மரணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தத்துவமாகச்
சொல்லப்போனால், உலகம் சுற்றிக் கொண்டிருக்க மரணம் அவசியம் எனலாம். ஆனால், தன்னைச் சார்ந்தவர்களும்,
தான் சார்ந்தவர்களும் மரணிக்கும் போது தான் அதன் கிலி விளங்கும். எனக்கு மரணங்கள் பெரும்
அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றைக்கும் அப்படித்தான். வயதில் பெரியவர்கள் மரணமென்பதை
ஏதோ பாற்பல் விழுந்ததைப் போல் எடுத்துக்கொள்ளும் போது ஆச்சரியமாக இருக்கும். அது அவர்களுடைய
உண்மையான வெளிப்பாடா அல்லது பயத்தை மறைக்க அப்படிச் இருக்கிறார்களா? இன்றைக்கு கேள்விப்படும்
மரணங்கள் மூப்பின் காரணமாக இல்லை என்பது என்னுடைய அச்சத்தை அதிகரித்திருக்கக்கூடும்.
என்னுடைய எல்லா பயத்திற்கும் அடிப்படைக் காரணமாக இந்த மரண பயம் இருக்கக்கூடும். மரணச்
செய்திகளிலிருந்தும் துக்க வீடுகளுக்குச் செல்வதிலிருந்தும் என்னை விலக்கியே வைத்திருந்திருக்கிறேன்.
ஆனால், சிலருக்கு மரணத்தின் மீதொரு ஆர்வம் இருக்கிறது. யார் செத்துப் போனார்கள்? எப்படி
செத்துப் போனார்கள்? என்பது மாதிரியான ஆர்வம். பள்ளியில் படிக்கும் போது, எங்காவது
கல்வெட்டாங்குழியில் பிணம் கிடந்தால், பல கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்துப் போய்ப்
பார்த்துவிட்டு வரும் நண்பர்கள்; என்றென்றைக்கு யார் வீட்டில் திவசம் என்று நினைவில் வைத்திருப்பவர்கள் (திவசத்தை மட்டும்,
கல்யாண காரியங்கள் இவர்களுக்கு நினைவில் இருக்காது),
மரணத்தோடு முடியும் சினிமாக்களையும் கதைகளையும் ஒப்பற்ற படைப்புகளாக சித்தரிப்பவர்கள்,
விடிகாலை ஆறுமணிக்கு சாட்டில் வந்து ’மனைவியின் அலுவலகத்தில் நுழைந்து அவரைக் கொன்ற
கணவன்’ என்ற செய்தியைக் கொடுக்கும் நண்பர் என்று பலரை இந்தப் பட்டியலில் வைக்கலாம்.
புலிநகக் கொன்றை படித்தபோது தங்களுக்கு ஒரு நூற்றாண்டுத்
தனிமை புத்தகம் ஞாபகத்திற்கு வந்ததாக சிலர் எழுதியிருக்கிறார்கள். நான் நூற்றாண்டு
காலத் தனிமை படித்ததில்லை. ஆனால் எனக்கு பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் நினைவுக்கு
வந்தது. மேலும் கிருஷ்ணனின் ஒரு வசனம் பாலகுமாரனை நினைவுபடுத்தியது. பரம்பரைக் கதைகள்
எழுத கடந்த நூற்றாண்டு இந்திய வரலாறு நல்லதொரு சவுகரியம். ஹாலிவுட்காரர்களுக்கு உலக
யுத்தம் மாதிரி, இங்கும் வருடத்திற்கு ஒரு நாவல் எழுதிவிடக் கூடிய வெளி இந்திய வரலாற்றில்
இருக்கிறது. கிருஷ்ணன் இந்த வரலாற்றை மொத்தமாக எடுத்துக்கொள்ளாமல் திருநெல்வேலிப் பிரதேசத்தில்
நடந்தவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார். மருதுபாண்டியரின் திருச்சிராப்பள்ளி அறிக்கை
மாதிரியான அதிகம் தெரியாத விஷயங்கள் கதையில் வருகின்றன. ஆஷ் துரை கொலை வழக்கும் வருகிறது.
