குழந்தைகளுக்கான தமிழ்ப் புத்தகங்கள் - ராமகிருஷ்ண மடம் |
எல்லா பெற்றோர்களுமே ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லத் திணறியிருப்போம். அதுவரை புத்தக வாசிப்பு இல்லாதவர்கள்கூட, குழந்தைகளுக்கான கதைகளைச் சொல்வதற்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கத் தொடங்கியிருப்போம்.
இன்றுவரை
என்னிடம் தொடர்ந்து தனிமடலில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்,
குழந்தைகளுக்கான கதை சொல்வதற்கு ஏற்ற புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு.
ஆங்கிலத்தில் இப்பிரிவில் ஏகப்பட்ட புத்தகங்கள் மலைபோல்
குவிந்திருக்கின்றன. ஆனால் தமிழில்தான் இப்பிரிவில் நாம் நினைக்கும்
வண்ணம், நமக்குத் தேவையான நோக்கில் நிறைய புத்தகங்கள் இல்லை. அங்கொன்றும்
இங்கொன்றுமாக சில புத்தகங்கள் உள்ளன. இவை எல்லாமே குழந்தைகளுக்கான
புத்தகங்களாகவும் இல்லாமல், பெரியவர்களுக்கான புத்தகங்களுமாகவும் இல்லாமல்
ரெண்டுங்கெட்டானாக அமைந்துவிட்டன என்பது என் எண்ணம். இக்குறையை ஓரளவு
போக்கியிருப்பது, ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்கள்
மட்டுமே.
இந்திய
தேசிய நோக்கம் இல்லாத, நாத்திக பெற்றோர்களுக்கு ராமகிருஷ்ண மடத்தின்
புத்தகங்கள் எத்தனை தூரம் ஒத்துவரும் என்று தெரியவில்லை. அமர் சித்ர கதா
வெளியிட்டிருக்கும் அட்டகாசமான சில படக்கதைப் புத்தகங்களும் இதே
வகையிலானவைதான். ஆனால் தமிழில் வெகு சில புத்தகங்களே உள்ளன. ஆங்கிலத்தில்
உள்ளது போல, பல தலைப்புகளில் தமிழில் பல புத்தகங்களை அமர் சித்ர கதா
வெளியிடவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் பரந்த விற்பனை தமிழில் இல்லாததே
இதன் காரணம்.
என்
மகன் அபிராமுக்குக் கதை சொல்லும் நோக்கில், தமிழின் மிக முக்கியமான
பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் அத்தனை குழந்தைப் புத்தகங்களையும்
வாங்கினேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். குழந்தைகளுக்கான விநாயகர் கதைகள்,
தெனாலிராமன் கதைகள் எனத் தொடங்கி, ’குழந்தைகளுக்கான’ என்று போட்டுவிட்டாலே
அப்புத்தகங்களை வாங்கிவிட்டேன். இது நடந்தது 3 வருடங்களுக்கு முன்பு. ஆனால்
அவற்றுள் ஒரு புத்தகம்கூட என் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதே சோகமான உண்மை.
தாங்களாகவே
கதை எழுதி அதை விகடகவி கதையாகவும் தெனாலிராமன் கதையாகவும்கூட சிலர்
சேர்த்திருந்தார்கள். சில அசட்டு புராணக் கதைகளும் இருந்தன. இவை எல்லாமே
நூறு அல்லது நூற்றம்பைது வார்த்தைகளுக்குள்ளான கதைகள். இவற்றை நம்
குழந்தைகளுக்குச் சொன்னால் இரண்டு நிமிடங்கள்கூட ஆகாது. எனவே நாமே கதைக்கு
மசாலா சேர்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தது. அப்படிச் சேர்க்கும்போது
அவை சில சமயம் துடிப்பான கதைகளாகவும், பல சமயம் மோசமான கதைகளாகவும்
மாறிவிடுவதைப் பார்த்தேன்.
