இந்திய
தொன்மத்தில், இந்த உலகை எட்டு யானைகள் திசைக்கு ஒன்றாக சுமந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐராவதம், புண்டரீகம்,
வாமனம், குமுதம்,
அஞ்சனம், புட்பதந்தம்,
சார்வபௌமம், சுப்பிரதீகம்
இவை தான் அந்த எட்டு யானைகள். இவற்றுக்கு மதம் பிடித்தால்?
இவை சுமந்து கொண்டிருக்கும் பூமிக்கு என்னவாகும்?
இந்தக்
நாவலை வாசிக்க வேண்டுமென்று தூண்டியது அதன் பெயர் தான். ஆனால், நாஞ்சிலாரின் மற்ற படைப்புகள்
போல (அதாவது தலைகீழ் விகிதங்கள், மற்ற சிறுகதைகள் போல) இது என்னைக் கவரவில்லை. ஒருவேளை,
பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை, அதன் முடிவை அடையும் போது அங்கே இங்கே சுற்றிவிட்டு வருவதாலோ
என்னவோ. தனித்தனியாக எடுத்துப் பார்க்கும் போது நிறைய அருமையான விஷயங்களை சொல்லிச்
சென்றிருக்கிறார். சமூகத்தின் மீதான விமர்சனங்கள் வரும் இடங்கள் - விகடனில் அவரெழுதிய
தீதும் நன்றும்-ஐ நினைவுபடுத்துகின்றன.
ஒரு பொய்யான
குற்றச்சாட்டு; அதற்கு ஒரு விபரீத தண்டனை. இங்கே அடிபட்டவன் இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொறுமையாக இருந்து தான் நிரபராதி என்று நிரூபிக்கலாம். அல்லது தன்னை தண்டித்தவர்களுக்கு
பாடம் புகட்ட புறப்படலாம். இவற்றில், இரண்டாவதைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குற்றமாக
செய்து கொண்டு, அவற்றிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டேயிருக்கும் ஒருவனுடைய கதை தான்
‘எட்டுத் திக்கும் மதயானை’. கடைசியில் பகை முளைத்த இடத்திலேயே அன்பும் பூக்கிறது. நாஞ்சிலாரின்
தலைகீழ் விகிதங்களாகட்டும் எட்டுத் திக்கும் மதயானையாகட்டும், கதை முடிவுகளை இவ்வளவு
விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றவைக்கிறது. அவற்றை குறிப்பால் மட்டுமே
கூட உணர்த்தியிருக்க முடியும்.
முழுக்க
முழுக்க நாஞ்சில் நாட்டு பாஷை. படித்து முடித்தவுடன் நாமே இரண்டொரு நாஞ்சில் நாட்டு
வார்த்தைகள் பேசுவோம். ஹுப்ளியில் பாபியும் இந்த பாஷையைத்தான் பேசுகிறாள்; பம்பாயில்
சாம்ராஜ் ஐயா பேசுகிறார்; கோமதி பேசுகிறாள். இடையிடையே நமக்கு புரிந்தளவுக்கு ஹிந்தியும்
உண்டு. ஆனால், பாபியும் சாம்ராஜ் ஐயாவும் கோமதியும் நாஞ்சில் நாட்டு பாஷையில் பேசுவதை
ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதில் தான் எனக்கு சின்ன குழப்பம்.
அடுத்து
நாவலில் பேசப்படும் அறம். அவருக்கு அவரவர் நியாயம். பாலில் கலப்படம் செய்துவிற்றால்
பிரச்சனையில்லை, சாராயம் விற்றால் தப்பா? தனியார் சாராயம் விற்றால் குற்றம், அரசாங்கம்
செய்தால் குற்றமில்லையா? போன்ற கேள்விகள். பூலிங்கத்திற்கும் சாம்ராஜ் ஐயாவிற்குமான
உரையாடலில், குற்றவாளிகளில் கூட பணக்காரர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை, ஏழை பாடு தான்
திண்டாட்டம் என்று விவாதம் போகும். ஓரிடத்தில் அரசாங்கம் செய்யாதது விபச்சாரம் மட்டும்
தான் என்று சொல்லியிருப்பார்.
