குழந்தை வளர்ப்பு
ஒரு வாழ்க்கைக்கலை. கற்றது கைம்மண்ணளவு. [“பிள்ளைவளர்ப்பு இவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு
ஏன் எனக்கு முன்னாலேயே சொல்லவில்லை” என்று என்னைப் பெற்றவளிடம் கேட்டு, “நான் பெற்ற
துன்பம் பெறுக இவ்வையகம்” என்று அவர் வாழ்க்கைச் சக்கரம் பற்றி எனக்கு பல்பு கொடுத்த
கதை இங்கே வேண்டாம்…!] நான் எழுதப்போவதைப் பற்றி என் இரு குழந்தைகளோடு விரிவாகக் கலந்துரையாடி,
குழந்தைகளின் அனுமதி/மறுபார்வை பெற்றே அனுப்பப் பட்டிருக்கிறது! எதற்கும் இருக்கட்டும் என்று அனுபவத்திலிருந்து முன்னெச்சரிக்கைக்
குறிப்புகள்:
1. பெற்றவரின் கல்வி எப்போதுமே முடிவதில்லை! ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை, என் மகனோ/மகளோ எனக்குச் சொல்லித் தரப்போகிறார். உண்மையான ஊக்கத்துடன், ஒரு மாணவருக்கான பயபக்தியுடன் மகன்/மகளிடமிருந்து அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியுமே கற்றுக் கொள்கிறேன். அப்போது தான், என் மகன்/மகளை தனித்துவம் நிறைந்த இன்னொரு மனிதராக மதிக்கிறேன் என்று பொருள்! என் மகன்/மகள், என் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பு இல்லை!
2. என் மகன்/மகள் தனித்துவமானவர் என்றால், என் மகன்/மகளுக்குத் தனித்துவம் தரும் சூழலில் எனது பங்கு என்ன என்பதை, நல்ல இரும்புக்கடையில் எடைபோட்டு உணர்வது அவசியம். நட்புவட்டத்தில் / இணையவெளியில், பலர் பல மாதிரிச் சொல்கிறார்கள்: 'ஏன் உங்கள் மகன்/மகளுக்கு ஹிந்து/தமிழ்ப் பண்பை/பழைமையைப் போதிக்கிறீர்கள்? ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுங்கள்! நாத்திகம் மட்டுமே சொல்லிக் கொடுங்கள்!' என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதில் தான் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறேன். ஏனென்றால், குழந்தைகள் என் செயல்கள், என் உடல்மொழி என்று பலவற்றிலிருந்தும் வாழ்க்கைப் பாடம் கற்கிறார்கள்.
|
|
எனக்குச் சரி என்று படுவது, என் குழந்தைகளுக்குச் சரி என்று படவில்லை என்னும் விஷயங்களில் அவர்களின் கேள்விகளும் விவாதங்களும் நீண்டிருக்கின்றன. எனவே தான், திடீரென்று 16வயதில் தலையில் மொட்டையடித்துப் பச்சைச் சாயம் அடித்து, நாக்கில் துவாரமிட்டு நாக்குத்தி ஃபாஷனாகப் போட்டு, 'மாம், #$@! யூ' என்று சொல்லாமல், குழந்தைகள் நிதானமாக நேருக்கு நேர் அமர்ந்து பெற்றவளாகிய என் வாதத்தில் ‘தவறு என்ன’ என்று தெளிவாகச் சொல்வதே தேவலை என்று தோன்றுகிறது.
எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைப் பற்றி கதைகள் / உரையாடல்களை அமைக்கிறேன். கிரகணம் என்று வந்தால், அறிவியல் குறிப்பைத் தொடர்ந்து புராணக் கதைகள் சொல்வது எங்கள் வழக்கம். 7,8 வயதானதும், 'எங்க அப்பா காலத்தில, கிரகண நேரத்தில ஊறுகாயில தர்ப்பைப் புல்லைப் போடுவாங்க, கிரகணம் ஆனதும் தலைக்குக் குளிப்பாங்க' என்ற கதைகளைச் சொல்லியிருக்கிறேன்; அதே சமயத்தில், என் அப்பா, இம்மாதிரியான நம்பிக்கைகளுக்கு அறிவியல் பின்புலம் இல்லை என்று சொல்லிக் கொடுத்ததையும் நெகிழ்ச்சியோடு, அவர்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்கிறேன். சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகள் (Baby-shower) வரும்போது, தமிழக நடப்புகளைக் கதைகளாகச் சொல்வேன் - இலையில் சாப்பாடு முதல், கர்ப்பிணிப் பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிவது வரை (கண்ணாடி வளையல்கள் ஏன் என்ற கேள்விக்கு உங்களுக்கு உணர்வு/அறிவு பூர்வமான விடை தெரிந்திருக்க வேண்டும், இல்லாவிடில் நீங்கள் அம்பேல்!)
கேள்விகளுக்கும்
மாறுதல்களுக்கும் இடம் தராத மதத்தை நம்பாமல், என் சிற்றறிவுக்கேற்ற மத விதிகளை மட்டுமே
நாங்கள் ஏற்கிறோம். அதனால், குழந்தைகளின் 4, 5 வயதில், புராணக் கதைகளில், உரிமைத்துறப்பிகளை
('இதெல்லாம் அந்தக் காலத்துக் கதையில்லியா, அதான்') சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது
அவர்களே நிறைய மந்திரக் கதைகளும், கற்பனைக் காவியங்களும் படிக்கிறார்கள். எனவே ஒரு
சில விளக்கங்களோடு விட்டு விடுகிறேன். எடுத்துக்காட்டு: தசாவதாரம் என்பது நீர், நீர்+நிலம்,
நிலத்தில் வாழும் மிருகம், மனிதனின் பண்பு வளர்ச்சி எனப் பரிணாம வளர்ச்சியைக் காட்டுவது.
இதைச் சொல்லும்போது (தசரதருக்கு ஏன் இத்தனை பெண்டாட்டிகள்? வராக அவதாரத்தில் பூமியை
எப்படி பூமிக்குள்ளே பாதாளத்தில புதைக்க முடியும்? இராமர் தன் கோபத்தைக் காட்டி கடல்
தண்ணீரை வற்ற வைச்சிருந்தால், கூலாக நடந்தே அந்தப் பக்கம் போயிட்டு வந்திருக்கலாமே!)
எழும் கேள்விகளுக்கு விடைகளைத் தயாராக வைத்துக் கொள்கிறேன். அதேபோல், பதின்மவயதைத்
தொடும் என் மூத்த செல்வம், நாத்திகத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கிவிட்டார். என் தந்தை,
எனக்கு நாத்திகம் கற்பிப்பதற்காக என் பதின்மவயதில் சொன்ன ‘சத்யகாம ஜாபாலி’ போன்ற நாத்திகர்களின்
கதைகளையும் சொல்லத் தொடங்கியிருக்கிறேன்.
குழந்தைகளுக்கு
பிடித்த புத்தகங்கள்/நீதிக்கதைகள்:
பொதுவாக
0-7 வயதில்
தினம் இரவு தூங்கப் போகும் போது படித்தோ, கதைகளைச் சொல்லித் தூங்க வைத்தோ பழக்கலாம்.