நான்
கவனித்தவரை, குழந்தைகளுக்கு கதைகளில் எப்போதும் ஒரு மாயாஜாலம் இருப்பது
அவசியமாகப்பட்டது. கூடவே நகைச்சுவையும். பகடிக் கதைகள் குழந்தைகளை
கலகலப்பானவர்களாக மாற்றும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். குழந்தைகள்
அறிவுரைக் கதைகளை அறவே வெறுத்தார்கள். ஒரு கதையைச் சொல்லி, கடைசியில்
அறிவுரை வரும்போது அவர்கள் அதனைக் கேலியுடனும் சலிப்புடனுமே
எதிர்கொண்டார்கள். இப்படி அறிவுரை சொல்லாத, பெரிய சாகங்களை மட்டுமே கொண்ட
கதைகளை நாமே உருவாக்குவது, அதிலும் பகடியோடு அதைச் சொல்வது, அதுவும்
கிட்டத்தட்ட தினம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமற்றது. இக்கதைகளை நம்
குழந்தைகள் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளப் போவதிலை. ஆனால்
இக்கதைகள்தான் நம் குழந்தைகளிடம், நாமறியாத வகையில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தப் போகின்றன என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். இதுதான்
குழந்தைகளுக்கான நல்ல கதையின் தேவையை முக்கியமாக்குகிறது.
முதலில்
பகடிக் கதைகளைப் பார்ப்போம். என் பாட்டி என்னிடம் அடிக்கடி சொல்லுவாள்,
என் வயிறு நிறைய கதைதாண்டா இருக்கு என்று. அவள் சொன்ன கதைகள் எல்லாமே ஒரு
நிமிட, இரண்டு நிமிட பகடிக் கதைகள். குறைந்தது அவளுக்கு நூறு கதைகளாவது
தெரிந்திருக்கவேண்டும். அதன் முக்கியத்துவம் தெரியாமல் அவற்றைச்
சேகரிக்காமல் விட்டுவிட்டேன். காலம் கடந்த நிலையில் அவற்றைச் சேகரிக்க
முனைந்தபோது, என் மாமா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அவரே கதைகள் எழுதித் தரத்
தொடங்கவும், பிள்ளையாரும் வேண்டாம், குரங்கும் வேண்டாம் என இம்முயற்சியை
நிறுத்தினேன். ஆனாலும் ஒன்றிரண்டு கதைகள் தேறின.
பகடிக்கதைகள்தான் என்றாலும், அவற்றில் இருக்கும் கற்பனை வீச்சை நம்மால் அடைய முடியாததை நாம் உணரமுடியும்.
பீர்பால்
கதை ஒன்றில், அக்பர் கேட்பார், உலகத்தில் எதுதான் சிறந்த சுகம் என்று.
அதற்கு பீர்பால், பேழ்றதுதான் (காலைக்கடன் கழிப்பது) உலகத்திலேயே சிறந்த
சுகம் என்பார். உடனே அக்பர் முகம் சுளித்து, பீர்பாலைக் கடுமையாகக்
கண்டித்து, இனி இப்படிப் பேசவேண்டாம் என்று அறிவுறுத்துவார். அன்றிரவு
பீர்பால் அக்பருக்கு மிகப்பெரிய விருந்தொன்றை வைப்பார். வகைவகையான
உணவுகளைக் கொடுத்து, நல்ல மஞ்சமிட்டு, அதில் அக்பரை உறங்க வைத்துவிட்டு,
அந்த அறையைப் பூட்டிக்கொண்டு போய்விடுவார். மறுநாள் காலை அக்பர்
எழுந்தவுடன், காலைக்கடன் கழிக்க வெளியே செல்ல எத்தனிப்பார். அறைக்கதவுகளோ
பூட்டப்பட்டிருக்கும். அக்பர் தவியாய்த் தவிப்பார். யாராலும் கதவைத்
திறக்கமுடியாது. பீர்பால் சாவகாசமாக வந்து கதவைத் திறந்து, என்ன அரசே
நன்றாக உறங்கினீர்களா என்று கேட்பார். அக்பர் பதில் சொல்லாமல் கழிப்பறைக்கு
ஓடுவார். காலைக்கடன் கழித்துவிட்டு மிகவும் நிம்மதியாக வெளியே வரும்
அக்பர், ’அப்பாடா,’ என்பார். உடனே பீர்பால், நான் சொன்னது சரிதானே அரசே,
சுகத்திலேயே சிறந்த சுகம் நான் சொன்னதுதானே என்று கேட்பார். அக்பர் மிக
வேகமாக, மிகச்சரி அமைச்சரே என்பார். என் பாட்டி சொல்லும் கதைகளில் ஓர்
உதாரணம். எல்லாமே இவ்வகைக் கதைகள்தான்.
