பதிவர் : சரவணன்
இரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர், அவருடன் பணியாற்றியவர். 'சுஜாதாவுடன் இத்தனை காலம் பழகியிருக்கிறேனே, அந்த ஒரு தகுதி போதாதா எழுதுவதற்கு?' என்று கேட்டு (சிந்துவெளி நாகரிகம் முன்னுரை) எழுதவந்து, அவரது பாணியை அடியொட்டிச் சில சிறுகதைகள் எழுதியவர். 'சிறுகதை எழுதுவதில் எனக்கு அடல்ட்ரியில் ஏற்படும் த்ரில் இருக்கிறது' என்று கூறியிருக்கும் இவர் சுஜாதாவுக்கு முன்பே காலமாகிவிட்டார். சுஜாதாவைப் பின்பற்றி எழுதியவர் என்பதைத் தவிர தமிழ் எழுத்துலகில் இரவிச்சந்திரனைப் பற்றி வேறு அபிப்பிராயங்கள் இல்லை. அப்படி என்னதான் அவர் எழுதியிருக்கிறார் என்று பார்க்க விரும்புபவர்கள் இனி ஒரு விதிசெய்வோம் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் நான்கு கதைகள் உள்ளன. இனி ஒரு விதிசெய்வோம் என்ற முதல் கதை குறுநாவல் வடிவத்தில் இருக்கிறது. மற்ற மூன்றும் சிறுகதைகள்.
இனி ஒரு விதிசெய்வோம் ஒரு க்ரைம் கதை, என்றாலும் த்ரில்லர் அல்ல. அம்பிகா ஒரு nலோயர் மிடில் கிளாஸ்x குடும்பத்துப் பெண். ஒரு திருமணத்தில் அவளைப் பார்க்கும் பல தொழில்களுக்கு அதிபதியான திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தரராஜன், அவளைத் தவறான நோக்கத்துடன் அணுக, செருப்பால் அடித்துவிடுகிறாள் அம்பிகா. பதிலுக்கு சுந்தரராஜன் சுயநலமிகளான அவளது வீட்டாரைத் தன் பணத்தால் விலைக்கு வாங்கி அவளைக் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறார். மனைவியை இழந்த அவருக்கு அம்பிகாவை விட முப்பது வயது அதிகம். அம்பிகா செருப்பாலடித்ததற்குப் பதிலடியாக அவளைப் பழிவாங்க அவர் தயாராயிருந்தது முதலிரவில் (சூட்கேஸ் நிறைய பழைய செருப்புகள்!) தெரியவருவது பகீர்! இத்துடன் தன் பழிவாங்கும் படலம் முடிந்துவிட்டது என்று சொல்லி வீட்டின் சாவிக்கொத்துகளை அவளிடம் எறிகிறார். சுந்தரராஜனைக் கொஞ்சமும் மன்னிக்க முடியாத அம்பிகா அவரைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்திருக்கிறாள்.
ஆர்ட் ஃபிலிம் கனவுகளுடன் தமிழ்த்திரையுலகில் நுழையும் அழகிய நடராஜனுக்கும் அம்பிகாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அம்பிகாவுக்குத் தன் கணவரைக் கொலைசெய்யுமளவு வெறுப்பு இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து மட்டும் செய்துவிட்டு அழகிய நடராஜனுடன் வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறாள். ஆனால் தன் மனைவியின் துரோகத்தைக் கண்டுபிடித்துவிடும் சுந்தரராஜன் அவளைக் கொல்லத் திட்டம்போடுகிறார். கதையில் அம்பிகாவின் கதையைவிட நடராஜனின் திரையுலக அனுபவங்கள் அதிகமாகச் சொல்லப்படுகின்றன. 80-களின் தமிழ்த்திரையுலகில் உக்கிரமாக இருந்த கலைப்படம்-வணிகப்படம் என்ற