குழந்தைகள் படம் பார்க்கத் தொடங்கும் வயதிலிருந்தே அமர் சித்ர கதா புத்தகங்களிலிருந்து
கதை சொல்வதைத் தொடங்கி விடலாம். இன்றும், உலுப்பி, நசிகேத கதைகளை அமர் சித்ர கதை புத்தகங்களிலிருந்து
படிக்கிறார்கள்! நான் புராண, இந்தியக் கதைகளை நீட்டிமுழக்கி(!)ச் சொல்வேன். இணையத்தில
நிறைய இருக்கின்றன! குழந்தை கிருஷ்ணரின் குறும்புகள், கடோத்கசன்/ஹனுமானின் குழந்தைக்குறும்புகள், குசேலர்
மற்றும் சகுந்தலை கதைகளை ரிபீட்டில் கேட்டார்கள், இன்னமும் கேட்கிறார்கள் [ஃப்ளோவில்
எதையாவது சொல்லவிட்டு விட்டால், 'நீ தப்பாச் சொல்றே' என்று சொல்லிவிட்டு கதையை முழுமையாகச்
சொல்வார்கள்]. புராணக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் காட்டும் நிபந்தனையற்ற, நிறைந்த
(complete and unconditional love) அன்பு, புராண மக்கள் காட்டிய கடமையுணர்ச்சி, எளிமை
கண்டிரங்கல் போன்ற தீம் அவர்களுக்குப் பிடித்து இரு க்கிறது.
1. 0-3 வயதுவரை: அமெரிக்க மற்றும்
இந்திய கதைகளான 3 பன்றிகளும், ஓநாயும்; பாட்டி சுட்ட வடையைச் சுட்ட காகம், மற்றும்
பல ஆங்கிலப் பாடல்கள் இந்த வயதில் பிரதானமாக இருந்தவை. எனக்கு குழந்தைப்பாடல்கள் எனக்குத்
தெரியாததால், ஜிம்போரி போன்ற மழலையர் விளையாட்டுக் கூடங்களில் பணம் கொடுத்து குழந்தைகளைக்
கூட்டிப் போய்க் கற்றேன். இந்த வயதுகளில், கதை சொல்லும் போது கைகால் அசைப்பு, கண்விழி
அகலம் இவை குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன. நம் செயல்கள் மட்டுமல்ல, கதைகள் பேசும்போது
நம் உடல்மொழியிலிருந்தும் அவர்கள் பல நீதிகளைக் கற்கிறார்கள்.
குறிப்பாக, கடைகள்,
நூலகம் போன்ற பொது இடங்களில் தைரியமாகவும், அதே சமயம் யாரை நம்பலாம் போன்ற பாடங்களைக்
கதைகளாகச் சொல்லிக் கொடுப்பது (சிறுவயதில் ‘கோகுலம்’ இதழில் நான் படித்த ‘காவலரின்
தொப்பி’ போல) உதவியாக இருக்கும்! இந்த வயதுகளில் நூலகம்/புத்தகக் கடைகளில் இருந்து
படம் நிறைந்த புத்தகங்களை வாங்கி அவர்களோடு படிப்பது, குழந்தைகளுக்குப் பிடித்திருந்தது.
குழந்தைகள் தானே மலம்கழிக்கக் கற்பதற்கு, தீயணைப்பு வண்டி பற்றி, பேரிடரிலிருந்து தற்காத்தல்
(disaster defense) போன்ற படப் புத்தகங்களை அவர்களோடு அமர்ந்து படித்தால், கல்வியோடு
தைரியமும் வளர்கிறது.
2. 3-7 வயது: இந்த வயதுகளில் மாண்டிசோரி
பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தது மிகப் பயனுள்ளதாக அமைந்தது. பல வயதினர் குழுவாகப்
படிக்கும் பின்புலத்தில், குழந்தைகளின் தன்னம்பிக்கை அதிகரித்தது! அங்கே தான், தாமே
எழுத்துக்கூட்டிப் படிக்கவும் குழந்தைகள் கற்றார்கள். வயதுக்கேற்ற படப் புத்தகங்கள்,
எழுத்துகளைச் சேர்த்துப் படிக்கச் சொல்லிக்கொடுக்கும் படப் புத்தகங்களை சேர்ந்து படி
த்தோம். புத்தகத்தை
வாய்விட்டுப் படிக்கச் சொல்லிக் கொடுப்பதின் முக்கியம் தெரிந்தது, இந்த வயதில் தான்.