இன்னுமொரு
கதை. ஒரு கிராமத்தில் ஒருத்திக்கு சுண்டல் என்றால் கொள்ளை பிரியம்.
வீடுவீடாகத் தரும் சுண்டலையெல்லாம் வாங்கித் தின்றுவிட்டு குசு
போட்டுக்கொண்டே இருப்பாள். நாற்றம் தாங்காமல் அவளை யாரும் வீட்டில்
அண்டவிடுவதில்லை. அதனால் எங்கே இருந்து சுண்டலைத் திங்க என்று தெரியாமல்,
பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கே சுண்டலைத் தின்கிறாள். அங்கேயே
காற்றும் விடுகிறாள். நாற்றம் தாங்காமல் பிள்ளையார் வேறு பக்கம் திரும்பி
உட்கார்ந்துவிடுகிறார். அவள் அதைக் கவனித்துவிட்டு, சரி போகட்டும் என்று
சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள். மறுநாள் காலை ஊரே அல்லோலப்படுகிறது.
பிள்ளையார் எப்படி திரும்பினார் என்று எல்லாருக்கும் குழப்பம். யார் வந்து
முயன்றாலும் பிள்ளையாரை பழைய நிலையில் நேரே உட்காரவைக்க முடியவில்லை.
எத்தனை முயன்றும் தோல்விதான். வேறு வழியில்லாமல், தண்டாரோ போடுகிறார்கள்.
பிள்ளையாரை பழைய நிலையில் உட்கார வைப்பவர்களுக்கு ஆயிரம் வராகன் பரிசு
என்று. அந்தப் பெண், நான் பிள்ளையாரை சரியாக உட்கார வைக்கிறேன் என்று
சொல்கிறாள். ஊரார் எல்லாம் கேலி பேசுகிறார்கள். இவளால் முடியாது,
யாரெல்லாமோ தோற்றபின்பு இவள் எப்படி என்கிறார்கள். இவள் ஒன்றும் பேசாமல்
கோவிலுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு பிள்ளையாரிடம், இப்ப ஒழுங்கா
உட்கார்றியா இன்னொரு குசு போடட்டுமா என்று கேட்கிறாள். பிள்ளையார் மிரண்டு
போய் ஒழுங்காக உட்கார்ந்துவிடுகிறார். இப்படி ஒரு கதை.
ஒருத்திக்கு
பிறக்கும் ஆண் குழந்தைகள் இறந்துவிடுகின்றன. பெண் குழந்தைகள் மட்டும்
தங்குகின்றன. எப்படியாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என்று வேண்டிக்கொள்ளும்
அவள், அப்படி பிறந்து அது பாட்டுக்கு உயிரோட இருந்தால் பீ மாதிரி
கெடந்தாகூட பரவாயில்லை, பீன்னு பேர் வைக்கிறேன் என வேண்டிக்கொள்கிறாள். ஆண்
குழந்தை பிறந்து நன்றாகவும் வளர்கிறது. அவளும் பீ என்றே பெயர் வைக்கிறாள்.
அந்தப் பையனின் அக்காவுக்கு கல்யாணம் ஆகி மாப்பிள்ளை, வீட்டுக்கு
வருகிறான். சாப்பாடு பரிமாறுகிறாள் புதுப்பெண். மாப்பிள்ளைக்கு சமையல்
பிடிக்கவில்லை. தட்டில் பரிமாறியதை என்ன செய்வது, என்று புதுப்பெண்ணிடம்
அவள் அம்மா கேட்கிறாள். அதற்கு அவள், ‘அவுக தின்னா தின்னட்டும், இல்லைன்னா
பீ திங்கட்டும்’ என்கிறாள். இப்படி ஒரு கதை.
இப்படிப்
பகடிக்கதைகளை விடுத்துப் பார்த்தால், அடுத்து வருபவை நம் புராண,
வரலாற்றுக் கதைகள். நான் பகடிக் கதைகளோடு வரலாற்றுக் கதைகளையும் என்
பிள்ளைகளுக்குச் சொல்லவே விரும்புவேன். மகாபாரதத்தில் வரும் எண்ணற்ற கிளைக்
கதைகள் மிகச் சிறப்பாகவும், மிக ஆழமாகவும், கற்பனையின் உச்சத்தோடும்
விவேகத்தோடும் இருப்பதைப் பார்த்தேன். அவற்றை அபிராமுக்குச் சொல்லிப்
பார்த்தேன். நான் சொன்ன கதைகளிலேயே அபிராமுக்கு மிகப் பிடித்துப் போனவை
இக்கதைகளே.
