நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்துகொண்டு, பூஜையைப் பண்ணிக்கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதே இல்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே குறைச்சலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் அபிப்பிராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதை தான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
2004’ஆம் வருடம் தீபாவளி விடுமுறை நிறைந்து பட்சணங்கள் நிறைய தின்று முடித்த அலுப்பில் அலுவலகம் நுழைகிறேன்.
“என்னய்யா கிரி! கவனிச்சியா? உங்காள அரஸ்ட் பண்ணிட்டாங்க போல?”, என்று வரவேற்றார் வேலு சார்.
“எங்காளா? யார் சார் அவரு?”
“அதான்யா காஞ்சி பெரியவரு”
வேலு சார் ஒரு மதசார்பற்ற ப்ராடஸ்டண்ட் வகையறா. மதத்தை அல்லது கடவுளை பக்திக்காக என்று அல்லாமல் அதன் தத்துவங்களுக்காகவும், தொன்மைக்காகவும், பின்னணியில் இருக்கும் ஆழ்ந்த வரலாறுக்காகவும், சுவாரசியமான கதைகளுக்காகவும் என அணுகுபவர். சர்ச்சுக்குச் செல்வார், பிரசங்கங்களை ஆர்வமாக, ஆழமாகக் கேட்பார். அதன் நுட்பத் தகவல்களை , தத்துவங்களை பிரச்சாரமாக இல்லாமல், ஒரு வியப்போடு நம்மிடம் பகிர்வார். இந்துக் கோயில்களுக்குப் போவார், அதன் பழமையில் திளைப்பார். அங்கிருக்கும் சிற்பங்களில் சொக்கிப் போவார். காமக்களியாடும் சிற்பங்கள் என்றால் இன்னமும் குதூகலமுற்றுக் கூத்தாடுவார். கோயில்களின் புராணத்தை தெரிந்தவர்களிடம் ஆர்வமாகக் கேட்டறிவார்.
எப்போதும் நாங்க, நீங்க என்று பிரித்துப் பேசாது பொதுவாகப் பேசும் அவர் ஏதேனும் சாமியார் விவகாரம் என்றால் “உங்க” என்றும் பாதிரியார் விவகாரம் என்றால் மட்டும் “எங்க” என்றும் பேசுவார்.
“என்னது சார்? எதுக்கு?” என்ன சொல்றீங்க?”
“வரதர் கோயில் மர்டர் விஷயம்யா. என்ன ஒண்ணும் தெரியாத மாதிரியே கேக்கற?”
2005’ஆம் வருடம் ஊடகங்கள் இன்று இருக்கும் நிலைக்கு மலிந்த நிலையில் இல்லை என்றாலும், அவலுக்காய் ஏங்கிய பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இப்படி ஒவ்வொரு விவகாரத்திற்கும் பசிகொண்ட மிருகமாய்க் காத்திருப்பது என்றுமே உண்டன்றோ? இந்தக் கைது விவகாரம் பற்றி மாதக்கணக்கில் பேசப்பட்டது. பல்வேறு கோணங்களில் அலசப்பட்டது, தேவையானோர் துணைகொண்டு மடத்தின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ள சிலப்பல உண்மை விளம்பிகள் வெளிக் கொணரப்பட்டனர்.
”ஆமாமாம்! அந்த மனுஷர் பார்வையே சரியில்லை தெரியுமோ”, இத்தனை நாள் மனசில் வைத்திருந்ததை சில சாமானியப் பெண்மணிகளும் கொட்டத் துவங்கினர்.
எனக்கு பக்தி வேண்டும், கடவுளைக் கண்டடைய குருவாக ஆச்சார்யன் ஒருத்தன் எனக்கு வேண்டும், நான் மதிக்கும் வேதத்தை போதிக்க, எனக்கு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதனை எடுத்துச் செல்ல ஒரு ஸ்தலம் தேவை; அது நிச்சயம் நான் மதிக்கும் இந்த மடம்தான் என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு சாமானிய பக்தன் சற்றே குழம்பித்தான் போனான்.
“காஞ்சி பீடாதிபதி” என்ற அடைமொழியோடு “பெரியவா” பெயர் தாங்கி அவர் ஆசியுடன் நிகழ்கிறது என்று குறிப்பிட்ட தன் வீட்டு விசேஷத்திற்கு அச்சிட்ட அழைப்பிதழ்களில் “காஞ்சி பரமாச்சார்யார் ஆசியுடன்” என்று யாரையும் கேட்காமல் தானே மாற்றிக் கொண்டான்.
ராமதுரை ஒரு தீவிர வடகலை வைணவன். இருந்தாலும் காஞ்சிப் பெருநகரில் வளர்ந்தவன் என்பதால் அவனுக்கும் மடத்தின் பால் பக்தியுண்டு. பரமாச்சார்யார் பெயரைக் கேட்டாலே மரியாதையுடன் எழுந்து நின்றுவிடுவான். ஒருமுறை பிகாருக்கு ராமதுரை சென்றபோது ஒரு விவாதம்:
“என்ன மோகன்சிங், உங்க ஊரெல்லாம் ஒரே கொலை, கொள்ளை’ன்னு இருக்கே. துப்பாக்கி தூக்காத மனுசனையே உங்கூர்ல பாக்க முடியாதா?”
“அரே சாப்! எங்க ஊர்ல சாமானியந்தான் துப்பாக்கி தூக்கறான். உங்க ஊர்ல சாதுவே கத்தி எடுக்கறான். பெருசாப் பேச வந்துட்ட?”
