THE JAPANESE WIFE
KUNAL BASU
SHORT STORIES
HarperCollins Publishers India
Photo Courtesy/To Buy: Flipkart
சில வருடங்கள் முன்பு “The Japanese Wife” என்றொரு திரைப்படம்
வெளிவந்தது, எவ்வளவோ படங்கள் வருகின்றன. எல்லா படங்களையும் நினைவு வைத்துக்
கொள்வது கடினம்தான். ஆனால் இந்தப் படம் இந்தியாவின் முக்கிய இயக்குனரான
அபர்ணா சென்னால் இயக்கப்பட்டது. அதைவிட முக்கியமான விஷயம் இதனுடைய
கதைக்கருதான்.
பேனா நண்பர்களான ஒரு ஆணும் பெண்ணும், தங்கள் கடிதங்கள் மூலமே பழகி,
திருமணம் செய்து கொண்டு இருபது வருடங்களாக வாழ்க்கை நடத்துக்கின்றனர்.
இதுதான் நான் இந்தப் படத்தை பற்றி படித்தது, இன்னமும் பார்க்கவில்லை.
நூலகத்தில் என்ன புத்தகம் எடுக்கலாம் என்று சுற்றி வந்தபோது, இது கண்ணில்
படவே சட்டென எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வந்து புத்தகத்தைப்
பிரித்து உள்ளடக்கம் பார்த்தப்போதுதான் திரைப்படமாக கதை ஒரு சிறுகதை என்பதை
அறிந்தேன்.
இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். முதலில் இந்தக் கதைகளை எழுதின ஆசிரியரை பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர், நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். அதன் தாக்கத்தை இவரது சிறுகதைகளில் காணலாம். இவரது கதைமாந்தர்கள் இந்தியாவை மட்டும் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. உலகத்தின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால் இவரது சிறுகதைகளை ஆங்கிலத்தில் “truly global” என்றும் சொல்லலாம். இவரது சிறுகதைகளின் மாந்தர்கள் ஆகட்டும் வாசகர்கள் ஆகிய நாம் ஆகட்டும், எதோ ஒரு புதிய விஷயத்தை கண்டடைந்து கொண்டே வருகின்றனர்.
இந்தச் சிறுகதை தொகுப்பின் முதல் கதையான “The Japanese Wife” தலைசிறந்த ஒரு கதையாகும். பேனா நண்பர்களான மியாகே (miyage)- ஷேனாமொய் (shenamoy) கடிதம் மூலம் மணம் செய்து கொண்டு, கடிதம் மூலம் மணவாழ்க்கையை நடத்துகின்றனர். தான் செய்துவிட்ட ஒரு சிறு தவறு அவன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவள் மரண படுக்கையில் இருக்கிறாள். அவன் தான் செய்த தவற்றை ஒத்துக் கொண்டு அவளுக்கு கடிதம் எழுதுகிறான். அடுத்து வீசுகின்ற புயலில் மரணம் அடைகிறான். இத்தனை நாட்களாக சந்திக்க வேண்டும் என்று காத்திருந்த அவன் மனைவி, வெள்ளையாடை - மொட்டை தலையுடன் அவன் நினைவிடத்துக்குச் செல்வதுடன் கதை முடிவடைகிறது.
Grateful Gangaவில் உண்மையான விடுதலையை ராக் இசை மூலம் கண்டடையும் கணவனை போதை மருந்துக்கு பலி கொடுத்து விட்டு அவனது அஸ்தியை கங்கையில் கரைக்க வரும் எவெலின், விமானத்தில் யோகிந்தரை சந்திக்கிறாள். யோகிந்தரின் மூலம் தனது மற்றொரு விடுதலையை எப்படி கண்டெடுக்கிறாள் என்பது கதை. ராக் இசையின் மூலமும், கிஷோர் குமாரின் ஹிந்தி பாடல்கள் மூலமும் கதையை நகர்த்தி செல்கிறார் குணால் பாசு.
Lenin’s Cafe, ஒரு Fantasy கதை, லெனின் ஸ்விஸ் நாட்டின் ஜுரிச் நகரத்தின் ஒரு காபி கடையில் தினமும் காபி அருந்துவார். கம்யுனிசத்தில் ஊறிய தந்தையும் மகளும் அதே காப்பி கடையில் லெனின் சம்பந்தமாக, பழைய சம்பவங்களை நினைவு கூர்கின்றனர். அப்போது லெனினின் கம்யுனிச தோல்வியை வெயிட்டர் (waiter) தனது பாத்திரங்களைத் தவறவிட்டு உணர்த்துகிறார்.
Lotus-Dragon, இந்த தொகுப்பில் இன்னொரு முக்கியமான சிறுகதை, இந்த கதை சீனாவில் தோல்வியடைந்த ஜனநாயக போராட்டங்களின்போது அங்கு ஹனிமூன் கொண்டாடச் செல்லும் இந்திய தம்பதிகள் பற்றிய கதை. கதையில் இந்த போராட்டங்கள் தோல்வி அடையும் அதே சமயத்தில், அந்த பெண்ணும் மூளை கட்டியால் இறப்பதன் மூலம் சரி செய்ய முடியாத சீன ஜனநாயகத்தை கண் முன் நிறுத்துகிறார்.
Snake Charmer கதையில் மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு, அவள் வந்த பாலைவனத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு இந்தியா வரும் இஸ்ரேலி ஒருவர், ஒரு சிறு பெண்ணின் கண் அசைவில் தன் தற்கொலை முடிவை மாற்றி கொள்கிறார் என்பதைப் பேசுகிறது.
Long Live Imelda Marcos ஹாங்காங்கில் குடியேறும் ஒரு தம்பதியின் வீட்டில் வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் பெண்ணை பற்றி பேசுகிறது. அவள் ஒரு இந்தியனைக் காதலிக்க, அவன் குஜராத் கலவரத்தில் மடிய, அதைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முடிவு கதையை நடத்திச் செல்கிறது.
Tiger, Tiger! சுந்தர்பன் காடுகளில் வெள்ளை புலிகளைக் கொன்று அதை விற்பவன், அவன் மனைவி , காட்டு இலாகா அதிகாரி, இதை ஆராய்ச்சி செய்ய வரும் வெளிநாட்டு பெண், இந்த நால்வருக்குள் நடக்கும் கதை. ”Father Tito’s Onion Rings” ஒரு பாதிரியாருக்கும் ஒரு விலைமாதுவின் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் நிகழ்ச்சி. Miss Annie, கதையில் ரஷ்யாவிலிருந்து விலைமாதுவாக வங்காளம் வரும் பெண், இங்கு நாடகங்களிலும் நடிக்கிறாள். தன்னுடைய சுயத்தை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதைப் பேசுகிறது..”The Last Dalang” கதையில் இந்தோனேசியாவில், ராமாயணத்தை பொம்மைகள் கொண்டு நாடகம் போடும் ஒருவரைப் பற்றிச் சொல்கிறது.
முன்னமே சொன்ன மாதிரி ஒவ்வொரு கதைக்கும் வித்தியாசமான ஒரு கரு. ஒவ்வொன்றையும் படிக்கும்போது ஒவ்வொரு விதமான அனுபவத்தை கிடைக்கின்றது. சில இடங்களில் ஆசிரியரின் வங்காள சாயல் அதிகமாகத் தெரிவதை தவிர்த்து விட்டால் இது ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு.
No comments:
Post a Comment