ஒரு கதாபாத்திரம் வ.வே.சு ஐயர் கூட்டும் ரகசியக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதே
கதாபாத்திரம், சிதம்பரம் பிள்ளையையும் பாரதியாரையும் சந்திக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின்
மகன் வ.வே.சு ஐயர் சேரன்மகாதேவியில் நடத்திய பள்ளியில் படிக்கிறான். அங்கே இரண்டு பிராமண
மாணவர்கள் மற்ற மாணவர்களோடு அமர்ந்துண்ணாதது பற்றிய பிரச்சனையும் சொல்லப்பட்டிருக்கிறது.
வவேசு ஐயரின் மரணமும் கூட. வரலாற்றையொட்டி எழுதப்படும் புனைவுகளில் ஒரு பிரச்சனை, வரலாற்றுக்கும்
புனைவுக்கும் இருக்கும் இடைவெளி; அதிகமாக இருந்தால் புனைவும் வரலாறும் தனித்தனியாகத்
தெரியும்; வரலாறு நமக்கு நன்றாகத் தெரிந்து, புனைவும் வரலாறும் நெருக்கமாக காட்டப்பட்டிருந்தாலும்
பிரச்சனை தான் - இந்நாவலில் வரும் சப் இன்ஸ்பெக்டர் நாயுடு சொல்வது போல் “ஐயங்கார்,
நானும் காது குத்தி இத்தான் தண்டி கடுக்கன் போட்டிருக்கேன்” என்று சொல்லத் தோன்றும்.
இவ்விரண்டு எல்லைகளுக்கும் நடுவில் நாவலைக் கொண்டுபோயிருக்கிறார், என்றாலும் ஒன்றிரண்டு
இடங்களில் எல்லைகளைத் தொட்டது போல் எனக்குத் தெரிகிறது. உங்களுக்கு அப்படித் தெரியாமல்
போகவும் வாய்ப்பிருக்கிறது. நாவலில் சில விஷயங்கள் ‘ஏன் இதெல்லாம் வருகிறது?’ என்றுதான்
முதலில் தோன்றுகிறது; ஆனால், கொஞ்சம் நிறுத்தி யோசித்தாலோ மறு வாசிப்பு செய்தாலோ அவற்றுக்கான
காரணங்கள் தெளிவாக இருக்கின்றன.
கிருஷ்ணன் கதை சொல்லும் விதம் அழகு. கதை, பலமுறை நிகழ்காலத்திற்கும்
இறந்த காலத்திற்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. கதையில் மது என்பவரைப் பற்றி ஒரு அத்தியாயம்
எழுதிவிட்டு, அவனுக்கு என்ன ஆனது என்பதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், சில
பக்கங்கள் தாண்டி மதுவின் மகன், மதுவின் நண்பரோடு நடத்தும் உரையாடலில் மதுவுக்கு என்ன
ஆனது என்பதை தெரியப்படுத்துகிறார். இது மாதிரி நிறைய. ஓரிடத்தில் ஒரு விஷயத்திற்கு
கொடுக்கப்படும் hint பல பக்கங்கள் தாண்டி தெளியும் போது, ஒரு பரவசம்.
ஐயங்கார்களைப் பற்றி வேறு நாவல் ஏதாவது வந்திருக்கிறதா என்று
தெரியவில்லை. தென்கலை-வடகலைப் பிரச்சனை, அத்வைதம்-விசிஷ்டாத்வைதம், கம்யூனிசம் போன்று
பல விஷயங்கள் பற்றிய விவாதங்கள் வந்து போகின்றன. ஓரிடத்தில், ‘சங்கரர் இந்தப் பிரபஞ்சமே
பொய்ன்னு சொல்றார்’ என்று ஒருவன் சொல்கிறான். ஆனால் நான் வேறு மாதிரிப் புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஐயங்கார்களைப் பற்றியும் அவர்களுக்குள் நடக்கும் இந்த விவாதங்கள் பற்றியும் இன்னமும்
எழுதியிருக்கலாம். பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெருவில், இருந்த சில ஐயங்கார்கள்
பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க வரும்போது, சாணியைக் கரைத்து தெளித்து குழாயை சுத்தம்
பண்ணிய பிறகே தண்ணீர் பிடிப்பார்கள் என்று பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன். 'அடியேன்
விண்ணப்பம்’ என்று அவர்கள் உரத்து ஓதும் பாசுரங்களுக்காகவும் அந்தப் புளியோதரைக்காகவும்
அவர்களை விரும்பிக்கொண்டேயிருக்கலாம்.
