சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன்
கி.ராஜநாராயணனின் எழுத்து யாருக்குமே பிடிக்கும். எளிமையாகக் கதை சொல்பவர், நகைச்சுவை உண்டு, படித்து முடித்தபின் யோசித்துப் பார்ப்பதற்கான விஷயமும் இவரது கதைகளில் உண்டு. கி.ரா. எழுதிய 'கதவு', 'கோமதி' என்ற இரு சிறுகதைகளும் மறக்க முடியாதவை. பிஞ்சுகள் என்ற இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன்.
'குழந்தைகள் குறுநாவல்' என்று முதல் பக்கத்தில் போட்டிருப்பதைப் பார்க்கும்போது இவர் எழுதியிருப்பது குழந்தைகளுக்கான கதை என்று தெரிகிறது. "இது கையெழுத்துப் பிரதியிலேயே 1978ஆம் ஆண்டின் சிறந்த படைப்புக்குரிய 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது,' என்று கதைக்கு முந்தைய பக்கத்தில் போட்டிருக்கிறது, நல்ல கதைதான் என்று நம்பிப் படிக்கலாம். அன்னம் வெளியீடு (1979).
'குழந்தைகள் குறுநாவல்' என்று முதல் பக்கத்தில் போட்டிருப்பதைப் பார்க்கும்போது இவர் எழுதியிருப்பது குழந்தைகளுக்கான கதை என்று தெரிகிறது. "இது கையெழுத்துப் பிரதியிலேயே 1978ஆம் ஆண்டின் சிறந்த படைப்புக்குரிய 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது,' என்று கதைக்கு முந்தைய பக்கத்தில் போட்டிருக்கிறது, நல்ல கதைதான் என்று நம்பிப் படிக்கலாம். அன்னம் வெளியீடு (1979).
பின்னட்டையில் கி.ரா பற்றி வண்ண நிலவன் கூறிய சில குறிப்புகள் உள்ளன - அவை எதுவும் இந்தப் படைப்பைப் பற்றி சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை - வேறு எங்கிருந்தோ எடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அக்கறை, சமூக விமரிசனம் இரண்டும் கி.ராவுக்கு உண்டு என்று எழுதுகிறார் வண்ண நிலவன். அப்புறம், அவர் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல என்று சொல்லிவிட்டு, நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதியையும் நாடோடிக் கதைகளையும் கி.ரா. தொகுத்திருக்கிறார் என்ற தகவலைச் சொல்கிறார்.
'கி. ராஜநாராயணன் என்ற ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்,' இவரது இயற்பெயர் என்று வண்ண நிலவன் வழி அறியும்போது இரண்டு கைகளையும் கூப்பித் தொழத் தோன்றுகிறது. பொதுவாக கோயில் சன்னதிக்கு வெளியே இந்த மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டு யாரும் நடமாடுவதில்லை. அது தவிர நான் இந்தத் தகவலை ரசித்தேன், - கி.ரா., "கயத்தாறு சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து, மாடுகள் இழுக்கும் பார வண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார்," என்று ஆவணப்படுத்தியிருக்கிறார் வண்ண நிலவன். கி.ரா. நிஜமாகவே மண்ணின் மைந்தர்தான் என்பது இதைப் படித்ததும் உறுதியானது. அவரது கதைகளைப் படிக்கும் எவரும் இதைச் சொல்லிவிட முடியும் என்றாலும் இது போன்ற விஷயங்கள் அப்படியொரு எண்ணத்தை நம்ப வைக்கின்றன.
'கி. ராஜநாராயணன் என்ற ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்,' இவரது இயற்பெயர் என்று வண்ண நிலவன் வழி அறியும்போது இரண்டு கைகளையும் கூப்பித் தொழத் தோன்றுகிறது. பொதுவாக கோயில் சன்னதிக்கு வெளியே இந்த மாதிரியான பெயர்களை வைத்துக் கொண்டு யாரும் நடமாடுவதில்லை. அது தவிர நான் இந்தத் தகவலை ரசித்தேன், - கி.ரா., "கயத்தாறு சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து, மாடுகள் இழுக்கும் பார வண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார்," என்று ஆவணப்படுத்தியிருக்கிறார் வண்ண நிலவன். கி.ரா. நிஜமாகவே மண்ணின் மைந்தர்தான் என்பது இதைப் படித்ததும் உறுதியானது. அவரது கதைகளைப் படிக்கும் எவரும் இதைச் சொல்லிவிட முடியும் என்றாலும் இது போன்ற விஷயங்கள் அப்படியொரு எண்ணத்தை நம்ப வைக்கின்றன.
குறுநாவல் என்று எடுத்துக் கொண்டால் இது மிக நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. நூறு பக்க அளவுள்ள புத்தகத்தில் சின்னச் சின்னதாக சரியாக பதினெட்டு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் சராசரியாக ஐந்து பக்க அளவில் ஒரு குட்டிக் கதை மாதிரி இருக்கிறது. ஆனால் அந்த ஒரு அத்தியாயம் முடிந்தாலும் அதற்கு முன்னால் சொல்லப்பட்டது, அதில் சொல்லப்பட்டது இதில் எல்லாம் ஏதோ ஒன்று மிச்சமிருந்து நம்மை அடுதத அத்தியாயத்துக்குக் கொண்டு போகிறது. மேலும், கதையில் மிகக் குறைவான பாத்திரங்கள்தான் வருகிறார்கள். இந்தக் காரணங்களால் கதையை சிரமம் தெரியாமல் படிக்க முடிகிறது.
சிரமம் தெரியாமல் படிக்க முடிகிறது என்பதைவிட முக்கியமாக சுவாரசியமாகப் படிக்க முடிகிறது. சுவாரசியமாகப் படிப்பது என்றால் கதை விறுவிறுப்பாகப் போகிறதா என்று கேட்டால், அது இல்லை. நிறைய இடங்களில் தொய்ந்து தடுமாறுகிறது. அத்தியாயங்கள் முன்னும் பின்னும் போகின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு ஆட்கள் வருகிறார்கள், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சரி, அவரது நடை சுவாரசியமாக இருக்கிறதா என்றால் அது ஒரு விதத்தில் சரிதான், ஆனால் இன்னொரு விதத்தில் சரியில்லை. சில பேர் பேசும்போது இருக்கும் சுவாரசியம்தான் இவரது எழுத்தில் இருக்கிறது, சில பேர் செய்வது மாதிரியான வார்த்தை விளையாட்டு சர்க்கஸோ கவித்துவமான மொழியோ எதுவும் இல்லை. அப்புறம் வேறு எதை சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்கிறாய் என்று கேட்டால் பெரியவர்களுக்கு ஒரு விஷயம் சுவாரசியமாக இருக்கிறது, சிறுவர்களுக்கு ஒரு விஷயம் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லுவேன்.
நாம் சிறுவர் இலக்கியம் என்று நினைத்துக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது, அதிலுள்ள விஷயங்கள் எல்லாம் சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று நினைப்போம். அவர்களுக்கு எது தெரிய வேண்டுமோ அது மட்டும்தான் இருக்கும். அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்குமோ, எதில் ஆர்வம் இருக்க வேண்டுமோ, அது மட்டும்தான் இருக்கும், இந்த மாதிரி கதைகளில். சாகசக் கதைகள், சோகக் கதைகள் என்று சிறுவர்களுக்காக எது எழுதினாலும் அதில் குழப்பமாக எதுவும் இருக்காது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போல் சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். ஏறத்தாழ எல்லா சிறுவர் கதைகளும் இப்படி இருப்பதால் நாமும் இந்த மாதிரி ஒரு கதையை எதிர்பார்த்து பிஞ்சுகள் கதையைப் படித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அடுத்து வருவதைப் போன்றதை எல்லாம் சிறுவர் கதைகளில் படித்துப் பார்ப்போம் என்று நினைத்திருக்கவே மாட்டோம். ஆனால் இது சிறுவர்களின் அனுபவமாக இருக்க முடியாது என்று சொல்ல முடியாது.
கதையின் நாயகன் வெங்கடேசு. அவனது நண்பன் செந்திவேல். இருவரும் நண்பர்கள். செந்திவேல் வேங்கடேசுடன் வகுப்பில் கூடப் படிக்கிறவன் மட்டுமல்ல, காளி கோயில் பூசாரியும்கூட. பள்ளியில் மத்தியானம் சாப்பாட்டு மணி அடிதத்தும் செந்திவேல் அவசர அவசரமாக காளி கோயில் மடப்பள்ளிக்குப் போய் வெண்பொங்கல் செய்வான். பொங்கல் செய்து முடித்ததும் அம்மனைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, பூஜை நைவேத்தியம் எல்லாம் செய்வான். மடப்பள்ளிக்குள் வெங்கடேசுக்கு மட்டும்தான் அனுமதி. ஆனால் அம்மனைக் குளிப்பாட்டி அலங்கரிப்பதை செந்திவேல் திரை போட்டு மறைத்து விடுவது வழக்கம்.
"ஒரு நாள் அவனுக்கும் அதைப் பார்க்கணும் என்று ஆசையாக இருந்தது. செந்திவேலிடம் கேட்டான். அவன் முதலில் தயங்கினாலும் பிறகு, சரி வா, என்று பக்கத்தில் வந்து இருக்க அனுமதித்தான்.'முதலில் அவன் அம்மன் முகத்திலுள்ள கண்மலர்களை அகற்றினான். அப்புறம் விபூதிப் பட்டைகள், பிறகு ஒட்டியாணம். ஒட்டியாணத்தை அவிழ்த்து வைத்துவிட்டு சேலையைக் கலைந்தான். அவன் அப்படிச் செய்ததும் வெங்கடேசு பின்வாங்கினான். அம்மன் கழுத்தில் தாலி மட்டும் இருந்தது."மடமடவென்று சிலை மீது தண்ணீரைக் கொட்டினான். எண்ணெய்ப் பளபளப்புள்ள கறுத்த சிலை மீது தண்ணீர் ஓடியது பார்க்க 'ஒரு இது'வாக இருந்தது. முத்து முத்தாகத் தண்ணீர் பல இடங்களில் நின்று மின்னியது."ஒரு குழந்தையைத் தேய்த்துக் குளிப்பாட்டுவதுபோல் அந்தச் 'சிறிய பூசாரி' செய்தது இவனுக்குப் பார்க்க ஆனந்தமாய் இருந்தது."
(பக்கம் 14).
சிறுவர்கள் என்று நாம் சொன்னாலும் அவர்களும் நாம் இருக்கும் உலகத்தில்தான் இருக்கிறார்கள்.. நாமும் அவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இருக்கிறோம். சிறுவர்களின் உலகமும் நம் உலகமும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் க்ராஸ் செய்து கொண்டே இருக்கிறது என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும். சிறுவர்களின் உலகத்தில் பெரியவர்களுக்கான விஷயங்கள் இல்லாமல் போகிறதா என்ன, இல்லை பெரியவர்கள்தான் குழந்தைத்தனத்தை அறியாமல் இருக்கிறார்களா? இந்த இடத்தில் கி.ரா. அப்படிப்பட்ட ஒரு சந்தியை மிக அழகாக நம் கண்முன் படைத்திருக்கிறார். இதை ஒரு இலக்கிய சாதனையாகக் கொண்டாடுவது ஒரு விஷயம் என்றால் அதைவிட முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.
