல் வாழ்க்கை நடத்தினார்கள். (பக். 106)
க.நா.சு நம்மை மீண்டும் சாத்தனூருக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், இம்முறை மேட்டுத் தெருவுக்கு அல்ல. சர்வமானிய அக்ரஹாரத்துக்கு அழைத்துச் செல்கிறார். படிப்பதற்காக ஜெர்மனிக்குச் செல்லும் மூர்த்தி, ஹிட்லரின் பிரச்சார வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜெர்மனி ராணுவத்தில் இணைந்து உலகப்போரில் பங்கெடுத்து, பின் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்து, கடைசியில் மேஜர் மூர்த்தியாக ஊர் திரும்புகிறான்.. பத்திரிக்கைகளில் எல்லாம் பெயர் வருகிறதே தவிர, ஆனால் அவனுக்கு அதில் எந்தப் பிரயோஜனும் இல்லை, ஒன்றைத் தவிர. ஒரே உறவான, மாமா அவனை
அடையாளங் கண்டு கொண்டு சாத்தனூருக்கு அழைப்பதைத் தவிர.
காலை சாத்தனூருக்கு எந்தவொரு இலக்கும் இல்லாமல் வருபவன், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி உந்தப்பட்டு இரவில் மீண்டும் பட்டணம் திரும்புகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவனுடைய வாழ்க்கைக்குக்கு, சாத்தனூரும் அதன் மக்களும் ஒரே நாளில் ஒரு திசையேற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
க.நா.சுவைப் பற்றிப் பேசும் போது பொய்த்தேவுவைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. என்னால் முடியாது. அதுவும் சாத்தனூர் பற்றிப் பேசும் போது முடியவே முடியாது. பொய்த்தேவு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த சோமு முதலியின் கதை. ஒருநாள் - மேஜர் மூர்த்தியின் வழியாக சொல்லப்படும் சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்தின் கதை. உலகம் முழுவதும் சுற்றி வந்த மேஜர் மூர்த்தியைப் பற்றி சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை - உலகம் முழுவதும் சுற்றி வந்தான் என்பதைத் தவிர. மற்றவர்களுக்கு ஏற்படாத அனுபவம் ஒன்று அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அளவிலேயே அவனுடைய அனுபவத்தை வைக்கிறார் ஆசிரியர். ஆனால், சர்வமானிய அக்கிரஹாரத்து மக்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.
பொய்த்தேவு சோமுப் பயல், ஒரு மானுடனாக உயரே உயரே எழும் கதை. அக்கதையில் எதுவுமே நிலையிறங்கவில்லை. சாத்தனூர் கூட, ரயில் ஸ்டேஷனால் உயரத்தான் செய்கிறது. யாருக்கும் தோல்வியில்லை. சோமுவும், சாம்பமூர்த்திராவும் கொஞ்சம் வீழ்வது போல் நின்று, உயர்ந்த இடத்தையே அடைகிறார்கள். ஒருநாள், வீழ்ச்சியைப் பற்றிப் பேசுகிறது. சர்வமானிய அக்கிரஹாரத்தில் விதவைகளும் கிழங்களுமே இருக்கிறார்கள். அங்கிருந்து வேறெங்கும்
போக முடியாமல் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்கள். பாழடைந்த சில வீடுகள். பாழடைந்த மனிதர்கள். சோமு முதலியைப் பதறச்
செய்த சாமா கூட இப்போது ஒரு நம்பிக்கையற்ற இலக்கியவாதியாகிவிட்டான்.
இவ்விரண்டு நாவல்களுக்கும் கால இடைவெளி அதிகமில்லை. சோமு முதலி ஊரைவிட்டுப்
போன சில வருடங்களில், மூர்த்தி அங்கு வருகிறான்.
சோமு முதலிக்கிருந்த லட்சிய
தெய்வங்கள், அக்ரஹாரத்து வாசிகளுக்கு இல்லை. அவர்கள் எதையும் தேடிப் போகவில்லை.
மூர்த்திக்கும் அவனுடைய மாமா
சிவராமையருக்கும் நடக்கும் ஒரு உரையாடலில் ஐயர், “இந்த
மேட்டுத்தெரு இரண்டு மூன்று தலைமுறைகளில் சாதித்திருப்பதைப் போல எந்தக்
காரியத்தையும் சர்வமானிய அக்ரஹாரம் சாதிக்கவில்லை (பக்.99)” என்கிறார்.