ஏனென்றால், என் இரண்டாவது மகவுக்கு இருந்த உச்சரிப்புக் குறை தெளிவாகத் தெரிந்தது -
இந்த வயதில் தான்! குழந்தைகள் பார்க்கும்படி நானோ, கணவரோ புத்தகம் படித்தது, குழந்தைகளுக்கு
படிக்கும் ஆர்வத்தை அளித்தது. என் முதல் மகவுக்கு ஒதுக்கிய 'படிப்பு' நேரம், இரண்டாவது
குழந்தைக்கு, சொந்தக் காரணங்களால் ஒதுக்க முடியவில்லை. எனவே இரண்டாவது குழந்தைக்கு
அந்தளவுக்கு, புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. இந்த வயதில் படிக்க வைக்கும்/படித்துக் காட்டும்
புத்தகங்களில், ஜூனி பி ஜோன்ஸ் தொடர் புத்தகங்கள், விம்பி கிட் (ஹிஹி, எனது
கெக்கெபிக்கே குடும்பம்!) தொடர் புத்தகங்கள், ரோஆல்ட் டால் எழுதிய மடில்டா, சார்லியும்
சாகலேட் பாக்டரியும், ஜேம்ஸும் மாபெரும் பீச் பழமும் போன்ற புத்தகங்களைப் படிக்கலாம்.
பெர்ன்ஸ்டைன் (b)பேர்ஸ், டாக்டர் ஸ்யூஸ் கதைகள் எல்லாம் நீதிநெறிகள் நிறைந்தவை.
3. 7-11 வயது: இந்த வயதில், அவர்களே
படிக்கத் தொடங்கியிருப்பார்கள். புதிய/பெரிய சொற்களுக்கு, அகரமுதலி மற்றும் சூழ்நிலைப்
பொருத்தம் பார்த்து அறியச் சொல்வது தேவையாயிருந்தது. எனிட் ப்ளைடன், ஹாரிபாட்டர் தொடர்
புத்தகங்கள், மாஜிக் ட்ரீ ஹவுஸ் மற்றும் ஜூனி பி ஜோன்ஸ் தொடர் புத்தகங்கள் (இதில்
பல விஷயங்கள் அறிவியல்/வரலாறு பூர்வமாக ஆராயப்படும்), வயதுக்கேற்றாற் போல, குழந்தையின்
ரசனை / திறனுக்கேற்றாற்போல படிக்கக் கொடுத்தேன். குழந்தைகள் இருவருக்கிடையே ரசனை/திறன்
வேறுபாடு கண்கூடாக இருக்கிறது. அவர்களே நட்பு வட்டாரத்தில்/ஆசிரியர்கள் சொல்லி என்று,
சில புத்தகங்களைக் கேட்கிறார்கள். இந்த வயதில், பிரபலமானவரின் வாழ்க்கை வரலாறுகளைப்
படிக்க வைக்கலாம். ரைட் சகோதரர்களின் வாழ்க்கை வரலாறு ஏனோ என் குழந்தைகளுக்குப் பிடித்த
ஒன்று.
புராணக் கதைகளை,
ராஜாஜி அவர்கள், மற்றும் சின்மயானந்தா போன்றோர் எழுதி வெளியிட்ட இராமாயண, மகாபாரத(ச்
சுருக்க) புத்தகங்களை வாங்கிப் படிக்க வைப்பது நல்லது. குழந்தைகளின் 3-7வயதில்
படித்துக்காட்டிய புத்தகங்களை அவர்களை விட்டே 7-11 வயதில் படிக்க வைப்பது நலம். ரிக்
ரையோர்டன் (Rick Riordan) எழுதிய தொடர் புத்தகங்கள், ஸீக்ரெட் ஸீரிஸ் தொடர் புத்தகங்கள்,
Smile (Graphic novel), சைட்வேஸ் ஸ்டோரீஸ், என்று என் மக்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கே
உரிய நகைச்சுவையுணர்வு வளரும் தருணம். புத்தியைச் சோதிக்கும் புத்தகங்களோடு, கடி ஜோக்ஸ்/அரை
அறுவை ஜோக்ஸ் புத்தகங்களை விரும்பினால் வாங்கிக் கொடுங்கள்!
