சிறப்புப் பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
aka. Miss Simlla's Feeling for Snow |
ஆறு வயதுச் சிறுவன் ஒருவன், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல்தளத்திலிருந்து கீழே விழுந்து செத்துப் போகிறான். அது வெறும் விபத்து என்று சொல்லி வழக்கை முடிவுக்குக் கொண்டு வர காவற் துறையினர் விரும்புகின்றனர். அதே குடியிருப்பில், அந்தச் சிறுவனோடு நட்பாக இருக்கும் மிஸ் ஸ்மில்லாவுக்கு அச்சிறுவனின் மரணம் விபத்து என்பதில் நம்பிக்கையில்லை.நடந்ததை அறிய அவரே தொடங்கும் விசாரணை அவர் உயிருக்கே உலை வைக்கப் பார்க்கிறது.
நாவலின் கதையென்று எடுத்துக் கொண்டால், த்ரில்லர் வகையைச் சேர்ந்த எந்த ஒரு நாவலின் கதையாகவும் இது இருக்கலாம். கதையின் நாயகமாக ஒரு பெண்; அவள் அபரிதமான திறமை கொண்டவள், ஆனால் சமூக உறவுகளில் சிக்கல். அமைதியான, ஆனால் பலசாலியான ஒரு ஆண், அவனிடம் நாயகிக்கு ஒரு ஈர்ப்பு; இக்கட்டான சமயத்தில் அவளுக்கு உதவ அவன் இருக்கிறான்; தங்களுடைய லாபத்தில் மட்டுமே குறியாக இருக்கும் ஒரு நாசகார நிறுவனம்; பதினைந்து நிமிட புகழுக்காக ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யத் தயாராக இருக்கும் ஒரு வில்லத்தனமான விஞ்ஞானி. இப்படி ஒரு சாதாரண த்ரில்லருக்குத் தேவையான மசாலாக்கள் அத்தனையும் இங்கே உண்டு. ஆனால் பீட்டர் ஹாக்கின் பனி குறித்தப் புரிதலும், அவருடைய எழுத்து நடையும் படித்துவிட்டுத் தூக்கி வீசும் இன்னொரு நாவலாக இல்லாமல் திரும்பத் திரும்ப வாசிக்கும் நாவலாக Miss Smilla’s Sense of Snowவை காப்பாற்றி விடுகின்றன.
மிகவும் வித்தியாசமான விஷயங்களை த்ரில்லர் வகை கதைசொல்லலில் அந்நியத்தன்மை இல்லாமல் பிணைத்து எழுத்துவதில் அமெரிக்கர்கள் அசாதாரண தேர்ச்சி பெற்றவர்கள். இப்படிச் செய்வது ஒரு சாதாரண கதைக்கும்கூட அறிவார்ந்த கதையாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தந்து விடுகிறது. ஆனால் ஒரு நுட்பமான வாசகனால், எந்த தகவல் விக்கீபிடியாவிலிருந்து வந்தது, எந்த தகவல் எழுத்தாளரின் அனுபவத்திலிருந்து வந்தது என்பதைப் பிரித்தறிந்து கொள்ள முடியும். பீட்டர் ஹோக் விஷயத்தில் பனிபொழிவும் உறை பனியும் அவர் தன் நேரடி அனுபவத்தில் அறிந்த விஷயங்கள் என்ற உணர்வு நமக்குக் கிடைக்கிறது. அவரது எழுத்தில் அத்தனை தெளிவு இருக்கிறது. இந்த நுட்பமான விஷயங்கள் இந்த நாவலை இன்னும் ஆழமானதாக்குகின்றன.
பீட்டர் ஹோக்கின் எழுத்து நடையும் நாவலுக்கு ஆழம் சேர்க்கிறது. கதைப்போக்கினூடே வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் உண்டான வெவ்வேறு இயல்புகளை ஹோக் பேசும் சில அற்புதமான பத்திகள் இருக்கின்றன. கிரீன்லாந்துக்கும் டென்மார்க்குக்கும் இடையே உள்ள உரசல்களையும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் பீட்டர் ஹோக் கவனப்படுத்துகிறார். இனூட் இன மக்களின் வாழ்க்கை முறையில் நவீன பொருளாதார முன்னேற்றம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் அவர் சிறிது விரிவாகவே விவரித்திருக்கிறார். இனூட் மக்களில் சிலர் இனி நாம் உணவுக்கு வேட்டையாட வேண்டியதில்லை என்று வரவேற்று மகிழ்கின்றனர். இப்படியாக பாரம்பரிய வாழ்க்கை முறையை நவீன முன்னேற்றம் முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறது. இதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விஷயங்களை ஆழமான புரிந்துணர்வோடு பீட்டர் ஹோக் எழுதியிருக்கிறார். இவற்றைப் பேசுவதில் அவருக்கு இருக்கும் அக்கறை திறந்த மனம் கொண்ட வாசகர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர்களில் பலரும் டென்மார்க், கிரீன்லாந்து, இனூட் மக்கள் என்று ஹோக் பேசும் விஷயங்களைப் பற்றி இன்னும் பல தகவல்களைப் பெற கூகுள் செய்வார்கள்.
