சிறப்புப் பதிவர் - R.கோபி
மொத்தம் பதினைந்து கதைகள். ஒன்று கூட சம்பிரதாயமான கதை இல்லை. சில கதைகள் ஆசிரியரின் அந்த நேரத்து மன ஓட்டத்தின் பதிவுகள் போல இருக்கின்றன.
‘சம்பிரதாயமான, வெளிப்படையான இருப்பின் சட்டகத்தைக் கனவினாலும், பிரக்ஞையாலும் தொடர்ந்து கலைத்துக் கொண்டிருப்பவை யுவன் சந்திரசேகரின் கதைகள். கதையின் ஆதார அழகியலையும் சுவாரசியத்தையும் விரித்தபடியே அதன் வழக்கமான வழிமுறைகளைக் கலைத்து மாற்றியமைக்கும் யுவன் சந்திரசேகரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.’
- பின்னட்டையில் வருவது
ஒரு துவக்கம், பாத்திரங்களின் அறிமுகம், ஒரு தூண்டில், பின்னர் விடுவித்தல் என்றே படித்துப் பழக்கப்பட்டுவிட்ட எனக்கு இந்தக் கதைகள் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தன. கதைக்குள் கதை, கனவுத்தன்மை, சுழற்சி, மாயத்தன்மை என்று பல விஷயங்கள் புதிது.
ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமானதும் வசீகரமும், அர்த்த புஷ்டியும் உள்ள நடை. மொழி தாமரை இலை மேல் பட்ட நீர் போல மொழி வழுக்கிக்கொண்டு ஓடுகிறது. கீழே உள்ளவை சில உதாரணங்கள்.
தூண்டில் இல்லை அதனிடம்.
வலையும் இல்லை கைவசம்
நெருப்பு இல்லை வாட்டிட
அடுப்பு இல்லை பொரித்திட
கரையில் காத்து நின்றிட
இணையும் இல்லை ஸீகலுக்கு.
ஆனால், ஆனால் செம்படவா –
ஸீகலின் மீன் உனதில்லை –
ஸீகலின் கடலும் உனதில்லை
‘...புயற்காற்றில் சிக்கிக் கொண்டால் தப்புவது எப்படி (கைக்குக் கிடைக்கும் மரத்துண்டைப் பற்றிக்கொள்வது மட்டும் போதாது, உயிர்தப்பிக் கரைசேருவது பற்றிய கனவு ஒன்றிலும் தொற்றிக்கொள்ளவேண்டும்)...’
‘முதல்வரி எழுதப்படுமுன்பே,முழுசாய் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தைத்தான் இப்போது சொல்லப் போகிறேன்.’
‘தீக்குழி இறங்குவது, அலகு குத்தி ஆடுவது, கத்திப் போடுவது இவற்றுக்குச் சமானமான புனிதப்பணிதான் தினசரி செய்தித்தாள் படிப்பதும் என்பது இஸ்மாயிலின் அபிப்பிராயம்.’
‘அப்பா சொல்லாமல் விட்டுப்போன கதைகளைத் தேடி நான் அலைந்தது ஒரு தனிக்கதை. நண்பனாய் இருந்த தகப்பனைப் போல், தகப்பனாய் இருந்த நண்பர்கள் கிடைக்கச் செய்த அலைச்சல் அது’
‘...இல்லை...குயிலுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கமாட்டோம் என்கிறீர்கள். நாரைக்கு மட்டும் எப்படி?’
‘உள்ளூரில்தான் ஜாதியெல்லாம். அயல்தேசம் போய்விட்டால் ஜாதியெல்லாம் பார்ப்பதில்லை;
படித்து முடித்ததும் ஒரு புன்னகையை வரவழைத்த கதை ‘நார்ட்டன் துரையின் மாற்றம்’. கதைகள் கேட்டு நாம் வளர்கிறோம். கதைகள் சொல்லி நாம் வளர்கிறோம். கதைகளும் நம்மோடு வளர்கின்றன. வளர்சிதை மாற்றங்கள் கொள்கின்றன. நார்ட்டன் துரை அவராகவேதான் இருக்கிறார். சம்பவங்கள் மாறவில்லை. கதை நடந்து இருபதாண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது கதை கேட்பவனின் முதிர்ச்சிக்கிணங்கக் கதை மாறிவிடுகிறது.
தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளுள் ஒன்றாக ‘அவரவர் கதை...’யைச் சொல்லலாம். கதையின் மொத்த கனமும் இறுதிப் பத்தியில் குவிகிறது. ‘என்னுடைய கதையில் இறந்துவிட்ட அப்பா இன்னொரு கதையில் உயிரோடிருக்கிறார் என்பதில் சந்தோசம் பொங்கியது எனக்கு. கண்களில் நீர் ஊறியது. ஆனால், அந்த இன்னொரு கதையிலும் அவருக்கு மரணம் காத்திருப்பதை நினைத்துச் சங்கடமாகவும் இருந்தது’.
‘வருகை’ ஆசிரியரின் படைப்பாற்றலுக்கு ஒரு நல்ல உதாரணம். ஒருவித புதிர்த்தன்மையும் கனவுத்தன்மையும் கொண்ட கதை. இக்கதையைச் சம்பவங்களின் கோவை என்றெண்ணிப் படித்துக்கொண்டே போகும்போது சட்டென்று புதிர் விடுபட்டுப் புனைவாகிறது. மொத்தமும் புனைவா அல்லது பிற்பகுதி மட்டுமா என்ற புதிர்த்தன்மை எஞ்சி நிற்கிறது!
‘நூற்றிச் சொச்சம் நண்பர்களை’ ஒரு சிறுகதை என்பதை விட நினைவுகளின் தொகுப்பு என்றே என்னால் அணுக முடிந்தது. தலைப்பு நூற்றிச் சொச்சம் நண்பர்கள் என்று இருந்தாலும் அறிமுகமானவர்கள் (Acquaintants) என்ற அளவிலேதான் அதை அணுக முடிந்தது. மிக சுவாரஸ்யமான தொகுப்பு இது.
கதைகளுக்கான தலைப்புகளின் பொருத்தம் அபாரம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் அவரவர் கதை, புகைவழிப்பாதை, தெரிந்தவர், வருகை, ஏற்கனவே, விருந்தாளி.
எது புனைவு, எது நிஜம், என்பது போக இது ஆசிரியரின் சொந்த அனுபவம் / கேட்டறிந்த விஷயமா அல்லது அவர் கூடுதாலாக ஏதேனும் சேர்க்கிறாரா என்ற புதிர்த்தன்மை கூடுதல் சுவாரஸ்யத்தைத் தருகின்றன. நூற்றிச் சொச்சம் நண்பர்கள் கதையில் வருவது போல,
“இப்போது நீங்கள் படித்து முடித்த பகுதியில்கூட நான் சொல்வது எது, கிருஷ்ணன் சொன்னது எது என்பதைப் பிரித்தறிவது அத்தனை சுலபமில்லை. இந்த அர்த்தத்தில், என்னுடைய பெயரில் பிரசுரமாகும் எல்லாக் கதைகளுமே கிருஷ்ணன்கள் எழுதிய கிருஷ்ணின் கதைகள்தாம்.’
ஏற்கனவே (சிறுகதைகள்) |_யுவன் சந்திரசேகர் |_விலை 100 ரூபாய் |_பக்கங்கள் 198
இணையம் மூலம் வாங்க: நூலுலகம்
படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஅட்டையில் வரும் சட்டகம் என்பதே புரியவில்லை.. கதையில் நிறைய இது போன்ற சொற்கள் உண்டா?