முரண்பாடுகளும், வணிக சினிமாவுக்காக சமரசம் செய்துகொள்ள முடியாமல் தவிக்கும் அழகிய நடராஜனின் அல்லாட்டமுமே கதையை நகர்த்திச்செல்கின்றன. இந்தக் குறுநாவலை வணிக எழுத்து என்ற வகையில் குறைசொல்ல முடியாது. இரவிச்சந்திரன் வரிக்கு வரி தமிழ் சினிமாக்காரர்களை வாரிக்கொண்டே இருக்கிறார். இன்றைக்கு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. இந்தக் கதையில் அம்பிகா, தான் எடுத்துச் சென்ற பத்து இலட்சம் பணத்தை என்ன செய்தாள் என்று முதலில் சொல்லாமல் இருந்திருந்தால் கடைசிப் பக்கங்களில் அது ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்திருக்கும்! வாத்தியார் சொல்லலையா:)
அடுத்த கதை 'சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே!' இதில் ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் முன்னோடித் தமிழ் எழுத்தாளர் (இலக்கியப் பித்தன்), எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்கிற பயத்தில் ஒரு அறிமுக எழுத்தாளன் கதையை வேண்டுமென்றே கடாசிவிடுகிறார். அதுசரி, எந்தத் தமிழ் எழுத்தாளர் சுருக்கெழுத்தர், டைப்பிஸ்ட் சகிதம் இப்படி ராஜதர்பார் நடத்திக்கொண்டிருந்தாராம்? ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று பரிசுக் கதைகளை வேண்டா வெறுப்பாகப் போகிற போக்கில் தேர்ந்தெடுத்துத் தருகிறார் இலக்கியப் பித்தன். அதற்கே அப்பத்திரிகை ஆசிரியர் குழுவினர், அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஏதோ முதலமைச்சரிடம் அமைச்சர் பதவி பெற்ற எம்.எல்.ஏ. மாதிரிப் பணிந்து போகிறார்கள்! இங்கே கல்கியில் மாமல்லன் கதைக்கு மூன்றாவது பரிசு வாங்கித் தரக்கூட சுஜாதாவே எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதும், சாவி இதழில் இறுதிச்சுற்றுக் கதைகள் எல்லாவற்றையும் தான் படித்தாகவேண்டும் என்று சுஜாதா சொன்னதற்கு சாவி எப்படிக் கோபித்துக்கொண்டார் என்பதும் வரலாறு.
இந்தக் கதையின் ஊடாக சிறுகதை என்பதுபற்றிய தனது கருத்துகள் பலவற்றை (பாத்திரங்களின் வாயால்) சொல்கிறார் இரவிச்சந்திரன்—சிறுகதை ஒரு பவர்ஃபுல் மீடியம், அதை யாரும் ஒழுங்காக உபயோகப்படுத்துவது கிடையாது (பங்களூர்க்காரர் தவிர!), ஒரு சமூகப்பிரச்சினையை ஒன் லைன் மெசேஜ் ஆகச் சொல்லவேண்டும், ஒரு பக்கக் கதைகளை ஒழிக்க வேண்டும், சமூகத்துக்கு உரத்த அறிவுரை கூடாது - உயிர்த்தியாகம்(!) கூடாது என்கிற மாதிரி. அதுசரி, சிறுகதை பற்றிய கருத்துகள் மட்டும் இருக்கலாமா :) இதுவே சுஜாதாவாக இருந்திருந்தால் இதையெல்லாம் கணையாழியின் கடைசிப் பக்கத்தில்தான் எழுதியிருப்பார். இந்தக் கதை என்னைக் கவரவில்லை. 'அமானுவென்சிஸ்' என்ற வார்த்தையை இந்தக் கதையிலிருந்துதான் தெரிந்துகொண்டேன் (ஸ்டெனோகிராபர்தான்!).
'இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள்' மூன்றாவது கதை. பஞ்சாயத்து யூனியனில் நீண்டகாலமாகப் பணியாற்றும் கோபாலஸ்வாமி மனைவிக்குப் பயந்து பயந்து (எதற்கு?) செகண்ட் ஷோ போகிறார். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கதவைத்தட்டப் பயந்துகொண்டு நண்பர் வீட்டில் தங்கிவிட்டுக் காலையில் வருகிறார். அந்த இரவில் கோபாலஸ்வாமிக்காகத் திறந்திருந்த கதவின் வழியாக ஒரு திருடன் புகுந்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு அயர்ந்து தூங்கும் மனைவி சுலோசனாவின் மேல் 'படர்ந்துவிட்டு' அரைமணி நேரம் கழித்துப் போகிறான். அரைத்தூக்கத்தில் அவனைத் தன் கணவன் என்று எண்ணிவிடும் சுலோசனா மறுநாள் காலை தன்னைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததற்கும் சேர்த்து சண்டைபிடிக்க எத்தனிக்க, அவரோ, தான் இரவில் நண்பன் திருநாவுக்கரசு வீட்டில் தங்கிவிட்டதாகச் சொல்ல, அதைக் கேட்டதும் 'பிடரியில் பிசாசு அடிக்க', நிமிடத்தில் சுதாரித்து 'எப்படியோ போங்க.. நான் இனி எதுவும் கேட்கப் போறதில்லை!' என்று சமாளித்து சமையலறைக்குள் நுழைந்து கொள்கிறாள். இப்பொழுது இரவிச்சந்திரனின் பஞ்ச்லைன்—'பெண்கள் மிகுந்த ஜாக்ரதை உணர்வு கொண்டவர்கள்'. அதுசரி அந்த ஜாக்ரதை உணர்வு முந்தினநாள் இரவில் மட்டும் இருக்காதா என்ற கேள்வியில் மொத்தக் கதையும் குப்புற விழுந்துவிடுகிறது.
கடைசிக் கதை 'ஒரு குரோஸ் ஜட்டி'. நாராயணன் பங்களூரில் சில மணமாகாத இளைஞர்களுக்குச் சமையல்காரனாகக் காலம் தள்ளுகிறான். சம்பளத்துக்கு மேல் கடன் வாங்கி எல்லாத்தையும் ஜாக்பாட் கனவில் ரேஸில் விடுகிறான். ஒருநாள் அவனுக்கு நிஜமாகவே ஜாக்பாட் அடித்து மூன்றரை இலட்சம ரூபாய் கிடைத்துவிடுகிறது. பரிசுப் பணத்தை எடுத்துக்கொண்டு தன் சொந்த ஊருக்கு (திருவனந்தபுரம்) செல்கிறான் போகும் முன் முதல் வேலையாக ஒரு குரோஸ் (144) ஜட்டி, 8 வயதுக் குழந்தைக்கான சைசில், வாங்கிக்கொள்கிறான். இது எதற்கு என்பதுதான் கதையின் முக்கிய முடிச்சு. அவனை அவமானப்படுத்திய அவன் தம்பி பெண்டாட்டியை வஞ்சம் தீர்க்க என்று மட்டும் அவ்வப்போது கோடிகாட்டி வாசகர்களைப் பதட்டத்தில் வைத்திருக்கும் இரவிச்சந்திரன் எப்படி என்பதைக் கடைசிப் பக்கத்தில் சொல்கிறார்.
அதாவது, நாராயணன் தன் தம்பி குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு பங்களூர் வந்தவன். அவன் மனைவி, பெண் குழந்தையுடன் தம்பி குடும்பத்தில் ஒரு வேலைக்காரி போலக் கேவலங்களுக்கிடையில் வாழ்ந்துவருகிறாள். நாராயணன் இப்போது போய் அவள் கையில் 3 இலட்சத்தைக் கொடுத்து, 'இனி நமக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது' என்கிறான். .இருக்கட்டும், ஒரு குரோஸ் ஜட்டிகள்? அதாவது, முன்பு நாராயணனின் (அப்போது 5 வயது) குழந்தை, அவனது தம்பி சம்சாரம் தன் குழந்தைக்காக வாங்கிவந்திருந்த ஜட்டியைப் போட்டுப்பார்க்க, அவள் வந்து திட்டி அதைக் கழட்டியதுடன், 'உங்க அப்பன் சம்பாத்தியத்தில் ஒண்ணு என்ன, ஒரு குரோஸ் போட்டுக்க' என்று திட்டிவிட்டாளாம்! அன்று வீட்டை விட்டுப்போன நாராயணன் அதே வைராக்கியத்தில் திரும்பி வந்து, தம்பி மனைவியிடம், 'ம் போடு என் பெண்ணுக்கு.. ஓரொரு ஜட்டியா 144 ஐயும் போடலே கொலை விழும்' என்கிறான்! இதெல்லாம் ஓவர். அந்தக் குழந்தை என்ன ஜவுளிக்கடை பொம்மையா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்கள்' இப்படியெல்லாம் தம் குழந்தையை அப்யூஸ் பண்ண மாட்டார்கள். தவிர ஆயிரம் ரூபாய் சமாசாரத்துக்கு ஜாக்பாட் எதற்கு என்பது மூன்றரை இலட்ச ரூபாய்க் கேள்வி! ஜாக்பாட் அடிக்க 3 வருடத்துக்குப்பதில் 30 வருடம் ஆகியிருந்தால்?! இந்தக் கதையில் சிறந்த பகுதிகள், திடீர் அதிர்ஷ்டம் அடித்தவனின் பேச்சு, செயல்களை குறைந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இடங்கள்: 'நாராயணன் அனாவசியத்துக்கு ஒரு ஆட்டோ பிடித்தான்'; 'திருவனந்தபுரம் போகணும். ஃப்ளைட், ட்ரெய்ன், பஸ் மூணுக்கும் வழிமுறைகளைச் சொல்லுங்க.'