த்ரில்லருக்குத் தேவையான சூழலை உருவாக்குவதற்குத் தகுந்த எழுத்து நடை கொண்டவர் ஹோக். இந்த நாவல் இரு பகுதிகளாக உள்ளது: முதல் பகுதி பனிமூடிய நிலப்பரப்பில் நடைபெறுகிறது. இரண்டாம் பகுதி உறைபனிமூடிய பெருங்கடல்களில் நடைபெறுகிறது. உருக்கின் பழுப்பு நிறைந்த மூட்டமான வானிலையை, எப்போதும் நீங்காது தொடரும் குளிரின் ஊசிமுனையை, சிலபோது மென்மையாகவும் சிலபோது கடுமையாகவும் பெய்யும் பனிபொழிவை, ஹோக் துல்லியமாகப் பதிவு செய்கிறார். வாசிக்கும்போது நமக்கே சில சமயம் குளிர்கிறது. இரண்டாம் பகுதியில் கப்பல்கள் மற்றும் உறைபனி பற்றி அவருக்குத் தெரிந்திருக்கும் விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு கப்பலின் சிறிய அறைக்குள் இருக்கும் பிரதான கதாபாத்திரத்தை விவரிக்கும் இந்தப் பகுதியில் நமக்கே மூச்சு முட்டும் உணர்வு வந்துவிடுகிறது. அதே சமயத்தில் ஹோக், கிரீன்லாந்தின் உறைபனி மிதக்கும் கடலை நிறைக்கும் குளிர் நீரின் பரந்த வெளியெங்கும் நம்மை அழைத்துச் செல்கிறார். பனி மற்றும் உறைபனி பரப்புகள் பற்றி நமக்கு தகவல் செறிவுள்ள ஒரு வகுப்பே எடுத்து விடுகிறார்.
த்ரில்லர் என்று பார்த்தால், அந்த வகைமைக்குரிய சட்டகங்களுக்கு உட்பட்டு மிகச் சிறப்பாகவே இந்த நாவல் வெற்றி பெறுகிறது. வாசகனின் கவனத்தை இழக்காமல் இழுத்துப் பிடித்து உட்கார வைக்கும் பல சாகசச் செயல்கள் நாவலில் உண்டு. கதாநாயகி ஒரு வெடி விபத்தில் கிட்டத்தட்ட செத்தே போகிறாள், வில்லன்கள் அவளைக் கிட்டத்தட்ட கடலுக்குள் வீசியே விடுகிறார்கள், அவள் தனக்குத் தேவையான ஆவணங்களைச் சேகரிக்க அலுவலக அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைகிறாள், காவல் துறையினர் அவளை எச்சரிக்கின்றனர், ஒரு வில்லனோடு சண்டை போடுகிறாள், கப்பலின் ரகசிய இடங்களைத் தேடி தனியாகச் செல்கிறாள் - தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் எல்லாம் பிரவேசிக்கிறாள். இந்த நிகழ்வுகளும் கதையை முன்னகர்த்திச் செல்கின்றன. த்ரில்லர் கதைகளை வாசித்துப் பழக்கப்பட்டவனின் ஆர்வத்தில் தொய்வு ஏற்படுவதில்லை.
குறிப்பிட்ட ஒரு சட்டகத்திற்குள் இயங்குவதால்தான் இந்தக் கதை த்ரில்லர் என்ற வகைமைக்குள் குறுகிவிடுகிறது, அந்த வகைமையைக் கடந்து உயரும் இலக்கியமாக இது உருவம் பெறுவதில்லை. ஹோக்கின் பனியும் உறைபனியும் சார்ந்த நிலப்பரப்பு குறித்த அறிவு வழக்கமான சராசரி நாவல்களில் ஒன்றாக இதுவும் இருப்பதைத் தவிர்க்க உதவுகிறது என்றால், இதில் உள்ள பல பாத்திரங்களில் எது ஒன்றுமே மானுடத் தன்மையோடு உயிர்ப்பு பெற முடிவதில்லை - இது த்ரில்லர் என்ற வகைமைக்குள் நாவலைச் சிறையிட்டு விடுகிறது. கதையின் முக்கியமான பாத்திரம் பெண் என்றாலும், கதையை எழுதியது ஒரு ஆண் என்பது தெளிவாகத் தெரிகிறது. பொதுவாகவே நாவலில் உள்ள பிற பாத்திரங்கள் இந்த வகைமையின் வழக்கப்படி உள்ளனர், யாருமே ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களாய் நம் முன் நடமாடுவதில்லை.
எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், சாதாரணமான இன்னொரு த்ரில்லர் வேண்டாம், அதைவிட இன்னும் கொஞ்சம் விஷயம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த நாவலை நான் பரிந்துரைப்பேன். மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறார் டான் ப்ரௌன்.
No comments:
Post a Comment