ஒரு படைப்பை அணுகும் போது, அது ஒரு புத்தகமாகவோ திரைப்படமாகவோ இருக்கலாம், வாசகன் தன்னை கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது. ஒரு படைப்பு, ஒருவருடைய வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கும் போது, அந்த நபருக்கு அந்த படைப்பு படிக்கும் போதோ பார்க்கும் போதோ ஏற்படும் உணர்வுகளைக் கொண்டு அவர் அப்படைப்பு உயர்ந்தது சொல்லிவிடுவது எப்போதும் நடப்பதுதான், ஆனால் அவரது கணிப்பு சரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணத்திற்கு, ஒரு திரைப்படம் உங்களுக்குப் புரிய/பிடிக்க நீங்கள் இளம்பிராயத்தில் காதலித்திருந்தால் மட்டுமே சாத்தியம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? காதல் அனுபவம் உள்ளவர் அப்படத்தை பார்க்கும் போது, அவருடைய பழைய நினைவுகள் மேலெழுந்து அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். ஆனால், அந்த நினைவுகள் செய்யும் காரியத்தை, அந்த படைப்பு செய்வதாக புரிந்து கொண்டுவிட்டால்? இதுவரை படித்ததை மறந்துவிட்டு மேலே படியுங்கள்.
'தலைகீழ் விகிதங்கள்' எனக்கு நெருக்கமாதொரு நாவல். சிவதாணுவை என்னிலிருந்து தனித்துப் பார்க்கவே முடியவில்லை. சிவதாணுவுக்கு தானாய் அமைந்த பிரச்சனைகள். எனக்கு நானாய் அமைத்துக் கொண்ட பிரச்சனைகள். அங்கே இருந்த வறுமை இங்கே இல்லை தான். ஆனால் அந்த வருத்தம் கவலை கண்ணீர் எல்லாம் இங்கும் இருந்தது. நிலைமையை மற்ற ஒன்றும் செய்ய முடியவில்லை அதுவாக மாறுவதற்காக வேண்டிகொள்வதைத் தவிர.
படிப்பு முடித்து வெளியே வரும் போது எதோ ஒரு வெத்துப் பெருமை கூடவே வந்துவிட்டது. உள்ளுக்குள் இருக்கும் ரவுடித்தனம், போலி மேதைத்தனம் எல்லாம் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. கடைசி பரீட்சை எழுதும் முன்பே சேட்டை வால் நீட்டிக் கொண்டிருந்தது. 'நீயோன்னும் எனக்கு சோறு போட வேண்டாம்.’ என்று சொல்லத் தோன்றியது. சொல்லியும் இருக்கிறேன்.
பரிட்சை முடிந்தாயிற்று. கம்பெனிகாரன் கூப்பிடும் வரையில் வீட்டில் தான் இருக்க வேண்டும். அதுவரை என்ன செய்யவது வேலைக்கு போனால் என்ன வாங்கலாம் யாரைப் பார்க்கலாம். யாரைக் கல்யாணம் செய்து கொள்ளலாம், அவர்கள் எந்த தேசத்திற்கு அனுப்புவார்கள் என்று பகற்கனவு கண்டுகொண்டிருந்தேன். நாளைக்கு காலை செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற ஆனந்தத்தில் தூங்கச் சென்றேன். முதல் நாள் நன்றாக இருந்தது இரண்டாவது நாளும் குறையொன்றுமில்லை. முன்றாவது நாளில் வெறுமை அப்பத் தொடங்கியது. இருபத்தியொரு வருடங்களும் காலை எழுந்து கிளம்பிப் போக ஒரு இடம் இருந்தது. கதை பேசிக் கழிக்க சிலர் இருந்தார்கள். டியுஷன், பள்ளிக்கூடம், டியுஷன் என்று காலம் போய், கல்லூரி, நூலகம், கான்டீன் ஹாஸ்டல், அரட்டை என்ற காலமும் போய், இப்போது செய்வதற்கு ஒன்றும் இல்லாத காலம் வந்தாயிற்று. எங்காவது தொலையலாம் என்றால் எங்கே தொலைவது. நான்காம் நாள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றியது.
முன்றுவேளை சாப்பாடு, மெத்தையில் படுக்கை, எப்போதும் காற்றாடி. கொஞ்ச நாட்களிலேயே சோறெடுத்து வாயில் வைக்கும் போது கோபம் வந்தது, எனக்கு காற்றாடி ஒரு கேடா என்ற நினைப்பு வந்துவிட்டது. சுற்றம் அப்படியேதான் இருந்தது. நான் தான் மாறிவிட்டிருந்தேன். தன்னம்பிக்கை முழுவதும் வடிந்துபோயிருந்த காலம் அது.
இங்கே சொந்தக் கதை பேசுவது எனக்கே கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது. ஆனால், நாவலை இரண்டு முறை வாசிக்கும் போது நானே மறந்துவிட்டிருந்த என்னுடைய பழைய வாழ்க்கை நினைவுகள் மீண்டு வந்தன. அந்நினைவுகளைக் கடந்து நாவலின் கட்டமைப்பையோ மொழியையோ கவனிக்க முடியவில்லை.
வேலை கிடைக்காதது மட்டுமே பொதுமை இல்லை. சிவதாணு வேலைக்குச் சேர்ந்த அதே கெமிக்கல்ஸில் நானும் வேலை தேடிப்போயிருந்தேன். அந்நாளை என்றைக்கும் மறக்க முடியாது.