சுஜாதா பாணி என்று சொல்லிவிட்டு வரிகள் ஒன்றிரண்டையாவது மேற்கோள் காட்டாமல் இருக்கலாமா? ஆகவே—
- 'ஆனால் ஒண்ணு. இந்த வருஷம் கான்ஸாஸ் ஃபெஸ்டிவல்லே தங்க மயில் கிடைக்கும்' என்றார் நீலகிரி கேலியாக. 'யோவ் அது மயில் இல்லையா. கரடி' இது திருநெல்வேலி.
- 'இவரு கந்தசாமி. எம்.டெக். மூணு இன்டர்வியூ போய் தோத்திட்டு வந்திருக்கார். யாராவது ஏமாந்து வேலை கொடுத்திட்டா அப்புறம் புதுக்கவிதை எழுதலாம்னு இருக்கார்'
- 'என்னய்யா வாராளாமா?' 'எங்கே லைனே எங்கேஜ்ட்.' என்னய்யா எங்கேஜ்ட். லைனா, அவளா?'
- 'இவங்க சிவசங்கரி' அறிமுகம். 'வணக்கங்க. உங்க கதைன்னா வெல்லம். ஒண்ணு விடறதில்ல'. பொய்.
- கூட வந்த ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும்போது லுங்கிதான் உடுத்திக்கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக்கொண்டார்.
- நின்றுகொண்டிருந்த ஆட்டோக்களில் மூணு சக்கரம் இருப்பதாகப் பார்த்து ஏறி 'மல்லேஸ்வரம் போப்பா' என்றான்.
வாசிப்பு சுவாரசியம் என்பதைத் தாண்டி இந்தக் கதைகளில் பெரிதாக எதையும் தருவதற்கு மெனக்கெடவில்லை இரவிச்சந்திரன். அதுவும் நல்லதற்கே. இரவிச்சந்திரனுக்குத் தனது எல்லை தெரிந்துதானிருக்கிறது. தானும் இன்னொரு சுஜாதா ஆகியே தீருவது என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருந்தால் தோற்றிருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படிச்செய்யாமல், சும்மா பழக்கதோஷத்தால் ஜாலிக்கு எழுதிப்பார்க்கும் அளவிலேயே நின்றுவிடுகிறார். எதை இரண்டாவது தடவை படிக்கத்தோன்றுகிறதோ அதெல்லாம்தான் இலக்கியம் என்கிறார் முன்னுரையில். அதற்கு இந்தக் கதைகளில் அதிகம் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒரு தடவை கண்டிப்பாகப் படிக்கலாம்—குறிப்பாகத் தலைப்புக் கதையை.
இனி ஒரு விதிசெய்வோம்
இரவிச்சந்திரன்
கலைஞன் பதிப்பகம்
1980-களின் நடுப்பகுதியில் வெளியானது.
இரவிச்சந்திரன் சுஜாதாவின் நண்பர் மட்டுமே, அவருடன் பணியாற்றியவரல்ல என்று எழுத்தாளர், பதிவர் அமுதவன் (http://www.blogger.com/profile/03406170062367552472) சுட்டிக்காட்டியிருக்கிறார் (என் தளத்தில் வெளியான இதே பதிவின் பின்னூட்டத்தில்). அவருக்கு என் நன்றி. வாசகர்கள் அதற்கேற்பத் திருத்தி வாசித்துக்கொள்க!
ReplyDeleteசரவணன்