சிறப்புப் பதிவர்: லலிதா ராம் (@lalitha_ram)
குடும்பத்திலும், (எழுத்தாலும் இணையத்தாலும் அமையாத) நண்பர்களிடையிலும் எப்போதாவது நான் எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தால், “சுப்புடு மாதிரி எழுதுவியா?”, என்ற கேள்வி தவறாமல் வரும். என்றாவது ஒரு நாள் “பி.எம்.சுந்தரம் மாதிரி எழுதுவியா?”, என்று யாரேனும் கேட்பார்களா என்று நான் ஏங்குவதுண்டு.
யார் இந்த பி.எம்.சுந்தரம்?
ஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என்ற அவருடைய பன் முகங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து தேர்ந்தவர். இசை ஆய்வாளர் என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் எழுதிய நூலைப் படித்து அதில் குறிப்பிட்டுள்ளவை 22 ஸ்ருதிகளா 32 ஸ்ருதிகளா என்றெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போலத் தோன்ற வைக்கும்படி பேசுபவர் என்று எனக்கிருந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியவர். இசையும் இலக்கியங்களும் முறைப்படி கற்று அவற்றில் அவர் செய்துள்ள ஆய்வுகளின் அகலமும் ஆழமும் அசாதாரணர்களுக்குரியவை. சிறியதும் பெரியதுமாய் அவர் தொகுத்தும் எழுதியும் வெளியிட்டிருக்கும் நூல்கள் ஏராளம். கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள் நம்மிடை இருந்த இசைக் கலைஞர்கள் என் ஆர்வத்துக்கு உரியவர்கள் என்பதால் பி.எம்.சுந்தரத்தின் இரு நூல்கள் எனக்கு ஆதர்சமானவை.
Photo Courtesy: The Hindu |
பி.எம்.சுந்தரம் இசை மரபில் தோன்றியவர். தவில் உலகின் சக்கரவர்த்தி நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை - பி.எம்.சுந்தரத்தின் தந்தை. நாட்டியத்தில் சிறந்து விளங்கிய தஞ்சாவூர் பாலாம்பாள் - இவரது தாயார். தன் பெற்றோர்கள் சிறந்து விளங்கிய கலைகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அவர் எழுதியிருக்கும் நூல்களான (நாகஸ்வர - தவிற் கலைஞர்களைப் பற்றிய) ‘மங்கல இசை மன்னர்களும்’, (பரதநாட்டிய கலைஞர்களைப் பற்றிய) ‘மரபு தந்த மாணிக்கங்களும்’ கலைத் துறையைப் பொருத்தமட்டில் மைல்கற்கள்.
இந்தப் பதிவு மங்கல இசை மன்னர்களைப் பற்றியே.
சமீப காலமாய் வாய்ப்பாட்டு கச்சேரிகளைப் பற்றிய சம்பாஷணைகளில் நாகஸ்வர பாணி என்ற சொல்லாட்சியை அதிகம் கேட்க முடிகிறது. இந்த சம்பாஷணை குறிக்கும் பாடகர்களின் கச்சேரிக்குச் சென்றால், கண்களை இறுக்கி, கைகளை தூக்கி, குரலில் பாட நினைப்பதை (பாடுவதை அல்ல) கைகளில் காட்டியபடி, உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அசைத்து நெளிப்பதுதான் நாகஸ்வர பாணியோ என்று கூட எண்ணத் தோன்றும். கோயிலுக்கு உரிய மங்கலக் கருவியாயிற்றே, அதனால் உற்சவங்களுக்குச் சென்றாலாவது நாகஸ்வர பாணியை உணர்ந்துவிட முடியுமா என்றால், அங்கும் சமீபகாலமாக பத்தடிக்குக் கூட கேட்காமல் ரகசியமாய் ஒலிக்கும் சாக்ஸஃபோன் நம் செவி குளிர ஒலிக்கிறது.
சபைகளின் தொடக்க விழாவில் பல மணி நேர பேச்சுக்கு பின் சம்பிரதாயமாய் ஒலிக்கும் கருவியாகவே நாகஸ்வரம் முற்காலத்திலும் இருந்துவிடவில்லை. கர்நாடக சங்கீதத்தின் வேர்கள் பல நூற்றாண்டுகளாக விரிந்து வருபவை. வாழையடி வாழையாக இது தழைத்து வந்ததில் முக்கிய பங்கு இசை வேளாளர்களையே சாரும். இன்று சங்கீத பிதாமகர்களாய் வணங்கப்படுபவர்களின் முன்னோடிகளாக நாகஸ்வர / தவில் கலைஞர்களே விளங்கினர். அவர்கள் வரலாறு மட்டும் விதிவிலக்கா என்ன? எத்தனையோ விஷயங்களைப் பதிவு செய்யாதது போலவே இவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பதிவுகள் இல்லாமலிருந்தன.
தனக்கு முந்தைய தலைமுறைகள் செய்யாததைச் செய்ய வேண்டி கிராமம் கிராமமாய் திரிந்த பி.எம்.சுந்தரம் தன் அனுபவத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்:
“தமக்குத் தெரிந்தவற்றை கூறுவதற்கு மனமற்றவராக சிலர் இருந்தனர். வேறு சிலர், “இதெல்லாம் வீண் வேலை” என்ற அறிவுரையை அள்ளி வழங்கினர். இன்னும் சிலரோ, “இதையெல்லாம் எழுதுவதற்கு உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?”, என்று கேட்கத் துணிந்தனர். அலட்சியத்தாலோ, அறியாமையாலோ அவர்கள் செய்யாதுவிட்ட பணியை மேற்கொண்டு, நாகஸ்வர, தவிற்கலைஞர்கள் சமூகத்துக்கு ஒரு சேவையாக நூலொன்றை படைப்படதுவே என் லட்சியமென்பதையும், இதில் எனக்கேற்பட்ட பொருட்செலவென்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்கும் அளவில் அவர்கள் இல்லை!”
“சாப்பிட்ட பின், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி பழைய கதைகளை எல்லாம் அப்பா சொல்வார். அவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் இந்த ஆவணப்படுத்தல் தொடங்கியது”, என்கிறார் பி.எம்.சுந்தரம். நீடாமங்கலத்தாரின் மறைவுக்குப் பின், பல ஆண்டுகள் உழைத்து சிறுகச் சிறுக தகவல் சேமித்திருப்பதை புத்தகத்தைப் பார்த்தாலே உணர்ந்துகொள்ள முடிகிறது.
இசை ஆய்வாளர்களின் எழுத்து பெரும்பாலும் இசை வல்லுனர்களுக்கு மட்டுமே புரியும். இந்த நூல் அப்படி பயமுறுத்துவதில்லை. கலைஞனின் பிறந்த/மறைந்த தேதி, பெற்றோர், கற்பித்தவர்கள், உடன் வாசித்தவர்கள், வழித் தோன்றல்கள், பிள்ளைகள் (அவர்கள் வேறு துறைக்குச் சென்றுவிட்ட போதும்) பற்றியெல்லாம் குறிப்பு வந்தாலும், அவை வரட்டு குறிப்புகளாக இல்லை. ஒவ்வொரு கலைஞனின் மேதமையையும் மனத்தில் பொருத்திக் கொள்ளும் வண்ணம் அவன் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமான கதைகள் பல இந் நூலைத் தாங்கிப் பிடிக்கின்றன. அவற்றுள் சில கதைகளை இங்கு சொல்லலாம் என்றால் எதைச் சொல்ல? எதை விட?
உலகின் எட்டாவது அதிசயம் என்று பாலக்காடு மணி ஐயரின் பாராட்டைப் பெற்றவரையா? தவில்காரனுக்கு நாகஸ்வரத்தைப் பற்றி என்ன தெரியும் என்ற பேச்சைக் கேட்டவுடன் தவிலை விட்டு நாகஸ்வரத்தைப் பழகி ராஜரத்தினம் பிள்ளைக்கே குருவாக விளங்கியவரையா? ‘இவர் மறைந்தார். இனி நான் கூட தவில் வித்வானாகிவிடலாம்’ என்று சொல்லும்படி, இருந்த வரையில் தவில் வித்வான்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்த லயப் பிண்டத்தையா? பூ கட்டும் என் குலத்தொழில் என் பிள்ளைக்கு வேண்டாம். அவன் பெரிய நாகஸ்வர கலைஞனாக வரவேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்கிய மேதையையா? கலைஞர்களுக்கிடையில் நிலவிய போட்டியையா? பத்திரிகை கொடுத்த குதிரை வண்டிக்காரனின் மகள் கல்யாணத்துக்கு திருமாங்கல்யத்துடன் சென்று வாசித்தும் வந்த பரந்த மனம் கொண்டவரையா? மது மயக்கிய மாமேதைகளையா? முப்பது வயது கூட வாழாத போதிலும் தன் பெயரை நிலைக்கச் செய்துவிட்டுப் போயிருப்பவரையா?
யாரைச் சொல்ல? யாரை விட?
வேண்டுமென்பவர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த நூல் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு அன்று; வாழ்க்கைச் சுருக்கமேயென சற்றே வருத்தத்துடன் பி.எம்.சுந்தரம் குறிப்பிடுகிறார். வாழ்க்கைச் சுருக்கமாக இல்லாமல், வெறும் பெயர் பட்டியலாக மட்டுமே இந்த நூல் இருந்திருந்தாலும் அது பெரிய சாதனைதான்.
மங்கல இசை மன்னர்கள்
தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் , விலை ரூ.100.
மெய்யப்பன் தமிழாய்வகம்
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை -108.
தொலைபேசி எண் - +91 - 44 -25380396
பி,கு: புத்தகம் ஏனோ பரவலாக வாங்கக் கிடைப்பதில்லை. கர்நாடிக் ம்யூசிக் புக் செண்டரில் கூட தற்பொது கிடைப்பதில்லை. சமீபத்தைய பதிப்பு இன்னும் விற்று தீரவில்லை என்று நூலாசிரியரே கூறுவதால், மேலுள்ள முகவரியில் கிடைக்கக் கூடும்.தொலைபேசி எண் - +91 - 44 -25380396
No comments:
Post a Comment