சுஜாதாவின் குறுநாவல்கள்
(கணேஷ்-வசந்த்)
நான்காம் தொகுதி
சென்ற வாரம் சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதியைத் தொடர்ந்து இந்த வாரம், கணேஷ்-வசந்த் தோன்றும் குறுநாவல்கள். தமிழில் ராஜேஷ்குமாரின் குற்றபுனைவுகள் நிறைய வாசித்து இருக்கிறேன். அதுதான் குற்ற புனைவு கதைகளுக்கும் எனக்குமான முதல் உறவு. அதற்கு அப்புறம் இரட்டையர் சுபா எழுதிய கதைகளும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். சுஜாதா எழுதி, நான் முதலில் வாசித்த குற்றபுனைவு எது என்று இப்போது நினைவில் இல்லை. ஆங்கிலத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் நிறைய வாசித்திருக்கிறேன். இவை தவிர இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன், எல்லாவற்றையும் பட்டியல் போடும் அளவுக்கு நினைவில்லை. ஆக என்னுடைய வாசிப்பு அனுபவம் குற்றபுனைவை பொறுத்தவரை மிகவும் சிறிது. இதை மனதில் இருத்திக் கொண்டு இந்தப் பதிவை வாசிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் மொத்தம் ஐந்து குறுநாவல்கள். அதில் முதல் நாவலில் மட்டும் கணேஷ் தோன்றுவது இல்லை, வசந்த் மட்டும் கடைசியில் வருகிறார். இதுதான் வசந்த் தோன்றும் முதல் நாவல் என்று நினைக்கிறேன் (தவறாக இருப்பின், வசந்த் தோன்றும் முதல் கதை, நாவலை தெரியப்படுத்தவும்).
தொகுப்பின் முதல் நாவல், “மேகத்தை துரத்தினவன்”. பெற்றோரை இழந்த அன்பழகன் ஒன்றுவிட்ட சித்தப்பா - சித்தியால் வளர்க்கப்படுகிறான், அவர்கள் வீட்டில் வேலைக்காரன் மாதிரி இருக்கிறான். அவன் சித்தப்பா வேலை செய்யும் வங்கியைக் கொள்ளையடிக்க உதவி செய்யும்படி மாணிக்கம் என்பவன் அவனை வற்புறுத்தவே, தன்னைக் கேவலமாக நடத்தும் அவர்களை பழிவாங்கும் பொருட்டு அதில் உதவி செய்ய முற்படுகிறான், அதே சமயம் மிகவும் தயங்குகிறான். இதில் அன்பழகன் பாரதியாரின் கவிதைகள் விரும்பி படிப்பதைக் காட்டி, அந்த கதாபாத்திரத்தின் முரணை வெளிப்படுத்துகிறார் சுஜாதா. வங்கியைக் கொள்ளையடிக்கும்போது அவர்களை போலீஸ் பிடித்து விடுகிறது. அதைத் தொடர்ந்து வசந்த் மட்டும் வருகிறார். கடைசியில் சித்தியின் தங்கை ரத்னா உண்மையை கண்டுபிடிகிறாள். எல்லோரும் கொஞ்சம் தொடத் தயங்கும் ஒரு விஷயம் 1979இல், இந்த நாவலில் குற்றவாளி குற்றம் செய்ய காரணம் என்று விளக்கப்படுகிறது.
“நில்லுங்கள் ராஜாவே” கொஞ்சம் ஆங்கில துப்பறியும் கதையம்சத்தைக் கொண்டது. தன்னை தன் மனைவி, மகள், வேலை செய்யும் நபர்கள் முதல் யாருமே அடையாளம் கண்டுகொள்வது இல்லை என ஒரு ஆள் புகார் செய்வதுடன் இந்த நாவல் ஆரம்பமாகிறது. தன் மனைவி, வீடு வரை அவன் சொல்லும் அனைத்து நிகழ்ச்சிகளும் உண்மையாக இருக்கவே, அவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் கணேஷ்-வசந்த் உதவியை நாடுகிறார். இதில் இருந்து கதை ஒரு சர்வதேச தலைவரை கொல்லும் செயலை நோக்கி செல்கிறது. இது கதையின் ஒரு பகுதியாக இருந்தாலும், மனிதனின் மனதை எப்படி எல்லாம் கட்டுபடுத்தலாம், மருந்து, Hypnotism, போன்றவைகள் மனிதனின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவனை எப்படி மாற்றும் என்று மனநல மருத்துவ அறிவியல் நாவலுடன் பிணைந்து வருகிறது. நாவல் முடிவில் இதை நம்பாமல் பல பேர் இருப்பார்கள், அவர்களுக்காக ஒரு புத்தகத்தையும் பரிந்துரைக்கிறார்.
“கொலையரங்கம்” ஈழப்பிரச்சனையின் ஆரம்பகாலத்தில் வந்த நாவல். நாவலோடு இந்த கருவை இணைத்து, தன்னுடைய எண்ணங்களையும் கதாபாத்திரங்கள் மூலம் மற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் மூலமும் ஈழப் பிரச்சினையின் வலியை வெளிப்படுத்துகிறார். பீனா - உத்தம் தங்களுடைய ஒன்றுவிட்ட பாட்டனார் சொத்தை வாரிசு இல்லாமையால் பெறுகின்றனர். அதில் ஒரு அரங்கம் அமைக்கின்றனர், அங்கு ஒரு வெடிகுண்டு வெடிக்கிறது, அடுத்த வெடி உத்தமை தாக்கவே, மற்றும் சில சந்தேகங்களால் பீனா மேல் சந்தேகம் ஏற்படுகிறது. கடைசியில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிகின்றனர்.