குழந்தைகளிடம் பிற விஷயங்கள் இயல்பாகப் போய்ச் சேர வேண்டும். 'ஒரு இது'வாக இருந்தது என்று பெரியவர்கள் குழந்தைகளிடம் சொல்லும்போது ஏன் என்ற கேள்வியும் அதற்கான பதிலும் அதைத் தொடர்ந்து விஷயத்தைப் புரிந்து கொள்வதும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கி.ரா. வின் கதைகளில் இருக்கும் காமமும் இந்த மாதிரி ரொம்பவும் இயல்பானதுதான். நம் எல்லாரையும் போல் காமம் அவருக்கு ஒரு fetish இல்லை. சிறுவர்களுக்கான கதையிலேயே அந்த மாதிரி ஒரு பார்வையைக் கொண்டு வருகிறார் என்றால் கி.ரா.வின் எழுத்தில் உள்ள ஒருமை - இன்டக்ரிட்டி - எப்படிப்பட்டது என்று ஆச்சரியமாக இருக்கிறது.
கலைஞன் எப்போதும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று படித்திருக்கிறேன். எது உண்மை என்று யாருக்குத் தெரியும் என்ற சந்தேகம் அப்போதெல்லாம் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது தோன்றுகிறது, கி.ரா. மாதிரி தனக்கு உண்மையாக இருப்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்று. இந்த மாதிரியான எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியம் படைக்கும்போது நம் குழந்தைகளுக்கும் உண்மையாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். கி.ரா.வின் கதையில் கற்பனை இருந்தாலும் அதை ஏமாற்றுக் கதை என்று சொல்ல முடியாது. அது எப்போதும் உண்மையைப் பேசுகிறது. சிறுவர்கள், பெரியவர்கள், இலக்கியம், வாணிபம் என்று ஆளுக்கு ஆள் ஒரு மாதிரி எழுதாமல் இருப்பது பெரிய விஷயம்.
சிறுவர்களுக்கான கதைகள் சிறுவர்களுக்கான விஷயங்களைப் பேசினாலும் அது சிறுவர்களைச் சின்னக் குழந்தைகளாகவே வைத்திருக்கக்கூடாது. அவர்கள் வளருவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கிறது கி.ரா.வின் பிஞ்சுகள். எனவே இதை ஒரு நல்ல கதை, சிறுவர்கள் படிக்க வேண்டிய கதை என்று சொல்லுவேன்.
பிஞ்சுகள், கி.ராஜநாராயணன் (1979),
அன்னம் (பி) லிட்,
சிவகங்கை
விலை ரூ.11
விலை ரூ.11
புகைப்படஉதவி - நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்
/// சிறுவர்களுக்கான கதைகள் சிறுவர்களுக்கான விஷயங்களைப் பேசினாலும் அது சிறுவர்களைச் சின்னக் குழந்தைகளாகவே வைத்திருக்கக்கூடாது ///
ReplyDeleteசரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் குழந்தைகள் புத்தகங்கள் படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும் - எந்த விஷயங்களையெல்லாம் தொட்டுச்செல்கின்றன என்று. உதாரணமாகக் கேத்தி கேஸிடி நாவல்கள் அனைத்திலும் உடைந்த குடும்பங்கள், குடும்பத்தின்மேல் அக்கறையில்லாத பெற்றோர் போன்றவர்கள் சகஜமாக வருவதைக் காணலாம். 'க்ரஷ்' மாதிரியான சமாசாரங்கள் இடம்பெறாத ஆங்கிலக் குழந்தைப் புத்தகங்களே (9+ வயதுக்குமேல்) இல்லை எனலாம்.
கி.ராஜநாராயணன் 'கதவு' சிறுகதையில் குழந்தைகளின் உலகத்தை அதற்கே உரிய குதூகலத்தோடு சித்தரித்திருப்பார். மேலும் பொதுவாக இவரது எல்லாப் படைப்புகளிலுமே வரும் சிறுவர் கதாபாத்திரங்கள் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கும்.
என் நண்பர் ஒருவர் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் தன் மகள் ஜே. கே. ரௌலிங் நாவல்களைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று கவலை தெரிவித்தார். ஏன் என்று கேட்டதற்கு, கன்னாபின்னான்னு என்னென்னமோ இருக்கு என்றார்.
Deleteநாம் நம் பிள்ளைகளைக் கல்யாணம் ஆகும்பவரை சின்னக் குழந்தைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறோம் என்று நினைக்கிறேன் :)
நன்றி.