4. 11-16வயது: இந்தவயதிலும், அவர்கள்
என்ன படிக்கிறார்கள் என்று தீர்மானிக்க இயலாது! அவர்களே தீர்மானிக்கும் வயது இது! இப்போதைக்கு
என் மூத்த செல்வம், ஹங்கர் கேம்ஸ் என்ற தொடர் புத்தகங்கள், ஜான் கிரிஷாம்
குழந்தைகளுக்காக எழுதும் க்ரைம் த்ரில்லர் போன்ற புத்தகங்களைப் படிக்கிறார். அவருக்கு,
பத்துவயதில், கல்லூரி அளவில் ஆங்கில அறிவு இருப்பதாகப் பள்ளியில் கணித்திருக்கிறார்கள்,
ஆனால், தன் மனமுதிர்ச்சிக்கு மீறி புத்தகங்கள் படிப்பதை அவர் விரும்புவதில்லை. இந்த
வயதில், என் பெற்றோரோ, என் கணவரின் பெற்றோரோ எங்கள் சிறுவயதில், புத்தக ஆர்வத்துக்குத்
தடை போட்டதில்லை. நாங்களும் குழந்தைகளுக்குத் தடை சொல்வதில்லை.
கூடிவாழ்தல்: குழந்தைகள் இருவரும் முடிந்தவரை
சண்டை போடாமல் வளர்வதற்கு, நான் கண்ட/கேட்ட sibling warfare பற்றிய அனுபவம்/கதைகளைச்
சொல்வது வழக்கம். இது பற்றியே தனியாகக் கட்டுரை எழுதும் அளவு, உளவியல் நிறைந்த விஷயம்.
எனவே கவனத்துடன் கையாள வேண்டும், சகோதரப் பாசம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது
பெற்றோரே என்பது என் கருத்து.
தமிழ்ப் படிப்பு: என் குழந்தைகள் தமிழில் எழுதப்படிக்கவும்,
மற்றும் பல தமிழ்ச்சொற்களையும் அறிந்திருக்கிறார்கள். தெனாலிராமன், ஔவையார் போன்ற சிறுவர்
கதைகளை, தமிழிலேயே படிக்க வைக்கிறேன். என்றாலும், இணையத்தில் தமிழில் கிடைக்கும் குழந்தைக்
கதைகளில் காணும் மொழியாளுமை, குழந்தைகளுக்கேற்றதாக இல்லை என்பது என் கருத்து. 14வயதுக்கு
மேல் குழந்தைகளுக்கு, தமிழில் படிக்க விருப்பமிருந்தால் மட்டுமே [எங்கள் குடும்பம்
அமெரிக்காவில் வசிப்பதால்] தமிழைக் கற்பிப்பதைத் தொடர்வேன். மற்ற பெற்றோர், தம் குழந்தைகளை
தமிழில் எதைப் படிக்கச் சொல்கிறார்கள் என்றறிய விருப்பம்.
அனுஜா (கெக்கெபிக்குணி) அவ்வப்போது எழுதும் பதிவுகள்: http://kekkepikkuni.blogspot.com; மற்ற சமயங்களில் ட்விட்டரில்
அனுஜா (கெக்கெபிக்குணி) அவ்வப்போது எழுதும் பதிவுகள்: http://kekkepikkuni.blogspot.com; மற்ற சமயங்களில் ட்விட்டரில்
7-11 வயதில் இவைகளும் நல்ல சாய்ஸ்-
ReplyDeleteஏ டு இஸட் சீரிஸ் - ரான் ராய்
(24 புத்தகங்ளுக்கு மேல் உடையது); ரான் ராயின் மற்ற தொகுதிகளும்
ஹெலன் பைபா என்பவர் தொகுத்த தொகுதிகள் 6 வயது முதல் 10 வயதுவரை வயது வாரியாக, அனிமல் ஸ்டோரீஸ், ஸ்கேரி ஸ்டோரிஸ் எனப் பல்வேறு தலைப்புகளில் கிடைக்கின்றன.