வழியெங்கும் பகற்கனவு. இந்த வேலையாவது கிடைக்க வேண்டுமே என்கிற பயம் இருந்தாலும் பகற்கனவு மட்டும் நிற்கவேயில்லை. பேருந்து நிறுவனத்துக்கு பக்கத்தில் உள்ள விலக்கில் இறக்கிவிட்டுப் போனது. என் கூடவே இருவர் இறங்கினார்கள். அவர்கள் கெமிக்கல்ஸில் வேலை செய்பவர்கள்.
‘என்னப்பா இண்டர்வியூவா?’ என்றார் ஒருவர்.
’ஆமாம்!’
‘என்ன போஸ்டுக்கு?’
’இஞ்சினியர்... கம்பெனிக்கு இப்படித்தான் போகணுமா?’
’ஆமாம் இப்படியே போ. கேட் வந்திடும்’
நான் நடக்கத் தொடங்கினேன். என்னுடன் இறங்கியவர்கள் அங்கேயே ஏதாவது லிஃப்ட் கிடைக்குமா என்று எதிர்பார்த்து நின்றுவிட்டார்கள். உண்மையில் அது என்ன போஸ்ட் எத்தனை சம்பளம் எதுவும் தெரியாது. காலையில் கூசும் வெயில். நடந்தேன். செக்யூரிட்டி கேட் வந்தது. அங்கு கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கேட்டார் ‘என்ன இண்டர்வுயூவா?’ மீண்டும் அதே பதில். யாராவது சட்டையை இன் செய்து, பையை மாட்டிக் கொண்டு தெருவில் நடந்தாலே கேட்டுவிடுவார்கள் போல ‘என்ன இண்டெர்வியூவா?’.
அங்கிருந்து அலுவலகத்திக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். அது உண்மையில் ஒரு கிலோமீட்டர் தானா என்று தெரியவில்லை. அந்த காலை வெய்யிலில் எனக்கு அது ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாகத்தான் தெரிந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நேர்முகத்தேர்வுக்கு வந்திருக்கிறேன். நடந்து போகும் போது, தள்ளாடுவது போன்ற உணர்வு. என்னதிது? எனக்கு தலை சுற்றுகிறதா என்ன? அப்படித் தெரியவில்லை. நின்றேன். ஏதாவது சகதியில் நடக்கிறோமா என்று கீழே பார்த்தேன். இடது பக்க ஷூவின் சோல் தொங்கிக் கொண்டிருந்தது. பல நாட்களாக எடுக்காமல் பிளாஸ்டிக் பையில் சுத்தியிருந்த ஷூ. சித்திரை மாதத்திற்கு முன்னால் பயன்படுத்தியது. இப்போது புரட்டாசி மாதம். நான்கு வருடம் கல்லூரிக்கு போட்டுக் கொண்டு போன ஷூ. படிப்பு முடித்தே இப்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. சரி! என்ன செய்ய? ஒன்றும் செய்ய முடியாது. மேலே நடக்கத் தொடங்கினேன். இப்போது பைய நடந்தேன். அதற்கு மேலும் பியிந்துவிடப் போகிறதே என்று கவனமாக நடந்தேன். பத்தடி தான் நடந்திருப்பேன். அதற்குள் அடுத்த ஷூவின் சோலும் பியிந்துவிட்டது. இப்போது இரண்டு ஷூவிலும் முன்னாடி மட்டுமே சோல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆயிரம் வயலின்கள் இசைப்பது போன்ற ஒரு சோகம்.
இன்றைக்கு எனக்கே சிரிப்பு வருகிறது. ஆனால், அன்றைக்கிருந்த கடுப்புக்கு அளவே இல்லை. அங்கும் வேலை கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். மேலும் ஒருவருடம் இது மாதிரி அலைகழிப்புகள் தொடர்ந்தன.
நாவலின் இரண்டாவது பகுதி என்று நான் கருதுவது, பார்வதிக்கும் சிவதாணுவுக்கும் நடக்கும் பிரச்சனை. குடும்பச் சழக்குகள் நாம் யாருக்குமே அன்னியமில்லை என்று தான் நினைக்கிறேன். ஒரு வயதிற்குப் பிறகு ஆண் பிள்ளைகளிடம் ஆதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளும் பெற்றோர் பெண் பிள்ளைகள் விஷயத்தில் அப்படி இருப்பதில்லை என்று தோன்றுகிறது. அதுவும் குறிப்பாக, கல்யாணத்திற்குப் பிறகு பெண் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையில் திடீரென்று மலரும் ஒரு பாசம், அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டவனுக்கு ஒரு கிலியை மட்டுமே ஏற்படுத்துகிறது. நம்மிடையே நிறைய பார்வதிகளும் நீலாப்பிள்ளையும் இருந்துகொண்டே தான் இருக்கப்போகிறார்கள்.
என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை நான் என்றைக்கும் மறக்காமல் இருக்கும்படிச் செய்த நாஞ்சில் நாடனுக்கு நன்றிகள்.
நாவலைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள பாஸ்கர் லக்ஷ்மணின் இந்தப் பதிவு உங்களுக்கு உதவும்: http://tlbhaskar.blogspot.in/2010/12/blog-post_30.html
தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்,
விஜயா பதிப்பகம், 294 பக்கங்கள், விலை ரூ.130
No comments:
Post a Comment