ஆம்னிபஸ் தளம் 365 பதிவுகளை இன்று கடக்கிறது.
ஆம்னிபஸ்சின் முதல் பதிவைஒரு விளம்பரம் என்று கொள்ளலாம். அதனைத் தவிர்த்தால் புத்தக / கதை / ஆசிரிய / சப்ஜெக்ட் அறிமுகத்தில் இந்தப் பதிவு 365’ஆவது பதிவு.
ஒரு நாளும் இடைவிடாமல் எழுதினோம் என்பதுவே பெரிய சாதனை. சில நாட்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதினோம் என்பது சாதனையோ சாதனை.
மூன்று வருடங்களுக்கு முன் எனக்குப் பிடித்த நாவல்கள் என்று நான் எழுதிய பட்டியல் இது:
01. பொன்னியின் செல்வன்
02. எப்போதும் பெண் (சுஜாதா)
03. மன்மதப் புதிர் (பி.கே.பி.)
04. சங்க சித்திரங்கள் (ஜெயமோகன்)
05. கள்ளிக்காட்டு இதிகாசம்
06. மோகமுள்
07. சில நேரங்களில் சில மனிதர்கள்
08. தொட்டால் தொடரும்
09. ஸ்ரீரங்கத்து தேவதைகள்
10. ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் (பாஸ்கர் சக்தி)
இவற்றில் ஐந்து புத்தகங்களை ஆம்னிபஸ்சில் கவர் செய்தோம்.
பொன்னியின் செல்வன், மோகமுள், சிநேசிம, கள்ளிக்காட்டு இதிகாசம், ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் ஆகியவற்றை தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவர். எண்பதுகளின் வாசகர்கள் நிச்சயம் தொட்டால் தொடரும் அறிவர்.
மன்மதப் புதிர் அடலஸன்ஸ் வயதின் தடுமாற்றத்தில் இருக்கும் சின்னப்பெண்ணின் கதை. பிகேபி’யின் தன்னிகரற்ற ஸ்பெஷாலிட்டியான வசன நடையிலேயே மொத்தக்கதையும் சொல்லப்பட்டிருக்கும்.
சங்க சித்திரங்கள் நான் ஜெமோவின் தீவிர வாசகன் ஆவதற்கு முதற்படி அமைத்துத் தந்த தொடர்.
ஏழு நாள் சந்திரன் ஏழு நாள் சூரியன் ஒரு எளிமையான பாஸ்கர் சக்தியின் ஸ்பெஷல். மறுவாசிப்பிற்குத் தேடுகிறேன், கிடைப்பேனா என்கிறது.
இப்படிப் பத்து புத்தகங்கள் தாண்டி ஏதும் தெரியாமலேயே எந்த தைரியத்தில் ஆம்னிபஸ் தளத்தை ஆரம்பித்தேன் என்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
எனினும், ஒரு அசட்டு சிந்தனையில் ஆரம்பித்த ஆம்னிபஸ்சுக்கு என்று ஒரு அதியற்புதமான கூட்டணி அமைந்தது. வித்தியாசமான சிந்தனைகள், ரசனை, வாசிப்புத் திறன் கொண்ட ஒரு கூட்டம். அவர்கள் தொடர்ந்து படித்து, எழுதிய பதிவுகள், அறிமுகங்கள் ஆம்னிபஸ்சை ஒரு வருடம் தடையின்றி ஓடச் செய்தது.
இந்தப் பத்துப் புத்தகங்கள் மாத்திரமல்ல உலகின் சிறந்த புத்தகங்கள், இன்னமும் பல்லாயிரம்க் உண்டு என எனக்கு தங்கள் நூல் அறிமுகங்கள் வாயிலாக நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
நம் கூட்டணி நண்பர்களைத் தாண்டி அன்பர்கள் பலர் சிறப்புப் பதிவர் அடையாளம் சுமந்து தாம் வாசித்தவைகளை மற்றவர்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டார்கள்.
ஆக, 365 பதிவுகளில் சில ரிப்பீட்டுகள், சில சிறப்பு வாரங்கள் தவிர்த்தால் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட நூலாசிரியர்கள் எழுதிய 350 புத்தக அறிமுகங்கள் நிகழ்ந்துள்ளன. .
இந்த ஆம்னிபஸ் பேருந்தை ஓட்டியவர்களும், நடத்துனர்களும், பயணிகளும் என எல்லோரும் இந்தப் பயணத்தின் இனிமைக்குக் காரணம் ஆகிறார்கள். எல்லோருக்கும் எப்படி நன்றி என்ற மூன்றே எழுத்துகளைச் சொல்லி முடிப்பது என்று புரியாமல் நிற்கிறேன்.
புரிந்து தெளிகையில், இந்தப் பயணத்தின் அதி சுவாரசிய தருணங்கள் சிலவற்றைப் பகிர்ந்தவாறே என் நன்றி நவிலலை நிகழ்த்துவேன்.
365 பதிவுகள் நிறைந்துவிட்டாலும் ஆம்னிபஸ் பயணம் தொடரும். இனி தினம் ஒரு பதிவு என்ற கட்டாயம் ஆம்னிபஸ்சுக்கு இல்லை. புதிய நண்பர்களின் கூட்டணியுடன் நல்ல பல புத்தக அறிமுகங்கள் இங்கே அவ்வப்போது நிகழும்.
ஆம்னிபஸ்சில் தொடர்ந்து பயணிக்குமாறு வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிவா கிருஷ்ணமூர்த்தி