ஆர்.எல். ஸ்டைன் - கூஸ் பம்ப்ஸ் (70 க்கு மேல்),
10- 11 முதல்-
செப்டிமஸ் ஹீப் - ஆன்ஜி சேஜ் (8 புத்தகங்கள்)
கீஸ் டு த கிங்டம் - கார்த் நிக்ஸ் (7 புத்தகங்கள்)
ஆண்தனி ஹாரோவிஸ் -இன் எல்லாப் புத்தகங்களும், குறிப்பாக அலெக்ஸ் ரைடர், டயமண்ட் பிரதர்ஸ் சீரிஸ்
சைட்வேஸ் புத்தகத்தைக் குறிப்பிட்டிருந்தீர்கள்; அத்துடன் லூயி சாக்கரின் ஹோல்ஸ் -ம் மிக நல்ல புத்தகமே.
கேத்தி கேசிடியின் டிஸ்ஸி முதலான புத்தகங்கள் (பையன்களுக்குப் பிடிப்பது சந்தேகமே!)
நான் ஜூனி பி-யின் பெரிய விசிறி! ஜூனி அமெரிக்காவில் எங்கோ அந்த ஸ்டுபிட் யெல்லோ பஸ்ஸை சபித்தபடி தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறாள் என்றே நம்புகிறேன்! ஓவியரையும் தனியே பாராட்ட வேண்டும்! கடைசியாக வந்த 'டர்கீஸ் வி ஹவ் லவ்ட் அன் ஈட்டன்...' படித்துவிட்டீர்கள்தானே?
ஹங்கர் கேம்ஸ் இணையத்தில் (சட்டபூர்வமாக) இலவசமாகக் கிடைக்கிறது (பிடிஎப் மற்றும் ஒலி வடிவில்). குழந்தைகளுக்கிடையே அந்தக்கால ரோமன் கிளாடியேட்டர் பாணி போர் நடத்தப்படுவதைச் சித்தரிக்கும் இந்த சயன்ஸ் ஃபிக்ஷனைத் தமிழில் விட்டிருப்பார்களா என்று தெரியவில்லை! பாத்திரங்களின் மிகத் தத்ரூபமான சித்தரிப்பே இதன் வெற்றி என்பேன்.
தமிழில்?!
ஹங்கர் கேம்ஸ், ஹோல்ஸ், ஏன் 'வேர் வைல்ட் திங்ஸ் ஆர்' என்ற மிகச்சிறிய புத்தகத்தில் இருக்கும் கற்பனை வளம் தமிழில் எங்கே இருக்கிறது? சில பழைய புத்தகங்களையே சொல்லவேண்டியிருக்கிறது-
என்.சி.பி.எச். தற்போது மீண்டும் வெளியிட்டுவரும் அந்தக்கால ரஷ்யன் புத்தகங்கள் (குறும்பன், நீச்சல் பயிற்சி, விளையாட்டுப் பிள்ளைகள் போன்றவை)... காலச்சுவடு மீண்டும் வெளியிட்டுள்ள தி.ஜ.ர. மொழிபெயர்த்த ஜிம் கார்பெட்டின் குமாயுன் (அந்தக்காலத்தில் குமாவும்!) புலிகள், சமீபத்தில் விகடன் வெளியிட்டுள்ள மெரீனாவின் சின்ன வயதினிலே என்று சிலதான் எனக்குத் தெரிகிறது. நாம் அன்று ரசித்திருக்கக் கூடிய தமிழ்வாணனின் டோக்கியோ ரோஜா, சாவியின் வாஷிங்டனில் திருமணம் முதலான புத்தகங்களையெல்லாம் இன்று நாமே சிபாரிசு செய்ய முடியவில்லை!
ஸார், சீரியஸாவே நீங்க இனி இந்த ப்ளாக்கைப் படிக்கப் போறீங்களா?
Deleteஇப்படில்லாம் பின்னூட்டம் போடுவீங்களோன்ற பயமே அடுத்த பதிவு எழுதறதை நினைச்சா நடுங்க வைக்குது...
365 புத்தகங்கள்தான் இலக்கு, ஏறத்தாழ 340 ஆச்சு. வழக்கம்போல இங்கேயும் க்ளைமாக்ஸ்லதான் போலீஸ்காரர் வரணுமா!
நன்றி. :)
/// இப்படில்லாம் பின்னூட்டம் போடுவீங்களோன்ற பயமே அடுத்த பதிவு எழுதறதை நினைச்சா நடுங்க வைக்குது... ///
Deleteஏதோ ஒரு பின்னூட்டமாவது வந்திருக்கேன்னு சந்தோசப்படுவிங்களா, அத விட்டுட்டு :)
ஒண்ணு செய்யுங்களேன்! பின்னூட்டப் பெட்டிக்கு மேலே ' 'நல்ல பதிவு, நன்றி நட்பாஸ' என்று மட்டும் பின்னூட்டம் இடவும்' என்று அறிவிப்பு செய்துவிடுங்கள்! அல்லது இரா.முருகன் போல பின்னூட்டப் பெட்டிக்கே 140 கேரக்டர் ஆட்டோ லிமிட் வைத்துவிடுங்கள்!
சீரியஸாக, என் பின்னைட்டங்களில் எதுவும் பிரச்சினை என்றால் தாராளமாக அழித்துக் கொள்ளலாம் பாஸ்! நோ பிராப்ளம்ஸ்!
நன்றி.
அடடா, அப்படில்லாம் இல்லை...
Deleteநிஜமாவே நான் என் கவலையைச் சொன்னேன். யார் இதை எல்லாம் படிக்கப் போகிறார்கள் என்ற ஒரு தன்னம்பிக்கையில் மனதில் தோன்றியதை எழுதிக் கொண்டிருந்தேன், இப்போ கொஞ்சம் உதைப்பு வருது :) - இதை நான் மனதிலிருந்து சொல்கிறேன் என்று நம்புவீங்களோ மாட்டீங்களோ, இந்த மாதிரி சீரியஸானவர்கள், விஷயம் தெரிந்து பேசுபவர்கள் அளிக்கும் பின்னூட்டங்கள், எதிர்மறையாக இருக்கும்போதும், பதிவின் தரத்தை உயர்த்துகின்றன.
நீங்க தாராளமாக என் பதிவுகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எனக்கு அது பிரச்சினையில்லை - எதையும் நியாயப்படுத்தமாட்டேன் (என்று நம்புகிறேன்).
நீங்கள் விரும்பினால் உங்களைப் 'பரவசப்படுத்திய' புத்தகம் பற்றி ஐநூறு சொற்களுக்குக் குறையாமல் எழுதி .... :)
மிக்க நன்றி.
அப்படியா, நன்றி!
Delete/// நீங்கள் விரும்பினால் உங்களைப் 'பரவசப்படுத்திய' புத்தகம் பற்றி ஐநூறு சொற்களுக்குக் குறையாமல் எழுதி .... :) ///
natbas2012 மெயில் கணக்கில் கொஞ்சம் பாருங்களேன்! மறக்காம ஸ்பாம் பெட்டியையும் :)
பார்துவிட்டேன். மிக்க நன்றி. விரைவில் தொடர்பு கொள்கிறேன் :)
Delete