மகாபாரதத்தைத்
தொடர்ச்சியாகச் சொன்னால் அவன் சலிப்புற்றுப் போயிருப்பான். ஆனால்
இக்கிளைக் கதைகள் வாயிலாக முன்பும் பின்புமாகச் சொன்னபோது, அவன்
மகாபாரதத்தை அறிய கொண்ட ஆவல் எனக்கு ஆச்சரியமூட்டியது. இதற்காகவே
மகாபாரதத்தை வாசித்தேன். நான் சிறுவயதில் கேட்ட பல்வேறு விவேக, தியாக,
வீரக் கதைகள் எல்லாமே மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே
என்றறிந்தபோது பெரிய ஆச்சரியமும் அளவில்லாத மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
குழந்தைகளுக்கான
கதைகளை எடுத்துச் சொல்ல மகாபாரதமே அரிய பொக்கிஷம். அதிலும் பாரதத்தின்
நிறைவுப் பகுதிகளில் வரும் கிருஷ்ணனின் மறைவு, பாண்டவர்களின் மறைவு,
துரியோதனனின் மரணம் போன்றவற்றை அபிராமுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த
ஆச்சரியம் சொல்லி மாளாதது. அதைவிட, அவனுக்குச் சொல்லும்போதே நான் என்னை
இழந்ததையும் உணர்ந்தேன். மகாபாரதத்தில் இருக்கும் இதுபோன்ற சிறிய சிறிய
கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால், அது குழந்தைகளுக்கான சிறந்த
கதைப் புத்தகமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சுக்ராச்சாரியார்
- தேவயானி - கச்ச முனிவரின் கதை இன்னொரு உச்சம். விஸ்வாமித்திரர் கதை
இன்னொரு பரிமாணம். அதே மாதவியின் கதை (இதை எம்.வி.வெங்கட்ராம் நிதிய கன்னி
என்று எழுதியிருந்தார். ஒரு இலக்கியவாதி சிலம்பம் ஆட ஏற்ற களம் இக்கதையில்
உண்டு) இன்னொரு கற்பனை உச்சம். இவற்றைக் குழந்தைகளுக்குச் சொல்லும்போது
கொஞ்சம் கவனமும் வேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் நாம் நம் இயல்பான
உணர்வின் மூலம் மிக எளிதாகவே இக்கதைகளை குழந்தைகளுக்குச் சொல்ல முடியும்.
நம்
புராண, வரலாற்றுக் கதைகளில் இல்லாதவை இல்லை என்னும் பழங்கருத்துக்கே நான்
மீண்டும் வந்தடைந்திருக்கிறேன். நானே உண்டாக்கிச் சொன்ன பல கதைகள் ஒரு
நாளில் அழிந்துவிடுவதையும், இக்கதைகள் தரும் மன எழுச்சி அப்படியே
நிலைத்திருப்பதையும் நான் தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். இக்கதைகளை எல்லாம்
தொகுத்து வெளியிடவேண்டியது காலத்தின் தேவை. அதைச் செய்பவர்கள்,
செய்துகொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் போற்றுதலுக்கு
உரியவர்கள்.
வீடு மாற்றிய பின்... ஆறு மாதம் முன்பு பக்கத்தில் உள்ள நூலகத்தில் குழந்தைகளை சேர்த்தேன்... ஆரம்பத்தில் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று அறிந்து சில நூல்களை மட்டும் தேர்வு செய்தேன்... இப்போது அவர்களே சென்று மாற்றிக் கொண்டு வருவதோடு இல்லாமல் (பீர் கதை போல்) எனக்கும் சொல்கிறார்கள்...! கேள்விகளை கேட்கிறார்கள்..!!
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன்...
Deleteதங்கள் அனுபவங்களும் சுவையாக இருக்கும் போலிருக்கிறதே?
பின்னூட்ட இடுகைக்கு நன்றிகள்.