வாயடைத்துப் போய் ஒன்றும் பேசவில்லை ராமதுரை. மனசு விக்கித்து ரெண்டுநாள் தூங்கவில்லையாம். பரமாச்சார்யார் காலத்துல என்னமா இருந்த மரியாதை. மடங்களுக்கெல்லாம் இமயமா ஓங்கி உயர்ந்து காஞ்சிக்கே, ஏன் தமிழகத்துக்கே பெருமை சேர்த்த மடத்தைப் பத்தி இந்த பயல்லாம் பேசறானே என்று ஊர் திரும்பியதும் எங்களிடமும் ரொம்பவும் புலம்பிக் கொண்டிருந்தவன்.
இங்கே பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள பரமாச்சார்யாரின் கருத்தைத்தான் அன்று நாங்கள் விவாதித்தோம். இருந்தாலும் ராமதுரைக்கு ரொம்ப நாள்களுக்கு மனசே ஆறவில்லை. இப்படி நிறைய ராமதுரைகள் இங்கே இருந்திருக்கக்கூடும்.
ஹரஹர சங்கர ஜனவரி 2005’ல் வெளிவந்த புத்தகம். இப்போது நாளொரு க்ரைமும், பொழுதொரு கேஸுமாய் ஊடகங்கள் ஜமாய் ஜமாய் என ஜமாய்த்துக் கல்லாக் கட்டி பிஸினஸ் பண்ணிக் கொண்டிருக்க, காஞ்சி விவகாரம் சூடாக இருந்த அந்த நேரத்தில் இந்தப் புத்தகத்தை மிகவும் தைர்யத்துடனே எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன். இதற்கு எத்தகைய விமர்சனங்கள் வரும் என்பதனையும் அவர் நிச்சயம் முன்கூட்டியே அறிந்திருப்பார்.
காஞ்சி ஸ்வாமிகள் 2004’ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இடத்தில் நிறைகிறது கதை. இதன் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் பற்றியெல்லாம் ஏதும் விவாதிக்காமல் அந்த நிகழ்வின் முன்னிரவில் ஸ்வாமிகள் உறங்கப் போகும் இடத்தில் தொடங்குகிறது இந்தக் கற்பனைப் புனைவு.
ராமதுரை போன்ற உணர்வுப்பூர்வ பக்தர்களுக்கும், மேலே நான் குறிப்பிட்ட பிற சாமானிய பக்தர்களுக்கும் நெஞ்சில் அரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடையாய் ஓரிரவின் நிகழ்வுகள்.
இந்த காலகட்டத்தில் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தால் “மறுபக்கத்தின் குரல்” என்றொரு அடைமொழியுடன் புத்தகம் வெளியாகியிருக்கலாம் :) #ஜஸ்ட்மிஸ்
போலீஸார் ஸ்வாமிகளை கைது பண்ண வருகிறார்கள்.
“இது மகாபாபம்...” என்று ஒரு பிராமண வயோதிகர் பொறுமிய குரல் கேட்டு ஸ்வாமிகள் அந்தத் திக்கைப் பார்த்தார்
“சிவசிவ... இதென்ன, நாடகம் நடந்துகொண்டுதானே இருக்கிறது... நடுவில் எதற்கு விமர்சனம்? ஈஸ்வரன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பொறுமையாய்ப் பார்த்து ரசியுங்கள்” என்று சிரித்தார். சிலர் அவரோடு சேர்ந்து சிரிக்க முயன்றனர்”
ஸ்வாமிகளின் முன்னிரவு ஸ்வப்னத்தில் அவரை அழைத்துச் செல்லும் மாயாவி என்ற அந்த கதாபாத்திரத்தின் அடையாளம் குறித்து இன்னமும் யோசித்து அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். அவன் ராமதுரை போன்றதொரு சாமானிய பக்தனா அல்லது அதற்கும் மேலே சக்தி படைத்தவனா என்பது “எனக்கு” இன்னமும் தெளிவுறவில்லை.
இந்தக் கதையானது எங்கே தொடங்கி எங்கே நிறைந்தாலும், வழக்கமான தொடக்கம் ஜெயகாந்தனின் முன்னுரையில்தான் இருக்கிறது.
“இந்த ’ஹர ஹர சங்கர’ ஒரு கதை, கற்பனை, கனவு, ஆனால் பொய் அல்ல’ சத்தியம்.”
என்ற தொடக்கத்திலேயே கொட்டாவியுடன் வாசிக்கத் துவங்கும் நம்மை நிமிரச் செய்துவிடுகிறார் ஜெயகாந்தன்.
”நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, நடவாதது, நடக்க முடியாதது, நடக்கக் கூடாதது ஆகிய அனைத்திஅயும் பிரதி பலிப்பதே கற்பனை. ஏனெனில் அதுவே சத்தியம்”இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேணும்.
ஹர ஹர சங்கர | ஜெயகாந்தன் | 64 பக்கங்கள் | விலை ரூ. 15/- (2005 பதிப்பு) | கவிதா பதிப்பகம், தி.நகர், சென்னை (தொலைபேசி: 044 - 24364243 / 24322177)
இணையம் மூலம் இந்தப் புத்தகத்தை இங்கே வாங்க முடியும் என்று குறிப்பிடுகிறார்கள். தேவையெனில் முயற்சிக்கவும்.
No comments:
Post a Comment