கம்யூனிசம் பற்றி எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. இந்நாவல்
கம்யூனிசம் பற்றி இன்னமும் பேசியிருக்கலாம் என்று தோன்றினாலும் பேசிய வரையில், நாவலின்
அருமையான பகுதிகளாக அவை அமைந்திருக்கின்றன. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகள்
உதவாது என்பதை இன்றைக்கு நம்பும் வகையில், நம்பிக்கும் அமுதனுக்கும் நடக்கும் உரையாடலை
க்ளாசிக் என்பேன்.
"....உழைக்கும் மக்களின் சொர்க்கத்தை உண்டாக்குவோம்னு
சொன்னா அவங்க நமக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைப்பாங்க. சாதாரண மக்கள் அநியாயத்தை
தினமும் சந்திக்கறாங்க. அதை எதிர்கொள்ளறதுக்கு அவங்க வழி கண்டுபிடிச்சி வைச்சிருக்காங்க.
பல வருஷங்களா போராடி போராடி கண்டுபிடிச்ச வழி. நிதம் சண்டை போடறாங்க..... ...இந்த வழியெல்லாம்
குப்பை, கூளம். நாம நடந்தா மூக்கைப் பிடிச்சிண்டு நடக்கணும். ஒத்துக்கறேன். ஆனா நம்பறவனுக்கு
நாத்தம் பெரிசில்லை. அவன் அதை கண்டுக்கறதே இல்லை. நாம சொல்றோம் எங்க வழில வா. அது நல்ல
வழி, சுத்தமான வழின்னு. நல்லதுதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனா அவன் போற வழியை அடைச்சிட்டு
நாங்க காட்டற வழிலவான்னு அவங்கிட்டச் சொன்னா அவன் நம்மை நம்பப் போறதில்லை...”
"....நான் மதத்தை மனித குலத்தினுடைய வளர்ச்சியை வேகப்படுத்த
உபயோகப்படுத்தாலாங்கறதை நிச்சயமா நம்பறேன். அம்புலிமாமா கதைகள் மக்களுக்கு, அதுவும்
மாற்றத்தின் விளிம்பில இருக்கற மக்களுக்கு நிச்சயமாகத் தேவை. மதம் அப்படிப்பட்ட கதைகளை
நிறைய வச்சிருக்கு. மதத்து மேல உள்ள இந்த மூடத்தனமான வெறுப்பும் அதனுடைய நல்ல அம்சங்களைக்
கண்டுக்காம விடறதும்தான் நம்மை மக்கள்கிட்ட இருந்து அன்னியப்படுத்தி இருக்கு...”
Kurt Vonnegut எழுத்துக்கான எட்டு விதிகளைச் சொல்லியிருப்பார்.
அதில் ஆறாவது..
கொடூரனாக இருங்கள். உங்கள் கதையின் பிரதான பாத்திரங்கள் எவ்வளவு இனிமையானவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருந்தாலும், அவர்களுக்கு கொடுங்காரியங்கள் நிகழ்த்துங்கள்- வாசகன் அவர்களின் இயல்பை புரிந்து கொள்ள அது உதவும்.
இந்நாவலில் மேலே சொன்ன விதி அதிகம்
பயன்பட்டிருக்கிறது. கதையில் நான்கைந்து பக்கங்கள் வரும் ஒரு வயதான ஆசிரியர் கூட
மஞ்சள் காமாலை கொண்டு இறந்து போகிறார். ”நம்ம
குடும்பத்துல சாவு என்ன புதுசா’ என்கிற ரீதியில் அகால மரணங்கள் துரத்திக்கொண்டிருக்கும்
ஒரு குடும்பம். ஆனால், ஒரு மரணம் நிகழப்போகிறது
என்று தெரிந்துவிடும் போது, அடுத்த ஒவ்வொரு வரியையும் வாசிக்க வாசிக்க பயம் கூடிக்
கொண்டே போகிறது. இரண்டொரு முறை புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன். ‘இது வெறும் கதை’ என்று
எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு நம்மையும் பாதித்துவிடுகிறது.
நாம் நமக்கு நல்லவை மட்டுமே நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், அது சாத்தியமில்லை.
நாம் நமக்கு நல்லவை மட்டுமே நடக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால், அது சாத்தியமில்லை.
புலிநகக் கொன்றை, பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், 331 பக்கங்கள், விலை ரூ.250, இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment