சிறப்பு பதிவர் : கிருஷ்ணகுமார் ஆதவன்
1944-ம் ஆண்டு பெரியார் எழுதிய நூல் இது. வரும் காலங்களில் சமூகத்திலும், விஞ்ஞானத்திலும் எப்படிப்பட்ட மாற்றங்களெல்லாம் ஏற்படும், மக்களின் வாழ்வு நிலை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யூகித்து சொல்லியிருக்கிறார். இந்த சின்ன புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஆச்சரியமும், வருத்தமும் ஒருசேர மிஞ்சியது. செல்போனும், ஃபேஸ்புக்கும், ஸ்கைப்புமாக இன்று தொழில்நுட்பத்தில் கண்டறிந்து உபயோகிப்பவைகளை அவர் 40 வருடங்களுக்கு முன்னரே சொல்லிவிட்டார் என்ற பெருமையோடு ஐந்து நிமிடங்களில் புத்தகத்தில் நுழைந்து வெளியேறலாம்.
புத்தகத்திலிருந்து:
- கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும் - செல்போன்
- உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் - ஃபேஸ்புக், ஸ்கைப்
- இன்று இருக்கும் சாட்டிலைட் வழிக் கல்விமுறை - ஓர் இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்
- மருத்துவத்தில் இன்று இருக்கும் டெஸ்ட் டியூபின் மூலம் குழந்தை பெறுதலை- பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது
- வீரியத்தை இன்ஜெகஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும்,குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.
- பேட்டரி கார் - பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தலாம்.
- அதிசயப்பொருளும், அற்புதக் காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்று போலவே அனுபவிப்பார்கள் - தீம் பார்க்
மற்றபடி புத்தகத்தில் சில இடங்களில் பெரியாருடைய மிகைகற்பனை தெரிகிறது.
மனிதனுடைய "ஆயுள் நூறு" வருஷமென்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம் என்கிறார். (பக் - 12)
கக்கூஸ் எடுக்க வேண்டியதும், வீதிகூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும் என்கிறார். (பக் - 10)
சில தகவல்களை கூடுதல் நம்பிக்கையுடன் சொல்லிவிட்டார்.
உதாரணத்திற்கு ஒழுக்கக்குறைவு, விபச்சாரம், "இழிவான" வேலை, போர், அரசியல், வேலையில்லாத் திண்டாட்டம்,.. - ஆகியவை இனிவரும் உலகத்தில் இருக்கப்போவதில்லை - (பக் - 8,9,10,11)
இவையெல்லாம் இல்லாமல்போவது ஒருபக்கம் இருக்கட்டும். அதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதில் பெரியாரின் கணிப்பு தவறாகிவிட்டது.
கடவுள்,மதம்,நரகம்,மோட்சம் போன்றவற்றைப் பற்றிய கருத்துகளிலும் மாற்றமில்லை.
இவற்றைத் தவிர்த்து பெரியாருடைய வாக்குகள் அனைத்தும் கதையாகவே தோன்றுகிறது.
ஆனால், மனிதனுடைய ஆயுளைப் பற்றி கணித்தவர் இறப்பை விஞ்ஞானத்துடன் கலக்கவில்லை. மரணத்தைப் பற்றி, அதை எளிதாக வெல்லும் மரணம் போக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்றெல்லாம் காமெடி செய்யாமல் இருந்துவிட்டார் என்றால் அவர் மரணத்தை இயற்கையாக புரிந்து வைத்திருக்கிறார் என்றே அர்த்தம்.
மரணம் குறித்து அவர் வெளிப்படுத்தியவற்றை மணியம்மை அவர்கள் கூறும்போது:
யாருக்காவது திடீர் மரணம் ஏற்பட்டு அது பத்திரிக்கையில் வந்தால் அய்யா அவர்கள் அப்போது சொல்வார்கள் :
"இதைப் போன்ற திடீர் சாவுதான் எனக்கும் ஏற்படவேண்டும். அப்படி ஏற்பட்டால்தான் நம் இனத்தவர்கள் மத்தியிலும் நிரந்தரமான இடம் அப்போதுதான் எனக்குக் கிடைக்கும். அப்படி இல்லாமல் பல நாள் நோய்வாய்ப்பட்டு நான் இறந்தால், எதிரிகள் அதைப் பயன்படுத்தி ""கடவுள் இல்லை" என்று கத்தினான்; அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டே சாவார்கள்," என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கப்புறம் இதைப் போன்ற தொண்டு செய்வதற்கு யாரும் முன்வரத் தயங்குவார்கள்" என்று கூறுவார்கள்.
அய்யா அவர்கள் மறைவு அவர் விரும்பியவாறே நடைபெற்றுவிட்டது.
இவற்றைப் போன்ற அவரது நம்பிக்கையும், லாஜிக்குகளைக் கடைபிடித்த விதத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தினார். மற்றபடி வருங்காலம் நோக்கிய அவரது செயல்பாடுகளில் கட்சித் தொண்டர்களைத் தவிர மற்றவர்களுக்கு முழுக்க நாட்டமின்மையை உருவாக்கும் மனப்பான்மையை மட்டுமே கொடுத்துச் சென்றிருக்கிறார்.
சில கொள்கைகளில் மாற்று கருத்து உள்ளவர்கள் இருந்தாலும் இந்த சிறிய புத்தகம் ஒரு நடுநிலையைக் கொண்டிருப்பதால் அனைவரும் வாசிக்கும்படியாக இருக்கிறது.
புத்தகத்தில் புகுந்துகொண்டு விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், பலன்களையும், தொழில்பெருக்கத்தையும், மக்கள் வாழ்வையும் அதில் ஏற்படப்போகும் மாற்றத்தையும் அப்போதே யோசித்திருக்கிறாரே! அதில் சிலவை இன்று நடைமுறையிலும் இருக்கிறதே! என்று அவசரப்பட்டு வேகவேகமாக ஆச்சர்யப்படும்போது ஒரு சறுக்கல் -
அதே அறிவியல் விஞ்ஞானம், அணு விஞ்ஞானம் தரும் கொடிய விளைவுகளை, குற்றங்களை நினைத்தால் உற்சாகம் குன்றி இதையெல்லாம் அவர் யோசித்து சொல்லியிருந்தால் (அவரை ஃபார்ச்சூன் டெல்லர் என்று சொல்லி பச்சை குத்தியிருப்பார்கள்) பல விபத்துகளைத் தடுத்திருக்கலாமே என்ற வருத்தம்தான் மிஞ்சுகிறது.
இனி வரும் உலகம்’ - பெரியார் எழுதியது.
வெளியீடு: குடிஅரசு பதிப்பகத்தார், ஈரோடு.
நல்ல அறிமுகம்.
ReplyDelete