நாவலிலேயே
மிகவும் அருமையான விஷயம் என்றால் அது பூலிங்கத்திற்கும் கோமதிக்குமான உறவுதான். கோமதி,
கணவனைப் பிரிந்து தன்னுடைய குழந்தையோடு வாழ்பவள். பூலிங்கத்திற்கும் கோமதிக்கும் ஏற்படும்
ஈர்ப்பும் அன்பும், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பழக்கம் எப்படி அன்பாக உருவாகுமோ
அப்படியே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, அவர்களுக்கிடையிலான உறவை ஒரு scandal ஆக காட்ட
முயற்சிக்கவில்லை; அதைக் கொண்டு நாவலுக்குத் தேவையான ‘இத்யாதி’களைச் சேர்க்கவில்லை.
அது போலவே பூலிங்கம் – சுசிலா உறவையும் பரமுவின் கதையும் அப்படியே கண்யாண்டிருக்கிறார்.
ஆண் பெண் உறவு என்றாலே அவர்களுக்கு இடையில் இருக்கும் sexual tensions வைத்துக் கொண்டு
புனையப்பட்ட கதைகளை நிறைய படித்து அலுப்புத்தட்டிவிட்டது. அதாவது, இந்த sexual
tensions மையமாக இல்லாமல் ஆனால் அவற்றைப் பற்றிப் திரும்பத் திரும்ப பேசும் நாவல்களைச்
சொல்கிறேன். அவை கதையை சுவாரசியமாக்கக் கூடும் என்று சிலர் நம்பலாம். நாவல்கள் மற்றுமில்லை,
இன்றைக்கு ஊடகங்களும் பொதுமக்களும் அப்படிப்பட்ட scandalகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்
என்பது மோசமான உண்மை.
முதல்
பத்தியில் பார்த்த யானைகள் உலகை சமநிலையில் வைத்திருக்கின்றன. நாஞ்சில் நாடன் சொல்வது
மதயானைகள்; எட்டுத்திக்கும் இருக்கும் மத யானைகள். எட்டு யானைகள் மட்டுமா? இல்லை. எட்டுத்திக்கும்
எங்கெங்கும் மத யானைகள். அதிகாரம், ஆசைகள், குரோதம், விரோதம், மதவெறி, ஜாதிவெறி, இனவெறி,
வறுமை, சூது, துரோகம் இப்படி எண்ணற்ற மத யானைகள் நம்மைச் சுற்றியும் நமக்குள்ளும் சுற்றிக்
கொண்டேயிருக்கின்றன. எல்லாத்திசையிலும் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த மத யானைகள், உலக
சமநிலையையும் தனி மனித அமைதியையும் குலைக்கின்றன.
கொஞ்சம்
அதிகப்படியாகச் சொல்வது போலத் தெரியலாம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் இந்த மத யானைகளிடம்
மிதிபடாதிருக்க அன்றாடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
பி.கு:
ஆம்னிபஸ் நண்பர்களுக்கு நன்றி.
எட்டுத்
திக்கும் மதயானை | நாஞ்சில் நாடன் | விஜயா பதிப்பகம் | 270 பக்கங்கள் | ரூ.140 | இணையத்தில் வாங்க
பூவலிங்கமும் அவனது பயணமும் நாமும் கூடப்போய் கொண்டே இருப்போம்.
ReplyDeleteநாஞ்சில் மொழி தமிழ் நாட்டிற்கு வெளியேகூட தமிழரல்லாதவரும் பேசுவது உறுத்தல்தான்.
கதையின் தலைப்பு நீங்கள் சொல்வது போலத்தான் நாஞ்சில் நாடன் அவர்கள் வைத்திருக்கலாம். நான் வேறு மாதிரி கற்பனை செய்துகொள்கிறேன்.
பூவலிங்கம் எந்த திக்கிலும் மதயானையாக இருக்கிறான். ஊரில் கொளுத்தி போடுவதில் இருந்து பல மாநிலங்கள் வழியாக ரயிலில் போகும்போதும், சேட் வீட்டில் கொஞ்ச நாட்கள் இருக்கும் போதும் பம்பாயிலும் எல்லா திசைகளிலும் சாதாரண யானையில்லை, மத யானை...
எந்தளவிற்கு இது சரி என்று தெரியாது, நானாக நினைத்துக்கொள்கிறேன், பொருத்தமாகவே இருக்கிறது (அட்லீஸ்ட் எனக்கு!)
சதுரங்க குதிரைகள் பற்றிய அறிமுகத்தை எதிர்பார்க்கலாமா?!
சிவா கிருஷ்ணமூர்த்தி
பெயர் பற்றி நாஞ்சில் சொன்னால் தான் ஒரு தெளிவு வரும்னு நினைக்கறேன் ;-)
Deleteசதுரங்க குதிரைகள் நான் படிச்சதில்லை. யாராவது படிச்சா எழுதச் சொல்லிக் கேட்கலாம்.