”எதையும் ஒரு முறை” சட்ட கல்லூரியில் உரையாற்றிவிட்டு ஒரு மாணவியுடன் கணேஷ்-வசந்த் திரும்பும்பொழுது, கூவத்தில் ஒரு உடல் மிதக்கிறது, அந்தப் பெண் அதைக் கண்டு வருந்துகிறாள். சில நாள் கழித்து கணேஷ் - வசந்த் மறுத்தும் அவள் எப்படி இறந்தாள் என ஆராய இறங்குகிறாள். அவளுக்கு உதவி செய்யும் பொருட்டு கணேஷ் - வசந்தும் அதில் தீவிரமடைகின்றனர். நாவலின் முடிவு சொல்லப்படாமல் விடப்பட்டாலும் (யார் குற்றவாளி என்று முடிவுக்கு வரமுடியாமல் கதை முடிகிறது), அதில் குற்றம் சாட்டப்படுகிறவனின் செயல்கள் மிகவும் புதியவை.
“மலை மாளிகை” ஒரு Fantasy கதை என்று வைத்துக் கொள்ளலாம். உயிர் வாழ்தலை நீடிக்கும் ஆராய்ச்சி செய்யும் ஒருவரை கணேஷ்-வசந்த் சந்திக்க, அவர் கூடு விட்டு கூடு பாய்தலை நிகழ்த்திக் காட்ட, அதில் கணேஷ் வசந்துக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஆனால் கடைசியில் முடிவு வேறு விதமாக அமைய, ஒரு திகில் கதை உணர்வோடு ஒப்பிட முடிகிறது.
இதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கணேஷ்-வசந்தை பற்றி நான் நினைத்ததை பகிர விரும்புகிறேன். நாவலின் ஒரு இடத்தில், ஒரு பெண், கணேஷைப் பார்த்து வசந்த் உங்கள் ஆல்டர்-ஈகோ என்று கேட்பாள். எனக்கு என்னவோ நிறைய பெண்களுக்கு வசந்தை பிடித்தும் பிடிக்காமல் போகலாம். வசந்த் ஒரு Flirting டைப்பான மனிதன். கணேஷை விட பல விஷயங்களில் புத்திசாலி. கணேஷ் நிதானமாக செய்யும் வேலைகளை, இவன் தன்னுடைய பாணியில் செய்வான். அவன் சொல்லும் ‘ஏ’ ஜோக்குகள், இரட்டை அர்த்தத்துடன் வரும் வசனங்கள், சில பெண்கள் மத்தியில் பிடிக்காமல் இருந்தாலும், ஆண்கள் அடிமனதின் எண்ணங்களை வசந்தின் மூலம் சுஜாதா வெளிப்படுத்துகிறார் என் நினைக்கிறேன். இதே இந்த இருவரும் சாதாரண வக்கீல்கள் ஆக இருந்து இந்த கதைகளை எழுதியிருந்தால், இவ்வளவு தூரம் ரசிக்கப்படுமா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை, நான் வாசித்த எல்லா கணேஷ் - வசந்த் நாவலிகளிலும் சட்ட நுணுக்கங்கள், சுஜாதா தான் வாசித்த புத்தகங்கள், கவிதைகள், குற்றபுனைவோடு சேர்த்து எழுதி இருப்பார். அது வசிகரிக்கும் விதமாக இருக்கிறது. அதுவே என்னை பல புத்தகங்களை படிக்கவும் தூண்டுகிறது.
வஸந்த் சுஜாதா ‘ப்ரியா’ நாவலை குமுதத்தில் எழுதியபோதே உதயமாகி விட்டான். நீங்கள் படித்த கதையில் நன்கு ஃபார்ம் ஆன வஸந்த் கேரக்டர்தான் வரும்- கெஸ்ட் அப்பியரன்ஸாக. எல்லாமே ரசனைககு உத்தரவாதமான, சுவாரஸ்ய மொழி நடையில் அமைந்த கதைகள். அதான் சுஜாதா!‘
ReplyDeleteThanks for the info bala ganesh,
ReplyDelete"மேகத்தைத் துரத்தினவனில்" சில வாக்கியங்கள் அப்படியே நினைவில் இருக்கின்றன.
ReplyDeleteகஞ்சா அடித்த அன்பழகன் சிரித்தது அன்பழகனுக்கு கேட்டது
அப்புறம் இரவு காட்சிக்கு சித்தி, அன்பழகன், ரத்னா எல்லாரும் போவார்களே. அங்கு அந்த "ஆறிலிருந்து அறுபது வரை" படத்தை சித்தி விசித்து விசித்து அழுதபடி பார்ப்பாள்! அன்பழகன் இருட்டில் ரத்னா மேல் கை பட ரத்னா எச்சரிப்பாள்...
நச் கதை ஸார் அது!
சுஜாதா குறுநாவல்கள் தொகுதி 4 புத்தகம் வேண்டும்.தயவுசெய்து புத்தகம் கிடைக்கும் இடத்தை தெரிவிக்கவும்.உயிர்மையில் இந்த புத்தகம் கிடைக்கவில்லை.
ReplyDelete