கதையின் பெரும்பகுதியாக
அக்ரஹாரத்து மனிதர்களை ஒவ்வொரு நபராக நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஒன்பதுவயதில் விதவையான பங்கஜம், பிள்ளையார் கோவில் சொத்தைத் தின்னும் மகாலிங்க ஐயர், பணம் வாங்கிக் கொண்டு பொய் சாட்சி சொல்லும் நச்சுவாய்க் கிழவர், பேசிப் பேசியே பைத்தியம் பிடிக்க வைத்துவிடும் பாலசுப்பிரமணிய ஐயர். தன் ஆஸ்தி எல்லாம் போய்க் கொண்டிருந்தாலும் தர்மிஷ்டராக வாழும் ஒருகரை சீனுவாச ஐயர். இவர்களில், சோமுவைப் போல
யாருமில்லை. தன்னுடைய நிலையிலிருந்து, தன்னுடைய லட்சியங்களைக் கொண்டு மேலே மேலே எழுதும் ஒருவர் சர்வமானிய அக்ரஹாரத்தில் இல்லை.
பாதி நாவல் முடிந்த
நிலையில், சர்வமானிய அக்ரஹாரத்தின் மனிதர்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்
கொண்டிருக்கிறாரே இந்நாவல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி வராமலில்லை.
ஆனால், சிவராமையருக்கும் மூர்த்திக்கும், மூர்த்திக்கும் மூர்த்திக்கும் நடக்கும்
உரையாடல்கள் நாவலை செலுத்துகின்றன. நாவலின் அடிப்படைக் கேள்வி இது தான், உலகம்
பூரா சுற்றிக் கொண்டு சேர்த்த அனுபவம் பெரிதா, குடும்பத்தை நடத்துவதில் கிடைக்கும்
அனுபவம் பெரிதா. விவாதித்து விவாதித்து இந்தக் கேள்விக்கான பதிலில் வந்து
முடிகிறது நாவல்.
நாம் சில இடங்களுக்குப்
போயிருப்போம்; சில நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்திருப்போம்; நிறைய
வாசித்திருப்போம் ஆனால் இவையெல்லாம் நம்முடைய அனுபவங்கள் என்று சொல்லிவிட
முடியுமா? நாம் பார்த்த விஷயங்களும், படித்த வார்த்தைகளும் நம்முடைய வாழ்க்கையை
ஒருபடியாவது முன்னெடுத்துச் செல்லவில்லையென்றால் அவற்றை அனுபவங்கள் என்று எடுத்துக்கொள்ள
முடியுமா? சிவராமையர் வாழ்க்கை வழிகளை
நிர்த்தாரணம் செய்து கொண்டுவிட்டார். மேஜர் மூர்த்தி அனுபவங்களோடு மட்டும்
நின்றுவிட்டவன் – பரந்த அனுபவத்தின் மேல் அவன் எவ்விதமான மாளிகையும் இன்னும்
எழுப்பவில்லை (பக். 101).
இன்பமான வாழ்க்கையின் அஸ்திவாரம்
குடும்பத்தில் தான் இருக்கிறது என்று சொல்லும் போது, சோமு முதலியை நாயகனாக ஏற்றுக்
கொண்டவர்களுக்கு சுளுக் என்று தான் இருக்கும். “துவந்தங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுபட முயல்வது மனிதனுடைய முதல்
கடமையாகும்” என்ற சாமாவின் சொல்லே என்னுடையதாகவும் இருக்கும் போது, சிவராமையரும்
மூர்த்தியும் குடும்பமே சிறந்தது என்று ஏற்றுக் கொள்வதை புரிந்து கொள்ள என்னுடைய அனுபவம்
இடையில் நிற்கிறது. க.நா.சுவினுடைய வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், ‘ஆத்மார்த்தமான
ஒரு பரிபூரணத்தை எட்டிப்பிடிக்க’ இந்தக் குடும்பமென்பது எந்தவிதத்தில் உதவப்போகிறது
என்பது எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, அதற்கான அனுபவங்கள் என்னிடம் சேரும் போது புரியவரலாம்.
பொய்த்தேவுவைப் போலவே ஒருநாள் நாவலும் திரும்பத் திரும்ப வாசிக்கும் போது, பல அர்த்தங்களை
வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பது எனக்கெந்த ஐயமும் இல்லை.
முதன்முறை வாசிப்பில், சாத்தனூரும்
சோமு முதலியுமே திரும்பத் திரும்ப என் நினைவில் வந்தார்கள். கோயில் மணி என்று படித்த
உடனேயே சோமு முதலியைத் தேடத் தொடங்கிவிட்டேன். இரண்டு நாவல்களும் தனித்தனியாக வைத்துப்
பார்க்க வேண்டியவை அல்ல, அவை ஒன்றுக்குள் ஒன்று.
ஒருநாள், சாத்தனூர் நாவல்களில்
நான்காவது என்று க.நா.சு சொல்லியிருக்கிறார். இன்னும் இரண்டைத் தேடவேண்டும்.
No comments:
Post a Comment