நிர்வாக குரு - பகவான் ஸ்ரீஇராமர்
ஆசிரியர் : டாக்டர் சுனில் ஜோகி
தமிழில்: PVNK Translators
பக்கங்கள்:188
விலை: ரூ.125
***
* ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.
* பல இடங்களில் ஜுனூன் தமிழ் போல் வாக்கிய அமைப்புகள்.
* சில வாக்கியங்களை மறுபடி மறுபடி படித்தால்தான் புரியும் என்கிற நிலைமை.
இப்படி பல பிரச்னைகள் இருந்தும், மனஉறுதியோடு இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசித்து முடித்தேன். ஏன்? ஸ்ரீராமரைப் பற்றி ஏதாவது புதிய / சுவாரசியமான விஷயம் இருக்கான்னு தெரிந்து கொள்வதற்கே. ஸ்ரீராமர். மாயாஜாலங்கள் / மந்திர-தந்திரங்கள் எதுவும் செய்யாமல், ஒரு மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, எப்படி வாழவேண்டும் என்று உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஓரிரு இடங்களில் அவரது செயல்கள் நம்மில் பலருக்கு பிடிக்காவிட்டாலும் / ஒப்புதல் இல்லாவிட்டாலும் வாழ்வியல் நெறிகளில் பெரும்பான்மையோருக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர் ஸ்ரீராமரே. ஆகவே அவரைப் பற்றி படிப்பதற்காக வாங்கிய புத்தகம்.
துளசிதாசர் இயற்றிய ராமாயணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு புத்தகத்தை எழுதியுள்ளார் ஆசிரியர். மொத்தம் 30 கட்டுரைகள். அன்பு, பணிவு, குரு பக்தி, உண்மை, நேர்மை, நல்லொழுக்கம், நீதிநெறி என்று திருக்குறள் அதிகாரங்களைப் போன்ற கட்டுரைத் தலைப்புகள். துளசிதாசரின் மேற்கோள்கள், மகாபாரதம், இந்து மதத்தின் பிற துறவிகள், இஸ்லாம் மதத்தின் கதைகள் என பலதரப்பட்ட இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமான குட்டிக் கதைகள் புத்தகம் முழுவதும் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன.
(மேலே சொன்ன பிரச்னைகளோடு இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளவும். துளசிதாசரின் (இந்தி) பாடல் வரிகள், தமிழ் எழுத்துக்களில் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணம்:
டாட் டேனி அட்டி ப்ரபல் க்ஹல் காம் க்ரொத் அரோ லொப்ஹ்.
முனி பிகயான் தம் மன் கரஹிஅன் நிமிஷ் மஹுன் ச்ஹ்ஹொப்ஹ்.
இந்தி நன்கு அறிந்தவர்களாலேயே இதைப் படித்து சரியாக புரிந்து கொள்ளமுடியுமா என்பது சந்தேகமே).
* தந்தையாரிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது
* தாயார்களிடம் காட்டிய மரியாதை
* குரு’வினிடம் செலுத்திய பக்தி
* சகோதரர்களிடம் கொண்ட அன்பு
* மனைவியிடம் கொண்ட காதல்
* மக்களிடம் / தன்னை சரணடைந்தவர்களிடம் காட்டிய ஆதரவுக் கரம்
இப்படி ஸ்ரீஇராமரின் பல்வேறு குணநலன்களை, நற்பண்புகளை எடுத்துக் காட்டி, அவரை ஒரு சிறந்த நிர்வாக குருவாக நிறுவுகிறார் ஆசிரியர். இத்தகைய நற்குணங்களை நாமும் பின்பற்றினால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
சில நல்ல விளக்கங்களைப் பார்க்கலாம். தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இது எப்படிப் பொருந்தும் என்பது சொல்லாமலேயே புரியும்.
ஸ்ரீராமர் பணிவில் உயர்ந்தவர். அவரது பணிவின் காரணமாகவும், மற்றவர்களுக்கு மரியாதையளிப்பதன் காரணமாகவும் எல்லோராலும் விரும்பப்பட்டார். அவர் இந்தக் கொள்கையில் கடைசிவரை நம்பிக்கை கொண்டிருந்தார்.
இதற்கு ஆசிரியர் காட்டும் இராமாயணக் காட்சி - சிவனுடைய வில்லை யாரோ முறித்ததை அறிந்த பரசுராமர், அப்படி முறித்தவரை நான் கொல்லுவேன் என்று கோபப்பட்டாராம். அப்போது இராமர், தான்தான் அந்த வில்லை முறித்தது என்று சொல்லி, பரசுராமர் எவ்வளவோ கோபப்பட்டும், அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் பற்பல தைரியமான பதில்களைச் சொல்லி, இறுதியில் அவரை அமைதிப்படுத்தினாராம். இந்த கட்டுரையில் வழக்கம்போல் இராமாயண வரிகள், இந்தக் கருத்தை விளக்கும் ஒரு குட்டிக் கதையைச் சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.
ஸ்ரீராமர் ஒரு அஸ்திவாரக் கல் போல செயல்பட்டார். சுய விளம்பரம் அவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் அமைதியாக செயலாற்றுவதையே விரும்பியதுடன் அவரைப் பற்றி அதிகம் நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்தார். அவர் தனிமையை விரும்பியதுடன் கூட்டமாக இருப்பதை அதிகம் விரும்பவில்லை.
இதற்கான காட்சி. ஆரண்ய காண்டத்தில், இராமரைத் தொடர்ந்து வந்த மக்கள், தாங்களும் அவருடன் காட்டுக்கு வருவதாகச் சொன்னார்களாம். அதை விரும்பாத இராமர், அவர்களுக்கே தெரியாமல் புறப்பட்டுச் சென்றாராம்.
குருபக்திக்கான கட்டுரை. ராஜகுமாரனாக இருந்தாலும், அனைத்து கல்விகளிலும் தேர்ச்சி பெற்றுவந்தாலும், இராமர் தன் குருவினிடத்தில் அபார பக்தி கொண்டிருந்தார். குருவிற்கு முன்னரே எழுந்து தன் பூஜைகளை முடித்து, பிறகு குருவிற்கு உதவிகள் புரிந்து, குருவின் பணிவிடைகளுக்குப் பிறகே இவர் ஓய்வு எடுப்பாராம்.
இராமருக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்கிற சந்தர்ப்பம். தசரதர் தனக்குப் பதிலாக வசிஷ்டரை அனுப்பி, ஸ்ரீராமருக்கு இந்த செய்தியைச் சொல்லி தகுந்த அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீராமரும் தன்னைத் தேடி வந்த குருவிற்கு பணிவிடைகள் செய்து, பின்னர் சொன்னாராம் - தங்கள் வருகையால் இந்த வீடு புனிதமடைந்தது. ஆனாலும், நீங்கள் என் குரு. நீங்கள்தான் என்னை அழைத்திருக்க வேண்டும். அப்படி செய்தியிருந்தீர்களேயானால், நான் ஓடோடி வந்து தங்களை தரிசித்திருப்பேன் என்றாராம். இந்தக் கட்டுரையில் மேலும் சில காட்சிகள் உள்ளன.
இப்படி ஸ்ரீராமரின் சிறப்புகளை விளக்கியுள்ள அனைத்துக் கட்டுரைகளைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். மேற்சொன்ன பிரச்னைகளை மறந்து, இவற்றை படிக்க விரும்புவோர் கண்டிப்பாக படித்து மகிழலாம்.
***
No comments:
Post a Comment